உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 9

மாஸ்கோ ஆற்றின் மேல் உறைந்திருந்த பனிப்பாளம் உருகி அகன்றுவிட்டது. பனிக்கட்டி உருகியபோது இரைச்சலுடன் பாய்ந்த ஆறு இப்போது மீண்டும் அமைதியுற்றுப் பெருகியது. அதன் விறல்மிக்க கப்பல்களுக்கும் தோணிகளுக்கும் ஆற்று டிராம்வே எனப்பட்ட பயணிப் படகுகளுக்கும் போக்குவரத்துக்குப் பணிவுடன் இடமளித்தது. அந்த கடினமான நாட்களில் சோவியத் தலைநகரில் சாலைப் போக்குவரத்து அருகியிருந்தது, ஆற்றுப் போக்குவரத்தே அதற்கு ஈடு செய்தது. குக்கூஷ்கின் அவச்சொல் கூறியது போல நாற்பத்து இரண்டாவது வார்டில் ஒருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படவில்லை. மாறாக, கமிஸார் ஒருவர் நீங்கலாக எல்லோரது உடல் நிலையும் சீர்பட்டு வந்தது. மருத்துவமனையிலிருந்து வெளிச் செல்வது பற்றிய பேச்சே அடிபட்டது.

முதன்முதலாக வார்டை விட்டு வெளியேறினார் ஸ்தெபான் இவானவிச்.

தமது இராணுவச் சீருடையை அணிந்து பயணம் செய்வதற்காக அவர் வார்டுக்கு வந்தார். சாயம் போய் வெள்ளை வெளேறென்று சலவை செய்யப்பட்ட சட்டையை ஒரு மடிப்பு கூட விழாதபடிக் காற்சட்டைக்குள் செருகி இடுப்புவாரால் இறுக்கியிருந்த அந்த ஈசறுகூடான மனிதர் ஒரு பதினைந்து ஆண்டுகள் வயதில் இளையவராகக் காணப்பட்டார். கண்கூசும் படி மின்னுமாறு மெருகேற்றப்பட்டிருந்த வீர நட்சத்திரமும் லெனின் விருதும் “துணிவுக்காக” அளிக்கப்பட்ட பதக்கமும் அவருடைய மார்பின் மீது பளிச்சிட்டன. மேலங்கி அவரது படை வீர மாண்பை மறைக்கவில்லை. பழைய நீள் ஜோடுகளிலிருந்து அரும்பு மீசை வரை ஸ்தெபான் இவானவிச்சின் தோற்றம் முழுவதும் 1914-ம் ஆண்டுப் போர்க்காலக் கிறிஸ்துமஸ் கார்டில் அச்சிடப்பட்ட பகட்டான ருஷ்யப் படைவீரனுடைய தோற்றத்தை ஒத்திருந்தது.

ஸ்தெபான் இவானவிச் வார்டில் ஒவ்வொரு தோழரையும் அணுகி விடை பெற்றுக் கொண்டார். ஒவ்வொருவரையும் அவரது பட்டத்தைக் கூறி அழைத்து, பூட்சுக் குதிகளை ‘டக்’கென்ற ஒலியுடன் அடித்து இராணுவ முறையில் அவர் வணங்கி விடை பெற்றதைக் காணவே உவப்பாயிருந்தது.

“விடைபெற அனுமதியுங்கள், தோழர் ரெஜிமென்ட் கமிஸார்” என்று ஓரக் கட்டில் அருகே தனிப்பட்ட மனநிறைவுடன் சொன்னார் அவர்.

“மீண்டும் சந்திப்போம், ஸ்தெபான். நலமே வாழ்” என்று கூறி வலியையும் பொருட்படுத்தாமல் அவர் பக்கம் கையை நீட்டினார் கமிஸார்.

ஸ்தெபான் இனாவிச் முழந்தாள் படியிட்டு, கமிஸாரின் பெரிய தலையை அணைத்துக் கொண்டார். ருஷ்ய வழக்கப்படி இருவரும் மூன்று முறை மாற்றி மாற்றி முத்தமிட்டுக் கொண்டார்கள்.

“குணமடையுங்கள், ஸெம்யோன் வஸீலியெவிச். ஆண்டவன் உங்களுக்கு உடல் நலமும் நீண்ட ஆயுளும் அருள்வாராக, பொன்னான மனிதரே. எங்கள் தகப்பனார் எங்களை இவ்வளவு பரிவுடன் பேணவில்லை. உங்களது அன்பை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்…” என்று குரல் தழுதழுக்கக் கூறினார் ஸ்தெபான் இவானவிச்.

“போங்கள், போங்கள், ஸ்தெபான் இவானவிச். இவரைக் கிளர்ச்சி அடையச் செய்வது கெடுதல்” என்று அவர் கையைப் பற்றி இழுத்தவாறு சொன்னாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா.

“ஸிஸ்டர், நீங்கள் காட்டிய அன்புக்கும் பரிவுக்கும் நன்றி” என்று மரியாதையுடன் கூறி, தரை வரை குனிந்து வணங்கினார் ஸ்தெபான் இவானவிச். “நீங்கள் எங்கள் சோவியத் தேவதை. ஆமாம், தேவதை நீங்கள்…”

இன்னொருமுறை எல்லோருக்கும் தலைவணங்கிய பின் அவர் வார்டுக்கு வெளியே போய் மறைந்தார். எல்லோரும் குணமடைந்தார்கள். இப்போது அவர்களுடைய உரையாடல் வெறும் கனவாக இல்லை, காரியரீதியான பேச்சாக இருந்தது. குக்கூஷ்கின் ஆளோடியில் நடக்கத் தொடங்கிவிட்டான். அங்கே நடக்கும் பல நோயாளிகளுடன் அதற்குள் சச்சரவிட்டும் விட்டான். டாங்கிவீரனும் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டான்.

ஆளோடியில் இருந்த கண்ணாடி முன் நின்றுகொண்டு கட்டுக்கள் அகற்றப்பட்டுக் காயம் ஆறிக் கொண்டிருந்த முகத்தையும் கழுத்தையும் தோட்களையும் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அன்யூத்தாவுடன் அவனது கடிதப் போக்குவரத்து எவ்வளவுக் கெவ்வளவு உற்சாகமாக நடைபெற்றதோ, அவளுடைய பல்கலைக்கழக விவரங்களை அவன் எவ்வளவுக்கெவ்வளவு ஆழ்ந்து அறிந்து கொண்டானோ, தீ சுட்ட புண்ணால் அலங்கோலமாக்கக் காட்சியளித்த தன் முகத்தை அவன் அவ்வளவுக்கவ்வளவு அதிகக் கலவரத்துடன் கூர்ந்து நோக்கத் தலைப்பட்டான்.

மங்குலில் அல்லது அரையிருள் சூழ்ந்த அறையில் அது நன்றாக, அழகாகக்கூட இருந்தது. உயர்ந்த நெற்றியும் சற்றே சிறு மூக்கும் மருத்துவமனையில் வளர்க்கப்பட்ட குறுகிய மீசையும் இளமை ததும்பும் சிவந்த உதடுகளில் பிடிவாதத் தோற்றமுமாகத் திகழ்ந்தது மெல்லிய வடிவம். ஆனால் வெளிச்சத்தில் தோல் காயங்களால் நிறைந்து அவற்றின் சுருக்கம் விழுந்திருப்பது தென்பட்டது. அவன் கிளர்ச்சி அடைந்த போதும் நீர்ச் சிகிச்சைக்குப்பின் “என்ன சடைந்து கொள்கிறாய்? சினிமா நடிகன் ஆக விரும்புகிறாயா என்ன? அவள், அதுதான் உன் தோழி, சரியானவள் என்றால் இந்தத் தழும்புகள் அவளை அச்சுறுத்தமாட்டா. அச்சுறுத்தினால் அவள் மடைச்சி என்று அர்த்தம், அவளை எக்கேடும் கெட்டுப்போ என்று தொலைத்துத் தலை முழுகிவிடும். அவள் ஒழிந்ததே நல்லதாகும். பாங்கானவள் ஒருத்தி உனக்குக் கிடைப்பாள்” என்று அவனைத் தேற்றினான் மெரேஸ்யேவ்.

“எல்லாப் பெண்களும் இப்படித்தான்” என்றான் குக்கூஷ்கின்.

“உங்கள் தாயாருங்கூடவா?” என்று கேட்டார் கமிஸார். வார்டில் குக்கூஷ்கின் ஒருவனைத்தான் அவர் “நீங்கள்” என்று பன்மையில் அழைத்தார்.

படிக்க :
மாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் !
நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

அமைதியான அந்தக் கேள்வி குக்கூஷ்கின் மீது விளைவித்த உளப்பதிவை வருணிப்பது கடினம். குக்கூஷ்கின் கட்டிலில் துள்ளி எழுந்தான். அவனுடைய விழிகள் வெறியுடன் அனல் சிந்தித்தன. அவன் முகம் வெளிறி துப்பட்டியைவிட வெண்மை ஆகிவிட்டது.

“பார்த்தீர்களா? நல்ல மாதரும் உலகில் இருக்கிறார்கள் என்று ஆகிறது” என்று சமாதானப்படுத்தும் தோரணையில் சொன்னார் கமிஸார். “க்யோஸ்தியேவுக்கு அப்படிப்பட்டவள் ஏன் வாய்க்கக் கூடாது? அன்பர்களே, வாழ்க்கையில் நடப்பது இது தான்: அவனவனுக்கு கொடுத்துவைத்ததுதான் கிடைக்கும்.”

சுருங்கக்கூறின், வார்டு முழுவதும் குணமடையலாயிற்று. கமிஸாரின் உடல்நிலைதான் நாளுக்குநாள் சீர்கேடு அடைந்து கொண்டு போயிற்று. மோர்பியாவாலும் கற்பூரத் தைலத்தாலுமே அவர் பிழைத்திருக்கிறார். இந்தக் காரணத்தால் சில வேளைகளில் லாகிரி போதையின் அரை மயக்க நிலையில் நாள் முழுவதும் கட்டிலில் புரண்டுகொண்டிருப்பார். ஸ்தெபான் இவானவிச் போன பிறகு எதனாலோ அவர் வெகுவாகச் சோர்ந்து விட்டார். தேவைப்பட்டால் கமிஸாருக்கு உதவும் பொருட்டு தனது கட்டிலை அவர் அருகே போடும்படி மெரேஸ்யெவ் கேட்டுக் கொண்டான். இந்த மனிதர்பால் அவனுக்கு வரவர அதிகக் கவர்ச்சி ஏற்பட்டது.

கால்கள் இன்றி வாழ்வது மற்ற மனிதர்களுடன் ஒப்பிடும் போது தனக்கு அளவிட முடியாதபடிக் கடினமாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதை அலெக்ஸேய் புரிந்து கொண்டான். எனவே, எத்தனையோ இடர்கள் இருப்பினும் பொருட்படுத்தாமல் உண்மையான முறையில் வாழத் திறன் கொண்டிருந்த இந்த மனிதர்பால், தமது பலவீனத்தை அலட்சியம் செய்தவாறு மற்றவர்களைக் காந்தம் போல ஈர்க்க வல்லவராக இருந்த இந்த மனிதர்பால் அவனுக்கு இயல்பாகவே ஈடுபாடு ஏற்பட்டது. இப்பொழுது கமிஸார் ஆழ்ந்த அரை மயக்க நிலையிலிருந்து வெளிவருவது மேலும் மேலும் அரிதாகிக் கொண்டுபோயிற்று. ஆனால் அறிவு தெளிந்திருக்கும் கணங்களில் அவர் பழைய மனிதராகவே விளங்கினார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க