பா.ஜ.க. வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 50%-க்கு மேல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதனைக் காட்டிச் சாதி கடந்த இந்து அடையாளத்துக்கு வாக்காளர்களைக் கொண்டுவருவதில் வெற்றிபெற்று விட்டதாக பா.ஜ.க. கூறிக்கொள்வது சற்று மிகையானது என்றாலும், அது முற்றிலும் நிராகரிக்கத்தக்க கூற்றும் அல்ல.

இது  இந்தத் தேர்தல் முடிவின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். பாபர் மசூதி இடிப்பின் முன்னும் பின்னும் “ராமன் எதிர் முஸ்லிம்கள்” என்ற கோணத்தில் மக்களின் பக்தியைப் பயன்படுத்தி, மதவெறியைத் தூண்டி பா.ஜ.க. வாக்குகளை அறுவடை செய்தது. அதைவிட இந்து பெரும்பான்மையின் இன்றைய மனநிலைதான் மிகவும் ஆபத்தானது.

கடந்த 5 ஆண்டு மோடியின் ஆட்சிக் காலத்தில் வட மாநிலங்கள் அனைத்திலும் முஸ்லீம்களுக்கு எதிரான எண்ணற்ற தாக்குதல்கள், கொலைகள் நடந்திருக்கின்றன. பால் வியாபாரி பெஹ்லுகான் பசுக்குண்டர்களால் இராஜஸ்தானில் கொல்லப்பட்டுள்ளார். மாட்டுக்கறி வைத்திருந்ததாக அக்லக் (உ.பி.) கொல்லப்பட்டிருக்கிறார். அவரது கொலை வழக்கைப் புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர் சுபோத்குமார் இந்து வெறியர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்து மதவெறிக் குண்டர்களால் கொல்லப்பட்ட (இடமிருந்து) பெஹ்லு கான், முகம்மது அக்லக் மற்றும் பதின் வயது ஜுனைத் கான்.

லவ் ஜிகாத் என்று பொய்க்குற்றத்தின் பேரில் முஸ்லீம்களுக்கு எதிராக முசாஃபர்நகர் கலவரம் நடந்திருக்கிறது. இரயிலில் உட்கார இடம் தரவில்லை என்பதற்காக ஜுனைத் என்ற இளைஞன் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறான். இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே!

இந்த நிகழ்வுகள் வட இந்தியாவின் இந்துப் பெரும்பான்மையினர் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ன? இத்தகைய தாக்குதல்கள் இந்துப் பெரும்பான்மையினர் மத்தியில் சகஜமாக்கப்பட்டிருக்கின்றன. பலருக்குச் சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றிய அக்கறை இல்லை. பலருக்கும் பா.ஜ.க. என்பது இந்துவெறிக் கட்சி என்ற கருத்து இல்லை.

இவற்றை எதிர்த்துப் பேசுபவர்கள் சில அறிவுத்துறையினர் மற்றும் புரட்சியாளர்கள் என்ற அளவிலேயே உள்ளது. மற்ற கட்சிகளோ, மக்களோ இவற்றை எதிர்ப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை பெரும்பான்மை சமூகம் ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை. இந்து ராஷ்டிரம் என்று சங்கப் பரிவாரத்தின் மொழியில் சொல்லாவிட்டாலும், இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர் என்பதால் இது “இந்து நாடுதான்” என்ற கருத்து பொதுக் கருத்தாகவே இருக்கிறது.

படிக்க :
♦ மேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் !
♦ எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam

சிறுபான்மை மக்கள் மீதான வன்முறையைச் சகஜமாக எடுத்துக் கொள்ளும் மனநிலைக்கு, “சாதி ஒடுக்குமுறை குறித்துக் கடுகளவும் குற்றவுணர்வு கொள்ளாமலிருக்கும் சாதி ஆதிக்க உளவியல்” ஒரு முக்கியமான அடிப்படையாக அமைந்திருக்கிறது. இருந்த போதிலும், இந்த மாநிலங்கள் எதிலும் பார்ப்பன இந்து மதம் ஒருபோதும் கருத்தியல்ரீதியாக எதிர்க்கப்படவில்லை என்பது இன்று உருவாகியிருக்கும் இந்த நிலைமைக்கு முக்கியப் பின்புலமாக இருக்கிறது.

அது மட்டுமல்ல, லிபரல்கள் என்று சொல்லப்படுவோரிடமும் சரி, முற்போக்காளர்கள், வலது, இடது கம்யூனிஸ்டுகள் ஆகியோரிடமும் சரி பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து – இந்தி – இந்தியா எதிர்ப்பு என்ற கண்ணோட்டம் இல்லை. பார்ப்பனியம் என்பது தேசிய இன, மொழி உரிமைகளுக்கு எதிரானது என்ற புரிதலும் இல்லை.

மாறாக, “இந்து மதம் ஜனநாயகப் பூர்வமானது, பன்முகத் தன்மை கொண்டது, ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்துத்துவம் என்பதுதான் ஒற்றைப் பண்பாடை வலியுறுத்தும் பாசிசத் தன்மை கொண்டது” என்ற கருத்தையே காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் லிபரல் அறிவுத்துறையினர் வரையிலான அனைவரும் பேசுகின்றனர். காந்தியத்தின் பெயரால் பார்ப்பனியத்தை நியாயப்படுத்தும் இந்தப் போக்கு ஒரு வரலாற்றுப் புரட்டு என்பது மட்டுமல்ல, நிகழ்காலத்திய சமூக எதார்த்தத்துக்கும் எதிரானது.

இந்து மதம் எனப்படும் பார்ப்பன மதத்திற்குத் தரப்படும் இந்த அங்கீகாரத்தைச் சங்கப் பரிவாரம் மகிழ்ச்சியுடன் வழிமொழிகிறது. “இந்துமதம் தன் இயல்பிலேயே ஜனநாயகப் பூர்வமானது, மற்ற மதங்களுடன் சகவாழ்வு நடத்துவது, அதன் காரணமாகத்தான் இந்தியா ஜனநாயக நாடாகவே இருக்கிறது. இந்துக்களின் இந்தத் தாராள மனோபாவம்தான் பிற மதத்தினரின் அடாவடித்தனத்துக்குக் காரணமாக இருக்கிறது” என்கிறது சங்கப் பரிவாரத்தின் பிரச்சாரம்.

நானிம் இந்துதான் என நிரூபிக்கும் முகமாக, ம.பி. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அம்மாநிலத்திலுள்ள உஜ்ஜைன் மகாகாளீஸ்வர் போவிலில் வழிபாடு நடத்திய ராகுல் காந்தி. (கோப்புப் படம்)

“முஸ்லீம்களுக்கு அவர்களுக்குரிய இடத்தை மோடிதான் காட்டியிருக்கிறார்” என்று 2002 குஜராத் படுகொலைக்குப் பின்னர் குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை கூறிய கருத்து மேற்சொன்ன கண்ணோட்டத்திலிருந்துதான் வருகிறது. இன்று வட இந்திய இந்துப் பெரும்பான்மையின் மனோபாவத்தில் இக்கருத்து குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்துகிறது எனத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.

“மண்டலை வைத்து கமண்டலை முறியடிக்க முடியும்”, “சாதி அமைப்பு முறைக்குச் சித்தாந்தரீதியில் நியாயம் கற்பிக்கும் பார்ப்பனியத்தை, சாதியைப் பயன்படுத்தியே முறியடித்துவிட முடியும்” என்று வாதிட்ட “சமூகநீதி” கட்சிகளின் தோல்வியையும் உ.பி., பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவற்றையும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளிடையேயான பிளவையும் தனக்குச் சாதகமாக பா.ஜ.க.தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பனியத்தை வைத்துப் பார்ப்பனியத்தை முறியடிக்க முடியாது என்ற பாடத்தையும் இந்தத் தேர்தல் முடிவு கற்றுக் கொடுத்திருக்கிறது.

இந்து அடையாளத்தை இந்திய தேசியத்துடன் பிணைப்பதிலும் பாரதிய ஜனதா வெற்றி கண்டிருக்கிறது. தேசத்தின் உட்கிடையாக இந்து மதத்தை காட்டுவதன் மூலம் இந்து மதத்தை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள் என்றும், தேசத்தின் காவலனான மோடியை எதிர்ப்பவர்களும் தேச விரோதிகள் என்றும் இதனை பா.ஜ.க. நீட்டிக்கிறது. இங்ஙனம், “மதம் – தேசம்  கட்சி – தலைவன்” ஆகியவற்றை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாத வண்ணம் பார்ப்பன பாசிசம் இணைத்திருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் வங்க தேசத்திலிருந்து குடியேறியவர்கள் குறித்த பிரச்சினையில் “இந்து என்ற வரையறைக்குள் வருகின்றவர்களுக்கு மட்டும்தான் இந்தியாவில் குடியுரிமை தரப்படும்” என்று அமித்ஷா பேசியிருப்பது, “யூதர்களுக்கான நாடு இசுரேல்” என்பதைப்போல “இந்துக்களின் நாடு இந்தியா” என்ற புதிய வரையறையை உருவாக்கும் இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டமாகும்.

“மதச்சார்பின்மை என்ற முகத்திரையை அணிந்து கொள்ளும் தைரியம் இந்தமுறை எதிர்க்கட்சிகள் யாருக்கும் இல்லை” என்று மோடி தனது வெற்றி உரையில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மோடி சொன்னது உண்மைதான். மதச்சார்பின்மை என்ற வார்த்தையைக் கூட எதிர்க்கட்சிகள் பயன்படுத்தவில்லை. வெறுப்பு அரசியல் கூடாது, பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்று முடிந்தவரை மொன்னையான வார்த்தைகளில்தான் காங்கிரசு முதல் வலது, இடது கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைவரும் பேசினர்.

வாக்காளர்களின் இந்து மனோபாவத்தை தாஜா செய்வதற்காகச் சட்ட மன்றத் தேர்தலின் போது ராகுல் கோயில் கோயிலாகச் சென்றார். கோசாலை அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார். காங்கிரசு வேட்பாளர்கள் ஏகப்பட்ட சாமியார்களை விழுந்து வணங்கினர். வேள்விகள் நடத்தினர்.

எதிர்க்கட்சிகள் இவ்வாறு சரணடைந்து விட்ட நிலையில், பா.ஜ.க. அடுத்த தாக்குதல் நிலைக்குச் சென்றது. மாலேகான் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியும், ஊபா சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுத் தற்போது பிணையில் வெளியே வந்திருப்பவருமான பிரக்யா சிங் தாகூர் என்ற பயங்கரவாதியை, காங்கிரசு முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்கிற்கு எதிராக போபால் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியது.

பிரக்யா சிங் தாக்கூர், கிரிராஜ் சிங், சாக்‌ஷி மகாராஜ், ஆனந்த் குமார் ஹெக்டே மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி.

“இந்து மதத்தை இழிவுபடுத்தும் சதிக்கு எதிராகவும், ஒரு பெண் சாமியாரை, ஒரு தேசபக்தையைச் சிறையில் வைத்துச் சட்டவிரோதமாகச் சித்திரவதை செய்தவர்களுக்கு எதிராகவும் தான் நடத்துகின்ற போராட்டம்” என்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் பிரக்யா சிங். (சித்திரவதை குறித்து அவர் அளித்த புகாரை பொய்ப்புகார் என்று தேசிய மனித உரிமைக் கமிசன் 2014-இலேயே நிராகரித்துவிட்டது) பிறகு, கோட்சேவைத் தேசபக்தன் என்றார். தன்னைக் கைது செய்த ஹேமந்த் கர்கரே கொல்லப்படுவதற்கு காரணமே தன்னுடைய சாபம்தான் என்றார். பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றதற்காகத் தான் பெருமைப்படுவதாகப் பேசினார். இத்தனை மதவெறிப் பேச்சுகளுக்கும் பிறகு ம.பியின் தலைநகரான போபாலில் 3.5 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சாக்ஷி மகராஜ் என்ற சாமியார் உ.பி. மாநிலம் உன்னாவ் தொகுதியின் வேட்பாளர். பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். இதுவன்றி 33 கிரிமினல் வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. 2011-இல் ஒரு கும்பல் வல்லுறவு குற்றத்தில் கைது செய்யப்பட்டு, போதிய சாட்சி இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டவர். ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. இவரும் கோட்சேவைத் தேசபக்தர் என்று புகழ்ந்தவர். இவர் 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கிரிராஜ் சிங் மத்திய அமைச்சராக இருந்தவர். பீகார் மாநிலம் பெகுசராயில் கன்னையா குமாருக்கு எதிராக நிறுத்தப்பட்டார். “தேசியக் கொடியில் இருக்கும் பச்சை நிறம் தேசத்துக்கே அவமானம்”, “முஸ்லீம்களின் கல்லறைகளுக்கு மட்டும் எதற்கு இவ்வளவு இடம்”, “மோடியை ஆதரிக்காதவனெல்லாம் பாகிஸ்தானுக்குப் போகட்டும்”, “வந்தே மாதரம் சொல்ல மறுப்பவனை வேட்பாளராக நிற்கவே அனுமதிக்கக்கூடாது” – என்றெல்லாம் மதவெறிப் பிரச்சாரம் செய்த கிரிராஜ்சிங், 4 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் கன்னையா குமாரைத் தோற்கடித்தார்.

படிக்க :
♦ முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் !
♦ Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் !

ஆனந்த் குமார் ஹெக்டே, மத்திய அமைச்சர். கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதி வேட்பாளர். இஸ்லாம் என்றொரு மதம் இருக்கும் வரை உலகத்தில் அமைதி இருக்காது என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதற்காக வழக்கைச் சந்திப்பவர். ஜனவரி 2018 -இல் தலித் போராட்டக்காரர்களை “குரைக்கும் நாய்கள்” என்று பேசியவர். ஜனவரி 2019 தாஜ்மகால் என்பது தேஜோ மகாலயா என்ற சிவன் கோயிலாகும் என்றும் அதனை மீட்க வேண்டும் என்றும் பேசியவர். 2014 -இல் இதே தொகுதியில் 1.4 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹெக்டே, இந்தத் தேர்தலில் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இவையனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, ஸ்டேன்ஸ் பாதிரியாரை எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்தபோது, அதனைச் செய்த பஜ்ரங் தள் அமைப்பின் தலைவராக இருந்த பிரதாப் சந்திர சாரங்கி, இப்போது மத்திய அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

இவையனைத்தும் இந்து பயங்கரவாதத்தையே மைய நீரோட்டமாக மாற்றுவதற்கு மோடி – அமித் ஷா கும்பல் மேற்கொண்டு வரும் முயற்சிக்குச் சில சான்றுகள். இந்தப் பயங்கரவாதிகள் அனைவரும் 3 இலட்சம், 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றிருக்கும் வெற்றி எதற்குச் சான்று?

இந்துத்துவ பயங்கரவாதம் வட இந்திய சமூகத்தின் மைய நீரோட்டமாக மாறிவருவதற்குச் சான்று. மோடியின் தேர்தல் வெற்றியை விடவும் இதுவே நமது கவலைக்குரியது.

சூரியன்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க