ஈழப் போர்க் குற்ற விசாரணை : இலங்கைக்குச் சலுகை ! ஈழத் தமிழருக்கு வஞ்சனை !!

ழத் தமிழர் இனப் படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. “ஈழ இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்துக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு இலங்கை அரசு அயல்நாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்களையும் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்” என்பது உள்ளிட்டு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் (30/1) நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், நீதி இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2015-ம் ஆண்டு ஈழப்போர் தொடர்பாகத் தீர்மானம் எண்.30/1 நிறைவேற்றப்பட்டபொழுது, அதிலுள்ள அம்சங்களை 2017 மார்ச்சுக்குள் செயலுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அக்கெடு 2019-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. 2019 மார்ச்சில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, அக்காலக்கெடுவை மேலும் இரண்டு ஆண்டுகள், அதாவது 2021 வரை இலங்கைக்குக் கால அவகாசம் கொடுக்கும் முடிவை அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுவிட்டன. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பது திட்டமிட்டரீதியில் மறுக்கப்படுவதைத்தான் இவை அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.

ஈழ இறுதிப் போரின் பத்தாம் ஆண்டு நிறைவுபெற்றதையொட்டி, அப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்து ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் நடத்திய நினைவேந்தல்.

ஐ.நா. மன்றமோ அல்லது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலோ, இலங்கை அரசு இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்ததை இதுவரை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஈழப் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்துதான், அப்போது ஐ.நா.மன்ற பொதுச் செயலராக இருந்த பான் கீ மூன் இறுதிக்கட்டப் போர் குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்தார். “இலங்கை அரசு கொடிய போர்க் குற்றங்களைச் செய்திருப்பதாகக் கூறிய அக்குழு, இது குறித்துப்  பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனப் பரிந்துரைத்தது. எனினும், இப்பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்த ஐ.நா. மன்றம் முன்வரவில்லை.

மாறாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அப்பொழுது இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே அமைத்திருந்த “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணத்திற்கான ஆணையத்தின்” பரிந்துரைகளை அமல்படுத்துமாறு ராஜபக்சேவிடம் கோரிவந்தது. யாரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டுமோ, அக்குற்றவாளியிடமே நீதி கேட்ட கேலிக்கூத்து இது. ராஜபக்சே அமைத்த அந்த ஆணையமும், இறுதிக் கட்டப் போரின்போது இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதா என்பதை இலங்கை அரசே விசாரித்துவருவதாக ஒரு தோற்றத்தை உலக நாடுகளிடம் ஏற்படுத்த காட்டிவந்த நாடகமே தவிர, வேறில்லை. இறுதிக் கட்டப் போரில் இலங்கை இராணுவம் திட்டமிட்டரீதியில் மனிதப் படுகொலை எதிலும் ஈடுபடவில்லை என்றுதான் அந்த ஆணையம் அறிக்கை அளித்திருந்தது.

படிக்க :
♦ இலங்கை குண்டுவெடிப்பு
♦ ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!

2014, மார்ச்சில்தான் இறுதிக் கட்டப் போர் குறித்த ஒரு விரிவான விசாரணையை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆணையர் நடத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையை மார்ச் 2015-ல் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதன்படி விசாரணை நடத்தப்பட்டு, செப்.2015-ல் விசாரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்மானம் எண்.30/1 நிறைவேற்றப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்று, மைத்ரிபால சிறீசேனா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ராஜபக்சே அதிபராக இருந்த பொழுது, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதை அனுமதிக்க மறுத்தார். ஆனால், சிறீசேனாவோ இவ்விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுத்ததோடு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானம் 30/1 -ஐ முன்மொழிந்தபோது, அதில் தானும் இணைந்துகொண்டார். மேலும், இந்த ஒத்துழைப்புக்கான பலன்களையும் அதிபர் சிறீசேனா அறுவடை செய்து கொண்டார்.

ஐ.நா. மன்றப் பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்த விசாரணைக் குழு, ஈழ இறுதிக் கட்டப் போர்க் குற்றங்களை விசாரிக்கப் பன்னாட்டு விசாரணை மன்றம் அமைக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானமோ, இப்பன்னாட்டு விசாரணையைக் கைவிட்டு, அதனிடத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் பங்குகொள்ளும்படியான ஒரு சிறப்பு நீதிமன்றத்தை இலங்கை அரசே அமைத்துக்கொள்ள அனுமதித்தது. பன்னாட்டு விசாரணை கூடாது என ராஜபக்சே கோரி வந்ததை, சிறீசேனா கொல்லைப்புற வழியில் சாதித்துக் கொண்டார்.

மைத்ரிபால சிறீசேனா

இச்சிறப்பு நீதிமன்றத்துக்கு அப்பால், “வடக்கு – கிழக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும். இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள ஈழத் தமிழர்களின் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். போரின் முடிவில் வதை முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நட்டஈடு – நிவாரணம் வழங்கும் அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு சமூக, அரசியல் உரிமைகள் வழங்கக்கூடிய வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்” ஆகிய அம்சங்களோடு நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்தை மார்ச் 2017-க்குள் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. எனினும், இக்காலக்கெடு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டு, தற்பொழுது மார்ச் 2021 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

மார்ச் 2015 -க்கும் மார்ச் 2019 -க்கும் இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளில், இலங்கை அரசு 30/1 தீர்மானத்தின்படி ஈழத் தமிழர்களுக்கு நீதியும் நியாயமும் வழங்குவதற்கு ஏதேனும் உருப்படியான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறதா எனப் பரிசீலித்து, காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. மாறாக, இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்றுகொண்டு வழங்கப்பட்ட சலுகை இது. காலக்கெடுவைத் தள்ளிக் கொண்டே போவதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுவதை நடைமுறைப்படுத்தும் தந்திரம் இது.

நீர்த்துப்போன ஒன்று என்றாலும், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பது 30/1 தீர்மானத்தின் முக்கியமான அம்சமாகும். ஆனால், இச்சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் திசையில் இலங்கை ஒரு அடிகூட இதுவரை எடுத்து வைக்கவில்லை. மாறாக, இனப் படுகொலையில் ஈடுபட்ட அதிகாரிகளையும் சிப்பாய்களையும் போர்க் கதாநாயகர்கள் என அழைக்கத் தொடங்கிய சிறீசேனா, பத்திரிகைச் செய்திகளிலும், இராணுவச் சிப்பாய்களைக் கூட்டி நடத்தப்படும் கூட்டங்களிலும், இராணுவ வீரர்கள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என மீண்டும் மீண்டும் உறுதியளித்து வருகிறார்.

படிக்க :
♦ நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !
♦ முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 2016-ம் ஆண்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த அதேவேளையில், நீதித்துறை அமைச்சர் விஜேவாயாடஸா ராஜபக்சே, “இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக விமர்சிப்போர் மீது கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும்” என மிரட்டினார்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தின்படி, காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகமும் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நட்ட ஈடு-நிவாரண உதவி அலுவலகமும் அமைக்கப்பட்டிருப்பதாகக் கணக்குக் காட்டிவருகிறது, இலங்கை அரசு. எனினும், இந்த இரண்டு அமைப்புகளும் சோளக்காட்டு பொம்மையைவிடக் கேவலமானவை.

சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தையொட்டி, ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களை நினைவுகூர்ந்தும், அதற்கு நீதி கேட்டும் ஈழத் தமிழ் அமைப்புகள் இலங்கை மன்னார் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி. (கோப்புப் படம்)

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் ஒரு குறிப்பிட்ட நபர் போரின்போது காணாமல் போனதாகச் சான்றிதழ் வழங்கி, அதற்குரிய நட்ட ஈடு வழங்குமாறு பரிந்துரைக்க முடியுமே தவிர, அதற்கு மேற்பட்டு குற்றவியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அந்த அலுவலகத்திற்குச் சட்டபூர்வத் தகுதியும், உரிமையும் கிடையாது. இறுதிக்கட்டப் போரின்போது எத்துணை ஈழத் தமிழர்கள் காணாமல் போனார்கள் என்ற விவரத்தைக்கூட வெளியிட மறுத்துவருகிறது, இலங்கை அரசு.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நட்டஈடு- நிவாரணம் வழங்கும் அலுவலகத்தைப் பொருத்தவரையில், அதனின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இலங்கை அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அலுவலகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமைகூட கிடையாது. சுருக்கமாகச் சொன்னால், இந்த இரண்டு அமைப்புகளுமே இலங்கை அரசின் தொங்கு தசைகளாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையைச் சார்ந்த “அடையாளம்” மற்றும் “பேர்ல்” என்ற இரண்டு மனித உரிமை அமைப்புகள் ஜூலை 2017-ல் வெளியிட்ட அறிக்கையில், முல்லைத் தீவில் மட்டும் இரண்டு சிவிலியன்களுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற அளவில் அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது தொடருவதாகக் குறிப்பிட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து வன்னிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியைக் கடந்து செல்லக் காத்திருக்கும் ஈழத் தமிழர்கள். (கோப்புப் படம்)

“தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் நிலங்களை இராணுவம் திரும்ப ஒப்படைக்காது” என ஜூலை 2017-ல் நடந்த இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் வெளிப்படையாகவே அறிவித்தார், அதிபர் சிறீசேனா.

முள்ளிவாய்க்கால் பகுதியில் தேசியப் பாதுகாப்புக்காக 672 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் அறிவிக்கையை அக்டோபர் 2017-ல் வெளியிட்டது இலங்கை கடற்படை.

வன்னி, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய பகுதிகளில் மார்ச் 2018-ல் கூடத் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, இராணுவ முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் புதிய கருப்புச் சட்டத்தை இயற்றிவிட்டுத்தான், பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது, இலங்கை அரசு.

சுருக்கமாகச் சொன்னால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் வெறும் காகிதத் தீர்மானமாகவே இருந்து வருகிறது. ஆனாலும், இலங்கை அரசிற்கு அடுத்தடுத்து இரண்டு முறை காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கும் சிறீசேனா அரசிற்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்திருப்பதுதான். மார்ச் 2017-க்குப் பிறகு, அமெரிக்கா இடையே 44 முறை இராணுவம் தொடர்பான சந்திப்புகள் நடந்திருப்பதாகவும், இரண்டு இராணுவங்களும் இணைந்து கூட்டுப் பயிற்சி நடத்தியிருப்பதாகவும் குறிப்பிடுகிறது, மனித உரிமை அமைப்பான பேர்ல்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்புவிலுள்ள நெகோம்போ பகுதியில் அமைந்திருக்கும் புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயலுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையை அணுகி வருகிறது, அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த நோக்கத்திற்கு அணுசரனையாக இலங்கை அரசும் நடந்துவருவதால், அந்நாட்டுக்குச் சலுகைகளும் நிதியுதவிகளும் அளிப்பதில் தாராளமாக நடந்துவருகிறது அமெரிக்கா. இலங்கைக்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதை இந்தப் புவி அரசியல் பின்னணியிலிருந்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுவொருபுறமிருக்க, சமீபத்தில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்புகளைச் சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, “போர்க் காலத்தில் இருந்த கடுமையான இராணுவப் பாதுகாப்பு அம்சங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால்தான், இந்தக் குண்டு வெடிப்புகள் நடந்துவிட்டதாக”க் கூறியிருக்கும் இலங்கை அரசு, இனி இது போன்ற குண்டுவெடிப்புகள் நடப்பதைத் தடுப்பது என்ற பெயரில் ஈழப் போரில் இனப் படுகொலை குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் அமர்த்தி, அக்குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கத் தொடங்கியிருக்கிறது.

மேலும், பௌத்த மதவெறி அமைப்புகளைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை நடத்துவதன் மூலம், ஐ.நா. தீர்மானத்தைச் செயல்படுத்துவதற்கான சூழல் இல்லை எனக் காட்டி, ஈழத் தமிழர்களுக்கு அரைகுறையான நீதி, நியாயம்கூடக் கிடைத்துவிடாதபடிச் செய்யும் சதியிலும் இறங்கியிருக்கிறது.

திப்பு

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

1 மறுமொழி

  1. //தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் புதிய கருப்புச் சட்டத்தை இயற்றிவிட்டுத்தான், பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது, இலங்கை அரசு.//
    இந்தப் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அமுலி; உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க