பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 10

லெக்ஸேய் விந்தையான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான்.

பயிற்சி செய்வதன் மூலம் கால்கள் இன்றியே விமானம் ஓட்டக் கற்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது முதல், வாழ்வு வேட்கையும் செயல் ஆர்வமும் அவனை ஆட்கொண்டுவிட்டன.

இப்போது அவனுக்கு வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்தது. சண்டை விமானி வேலைக்குத் திரும்புவதே அது. கால்கள் விளங்காத நிலையில் பிடிவாதத்துடன் அவன் ஊர்ந்து தன்னவர்களை அடைந்தானோ, அதே பிடிவாதத்துடன் இந்தக் குறிக்கோளை அடைய முயலலானான்.

விமானமோட்டும் தொழில்நுட்பத்தை அறிந்த எவனுக்கும் இந்தச் சேதி நம்ப முடியாததாகப்பட்டிருக்கும். ஆனால் இது மனிதத் திறனின் எல்லைக்கு உட்பட்டதுதான். இந்த நோக்கத்தைக் கட்டாயமாக நிறைவேற்ற முடியும் என அவன் உறுதி பூண்டான். தனது திட்டத்தை செயல்படுத்துவதில் முனைந்தான் அலெக்ஸேய். தனக்கே வியப்பூட்டிய சடங்குப் பற்றுடன் மருத்துவர்கள் குறித்த சிகிச்சை முறைகளை தவறாது கடைப்பிடித்தான், குறித்த அளவு மருந்துகளை உட்கொண்டான். சில வேளைகளில் பசியே இராது. எனினும் அவன் அதிகப்படி உணவை உண்டே தீர்ப்பான். என்ன நேர்ந்தாலும் சரியே, குறித்த மணிநேரம் உறங்கி விடுவது என்று திட்டப்படுத்திக் கொண்டான். செயலூக்கமும் துடிப்பும் கொண்ட அவனது இயல்பு பகல் தூக்கத்தை நெடுங்காலம் எதிர்த்தது. ஆயினும் அவன் பகல் சாப்பாட்டுக்குப் பிறகு உறங்கும் வழக்கத்தைத் திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்டான்.

சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் மருந்து உண்பதற்கும் தன்னைப் பழக்கிக் கொள்வது கடினம் அல்ல. உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தது. மெரேஸ்யேவ் முன்பு வழக்கமாகச் செய்துவந்த உடற்பயிற்சி, கால்களை இழந்து கட்டிலோடு கட்டிலாகக் கிடந்த மனிதனுக்கு ஏற்றதாக இல்லை. தனக்கு ஏற்ற உடற்பயிற்சியை அவனே கற்பனை செய்து அமைத்துக் கொண்டான். முழு மணி நேரம் வளைவதும் நிமிர்வதும் விலாவில் கைகளை ஊன்றியவாறு உடலை முறுக்குவதும் முள்ளெலும்புகள் கடகடக்கும்படி தலையை இரு மருங்கும் உற்சாகமாகத் திரும்புவதுமாக இருப்பான்.

கால்களிலிருந்து கட்டுக்கள் அகற்றப்பட்டு, கட்டிலின் எல்லைக்குள் அதிக அங்க அசைவுக்கு வாய்ப்பு கிடைத்ததும் அலெக்ஸேய் உடற்பயிற்சியை இன்னும் சிக்கலாக்கிக் கொண்டான். கட்டில் விளிம்பின் அடியே வெட்டுண்ட கால்களைப் புகுத்திக் கொண்டு இடுப்பில் கைகளை ஊன்றியவாறு மெதுவாக வளையவும் நிமிரவும் தொடங்கினான். தடவைக்குத் தடவை வேகத்தைக் குறைத்து “வளைதலின்” எண்ணிக்கையை அதிகப்படுத்தினான். பின்பு கால்களுக்கேற்ற பயிற்சித் தொடரை முறைப்படுத்திக் கொண்டான். கட்டிலில் நிமிர்ந்து படுத்துக் கால்களைத் தன் பக்கம் இழுத்து வளைப்பான், பின்பு நேராக்கி முன்னே வீசிப் போடுவான். முதல் தடவை இந்தப் பயிற்சியைச் செய்தபோது எத்தகைய பிரம்மாண்டமான, ஒரு வேளை சமாளிக்கவே முடியாத இடர்பாடுகள் தன்னை எதிர்நோக்கி இருக்கின்றன என்பதை உடனே கண்டு கொண்டான். கணைக்கால்வரை வெட்டுண்டிருந்த கால்களை இழுக்கையில் அவை சுரீரென்று வலித்தன. அங்க அசைவுகள் கூச்சமுள்ளவையாகவும் ஒரு சீரற்றும் இருந்தன. இறக்கை அல்லது வால் பழுதடைந்த விமானத்தை ஓட்டுவது போலவே இந்த இயக்கங்களைக் கணிப்பது கஷ்டமாயிருந்தது. தான் அறியாமலே தன்னை விமானத்துடன் ஒப்பிட்டுப்பார்த்த மெரேஸ்யேவ், ஆதர்சக் கணக்குப் பொருத்தம் உள்ள மனித உடல் அமைப்பு அனைத்தும் தன் சரீரத்தில் சிதைந்து போயிருக்கிறது என்றும், தனது உடல் இன்னும் சிதைந்து போயிருக்கிறது என்றும், தனது உடல் இன்னும் முழுதாகவும் வலுவுள்ளதாகவும் இருப்பினும் குழந்தைப் பருவம் முதல் பயிற்சியால் உருவாக்கப்பட்ட முந்தைய இயக்க ஒருங்கிசைவை அது இனி ஒருபோதும் பெறாது என்றும் புரிந்து கொண்டான்.

கால் பயிற்சி கடும் வலியை உண்டாக்கிற்று. எனினும் மெரேஸ்யெவ் ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரத்தை முந்திய நாளைவிட ஒரு நிமிடம் அதிகமாக்கிக் கொண்டு போனான். இவை பயங்கரமான நிமிடங்கள். அந்த நிமிடங்களில் கண்ணீர் தானாகவே விழிகளிலிருந்து பெருகும். தன்வசமற்ற முனகலை அடக்கிக் கொள்வதற்காக உதட்டை இரத்தம் வரும் வரை கடித்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆயினும் அவன் தொடக்கத்தில் நாள்தோறும் ஒருமுறையும் பின்பு இரண்டு முறைகளும் உடற்பயிற்சி செய்யத் தன்னை நிர்ப்பந்தமாகப் பழக்கிக் கொண்டான். தடவைக்குத் தடவை பயிற்சி நேரத்தையும் அதிகரித்துக் கொண்டு போனான். இத்தகைய ஒவ்வொரு உடற்பயிற்சிக்குப் பிறகும் அவன் தொய்ந்து போய்த் தலையணையில் விழுந்து, மறுபடி இந்தப் பயிற்சிகளைச் செய்யத் தனக்கு இயலுமா என்று கவலையுடன் சிந்திப்பான். ஆனால் குறித்த நேரம் வந்ததும் அவன் மீண்டும் பயிற்சியில் முனைந்து விடுவான்.

மெரேஸ்யெவின் எண்ணங்கள் யாவும் கால்களையே மையமாகக் கொண்டு சுழன்றன. சில வேளைகளில் மறதி காரணமாகப் பாதங்கள் வலிப்பதாக உணர்வான், கிடக்கையை மாற்றிக் கொள்வான். பாதங்கள் இல்லை என்ற நினைவு அப்புறந்தான் அவனுக்கு வரும். ஏதோ நரம்புச் சீர்கேடு காரணமாக அவனுடைய வெட்டுண்ட காற்பகுதிகள் நெடுங் காலம்வரை உடலோடு சேர்ந்து உயிர்த்திருந்தன; திடீரென அவற்றில் அரிப்பு எடுக்கும், ஈரப் பருவ நிலையில் உளைச்சல் உண்டாகும், வலி கூட ஏற்படும். கால்களைப் பற்றியே ஓயாது சிந்தித்தமையால், தான் உடல் நலத்துடன் விரைந்து நடப்பது போலக் கனவில் அவனுக்கு அடிக்கடி மனத் தோற்றம் உண்டாகும். விமானத்தாக்கு அபாய அறிவிப்பைக் கேட்டு விமானத்தை நோக்கிக் குதிகால் பிட்டத்தில் அடிக்க ஓடுவது போலவும், ஓடுகிற ஓட்டத்திலேயே இறக்கை மேல் பாய்ந்து தாவி அறைக்குள் புகுந்து இருக்கையில் அமர்ந்து சுக்கான்களைக் கால்களால் சரி பார்ப்பது போலவும் இதற்கிடையே யூரா எஞ்சின் மேலிருந்து மூடியை அகற்றுவது போலவும் ஒரு சமயம் தோன்றும். மறு சமயம் தானும் ஒல்காவும் பூத்துக் குலுங்கும் ஸ்தெப்பி வெளியில் கைகோர்த்துக் கொண்டு வெறுங்காலுடன் பாய்ந்து ஓடுவது போலவும் ஈரிப்பும் வெதுவெதுப்பும் உள்ள தரையின் கொஞ்சலான வருடலை உணர்வது போலவும் தோன்றும். எவ்வளவு நன்றாயிருக்கும் இந்தப் பிரமை! தூக்கம் கலைந்து விழித்துக்கொண்டதும் தனக்குக் கால்கள் இல்லை என்பதைக் உணர்கையில் எத்தகைய ஏக்கம் நெஞ்சைக் கவ்விக்கொள்ளும்!

இத்தகைய கனவுகளுக்குப் பின் சில வேளைகளில் அலெக்ஸேய் வெகுவாகக் குன்றிக் குறுகிப் போய்விடுவான். தான் பறக்கப் போவதில்லை, கமிஷினைச் சேர்ந்த இனிய நங்கையுடன் ஸ்தெப்பியில் வெறுங்காலுடன் ஓடவே போவதில்லை என்று அவன் எண்ணலானான். இந்தப் பெண்ணைப் பிரிந்திருந்த காலம் அதிகமாக ஆக அவள் அவனுக்கு முன்னிலும் நெருங்கியவளாகத் தென்படலுற்றாள்.

அனேகமாக ஒவ்வொரு வாரமும் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா அலெக்ஸேயை “நடனமாடச்” சொல்லுவாள்.

அதாவது அவன் கைகளைக் கொட்டியவாறு கட்டிலில் துள்ள வேண்டும், அதற்குப் பரிசாக அவள் பள்ளி மாணவனது போன்ற குண்டுகுண்டான, திருத்தமான எழுத்துக்களில் முகவரி தீட்டப்பட்ட உறையை அவனிடம் கொடுப்பாள். இந்தக் கடிதங்கள் நாளாக ஆக அதிக விஸ்தாரமாகிக் கொண்டு போயின. அவற்றில் அதிக உணர்ச்சிப் பெருக்கு காணப்பட்டது. குறுகிய கால, இளமைப்பருவக் காதல், போரினால் இடைமுறிக்கப்பட்ட காதல், ஒல்காவின் உள்ளத்தில் மேலும் மேலும் முதிர்ந்து கனிந்து வருவதை இவ்விஷயங்கள் காட்டின. இந்த வரிகளை அலெக்ஸேய் கலவரத்துடனும் ஏக்கத்துடனும் படித்தான். இவற்றுக்கு இதே உணர்ச்சிகள் மூலம் விடை அளிக்கத் தமக்கு உரிமை இல்லை என்பதை அவன் உணர்ந்தான்.

அவர்கள் பள்ளித் தோழர்கள். ஒருவருக்கொருவர் அன்புக் கவர்ச்சி கொண்டிருந்தார்கள். பெரியவர்களைப் பின்பற்றி இந்தக் கவர்ச்சியை அவர்கள் காதல் என்று அழைத்தார்கள். பிறகு ஆறு ஏழு ஆண்டுகள் அவர்கள் பிரிந்து விட்டார்கள். முதலில் நங்கை தொழிற்பள்ளியில் படிக்கப் போனாள். அப்புறம், அவள் திரும்பி வந்து தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை பார்க்கத் தொடங்கியபோது அலெக்ஸேய் ஊரில் இல்லை. அவன் விமானப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தான். போர் மூள்வதற்கு முன் சிறிது காலத்துக்கு அவர்கள் மீண்டும் சந்தித்துச் சேர்ந்திருந்தார்கள். இந்தச் சந்திப்பை அவனோ, அவளோ தேடிப் பெறவில்லை. வசந்த காலத்தில் ஒரு நாள் மாலை அலெக்ஸேய் தாயாருக்குத் துணையாக நகர்த் தெரு வழியே எங்கோ போய்க் கொண்டிருக்கையில் எதிரே வந்தாள் ஒரு பெண். அவளுடைய வடிவமைந்த கால்களை மட்டுமே அவன் கவனித்திருந்தானே தவிர அவளை உற்றுப் பார்க்கக்கூட இல்லை.

“நீ என்ன, இவளுக்கு முகமன் கூடச் சொல்லவில்லை? இவள் ஓல்கா ஆயிற்றே, மறந்துவிட்டாயா என்ன?” என்றாள் தாயார்.

அலெக்ஸேய் திரும்பிப் பார்த்தான். பெண்ணும் திரும்பி அவர்களைப் பார்த்தாள். அவர்கள் விழிகள் சந்தித்தன. அக்கணமே தன் நெஞ்சு படபடப்பதை உணர்ந்தான். தாயாரை விட்டுவிட்டு, இலைகள் அற்ற பாப்ளர் மரத்தடியில் நடை பாதையில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கிப் பாய்ந்தோடினான்.

“நீயா இது?” என்று வியப்புடன் கூவினான். தனக்கு முன் நிற்பவள் ஏதோ தீவாந்திரத்தைக் சேர்ந்த அழகிய விந்தைக் கன்னி போலவும், வசந்தக்காலச் சேறு நிறைந்த தெருவில் அமைதியான மாலை வேளையில் எப்படியோ வந்து விட்டவள் போலவும் அவளை ஏற இறங்க ஆச்சரியத்துடன் நோட்டமிட்டான்.

“அலெக்ஸேயா?” என்று அவன் போலவே வியப்புடனும் நம்பிக்கையுடனுங்கூட வினவினாள் அவள்.

அலெக்ஸேய்க்கு முன் நின்றாள் வடிவான அங்க அமைப்பும் லாவகமும் உள்ள சிறுகூடான மேனி கொண்ட நங்கை. அவளது இனிய உருண்டை முகமும் சிறுவனது போன்று இருந்தது. அவளுடைய மூக்குத் தண்டில் பொன்னிற மச்சங்கள் காணப்பட்டன. மென்மையாகக் கோடிட்டிருந்த தன்னுடைய புருவங்களைச் சற்றே நிமிர்த்தி, கதிர் வீச்சும் பெரிய சாம்பல் நிறக் கண்களால் அவனை நோக்கினாள் அவள். தொழிற்சாலைப் பள்ளியில் அவர்கள் கடைசியாகச் சந்தித்த ஆண்டில் அவள் சிவப்பேறிய உருண்டை முகமும் உறுதியான உடற்கட்டும் உள்ள முரட்டுச் சிறுமியாக இருந்தாள். தகப்பனாரின் சிக்குப்பிடித்த தொழிலாளிக் கோட்டைப் போட்டுக் கொண்டு கைகளை மடித்து விட்டவாறு மிடுக்குடன் வளைய வருவாள். இப்போது அலெக்ஸேய்க்கு முன்னே நின்ற லாவகமும் தளதளப்பும் ஒயிலும் கொண்ட கன்னிக்கும் அந்த சிறுமிக்கும் ஒற்றுமை வெகு சிறிதே காணப்பட்டது.

தாயாரை மறந்துவிட்டு அலெக்ஸேய் அவளையே பாராட்டுடன் நோக்கினான். இந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாகத் தான் அவளை மறக்கவே இல்லை என்றும் இந்தச் சந்திப்பைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருந்ததாகவும் அவனுக்குத் தோன்றியது.

“ஆ, இப்போது நீ இப்படிப்பட்டவள் ஆகிவிட்டாயா?” என்று முடிவில் கூறினான்.

“எப்படிப்பட்டவள்?” என்று கணீரென்ற குரலில் கேட்டாள் அவள். அடித்தொண்டையிலிருந்து வந்த அந்தக் குரல் பள்ளி நாட்களில் இருந்ததற்கு முற்றிலும் வேறாயிருந்தது.

அன்னை அவர்கள் இருவர் மீது கண்ணோட்டி விட்டு ஏக்கத்துடன் முறுவலித்துத் தன் வழியே சென்றாள். அவள் உள்ளுணர்வால் விஷயத்தைப் புரிந்து கொண்டாள். அவள் இதனால் வருத்தப்படவில்லை. முதியவர்கள் மூப்பு அடைகிறார்கள், சிறுவர்கள் வளர்கிறார்கள் – இது தானே வாழ்வின் நியமம்!

படிக்க:
விசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் !
மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! அச்சுநூல்

அலெக்ஸேயும் ஓல்காவும் தங்கள் காதலைப் பற்றி ஒரு முறைகூடப் பேசவில்லை. மாலை வெயிலில் பளிச்சிடும் அமைதி சூழ்ந்த வோல்கா ஆற்றின் கரையில் உலாவி விட்டுத் திரும்புகையில், கழிந்து கொண்டு போகும் விடுமுறை நாட்களை எண்ணிக் கணக்கிட்டு, அலெக்ஸேய் தீர்மானிப்பான் – ஓல்காவிடம் மனம் திறந்து பேசி விடுவது என்று. அடுத்த மாலை வரும். சினிமாவுக்கோ சர்க்கஸுக்கோ, பூங்காவுக்கோ அவர்கள் போவார்கள். எங்கு போனாலும் அலெக்ஸேய்க்கு ஒன்றுதான். அவன் திரையையோ அரங்கையோ உலாவுவோர் கூட்டத்தையோ கண்ணெடுத்துப் பார்க்க மாட்டான். ஒல்காவையே நோக்கியவாறு, “இதோ வீடு திரும்பும் வழியில் கட்டாயமாக விஷயத்தை விளக்கிவிடுகிறேன்” என்று எண்ணுவான். ஆனால் வழி முடிந்து விடும், அவனுக்கோ துணிவு வராது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க