பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 9-அ

ரு நாள் இரவு நேரத்தில், வஸீலிய் வஸீலியெவிச்சின் நெடிய உருவம் ஆளோடியின் கோடியில் தென்பட்டது. கைகளை முதுகுப்புறம் வைத்தவாறு மெதுவாக நடந்தார் அவர். அவரது மேலங்கிப் பொத்தான்கள் போடப்படாமல் இருந்தன, தலையில் தொப்பி இல்லை, அடர்ந்த நரைமுடிக் கற்றைகள் நெற்றிமீது புரண்டன.

தனிவகை அமைப்புள்ள பொய்க்கால்கள் பற்றிய தனது திட்டத்தை அப்போதுதான் கமிஸாருக்கு விவரித்திருந்த அலெக்ஸேய், “வஸீலிய் வருகிறார்” என்று கிசுகிசுத்தான்.

வஸீலிய் வஸீலியெவிச் கால் இடறிவிட்டது போலச் சட்டென நின்று சுவர் மீது கையைத் தாங்கலாக அழுத்திக் கொண்டார். ஏதோ மூக்கால் முனகினார். பின்பு சுவற்றிலிருந்து விலகி நாற்பத்து இரண்டாவது வார்டுக்குள் நுழைந்தார். வார்டின் நடுவே நின்று எதையோ நினைவுப்படுத்திக் கொள்ள முயல்பவர் போல நெற்றியைத் தடவினார். அவரிடமிருந்து ஸ்பிரிட் வாடை அடித்தது.

“உட்காருங்கள், வஸீலிய் வஸீலியெவிச். சற்று பேசுவோம்” என்றார் கமிஸார்.

உறுதியின்றி அடிவைத்து, கால்களை இழுத்துப்போட்டவாறு தலைமை மருத்துவர் கமிஸாரின் கட்டிலை நெருங்கி, அதன் வில் கம்பிச் சுருள்கள் கிரீச்சிட்டு நெளியும்படி பொத்தென்று உட்கார்ந்தார், கன்னப் பொருத்துக்களைத் தேய்த்துக் கொண்டார். முன்னரும் அவர் நோயாளிகளில் கமிஸாருக்கு வெளிப்படையாகத் தனி மரியாதை காட்டிவந்தார். எனவே இந்த இரவு வருகையில் விந்தையானது எதுவும் இல்லை. ஆயினும் இந்த இரு மனிதர்களுக்கும் இடையே ஏதோ தனிப்பட்ட உரையாடல் நடக்கப் போகிறது என்றும் அதை மூன்றாமவன் கேட்க வேண்டியதில்லை என்றும் அலெக்ஸேய் எதனாலோ உணர்ந்தான். அவன் கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல பாவனை செய்தான்.

“இன்று ஏப்ரல் மாதம் இருபத்து ஒன்பதாம் தேதி. அவனுடைய பிறந்த நாள். அவனுக்கு முப்பத்தாறு வயது நிறைந்து விட்டது இல்லை, நிறைந்திருக்க வேண்டும்” என்று தணித்த குரலில் சொன்னார் தலைமை மருத்துவர்.

கமிஸார் போர்வைக்கு அடியிலிருந்து பெருத்த, உப்பிய கையை மிகுந்த சிரமத்துடன் வெளியில் எடுத்து வஸீலிய் வஸீலியெவிச்சின் கரத்தின் மேல் அதை வைத்தார். அப்போது நேர்ந்தது நம்ப முடியாத நிகழ்ச்சி: தலைமை மருத்துவர் அழலானார். அந்தப் பெரிய, வலிய, உள்ளத்திண்மை வாய்ந்த மனிதர் அழுவதைக் காண்கையில் தாங்க முடியாத வேதனை உண்டாயிற்று. அலெக்ஸேய் தன் வசமின்றியே தலையைத் தோட்களுக்குள் இழுத்துக் கம்பளியால் மூடிக் கொண்டான்.

“போர் முனைக்குப் போகுமுன்பு அவன் என்னிடம் வந்தான். தொண்டர் படையில் பெயர் பதிவு செய்துவிட்டதாகக் கூறி, யாருக்குத் தன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதையும் கேட்டான். அவன் இங்கேயே, என்னோடு வேலை செய்து வந்தான். எனக்கு ஏற்பட்ட திகைப்பில் நான் அவனை அதட்டக் கூடச் செய்தேன். மருத்துவ இயல் பி.எச்.டி. பட்டம் பெற்றவன், திறமை வாய்ந்த விஞ்ஞானி எதற்காகத் துப்பாக்கி பிடிக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால் அவன் சொன்னது வார்த்தைக்கு வார்த்தை நினைவுக்கு வருகிறது அவன் சொன்னான்: ‘அப்பா, மருத்துவ இயல் பி.எச்.டி.க்கு துப்பாக்கி பிடிக்க வேண்டிய வேலையும் உண்டு’. இப்படிச் சொல்லிவிட்டு, ‘யாருக்கு வேலையை ஒப்படைப்பது?’ என்று மறுபடி கேட்டான். நான் டெலிபோன் செய்யவேண்டியது தான், ஒன்றுமே, எதுவுமே நடந்திருக்காது, புரிகிறதா, எதுவுமே! எனது மருத்துவமனையில் ஒரு பிரிவுக்கு அவன் தலைவனாக இருந்தான், இராணுவ மருத்துவ மனையில் வேலை செய்து வந்தான், இல்லையா?”

வஸீலிய் வஸீலியெவிச் பேசாதிருந்தார். அவர் சிரமப்பட்டு, கரகரத்த ஓசையுடன் மூச்சு விடுவது கேட்டது.

“….வேண்டாம், அன்பரே. என்ன நீங்கள், என்ன நீங்கள்! கையை எடுங்கள். அசைவது உங்களுக்கு எவ்வளவு வேதனை தருகிறது என்பது எனக்குத் தெரியும்….. ஆயிற்றா. நான் இரவு முழுவதும் சிந்தித்தேன். போன் செய்யாமலே இருந்துவிட்டேன்…”

“இப்போது அதற்காக வருந்துகிறீர்களா?”

தலைமை மருத்துவர் அழலானார். அந்தப் பெரிய, வலிய, உள்ளத்திண்மை வாய்ந்த மனிதர் அழுவதைக் காண்கையில் தாங்க முடியாத வேதனை உண்டாயிற்று. அலெக்ஸேய் தன் வசமின்றியே தலையைத் தோட்களுக்குள் இழுத்துக் கம்பளியால் மூடிக் கொண்டான்.

“இல்லை. இது வருந்துவது ஆகுமா? நான் எண்ணமிடுகிறேன்: எனது ஒரே மகனின் கொலையாளியா நான்? இப்போது அவன் இங்கே, என்னுடன் இருந்திருப்பான். நாங்கள் இருவரும் நாட்டிற்கு மிகவும் பயனுள்ள காரியம் செய்து கொண்டிருப்போம். அவன் இயல்பான திறமைசாலி – உயிரோட்டமுள்ள, துணிவுமிக்க, ஒளிவீசும் திறமை அவனிடம் இருந்தது. அவன் சோவியத் மருத்துவ இயலுக்கே பெருமையாகத் திகழ்ந்திருப்பானே… அப்போது நான் மட்டும் போன் செய்திருந்தால்!”

”போன் செய்யாததற்கு வருந்துகிறீர்களா?”

“என்ன கேட்கிறீர்கள்? அடே, ஆமாம்… தெரியவில்லை , எனக்குத் தெரியவில்லை.”

“இப்போது எல்லாம் மீண்டும் திரும்ப நிகழ்வதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருப்பீர்களா?”

மெளனம் குடிகொண்டது. உறங்குவோரின் ஒரு சீரான மூச்சுவிடுகை கேட்டது. கட்டில் லயத்துடன் கிரீச்சிட்டது – தலைமை மருத்துவர் சிந்தனையில் ஆழ்ந்தவராக இப்புறமும் அப்புறமும் அசைந்தாடினார் போலும். வெப்பமூட்டு நீராவிக் குழாய்களில் தண்ணீர் மந்தமாகக் களகளத்தது.

“ஊம், என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் கமிஸார். எல்லையற்ற பரிவு அவர் குரலில் தொனித்தது…

“எனக்குத் தெரியவில்லை….. உங்கள் கேள்விக்கு உடனே பதில் சொல்வது இயலாது. ஆனால் எல்லாம் திரும்ப நிகழ்ந்தால் நான் முன்போலவே நடந்து கொண்டிருப்பேன் என்றே தோன்றுகிறது. எவ்வளவு பயங்கரமானது இது – யுத்தம்…… அட, இதைப் பற்றிப் பேசிப் பயன் என்ன….”

தலைமை மருத்துவர் எழுந்தார், கட்டில் அருகே சற்று நின்று கமிஸாரின் கையைப் பதபாகமாகப் போர்வைக்குள் வைத்து இழுத்துப் போர்த்தினார். பின்பு மெளனமாக வார்டிலிருந்து வெளியேறினார். இரவில் கமிஸாரின் நிலைமை மோசம் ஆயிற்று. உணர்விழந்த நிலையில் பற்களை நெறுநெறுப்பதும் முனகுவதுமாகக் கட்டிலில் புரண்டார். பின்பு விரைப்பாக நீட்டிப் படுத்து அமைதியாகக் கிடந்தார். முடிவு நெருங்கி விட்டது என எல்லோருக்கும் பட்டது. மகன் இறந்த நாள் முதல் தமது பெரிய வீட்டிலிருந்து மருத்துவமனைக்குக் குடிவந்து தமது சிறு அறையில் சோபாவில் படுத்துத் தூங்கிய வஸீலிய் வஸீலியெவிச் விஷயத்தை அறிந்து வார்டுக்கு வந்து பார்த்தார். கமிஸாரின் நிலை மிகவும் மோசமாயிருப்பதைக் கண்டு அவரை மற்றவர்கள் பார்க்காதபடி படுதாவால் மறைத்துவிடும் படி உத்தரவிட்டார். அந்திக் காலத்தில் நோயாளிகளை இவ்வாறு படுதாவால் மறைப்பது வழக்கந்தான்.

கற்பூரத்தைலம், ஆக்ஸிஜன், இவற்றின் உதவியால் கமிஸாரின் நாடித் துடிப்பு சீர்பட்டதும் முறைவேலை மருத்துவரும் வஸீலிய் வஸீலியெவிச்சும் இரவின் எஞ்சிய பகுதியை உறங்கிக் கழிக்கச் சென்றுவிட்டார்கள். படுதாவுக்குள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா மட்டுமே இருந்தாள். அவள் அழுத முகத்துடன் ஒரே கலவரம் அடைந்து காணப்பட்டாள். மெரேஸ்யெவும் உறங்கவில்லை. “இதுதான் முடிவா என்ன?” என்று திகிலுடன் எண்ணினான் அவன். கமிஸார் பெருத்த வதைபட்டுவிட்டார். ஜன்னியில் அவர் புரண்டு அலை பாய்ந்தார். முனகலோடு கூடவே ஏதோ ஒரு சொல்லைக் கம்மிய குரலில் பிடிவாதமாகக் கூறினார். “குடிக்க, குடிக்க, குடிக்க!” என்று அவர் கேட்பது போல மெரேஸ்யெவுக்கு தோன்றியது.

க்ளாவ்தியா மிஹாய்லவ்னா படுதாவுக்கு உள்ளிருந்து வெளிவந்து நடுங்கும் கைகளால் கண்ணாடித் தம்ளரில் நீர் ஊற்றினாள்.

படிக்க:
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !
மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !

ஆனால் நோயாளி நீர் பருகவில்லை. தம்ளர் அவர் பற்களில் வீணே இடித்தது, தண்ணீர் ததும்பித் தலையணையில் வழிந்தது. கமிஸாரோ, வேண்டுவதும் கோருவதும் உத்தரவிடுவதுமாக அதே சொல்லைவிடாது திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கேட்பது “குடிக்க” அல்ல “பிழைக்க” என்பதே என அலெக்ஸேய் திடீரெனப் புரிந்து கொண்டான். இந்தக் கத்தலில் அந்த விறல் வாய்ந்த மனிதனின் உள்ளமும் உயிரும் எல்லாம் சாவுக்கு எதிராக உணர்வின்றிப் போராடிக் கொண்டிருக்கிறது என்பது அவனுக்கு விளங்கியது.

அப்புறம் கமிஸார் அமைதியுற்று விழிகளைத் திறந்தார். “ஆண்டவன் காப்பாற்றினான்!” என்று ஆறுதலுடன் கிசுகிசுத்துப் படுதாவைச் சுருட்டத் தொடங்கினாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா.

“வேண்டாம், படுதா இருக்கட்டும்” என்ற கமிஸாரின் குரல் அவளைத் தடுத்தது. “வேண்டாம் அருமைச் சகோதரி. படுதா இருப்பது நமக்கு அதிகச் சௌகரியம். அழவும் வேண்டாம். உங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே… அட, நீங்கள் என்ன இப்படி, சோவியத் தேவி!.. தேவிகள், உங்களைப் போன்றவர்கள் கூட, நிலைவாயில்தான் எதிர்படுகிறார்கள் என்பது எவ்வளவு வருந்தத்தக்க விஷயம்!”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க