மோட்டார் வாகன உற்பத்தி கடந்த 2018 மே மாதத்தை ஒப்பிடும் போது இந்த வருடம், மே மாதத்தில் 20.55% குறைந்திருக்கிறது. பொதுவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி, கடன் வர்த்தக சரிவு, வரி – காப்பீடு ஒழுங்கு முறைகளில் மாற்றம் காரணமாக வாகன உற்பத்தித் துறை சரிந்திருக்கிறது.
இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் ( Society of Indian Automobile Manufacturers (SIAM) ) வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, தொழிற்சாலைகளிலிருந்து முகவர்களுக்கு விற்பனை செய்யப்படும் வாகனங்கள் பெரும் சரிவை சந்தித்திருக்கின்றன. இதில் இலகுரக வணிக வாகனங்கள் மட்டும் ஒரு விதி விலக்கு.
“பொருளாதார வளர்ச்சியின்மை காரணமாகவே இந்த சரிவு நடக்கிறது. கடந்த வருடத்தில் கேரளா வெள்ளத்தில் தத்தளித்த போதே இந்த விற்பனை குறைவு ஆரம்பித்துவிட்டது. மேலும் எரிபொருள் விலை உயர்வும் இந்த நெருக்கடியை தந்திருக்கிறது…” என்கிறார் வாகன உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குநர் மாத்தூர்.
சென்ற 2018 அக்டோபர் மாதத்தின் பண்டிகை (தீபாவளி போன்ற) காரணமாக வாகன விற்பனை கொஞ்சம் உயர்ந்திருந்தாலும், அதற்கடுத்த மாதங்களிலிருந்து தற்போதைய மே மாதம் வரை வாகன விற்பனை பெரிதும் குறைந்திருக்கிறது.
மே 2018-ம் ஆண்டில் பயணிகள் வாகனங்கள் 3,01,238 யூனிட்டுகள் விற்பனை ஆனது என்றால் 2019 மே மாதத்தில் விற்பனை 2,39,347 யுனிட்டுகளே விற்பனையாகி இருக்கின்றன. இந்த அளவு விற்பனை சரிந்திருப்பது என்பது கடந்த செப்டம்பர் 2001-ம் ஆண்டில் நடந்தது. அப்போதும் விற்பனை 21.91% அளவுக்கு குறைந்திருந்தது. தற்போது பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு விற்பனை குறைந்திருக்கிறது.
விற்காத வாகனங்களால் முகவர்களின் சுமை கூடியிருக்கிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் கொடுக்க மறுப்பதால், அவர்களால் கொள்முதலும் செய்ய இயலவில்லை.
படிக்க:
♦ இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !
♦ கார்கள் : வளர்ச்சியின் அறிகுறியா ? முதலாளித்துவ அழிவின் குறியா ?
வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் நடந்துவரும் தொடர் நெருக்கடியாலும், வங்கிகளும் எளிதில் கடன் கொடுக்க மறுப்பதாலும் பொதுவில் கடன் பெறுவது சிரமமாகிறது.
“பல்வேறு போக்குகள் இந்த நெருக்கடிக்குக் காரணமாக இருக்கின்றன. கார்களை வாங்கும் விருப்பம் மக்களிடையே குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் நிதி நிறுவனங்களின் நெருக்கடி. 7 இலட்சம் ரூபாய் வரை விற்கப்படும் அறிமுக வாகனங்களின் விற்பனை அதனால் பெரிதும் சரிந்திருக்கிறது.” என்கிறார் டிலோட்டி நிறுவனத்தைச் சேர்ந்த குஷால் சிங்.
“கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஊரகப் பகுதிகளில்தான் வாகன விற்பனை அதிகம் நடந்தன. விவசாயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும், விவசாயத்தில் இருந்து வரும் வருமானம் குறைந்து விட்டதாலும் கடந்த இரு வருடங்களாக வாகன விற்பனை பாதித்திருக்கிறது. கடந்த எட்டு மாதங்களாக நிலைமை இன்னும் மோசம்” என்கிறார் வாகன முகவர்களின் கூட்டமைப்பு துணைத் தலைவரான வின்கேஷ் குலாட்டி(Vinkesh Gulati).
‘பாரத்ஸ்டேஜ் ஆறு’ எனப்படும் வாகன ஒழுங்கு, 2020-ம் ஆண்டிலிருந்து அமல்படுத்த இருப்பதால் வாகன உற்பத்தியாளர்கள் தற்போது உற்பத்தி செய்யும் வாகனங்களில் அப்டேட் செய்வதில்லை என்பது ஒரு துணைக் காரணமாகும்.
அதே போன்று புதிய காப்பீட்டு கொள்கைகளும் காரணமாக இருக்கின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி கார்களுக்கு மூன்று வருடங்களும், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு சேர்த்தும் காப்பீடு கட்டணம் கட்ட வேண்டும். இதனால் கடையில் விற்கப்டும் வாகனங்களின் விலை 7 முதல் 8% வரை உயர்ந்திருக்கிறது.
ஒட்டு மொத்தமாக அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் தமது உற்பத்தியை குறைத்து வருகின்றனர். இந்த வாகன உற்பத்திக் குறைவு, மற்றும் விற்பனைத் தேக்கத்தினால் பாதிக்கப்படுபவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள்தான். வாகன தொழிலில் இருக்கும் தொழிலாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளிகள்தான். அவர்கள் அனைவரும் அல்லது கணிசமானோர் வேலையிழப்பர்.
மாருதி, மகேந்திரா போன்ற பெரிய நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கவோ, நிறுத்தவோ செய்யும் போது தொழிலாளிகள் ஆயிரக்கணக்கில் வேலை இழப்பர். வருகின்ற பட்ஜெட்டில் புதிய அரசு ஏதாவது பார்த்து ஆவண செய்ய வேண்டும் என வாகன முகவர் சங்கத்தினர் கோருகின்றனர்.
28%-ஆக இருக்கும் ஜி.எஸ்.டி வரியை 18%-ஆகக் குறைப்பது, பழைய கார்களை அழிப்பதை கொள்கையளவில் கொண்டு வருவது, இதனால் மக்கள் பழைய கார்களை அழித்து விட்டு புதிய கார்களை வாங்க இயலுமென்றும் அச்சங்கத்தினர் கூறுகிறார்கள். இப்படித்தான் அமெரிக்காவில் கார் விற்பனையை செய்கிறார்கள். செல்போன்களில் பழையதை கடாசி விட்டு புதியது வாங்குவது போல கார்களையும் மாற்ற வேண்டுமாம்.
மாருதி கார் நிறுவனம் தனது உற்பத்தியை 18% குறைத்துள்ளது. இதை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளது. மாருதி நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் சிறிய ரகக் கார்களான ஆல்டோ, ஸ்விப்ட், டிசையர் போன்றவற்றின் உற்பத்தி 42% வரை குறைத்துள்தாகவும் மாருதி தெரிவித்துள்ளது.
மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனமோ 13 நாட்களுக்கு உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனையும் கணிசமாக சரிந்திருப்பதாக முகவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
படிக்க:
♦ ரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் !
♦ 100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !
மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இலட்சக்கணக்கான ஒப்பந்த தொழிலாளிகள் வேலை இழக்கப் போகின்றனர். வாகன உற்பத்தியாளர்களை சார்ந்து பிழைக்கும் ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர நிறுவனங்களும் பாதிக்கப்படும். அங்கும் வேலையிழப்பு கணிசமாக இருக்கும். மோடி அரசு பதவி ஏற்றபிறகு இப்படித்தான் புதிய இந்தியா ஆரம்பித்திருக்கிறது.
முதலாளித்துவ நெருக்கடி என்றால் என்ன என்பதற்கு இந்த வாகன விற்பனை தேக்கம் ஒரு நல்ல சான்றாகும். சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள்; வாங்க ஆள் இல்லாமல் தேங்குகின்றன. உடனே நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கின்றன. தொழிலாளிகள் வேலையிழப்பர்.
இதற்கு முன்னாடி கார்கள் விற்பனை கன ஜோராக நடந்ததா என்றால் அப்படியும் இல்லை. நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு மோகத்தை கூட்டி விட்டு கடன் ஏற்பாடு செய்து, அவர்களது எதிர்கால வருமானத்தை இலக்கு வைத்து இன்னும் பல்வேறு முறைகளில் விற்பனை செய்தார்கள். தற்போது அவை எல்லாம் முட்டுச் சந்துக்குள் வந்து விட்டன. விவசாய வீழ்ச்சி, இதுவரை இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை இந்த நெருக்கடியோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. முதலாளித்துவம் சமூகத்தை அழிக்கும் விசச் சூழல் இப்படித்தான் சங்கிலித் தொடர் போன்று பல அழிவுகளை ஏற்படுத்துகிறது.
மதன்
செய்தி ஆதாரம் : ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து
நீங்கள் தானே பொய்களை பரப்பி ஸ்டெர்லைட் ஆலையை மூடி அந்த ஆலை தொழிலாளர்களின் குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்திர்கள், இப்போது மாருதி கார் தொழிலாளர்கள் வேலை போய்விடும் என்று நீலி கண்ணீர் வடிக்கிறீர்களே உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தவில்லையா ? உங்களின் பொய்களால் தூத்துக்குடியில் உயிர்கள் பலியாகி இருக்கிறது.
அசோக் லேலாண்ட் நிறுவனம் மிகை உற்பத்தியை சந்தையில் திணித்து திணரடித்துவிட்டது.
மூன்று ஆண்டுகளில் 4000 கோடிக்கு மேல் இலாபமாக காட்டியுள்ளது.