
உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 01
1942-ம் ஆண்டு கோடை உச்சத்தில் இருந்தபோது மாஸ்கோவின் ஒரு மருத்துவமனையின் கனத்த ஓக் மரக் கதவுகளின் பின்னிருந்து வலிய கருங்காலிக் கைத்தடியை ஊன்றியபடி வெளியே வந்தான் கட்டுக்குட்டான இளைஞன் ஒருவன். போர் விமானிக்குரிய கோட்டும் பூட்சுகளை மூடியிருந்த சீருடைக் காற்சட்டையும் அணிந்திருந்தான் அவன். சீனியர் லெப்டினன்ட் என்பதைக் காட்டும் குறிகள் அவனது நீலக் கழுத்துப் பட்டையின் மீது பொறிக்கப்பட்டிருந்தன. வெள்ளை நீளங்கி அணிந்த ஒரு மாது வாயில் வரை வந்து அவனை வழியனுப்பினாள். சென்ற உலகப் போரில் மருத்துவத்தாதிகள் அணிந்த செஞ்சிலுவை பொறித்த தலைக்குட்டை அவளுடைய நல்லியல்பு ததும்பிய இனிய முகத்துக்கு ஓரளவு கம்பீரத் தோற்றத்தை அளித்தது. வாயில் மேடையில் அவர்கள் நின்றிருந்தார்கள். விமானி சாயம்போன மென்மையான தொப்பியைக் கழற்றி மருத்துவத்தாதியின் கையை அசட்டுப் பிசட்டென்று உயர்த்தி முத்தமிட்டான். பிறகு சற்றே தள்ளாடியவாறு அவன் விரைவாகப் படிகளில் இறங்கி, மருத்துவமனையின் நீண்ட கட்டிடத்தின் அருகாக ஆற்றோரத் தார் ரோட்டில் திரும்பிப் பாராமல் நடந்தான்.
நீல, மஞ்சள், பழுப்புப் பைஜாமாக்கள் அணிந்த நோயாளிகள் ஜன்னல்கள் வழியே கைகளையும் கைத்தடிகளையும் கவைக்கோல்களையும் ஆட்டி அவனை வழியனுப்பினார்கள், ஏதோ கத்தினார்கள். அவனும் அவர்களை நோக்கிக் கையை ஆட்டினான். எனினும் இந்தப் பெரிய சாம்பல் நிறக் கட்டிடத்திலிருந்து கூடிய விரைவில் அப்பால் போய்விட அவன் முயன்றது தெளிவாகப் புலப்பட்டது. தனது உள்ளக் கிளர்ச்சியை மறைப்பதற்காக அவன் ஜன்னல்களின் பக்கத்திலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். விந்தையான, நிமிர்ந்த, துள்ளுநடையில் அவன் கைத்தடியை லேசாக ஊன்றியவாறு விரைவாகச் சென்றான். அவனது ஒவ்வொர் அடிவைப்பின் போதும் ஏற்பட்ட மெல்லிய கிரீச்சொலி இல்லாவிட்டால் வடிவான வலிய உடற்கட்டுள்ள இந்தத் துடிப்பான மனிதனுடைய கால்கள் வெட்டி அகற்றப்பட்டுவிட்டன என்று எவருமே எண்ணியிருக்க முடியாது.
மருத்துவமனையிலிருந்து அலெக்ஸேய் மெரேஸ்யெவ் உடம்பைத் தேற்றிக் கொள்வதற்காக மாஸ்கோவுக்கு அருகிலிருந்த விமானப்படை ஆரோக்கிய நிலையத்துக்கு அனுப்பப்பட்டான். மேஜர் ஸ்த்ருச்கோவும் அங்கேயே அனுப்பப்பட்டார். அவர்களை ஏற்றிப் போவதற்காக ஆரோக்கிய நிலையத்திலிருந்து மோட்டார் வருவதாக இருந்தது. ஆனால் மெரேஸ்யெவ் தனக்கு மாஸ்கோவில் உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களைப் பார்க்காமல் தன்னால் போக முடியாது என்றும் மருத்துவமனை நிர்வாகிகள் நம்புமாறு செய்து விட்டான். தனது சாமான் பையை ஸ்த்ருச்கோவிடம் வைத்துவிட்டு, மாலையில் மின்சார ரெயிலில் ஆரோக்கிய நிலையம் போய்ச் சேர்ந்து விடுவதாக வாக்களித்து விட்டு, மருத்துவமனையிலிருந்து கால்நடையாகவே புறப்பட்டான்.
மாஸ்கோவில் அவனுக்கு உறவினர்கள் இல்லை. எனினும் தலைநகரைச் சுற்றிப் பார்க்க அவனுக்கு மிகவும் ஆசையாக இருந்தது. விட்டாற்றியாக நடந்து தன் பலத்தைச் சோதித்துப் பார்க்கவும் தன் விஷயத்தில் எவ்வித அக்கறையும் அற்ற, ஆரவாரம் நிறைந்த ஜனத்திரளில் இடித்துப் புகுந்து செல்லவும் அடங்கா ஆவல் உண்டாயிற்று. ஆகவே, சுருங்கற்சுவர்களுக்கு இடையே கட்டுண்ட மாட்சிமிக்க ஆற்றின் கரையோரச் சாலை வழியாக இப்போது அவன் நடந்தான். ஆற்றின் சிற்சிலைச் செதில்கள் வெயிலில் மினுமினுத்தன. ஏதோ நன்கு பழக்கமான, இனிய நறுமணம் வீசிய, வெதுவெதுப்பான கோடைக் காற்றை ஆர்வத்துடன் மூச்சிழுத்தான் அலெக்ஸேய்.
எங்கும் எவ்வளவு நன்றாயிருந்தது!
எல்லா மகளிரும் அவனுக்கு வனப்பு வாய்ந்தவர்களாகத் தோன்றினார்கள். மரங்களின் பசுமை தனது பளபளப்பால் அவனைப் பரவசப்படுத்தியது. போதையூட்டும் குளுமையான காற்று தலையைக் கிறுகிறுக்க வைத்தது. நன்றாகத் தெளிந்திருந்த காற்றில் தொலைவு பற்றிய உணர்வு மழுங்கிவிட்டது. தான் முன்பு ஒருபோதும் நேரில் கண்டிராத கிரெம்ளினின் நெடுங்காலக் கொத்தளச் சுவர்களையும் மாபெரும் இவானின் மாதாகோவில் கும்மட்டத்தையும் நீருக்குமேல் கனத்த வளைவாகத் தொங்கிய பாலத்தையும் கையை நீட்டினால் தொட்டுவிடாலாம் போலப் பிரமை உண்டாயிற்று.
இதற்கு முன் அலெக்ஸேய் தலைநகரை அறிந்திருந்ததெல்லாம் சஞ்சிகைகளிலும் செய்தித்தாள்களிலும் வெளியாகும் நிழற்படங்களிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும், அங்கு போய் வந்தவர்களின் வருணனைகள் மூலமாகவும், நள்ளிரவில் உறங்கத் தொடங்கிய உலகுக்கு மேலே ஒலித்துப் பரவும் பழங்காலக் கடிகார மணியின் நீட்டொலி, கொந்தளிக்கும் ஆர்பாட்ட ஊர்வலத்தின் பல்வகை இரைச்சல்கள் ஆகியவற்றை வானொலியில் கேட்டதன் வாயிலாகவுமே. அப்போதோ, பளிச்சிடும் கோடை வெயிலில் சோர்வுற்று எழிலுடன் நீண்டு பரந்திருந்த தலை நகரம் அவன் முன் காட்சியளித்தது.
படிக்க:
♦ காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !
♦ “காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !
ஓகோ, இதுதான் மாஸ்கோவா!
நான்கு மாதங்கள் மருத்துவமனையில் கடந்தபின் மாஸ்கோவின் கோடைகால மாட்சியால் அலெக்ஸேய் ஒரேயடியாகப் பரவசமடைந்திருந்தான். எனவேதான் அது போர்க்கோலம் பூண்டிருந்ததையும் எந்தக் கணமும் பகைவனை எதிர்த்துப் போரிட ஆயத்தமாக இருப்பதையும் அவன் உடனே கவனிக்கவில்லை. பாலத்தின் அருகில் இருந்த விசாலமான வீதியின் குறுக்கே விகாரமான பெரிய தடையரண் நிறுவப்பட்டிருந்தது. அது, பாலத்தின் கோடிகளில் நான்கு பீரங்கி வாய்கள் கொண்ட கன்க்ரீட் சதுர அரண்கள் நின்றன. அவை சிறுவன் மேஜை மீது மறந்துவிட்ட கனசதுரங்கள் போன்று இருந்தன. செஞ்சதுக்கத்தின் மழமழப்பான சாம்பல்நிற மேற்பரப்பில் கட்டிடங்களும் புல் தரைகளும் மரச்சாலைகளும் பல வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தன. கோர்க்கிய வீதிக் கடைகளின் ஜன்னல்கள் பலகைகளால் அடைத்து மூடப்பட்டு மணல் நிரப்பப்பட்டிருந்தன. சந்துகளிலும் கட்டுக்கு அடங்காப் பையன் ஒருவனால் மறந்து விடப்பட்ட விளையாட்டுப் பொருள்கள் போலத் தண்டவாளங்களைப் பற்றாக வைத்து இணைத்த துருபிடித்த தடையரண்கள் நின்றன.
முன்னர் மாஸ்கோவைக் கண்டிராதவனும் போர்முனையிலிருந்து இங்கு வந்தவனுமான படைவீரனுக்கு இவை எல்லாம் வெகுவாகக் கண்ணில் படவில்லை.
பொய்க்கால்கள் கறுமுறுக்க, கைத்தடியை அழுத்தி ஊன்றியவாறு கோர்க்கிய வீதிகளில் மேலே சென்றான் பெரிதும் களைத்திருந்த அலெக்ஸேய். கிடங்குகளையும் வெடிப்புகளையும் வெடிகுண்டால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களையும் ஆவென்று வாய் பிளந்திருக்கும் ஆழ்பள்ளங்களையும் உடைந்த ஜன்னல்களையும் வியப்புடன் தேடினான் அவன். மேற்குக் கோடியிலிருந்த விமான நிலையத்தில் வாழ்ந்த அவன், ஜெர்மன் வெடி விமானங்கள் அணிக்குப்பின் அணியாக அனேகமாக ஒவ்வோர் இரவும் கிழக்கு நோக்கிப் பறந்து செல்வதைக் காப்பரணிகளிலிருந்து கேட்டிருந்தான்.
விமானங்களின் ஓர் அலை தொலைவில் ஓசை அடங்குவதற்குள் இன்னோர் அலை வரும். சில வேளைகளில் இரவு முழுவதும் வானம் விமானங்களின் இரைச்சலால் ஓயாது அதிரும். பாசிஸ்ட் விமானங்கள் மாஸ்கோவுக்குப் போகின்றன என்று சோவியத் விமானிகள் அறிந்திருந்தார்கள். அங்கே எப்பேர்பட்ட நகரமாயிருக்கும் என்று அவர்கள் கற்பனை செய்து கொள்வார்கள்.
இப்போது, போர்க்கால மாஸ்கோவைச் சுற்றிப் பார்க்கையில் மெரேஸ்யெவ் விமானத் தாக்குக்களின் அடையாளங்களை விழிகளால் துழாவித் தேடினான். அவனுக்கு அவை தென்படவில்லை. தார் ரோடுகள் சமமாக இருந்தன, ஒழுங்கு கலையாத வரிசைகளாக நின்றன வீடுகள். ஜன்னல் கண்ணாடிகள் கூட, வலைப் பின்னல் போலக் காகித நாடாக்கள் ஒட்டப் பட்டிருந்த போதிலும் அபூர்வமாக ஒரு சில தவிர மற்றவை எல்லாம் சேதமின்றி முழுமையாக இருந்தன. ஆனால் போர்முனை அருகாமையில் இருந்தது என்பதை நகரவாசிகளின் கவலை தேங்கிய முகங்களைக் கொண்டே அனுமானிக்க முடிந்தது. நகர மக்களில் பாதிப்பேர் படைவீரர்கள். புழுதி படிந்த ஜோடுகளும் வியர்வையில் நனைந்து தோள்களுடன் ஒட்டிக் கொள்ளும் சட்டைகளும் அணிந்து, சாமான் பைகளைத் தோள்களில் தொங்கவிட்டவாறு நடந்தார்கள் அவர்கள். ஒரு சந்திலிருந்து வெளிப்பட்டு வெயிலொளியில் முழுக்காடிய வீதியில் விரைந்தது புழுதி படிந்த லாரிகள் வரிசை. இந்த லாரிகளின் பக்கங்கள் நெளிந்திருந்தன., கேபின் கண்ணாடிகள் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தன. லாரிகளின் அற்றலைந்த மரப் பின்பகுதிகளில் உட்கார்ந்திருந்தார்கள் புழுதிபடிந்த படைவீரர்கள். அவர்கள் அணிந்திருந்த மழைக் கோட்டுக்கள் படபடத்துக் கொண்டிருந்தன. சுற்றிலும் உள்ளவற்றை எல்லாம் அவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள், டிராலி பஸ்களையும் கார்களையும் டிராம்பர்களையும் முந்திக்கொண்டு விரைந்து லாரி வரிசை. பகைவன் இங்கே தான் அருகில் இருக்கிறான் என்பதைத் தெளிவாக நினைவு படுத்தியது அது.
படிக்க:
♦ ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ?
♦ சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?
ருஷ்ய மகாகவி பூஷ்கின் உருவச்சிலை வரையில் அலெக்ஸேய் அரும்பாடுபட்டு நடந்தான். இருகைகளாலும் கைத்தடியைப் பற்றிச் சாய்ந்து, தயாரிப்புச் சாமான் கடைகளின் தூசி படிந்த காட்சி ஜன்னல்களில் உள்ள எதையோ உற்றுப் பார்ப்பது போன்ற நடிப்புடன் வழியில் அவன் சில தடவைகள் ஓய்ந்து கொண்டான். உருவச் சிலைக்குச் சற்றுத் தூரத்தில் போடப்பட்டிருந்த, வெயிலில் காய்ந்து கதகதத்த பச்சை நிற பெஞ்சில் அப்பாடா என்று உட்கார்ந்தான்… இல்லை, இல்லை, உட்காரவில்லை, பொத்தென்று சாய்ந்தான்.
சாய்ந்தவன், இரத்தங்கட்டி, வார்களால் தேய்த்து வழற்றப் பட்டுக் கடுமையாக வலித்த கால்களை நீட்டிக் கொண்டான். களைப்பு மிகுதியாக இருந்தாலும் களிபொங்கும் மனநிலை அதனால் பாதிக்கப்படவில்லை. வெயிலொளி வீசிய பகல் மிக நேர்த்தியாக இருந்தது. வானம் எல்லையற்ற ஆழங்கொண்டதாக விளங்கியது. பூக்கள் பூத்துக் குலுங்கிய லிண்டன் மரங்களின் நறுமணத்தை உலாச்சாலையில் பரப்பியது மெல்லிளங்காற்று. டிராம் வண்டிகள் கணகணவென்று மணியடித்தவாறு கடகடத்து ஓடின. உருவச்சிலைகள் பாதபீடத்தருகே புழுதி மணலை ஒரே மும்மரமாகத் தோண்டிக் கொண்டிருந்த, வெளிறி ஒடிசலாயிருந்த மாஸ்கோச் சிறுவர் சிறுமியர் இனிமையாகக் கலகலவென்று சிரித்தார்கள். புன்னனகை பூத்த முகத்தை வெயில்படும்படி திருப்பிக் கொண்டு கண்களைச் சுருக்கிக் கொண்டான் மெரேஸ்யெவ்.
(தொடரும்)
முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை