”இருபது வருசத்துக்கு முன்னாடி எங்க அப்பாவோட இங்க பொழைக்க வந்தேன். எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். சொந்த ஊரு தேவகோட்டை. சொந்தத்துலேயே கல்யாணம் பண்ணிகிட்டேன். ரெண்டு புள்ளங்க இருக்காங்க. கவர்மெண்டு ஸ்கூல்ல தான் படிச்சிட்டிருக்காங்க” தன்னைப் பற்றிய அறிமுகத்தை இவ்வாறு கொடுத்தார் கரும்பு ஜூஸ் கடை வைத்திருக்கும் முருகவேல்

“ஊர விட்டு எதுக்காக இங்க வந்தீங்க ?”

“ஊர்ல சொந்தமா நெலமெல்லாம் இருக்குது. ஆனா விவசாயத்துக்கு தண்ணி இல்ல அதான் இங்க வந்துட்டோம். எங்க ஊரு ஆளுங்க பாதி பேரு சென்னையிலதான் பொழக்க வந்துருக்காங்க. நெறையா பேரு மிலிட்டிரில இருக்குறாங்க. தண்ணி இருந்துச்சுன்னா நாங்க ஏன் இங்க வந்து கஷ்டப்பட போறோம்.” என்றவாறு கத்தையான கரும்புத் துண்டுகளை மிஷினின் உருளைகளுக்கு இடையே திணித்தார்.

“கரும்பு ஜூஸ், கொஞ்ச நல்ல வருமானம் கெடைக்கிற தொழிலுதான். ஆனா பாதிநாள் கடை போட விட மாட்டேங்குறாங்க. இந்த ரோடு முக்கியமானதுங்குறதுனால வாரத்துல ரெண்டு மூணு நாளு விஐபி-ங்க போவாங்க, அப்பல்லாம் நாங்க கட போடக்கூடாது. ஒருவாட்டி ரிப்போர்ட்டரு ஒருத்தரு வந்து போட்டோ பிடிச்சிட்டு போயி சாலையை ஆக்கிரமிச்ச கடைன்னு நியுஸ்-ல போட்டு கடைய காலி பண்ண சொல்லிட்டாங்க. மாசக்கணக்கா கடை போட முடியாம கட்டிட வேலைக்கு போயிதான் சமாளிக்க வேண்டியதாயி போச்சு. பின்ன எப்படி காசு சம்பாதிக்க முடியும். ரேசன்ல அரிசி, பருப்பு கெடைக்கிறத வெச்சு சமாளிச்சிகிட்டு இருக்கோம்.” என்றார் கரும்பை வெட்டிக் கொண்டே..

“தனியா எப்படி கடைய சமாளிக்கிறீங்க ?”

“கரும்பு, ஐஸ் எல்லாமே ஆர்டர் குடுத்தா இங்க வந்துடும். அதுக்குன்னு தனித்தனியா ஆளுங்க இருக்காங்க. நம்மளாவே எல்லாத்தயும் போயி தனித்தனியா வாங்கிட்டு வரனும்னா முடியுமா? ஒருத்தர நம்பி ஒருத்தருன்னு தான் இந்த தொழில் ஓடிக்கிட்டிருக்கு” என்றவரிடம் “சரி, வியாபாரமெல்லாம் எப்படிண்ணே போகுது ?” என்று வினவினோம்.

“ஒரு நாளைக்கு 3-லேருந்து 5 லிட்டர் டீசல் செலவாகுது. மிஷினு ஓடிக்கிட்டேயிருந்தா-தான் வர்றவங்க நின்னு ஜூஸ் குடிப்பாங்க. இல்லன்னா பழைய சரக்குன்னு நெனச்சுகிட்டு குடிக்காம போயிடுவாங்க. ஐஸ் போட்டது 15 ரூவா, ஐஸ் இல்லாமன்னா 20 ரூவா. புள்ளங்கள எப்படியாவது படிக்க வெச்சுட்டா அதுங்க பின்னாடி எங்கள பாத்துக்குங்க, இதுல வர்ற காச வெச்சு வேற ஒன்னும் பண்ண முடியாதுங்க.”

“காலைல 10 மணிக்கு வந்து கடை போட ஆரம்பிச்சா, சாயங்காலம் வரைக்கும் ஓடும். ஒடம்புல தெம்பு இருக்குற ஆளுங்களாலதான் கரும்ப உள்ள தள்ளி எடுக்க முடியும். கரும்ப சீவி சுத்தம் பண்ணி கையெல்லாம் காப்பு காச்சு போயி கெடக்கு. ஒரு கத்தி வாங்குனா ஒரு வருசத்துக்கு தாக்கு புடிக்கிறதே செரமம்தான். 6 தண்ணி கேன் பக்கத்துல போயி தூக்கிட்டு வரணும். எலுமிச்சம் பழம், இஞ்சி இதெல்லாம் கைக்காசு போட்டுதான் வாங்கிட்டு வரணும். கரும்பு சக்கையெல்லாம் குப்ப வண்டியில நம்மதான் போயி போடனும். முக்கியமான ரோடுல்ல… சுத்தமா வெச்சுக்காட்டி கடை போட விடமாட்டாய்ங்க…”

படிக்க:
வாகன விற்பனையில் மந்த நிலை :  32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !
உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?

“குடிக்க வர்றவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா எதிர்பார்ப்பாங்க. ஏன் இனிப்பா இல்லன்னு கேப்பாங்க. ரொம்ப இனிப்பா இருந்துச்சுன்னா சக்கர போட்டியான்னு கேப்பாங்க. கேன்சர் ஆஸ்பத்திரி பக்கத்துல இருக்கதுனால நெறையா பேரு இஞ்சி வேணாம்னு சொல்லுவாங்க. அதனால கேக்குறவுங்களுக்கு ஏத்த மாதிரி போட்டுக்கொடுத்தாதான் வியாபாரம் ஓடும். புள்ளங்க தல தூக்குற வரைக்கும் இதுதான் எங்க வாழ்க்கை, அதுவரைக்கும் இத நம்பித்தான் வாழணும்.” என்றவாறு அதிரும் கரும்பு மிஷினுக்குள் கரும்புத் துண்டுகளை நுழைக்கத் தொடங்கினார்.


வினவு புகைப்படச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க