செய்தி : தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

பிளாஸ்டிக்கை சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் முதல் முறை பிடிப்பட்டால் 25 ஆயிரமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ஐம்பதாயிரமும், மூன்றாவது முறை ஒரு லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட உள்ளது. நான்காவது முறையாக விற்பவரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதி : விற்பவருக்குத்தான் அபராதம் என்றால் பிளாஸ்டிக் பொருட்களில் தமது தயாரிப்புகளை அடைத்து விற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவற்றை விற்பனை செய்யும் சூப்பர் மார்கெட்டுகளுக்கும் அபராதமில்லையா?

♠ ♦ ♣

செய்தி : பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது. இதில், கடந்த மாதத்தில் 11 பேர் வரை உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 41 ஆக உயர்ந்தது.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக்காய்ச்சல் காரணமாக 10.06.2019 அன்று மருத்துவமனையில் ஒரு குழந்தை அனுமதிக்கப்படும்போது கதறி அழும் உறவினர்கள். (படம்: நன்றி – ஃபர்ஸ்ட் போஸ்ட்)

பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது. ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோய் பாதிக்கப்பட்டு 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்து இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்துள்ளது.

நீதி : ஆக்சிஜன் இல்லாமல் உ.பி கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்தார்கள். இன்று பீகாரில் உயிரிழக்கிறார்கள். ராமருக்கு பிரம்மாண்டமான சிலை அமைப்பதிலும், பசு குண்டர்கள் மூலம் நடக்கும் வன்முறைகளை ஆதரித்தும் செயல்படும் யோகி ஆதித்யநாத் அரசுக்கும், பாஜக வோடு கூட்டணி அமைத்துள்ள நிதிஷ் குமார் அரசுக்கும் குழந்தைகளைக் காப்பாற்ற நேரமேது, மனமேது?

♠ ♦ ♣

செய்தி : நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அளவிலான அங்கீகாரத்தை உலக வானிலை ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளது.

நீதி : புயல் வருமென்று முன்கூட்டியே எச்சரிக்கவில்லையே… என்று ஒக்கி புயலிலில் காணாமல் போன மீனவர்கள் குடும்பங்கள் இன்றும் கதறி வருகின்றனர்.

♠ ♦ ♣

செய்தி : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.

நீதி : இனி ஆசிய வளர்ச்சி வங்கியை ஆன்டி நேஷனல் அல்லது ஆன்டி இன்டர்நேஷனல் என்று காவி பரிவாரம் அழைக்குமா?

♠ ♦ ♣

செய்தி : ஓட்டல்களில் ஆர்டர் செய்து, 70 லட்சம் ரூபாய் அளவுக்கு சாப்பிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் மனைவிக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீதி : பாலஸ்தீனர்களை கொன்று குவித்தாலும் கூட இஸ்ரேலில் சட்டம் ஒழுங்கும் நீதியும் சரியாக அமல்படுத்தப்படுகிறதாம். பத்து இலட்ச ரூபாய்க்கு கோட்டு போடும் போது 70 இலட்சத்தில் சாப்பிட்டால் என்ன பிரச்சினை?

♠ ♦ ♣

செய்தி : வரும் ஏப்ரல் 2020-ம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார், 1.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நீதி : இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி செய்த கார்களே விற்பனையாகாமல் தேங்கிப் போன நிலையில் இந்த புதிய பட்டுக்குஞ்சம் யாருக்காக?

♠ ♦ ♣

செய்தி : இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்ற பெற்றது. போட்டிக்கு முன்னர் இந்திய அணி வெற்றிபெறுவதற்காக, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில், கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடத்தினர். 

நாடு முழுவதும் 100 இடங்களுக்கு மேல் இந்திய அணியின் வெற்றிக்காக கூட்டுப்பிரார்த்தனையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தஞ்சாவூர், ஈரோடு, கோவை, வேலூர், காஞ்சிபுரம், திருச்சி ஆகிய 6 இடங்களில்  6 அடி உயரத்திற்கு அகண்ட அகர்பத்தியை ஏற்றி இந்திய அணியின் வெற்றிக்காக ஏற்கனவே வழிபாடு நடத்தியது நினைவு கூறத்தக்கது.

நீதி : உலகில் எந்த நாடும் தனது அணி வெற்றி பெற இத்தகைய முட்டாள்தனங்களை செய்வதில்லை. பிறகு ஏன் இந்தியாவை “பாம்பாட்டிகளின் தேசம்” என்று கிண்டல் செய்யமாட்டார்கள்?

♠ ♦ ♣

செய்தி : மும்பையில் நடந்த மிஸ் இந்தியா 2019 போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவி சுமன் ராவ் தெரிவு செய்யப்பட்டார்.

நீதி : இந்தியா முழுவதும் குடிநீருக்காக பெண்கள் அலைந்து வரும் சூழலில் நீரோக்கள் பிடில் வாசிக்கிறார்கள்!

♠ ♦ ♣

சாந்தா கொச்சார்

செய்தி : பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சகோதரி வீட்டில் பல லட்சம் நகை, பணம் திருடி வேலைக்காரி சொகுசு வாழ்க்கை!

நீதி : இதே போன்று பிரபல ஐசிஐசிஐ வங்கியில் இயக்குநராக இருந்த சாந்தா கொச்சாரை கோடிக்கணக்கில் ஊழல் செய்த திருடி என்று பத்திரிகைகள் செய்தி போடுமா?

♠ ♦ ♣

செய்தி : தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள பூங்காக்களுக்கு 2 நாளுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் அம்மா உணவகங்களை சுத்தம் செய்ய கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது!

நீதி : ஏழைகள் சாப்பிடும் அம்மா உணவகங்களுக்கு விதிக்கப்படும் இந்த கட்டுப்பாடுகள், ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு மட்டும் கிடையாதா என்ன?

♠ ♦ ♣

செய்தி : சென்னை அருகே உள்ள திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வறட்சி காரணமாக 250 ஏக்கரிலான நெற்பயிர்கள் கருகின. இதனால் பல இலட்சம் ரூபாய் இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர்.

நீதி : ஆட்சியை தக்கவைப்பது என்ற ஒரே திட்டத்தில் செயல்படும் எடப்பாடி – ஓபிஎஸ் அடிமைகள் காலத்தில் பயிரும் கருகும், வாழ்க்கையும் அல்லாடும்!

♠ ♦ ♣

செய்தி : அம்மா ஆசிரமம் என்ற பெயரில் போலி அனாதை இல்லம் துவங்கி இளம் பெண்களை பணியில் அமர்த்தி சென்னை முழுவதும் பல லட்சம் நிதி பெற்று மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நீதி :  ‘அம்மா’ என்ற பெயரில் ஆசிரமம் துவங்கும் போதே மக்களும் போலீசாரும் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டாமா?

♠ ♦ ♣

செய்தி : சென்னை ஓட்டல்களுக்கு தேவைப்படும் தண்ணீர், டேங்கர் லாரிகள் மூலம்தான் பெறப்பட்டு வருகிறது. ஒரு லோடு தண்ணீர் 1800-க்கு வாங்கியது தோற்போது 3,600 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அப்படியே காசு கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. நிறைய ஒட்டல்களில் சாப்பாட்டை (மீல்ஸ்) நிறுத்தி விட்டோம். சாப்பாடு வைத்தால் 12 கோப்பைகளையும், ஒரு தட்டையும் கழுவ வேண்டியுள்ளது.
– வெங்கடசுப்பு, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர்.

நீதி : நீச்சல் குளங்கள் உள்ள ஸ்டார் ஓட்டல்கள், கால்ஃப் கிளப்புகளுக்கு அளிக்கப்படும் நீரை நிறுத்தினாலே பெரிய அளவுக்கு நீரை மிச்சப்படுத்தலாமே?

♠ ♦ ♣

செய்தி : மதுரையில் வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற டூவீலர் மீது போலீசார் லத்தியை வீசியதில் நிலைதடுமாறிகீழே விழுந்த விவேகானந்தன் என்ற வியாபாரி மரணமடைந்தார்.

நீதி : இப்படித்தான் சென்ற 2018-ம் ஆண்டில் கர்ப்பிணிப் பெண் உஷா மரணமடைந்தார். இருந்தும் போலிசாரின் திமிர் அடங்கவில்லை.

♠ ♦ ♣

செய்தி : அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு அமைவதால் பாதிப்பில்லை என்று கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குநருடன் ஆலோசனை நடத்திய பாஜக தலைவர் தமிழிசை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நீதி : இதற்கு தெர்மோகோல் அமைச்சரே மேல்!

♠ ♦ ♣

செய்தி : குடிக்க தண்ணீர் கிடைக்காத கொடுமையால் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு ஒரு உத்திரப்பிரதேச விவசாயி கடிதம் எழுதியுள்ளார்!

நீதி : உலகம் சுற்றும் மோடிக்கு, பிரியங்கா சோப்ராவை சந்த்தித்து விட்டு தமிழக விவசாயிகளை சந்திக்க மறுத்த மோடிக்கு இந்தக் கடிதங்களையெல்லாம் படிப்பதற்கு நேரமிருக்காது. இப்படி பிசியான பிரதமர் மோடியை விவசாயிகள் கடிதம் எழுதி நெருக்கடி கொடுப்பது தகுமா?

வினவு செய்திப் பிரிவு

3 மறுமொழிகள்

 1. //நீதி : இனி ஆசிய வளர்ச்சி வங்கியை ஆன்டி நேஷனல் அல்லது ஆன்டி இன்டர்நேஷனல் என்று காவி பரிவாரம் அழைக்குமா?//

  ஐயோ பாவம் உங்களின் கண்மூடித்தனமான பாக்கிஸ்தான் பாசத்தால் செய்திகளை கூட ஒழுங்காக படிப்பதில்லை என்று நினைக்கிறன்… உலக வாங்கியோ அல்லது ஆசிய வாங்கியோ பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதாக எந்த திட்டமும் இல்லை என்று ஆசிய வாங்கி அறிவித்து இருக்கிறது. IMF பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதை உறுதி செய்த பிறகு தான் இவர்கள் பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பார்கள்.

  பாக்கிஸ்தான் அமைச்சரை விட உங்களின் பாக்கிஸ்தான் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  வினவு ஒரு பாக்கிஸ்தான் சீனா கைக்கூலி என்பதை மேலும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறீர்கள்.

 2. //நீதி : உலகில் எந்த நாடும் தனது அணி வெற்றி பெற இத்தகைய முட்டாள்தனங்களை செய்வதில்லை. பிறகு ஏன் இந்தியாவை “பாம்பாட்டிகளின் தேசம்” என்று கிண்டல் செய்யமாட்டார்கள்?//

  கிரிக்கெட்டில் உங்கள் பாக்கிஸ்தான் தேசம் தோல்வி அடைந்ததற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்… நீங்கள் மேலும் மேலும் பல தோல்விகளை சந்திக்க என் வாழ்த்துக்கள்.

 3. // நீதி : இதற்கு தெர்மோகோல் அமைச்சரே மேல்! // ….
  இது போன்றவர்களை அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு அருகில் குடியமர்த்தினால் என்ன …?

  // நீதி : உலகம் சுற்றும் மோடிக்கு, பிரியங்கா சோப்ராவை சந்த்தித்து விட்டு தமிழக விவசாயிகளை சந்திக்க மறுத்த மோடிக்கு இந்தக் கடிதங்களையெல்லாம் படிப்பதற்கு நேரமிருக்காது. இப்படி பிசியான பிரதமர் மோடியை விவசாயிகள் கடிதம் எழுதி நெருக்கடி கொடுப்பது தகுமா? // ..
  முன்பு பிரதமருக்கு பலவற்றிற்கு ஜெயா எழுதிய கடிதங்களே ” குப்பை தொட்டிக்குத்தான் ” போகின்றன என்று சுப்பிரமணிய சுவாமி கூறியது — இந்த விவசாயிகளுக்கு புரியாமல் போனது தான் தவறு …!!

  // நீதி : உலகில் எந்த நாடும் தனது அணி வெற்றி பெற இத்தகைய முட்டாள்தனங்களை செய்வதில்லை. பிறகு ஏன் இந்தியாவை “பாம்பாட்டிகளின் தேசம்” என்று கிண்டல் செய்யமாட்டார்கள்? // …
  சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று கூறியதை விட இது ஒன்றும் கேவலம் இல்லை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க