வில்லவன்
பாஜக வட்டாரத்தில் சில மாற்றங்களை நீங்கள் அவதானித்திருக்கக்கூடும். இதுவரை மன்மோகன் சிங்கை முடிந்தவரைக்கும் அவமரியாதை செய்தது பாஜக, இப்போது ‘நிம்மி’ திடீரென அவரை சந்தித்து பேசுகிறார்.

முஸ்லீம்களின் ரத்தத்தை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கும் கட்சியின் பிரதமர் தன் கட்சிக்காரனின் ரவுடியிசத்தை கட்சி கூட்டத்தில் கண்டித்ததாக செய்தி வருகிறது. எழுபது ஆண்டுகளில் செய்ய முடியாததை எங்களால் ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாது என நாடாளுமன்றத்தில் சொல்கிறார் மோடி. நாம் எல்லோரும் சேர்த்து நாட்டை உயரத்துக்கு கொண்டு செல்லலாம் என மற்ற கட்சிகளை முதல் முறையாக அழைக்கிறார். வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பது எல்லோருடைய கடமை என்பதாக இருந்தது மோடியின் சமீப உரை ஒன்று.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் “மத்திய அரசால் மட்டுமே எல்லாவற்றையும் செய்ய இயலாது” என மறைமுகமாக சொல்லிவிட்டார் (மாநில அரசுகளும் இணைந்து பணியாற்றினால்தான் முடியுமாம்). போன முறை ஆட்சிக்கு வந்தபோது பொங்கிப் பிரவாகம் எடுத்த எந்த சவடால்களும் இப்போது இல்லை. மயிலை மாமாக்களும்கூட ஜென் நிலையை பராமரிக்கிறார்கள். அடிமட்ட சங்கிப் பொறுக்கிகள் மட்டும்தான் ஜெய்ஸ்ரீராம் கொலைகளையும் தாக்குதல்களையும் செய்கிறார்கள். மேல்மட்டம் கொஞ்சம் உறைநிலையில் இருப்பதை கவனித்தீர்களா?

முன்பைவிட பெரிய வெற்றி, பாஜகவின் ஆளுகையின் கீழ் வராத அமைப்புக்களே இன்று இல்லை. ஓரிரு ஆண்டுகளில் மேலவையிலும் பெரும்பான்மை கிடைக்கவிருக்கிறது. எதிர்கட்சிகள் எல்லாமே தோல்வி மனோபாவத்திற்கு சென்றுவிட்டன. இன்று பாஜகவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம்வரை அரசாங்கத்திலும் அரசியலிலும் எதிரிகளே இல்லை. ஆனாலும் இந்த அமைதியும் பொறுப்புத்துறப்பும் நிகழ என்ன காரணம்?

இனி பாஜக சண்டையிடப்போவது இந்திய பொருளாதாரத்தோடும் அதன் வழியே மக்களோடும்தான். போலியான ஜிடிபி கணக்கீட்டின் மூலம் சொல்லிக்கொள்ளும்படியான எண்களை மத்திய அரசு காட்டிவிட்டது. ஆனால் அது பொய்தான் என முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் இந்தியாவின் நிஜ பகவான் அமெரிக்காவிடம் ஒப்புக்கொண்டுவிட்டார்.

படிக்க:
தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !
இந்திய நாடு, அடி(மை) மாடு !

35,000 கோடி மதிப்புள்ள கார்களும் 17,000 கோடி மதிப்புள்ள இருசக்கர வாகனங்களும் இந்திய சந்தையில் விற்பனையாகாமல் தேங்கி நிற்கின்றன. வண்டிகளை நிறுத்த இடமில்லாமல் நிறுவனங்கள் லே-ஆஃப் கொடுக்க தயாராகிறது. ஆட்டோமொபைல் உதிரிபாக தொழிற்சாலைகளுக்கு ஆர்டர்கள் வருவது குறைந்திருக்கிறது. சூரத், திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் வீழ்ந்துகொண்டிருக்கின்றன. ஏற்றுமதி சரிந்திருக்கிறது. மூன்று முறை வட்டிவிகிதம் குறைக்கப்பட்டும் பொருளாதாரம் மோசமாகவே இருப்பதை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைக்காட்டிலும் குறைவாகவே பெய்யும் என வானிலை முன்னறிவிப்புக்கள் சொல்கின்றன. வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் இருக்கிறது. சீனா, ஆசிய பசிபிக் நாடுகளைக் காட்டிலும் அது குறைவுதான் என அரசு சொல்கிறது.

ஊடகங்கள் ஒழுங்காக வேலை செய்தால் இன்னும் மோசமான தரவுகள் வெளிவரக்கூடும். இவை எதுவும் சரியாவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. ஐ.எல்.எஃப்.எஸ் எனும் இந்திய பெரு நிறுவனம் செத்துவிட்டது. பி.எஸ்.என்.எல், ஓ.என்.ஜி.சி வரிசையில் நிற்கிறது. பட்டியலில் எல்.ஐ.சியும் சேர்ந்துவிட்டால் சொந்தக்காரர்களுக்கு சொல்லியனுப்பிவிடலாம். பொருளாதார நெருக்கடி உச்சகட்ட வீக்கத்தில் இருக்கிறது. கச்சா எண்ணை விலை ஏறுவது அல்லது பருவமழை பொய்ப்பது போன்ற எது நிகழ்ந்தாலும் வீக்கம் வெடிப்பது உறுதி.

ஆகவே கிளுகிளுப்பூட்டும் வாக்குறுதிகளோ, தற்காலிக சமாதானங்களோ பாஜக தரப்பில் இருந்து வர வாய்ப்பில்லை. எதிர்முனையில் நிற்கும் பெரு முதலாளிகள் எரியும் வீட்டில் பிடுங்கும் முனைப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் சண்டை வராமல் பிரித்துக்கொடுக்கும் வேலை ஒரு கூடுதல் தலைவலியாக மோடிக்கு இருக்கும்.

படிக்க:
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
♦ ஐந்து மாதங்களாக சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் !

அடிப்படைவாதத்துக்குக்கு பலியாகும் மக்கள்திரள், செய்திகளை தேடிப்போகாமல் வாட்சாப் தகவல்களால் சுயஇன்பம் காணும் இளைஞர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் பக்தியின் வழியே தீர்வை கண்டடைய முனையும் மிடில்கிளால் இவை எல்லாம் சேர்த்து இந்த பிரச்சினைகள் பூதாகரமாகாமல் தடுக்கின்றன.

போதிய வருமானம் இல்லாமல் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் இல்லாத நாளே இல்லை. இதைவிட வலுவான ஒரு எச்சரிக்கை நம் நாட்டுக்கு இருக்க முடியாது. ஆனாலும் அடுத்தவர்களைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு துரத்தும் வாழ்வியல் நெருக்கடியும் அடுத்தவன் பிரச்சினை பற்றி எனக்கு கவலையில்லை எனும் சுயநலமும் இந்த செய்திகளை கவனத்துக்கு வராமல் செய்கின்றன.

தாராளமயம் எல்லாவற்றையும் தனிநபர் பிரச்சினையாக பார்க்க கற்றுக்கொடுத்திருக்கிறது. மதமோ அது உன் தலையெழுத்து, பூஜை செய்து நிவாரணம் தேடு அல்லது சொர்கத்தில் கூலியை வாங்கிக்கொள் என சமாதானம் சொல்கிறது. ஆனால் சோத்துக்கு சண்டை போடும் காலம் வந்தால் இது எதுவும் அரசை காப்பாற்றாது.

இந்த கள எதார்த்தமும் அவை எதையும் சரிசெய்ய வாய்ப்பற்ற கையாலாகத்தனமுமே பாஜக தரப்பை அடக்கி வாசிக்க வைக்கிறது. இந்த பட்ஜெட்டின் பெரும் சவாலாக இருப்பது யாரிடம் இருந்து பிடுங்கி பற்றாக்குறையை சமாளிப்பது என்பதுதான். அதனால்தான் அவர்கள் தமது திமிர் பிடித்த பொறுக்கி முகத்தை மறைத்துக்கொண்டு விக்ரமன் பட நாயகனைப்போல வேதாந்தம் பேசும் சாந்த முகத்தை காட்ட முற்படுகிறார்கள்.

அவர்கள் காட்டும் முகம் எதுவானாலும் சரி, உங்களுக்கு அதனால் எதுவும் ஆகப்போவதில்லை. பொருளாதார சுயமைதுனங்கள் அதன் வேலிடிட்டியை இழந்துவிட்டது. இனி இந்த நாடு ஒரு கறைவை நின்றுபோகப்போகும் மாடு. அடிமாடு என்றாலும் முதலாளிகள் அதனை கசாப்புக்கு அனுப்பி லாபம் பார்க்க முடியும். அதன் வலியும் சுமையும் விடியப்போவது நமது பிள்ளைகள் தலையில்தான்.

ஜெய்ஸ்ரீராம் சொல்லச்சொல்லி கொல்லப்படுபவனும் நாமும் கிட்டட்டத்தட்ட ஒன்றுதான். இன்னும் சொல்வதானால் நம் நிலைமை இன்னும் மோசம், காரணம் நாம்தான் நம் பிள்ளைகள் அழிவை நேரில் காணப்போகும் தலைமுறை.

போலோ ஜெய் ஸ்ரீ ராம்…

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.