கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு அணு உலைகள் இயக்கத்திலும் இரண்டு அணு உலைகள் கட்டுமானப்பணியில் இருக்கும் நிலையில் மேலும் இரண்டு அணு உலைகளின் கட்டுமானப்பணி துவங்கப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் ரசியாவின் ஆறு அணு உலைகளை நிறுவ இந்தியா ரசியாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதன் அடிப்படையில் தற்போது 5 மற்றும் 6-வது அணுமின் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் ஜூன் 29,2021 அன்று துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணு உலையும் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்டது.

படிக்க :
♦ கூடங்குளம் அணுமின் நிலையம் : அணுக்கழிவை கொட்டுவதற்கு இடமில்லையாம் !
♦ கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!

முதல் அணு உலை 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதியும், இரண்டாவது அணு உலை 2016-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதியும் தனது இயக்கத்தை துவங்கியுள்ளது.

3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் கட்டுமானப் பணிகள் ரூ.39,849 கோடி செலவில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கி தற்போது வரை நடைப்பெற்று வருகிறது. மூன்று மற்றும் நான்காம் அணு உலைகள் 2023-24-ம் ஆண்டுகளில் இயங்க துவங்கலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

தற்போது 5 மற்றும் 6-வது அணு உலைகள் ரூ.49,621 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் நேற்று ஜூன் 29, 2021 துவங்கியுள்ளது இந்திய அணுசக்தி நிறுவனம். ஐந்து மற்றும் ஆறாம் அணு உலைகள் 2027-28–ம் ஆண்டுகளில் இயக்க திட்டமிட்டுள்ளார்கள்.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் அணு உலை இயங்கத் துவங்கியபோது அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் இடமும், வசதிகளும் இல்லை. அதை உருவாக்க 5 ஆண்டுகள் அவகாசம் கேட்டது, இந்திய அணுசக்தி நிறுவனம். 5 ஆண்டுகள் முடிந்தும் அணுக்கழிவுகளைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, மேலும் ஐந்து ஆண்டுகள் காலநீட்டிப்பு வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது இந்திய அணுசக்தி நிறுவனம்.

“ஏற்கனவே, அணுக்கழிவுகளை பாதுகாக்கவும் வசதிகளும் இடமும் இல்லை. அணுமின் நிலையத்திற்குள் இருக்கும் எரிசக்தி தொட்டிகளும் அணுக்கழிவுகள் நிரம்பி விட்டன. மேலும், அதே தொட்டியில் அணுக்கழிவை கொட்டினால், இறுக்கி பிணைத்தல் (dense packing) எனும் ஆபாத்தான முறையை கையாள வேண்டிய சூழலை ஏற்படுத்தும்” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் 2018-ம் ஆண்டு கடுமையாக எச்சரித்தார்.

தற்போது 2021-ம் ஆண்டிலும் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளும் இன்று வரை கூடங்குளம் அணு உலையில் உருவாக்கப்படவில்லை.

உலக அணுசக்தி தொழில் அமைப்பு (WNISR) 2019-ம் ஆண்டுக்கான அறிக்கையில் “கூடங்குளம் அணுமின் நிலையம் முறையாக செயல்படவில்லை. இயங்கி வரும் இரண்டு அணு உலைகளும் மிகவும் மோசமாக உள்ளது. தனது உற்பத்தி அளவில் மிக மிகக் குறைவான மின்சார உற்பத்தியை மட்டுமே செய்கிறது” என்று கூறியுள்ளது.

கூடங்குளத்தில் தற்போது இயங்கி வரும் இரண்டு அணு உலைகளும் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் எந்த கட்டுமானமும் கூடங்குளம் அணு உலையில் இருப்பதாக அறிவியல் பூர்வமான நிருபணங்களும் இதுவரை இல்லை. அணுக்கழிவுகளைப் பாதுகாக்கவும், சேமிக்கவும் எந்த வழிமுறைகளும் இல்லை.

எனவே, மிகவும் ஆபத்தான நிலையில் அதிகமாக அணுக்கழிவுகளை தன்னகத்தே கொண்டு அடிக்கடி பழுதாகி வரும் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகளின் இயக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என தொடர்ந்து சமூக ஆர்வலர்களும், முற்போக்காளர்களும் கூறிவருகின்றனர்.

ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் அணு உலைகளே காலாவதியானவையாக, அடிக்கடி பழுதடையும் தன்மை உடையதாக இருக்கின்ற நிலையில், புதியதாக கட்டப்பட்டு வரும் 3,4,5,6 ஆகிய அணு உலைகள் அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும்.

எந்தவித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லாத இந்த அணு உலைகளை கூடங்குளத்தில் இருந்து உடனடியாக அகற்று! என்ற முழக்கத்தை, கூடங்குளம் மக்களுடன் இணைந்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓங்கி ஒலிக்க வேண்டிய நேரம் இது.


சந்துரு
செய்தி ஆதாரம் : இந்து தமிழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க