டிவிட்டர் கருத்துக்கு பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா உபி யோகி ஆதித்யநாத் அரசால் கைது ! உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு !

த்தர பிரதேச மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை  திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாக, ஒரு பெண் அளித்த பேட்டியின் காணொளி செய்தியை ‘நேஷனல் லைவ் (National Live) என்ற செய்தி ஊடகம் வெளியிட்டு இருந்தது.

தில்லியைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கடந்த 06.06.2019 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் அந்தக் காணொளி செய்தியை பகிர்ந்து ‘யோகி அவர்களே காதலை மறைத்து வைத்திருக்க முடியாது’ என கிண்டலாக கருத்து தெரிவித்து இருந்தார்.

விடுதலைக்கு பின் ஊடகங்களிடம் பேட்டியளிக்கும் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா.

இந்த காணொளியை பகிர்ந்ததற்காக உ.பி லக்னோ போலீசு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, தில்லிக்குச் சென்று பத்திரிகையாளர் பிரசாந்தை கைது செய்தது. அவர் மீது இந்திய தண்டனை சட்டம் (இ.த.ச.) பிரிவு -500 (குற்றவியல் அவதூறு) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (த.தொ.ச) பிரிவு – 66-ன் கீழ் முதல் தகவல் அறிக்கையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை 11 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

முதலில் இந்தக் கைது அடிப்படை கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமானது. எனினும் இந்த வழக்கினை எந்த அடிப்படையில் பார்த்தாலும் கைது செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை‌. அப்படி இருக்கும்போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்த கைதை மேற்கொண்டது யோகி அரசு.

(இ.த.ச.) பிரிவு 500-ன் படி பிடியாணை இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 41-ன்படி பிடியாணையின்றி கைதுசெய்யும் குற்றங்களுக்கு மட்டும்தான் எந்த ஒரு அறிவிப்புமின்றி கைது செய்ய முடியும். அதேபோல், (த.தொ.ச.) பிரிவு 66-ன் படி பிடியாணை இல்லாமலே கைது மேற்கொள்ளலாம் .

ஆனால் இந்த பிரிவானது கணினியைப் பயன்படுத்தி மோசடியில் / நேர்மையற்ற செயல்களில் ஈடுபடுவது என்பதைத்தான் குறிப்பிடுகிறது. ஆனால் முன்னதாகவே செய்திகளில் வெளியான காணொளியைத்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரசாந்த்  பகிர்ந்து இருந்தார். இதில் மேற்கூறியபடி தவறு  எதாவது இருக்கிறதா? தவறானமுறையில் அதிகாரத்தை பயன்படுத்தி கைது செய்ததுதான் இங்கு ஜனநாயக உரிமைகளை கேள்விக்குறியாக்குகிறது??

மேலும் இந்தக் கைது நடவடிக்கை, குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கும்,  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் முரணானது.

அர்ணேஷ் குமார் வழக்கில் 2014 (உச்சநீதிமன்ற தீர்ப்பு) குறிப்பிட்ட வகையில்தான் கைது நடவடிக்கை இருக்க வேண்டும் என வழிகாட்டியுள்ளது. (கு.ந.ச) பிரிவு 41(1)( b) பிடியாணையின்றி கைது செய்ய நியாயமான விளக்கத்தை எழுத்துவடிவில் பதிவு செய்த பிறகுதான் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவும்(கு.ந.ச.) பிரிவு 199 கீழ்  பாதிக்கப்பட்ட நபர்தான் புகார் அளிக்கவேண்டும். ஆனால் இந்த வழக்கில் யோகிக்கு பதிலாக லக்னோ ஹர்ஷத்கஜ் பகுதி காவல் நிலையத்தை சார்ந்த துணை காவல் ஆய்வாளர் புகாரின் அடிப்படையில் தான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வழக்கின் விவரங்களை கணக்கில் கொள்ளாமல் பத்திரிகையாளர் பிராசந்தின் கருத்தையும் கேட்காமல், தன்னிச்சையாக 11 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு உபி மேஜிஸ்ட்ரேட் அனுப்பியது இயற்கை நீதிக்கு முரணானது. உபி நீதிமன்றம் யோகியின் கட்டுப்பாட்டில் இருப்பதையே அறியமுடிகிறது.

மேலும் டி.கே. பாசு வழக்கில் 1996 உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது காவல்துறை அதிகாரி உரிய சீருடையில்தான் இருக்க வேண்டும்.

இந்த கைதை பொறுத்தவரை காவல்துறை சாதாரண உடையணிந்தே பிரசாந்தை கைது செய்தனர். குறிப்பாக  எந்தவொரு சட்ட வழிமுறைகளையும் பின்பற்றாமல் சர்வாதிகார முறையில் கைது நடவடிக்கை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.

படிக்க:
♦ யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
♦ “அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : காவிகளை எதிர்த்த கிரிஷ் கர்னாட் !

மேலும், உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீதான குற்றச்சாட்டைப் பற்றி  நேஷனல் லைவ் (National live) தொலைக்காட்சி ஒளிப்பரப்பு செய்ததற்காக இஷித்தா சிங் (நிறுவனர்) மற்றும் அனுஜ் சுக்லா (ஆசிரியர்) இருவரையும் (இ.த.ச.)  பிரிவு – 505(1) மற்றும் பிரிவு 153 கீழ் தவறான செய்தியை பொதுமக்களிடையே பரப்பியது, கலவரமூட்டும் வகையில் மக்களை தூண்டியது போன்ற பொய்யான வழக்குகளை அவர்கள்மீது பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர் கைதுகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக கண்டனக் குரல்கள் எழவே யோகி அரசு பேனை பெருமாளாக்கும் முயற்சியை மேற்கொண்டது. முதல் தகவல் அறிக்கையில் இல்லாத இ.த.ச பிரிவு- 505 மற்றும் த.தொ.ச பிரிவு-67 சேர்த்து வழக்கை பதிவு செய்து பார்த்தது.

அதற்கு ஆதாரமாக டிவிட்டரில் உள்ள மதப்பிற்போக்குதனத்தை விமர்சிக்கும் அவரது பழைய பதிவுகளை ஆதாரமாக காட்டி, அவர் இந்துமதத்திற்கு எதிரானவர் போல் பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்தது. ஆனால் அது பலனளிக்கவில்லை. சமூக பிற்போக்குத்தனத்தை விமர்சிப்பது பத்திரிகையாளர்கள் கடமைதானே…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த சட்ட விரோதக் கைதைக் கண்டித்து தில்லியில் பத்திரிகையாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பிரசாந்த் கனோஜியாவின் இணையரும் பத்திரிகையாளருமான ஜகிஷா அரோரா ஆற்றிய பங்கு முக்கியம் வகித்தது. அவர் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று (11.06.2019) விசாரணைக்கு வந்தது.

பிரசாந்த் கனோஜியாவை விடுவிக்க உ.பி அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அவரை விடுவித்தால், அவர் பரப்பிய தகவல் உண்மை என்றாகிவிடும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். ஆனால், அவரது வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.

“11 நாட்கள் சிறையில் வைப்பதற்கு அவர் என்ன கொலைக் குற்றம் செய்தார்?  டிவிட்டரில் கருத்து தெரிவித்தால் எப்படி ஒருவரை கைது செய்ய முடியும்?” என உச்சநீதிமன்றம் மேஜஸ்ட்ரேட் உத்தரவை கேள்வி எழுப்பியது

“ஒரு குடிமகனின் சுதந்திரம் என்பது அதிக மதிப்பு வாய்ந்தது. அதில் விவாதத்திற்கே இடமில்லை. அது அரசியல் சாசனம் மூலம் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. அதை மீற முடியாது.”

அரசியல் சாசனம் சரத்து 19 மற்றும் 21 -ன் கீழ் அவருடைய அடிப்படை உரிமையை (பேச்சுரிமை, வாழ்வுரிமை) யாரும் பறிக்க இயலாது எனக் கூறி பிரசாந்த் கனோஜியாவுக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

படிக்க:
♦ பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர் !
♦ அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டிய மாணவி பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் !

ஹிந்து யுவ வாஹினி குண்டர் படை,  1200 போலி மோதல் கொலைகள், 70 பேர் NSA -வில் கைது, கொட்டடிக் கொலைகள், காதலர்களை மிரட்டும் ரோமியோ படை, கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பை தடுக்கப் போராடிய மருத்துவர் காஃபில் கானுக்கு சிறை என பாசிச அடக்குமுறையை தான் நடைமுறையில் இந்துராட்டிரத்தின் ஜனநாயகம் என்கிறார் பிஜேபியின் யோகி ஆதித்யநாத். அதை பத்திரிகையாளர் வரை தற்போது விரிவுபடுத்தியுள்ளார். அதை எதிர்த்து சிவில் சமூகம் உடனே போராடியதால் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவின் விடுதலைக்கான பிணையை நீதிமன்றம் வழங்கியது.

பாசிஸ்டுகள் நீதிமன்ற உத்தரவுகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்கள் கருத்தை கருத்துகளால் எதிர்கொள்வதில்லை. தங்களுக்கு ஏற்படும் அச்சத்தின் காரணமாக மீண்டும் அடக்குமுறை செலுத்த எத்தனிப்பார்கள். தொடர்ந்து நாம் ஒன்றிணைந்து எதிர்த்து போராடுவதன் மூலம் நமக்கான அடிப்படை உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க