வைக்கம் போராட்டம் என்பது கோவிலிலே நுழைவதற்காக நடந்த போராட்டம் அல்ல. அதுவே ரொம்பப் பேருக்குத் தெரியாது. முதலாவதாக வைக்கம் போராட்டத்தைப் பற்றித் தெளிவுபடுத்தப்படவேண்டிய உண்மை என்ன என்றால், தாழ்த்தப்பட்டவர்களோ, மற்றவர்களோ கோவிலுக்குள் போகவேண்டுமென்பதற்காக நடத்தப்பட்ட போராட்டமல்ல அது.

அது, கோவிலைச் சுற்றி இருந்த , தெருக்களிலே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடக்கக்கூடாது என்று நிலவி வந்த அக்கிரமத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் ஆகும்.

வைக்கம் கோவிலைச் சுற்றி இருந்த தெருக்களிலே அவர்கள் நடக்க உரிமை பெற்றவர்களல்ல; அவர்கள் போனால் தீட்டுப்பட்டுவிடும். ஆகவே அவர்கள் ஊரைச் சுற்றிக் கொண்டுதான் போகவேண்டுமென்று நடைமுறைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

எனவே, தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தெருவிலே நடக்க உரிமை வேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.

தீண்டாதார் என்பதற்கு நாம் – Un-touchable என்ற வார்த்தையைத் தொட்டால் தீட்டு என்ற கருத்திலே பயன்படுத்துகிறோம். ஆனால் வைக்கத்திலே அவர்கள் அன்று அமைத்திருந்த சமுதாய முறையிலே – தீண்டுவது என்பது மட்டுமல்ல; அந்த மக்கள் மற்றவர்களை நெருங்குவதே தீட்டு Un touchable என்பது மட்டுமல்ல; அவர்கள் எல்லாம் Un-approchables அதாவது நெருங்கவே கூடாதவர்கள் என்று வகுத்து வைத்திருந்தார்கள்.

… இந்த வைக்கம் போராட்டம் எப்படித் தொடங்கியது என்ற உண்மையைத் தந்தை பெரியாரவர்களின் ”தீண்டாமையை ஒழித்தது யார்?” என்ற புத்தகத்திலே இருந்து முதலில் எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

தந்தை பெரியார் வைக்கம் போராட்டம் பற்றிப் பேசுகிறார் கேளுங்கள்.

“வைக்கத்திலே போராட்டம் ஆரம்பமானதே ஒரு சிறு நிகழ்ச்சியிலேயிருந்துதான்.

தோழர் மாதவன் என்ற பி.ஏ., பி.எல்., படித்த ஒரு வக்கீல் ஒரு வழக்குக்காக ஆஜராகப் போனார். வழக்கு விசாரணைக்கான கோர்ட் இடம் ராஜாவுடைய கொட்டாரத்தில் (அரண்மனையில்) ஒரு இடம். ராஜாவின் பிறந்த நாள் விழாவிற்கு அந்த ராஜாவுடைய கொட்டாரத்தின் (அரண்மனையின்) எல்லாப் பாகத்திலும் பந்தல் போடப்பட்டதில் கோர்ட் நடக்கும் இடமும் பந்தலுக்குள் அடங்கிவிட்டது. இந்த மாதவன் வக்கீல் ஒரு கேசில் ஆஜராக அங்கே போகவேண்டிய அவசியம் வந்தது. இராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக முறை ஜெபம் ஆரம்பமாயிற்று. இந்த வக்கீல் ஈழவ (‘நாடார்’) சமுதாயத்தைச் சேர்ந்தவராதலால் அங்கே போகக்கூடாது என்று தடுத்தார்கள்.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

அந்த நேரம் நான் தமிழ்நாட்டிலே தீண்டாமை விலக்கு என்பதில் தீவிரமாக இருந்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரம்” என்கிறார் அய்யா!

தமக்கு அதிலே எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பதற்காக இதைச் சொல்லுகின்றார்.

”எனவே, இந்தச் சம்பவம் எதிலே இருந்து கிளம்பியது?

ஒரு வழக்கறிஞருக்குப் படித்த மாதவன் என்ற ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர், வாதாடுவதற்காக நீதிமன்றம் இருக்கின்ற இடத்திற்குப் போகின்றார். ஆனால், இவர் கீழ்ச்சாதிக்காரர் என்பதால் அங்கே போகக்கூடாது என்கிறார்கள்.

இதிலிருந்து இரண்டு செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுடையை சாதி எங்கே போய் நிற்கிறதென்றால், அவனுடைய படிப்பையும் தாண்டி நிற்கிறது. வழக்கறிஞரானாலும் அவன் ஈழவன்தான் வக்கீல் அல்ல. அவனை ஒரு வழக்கறிஞனாகப் பார்க்கக்கூடிய சமுதாயமாக இந்த வர்ணாசிரமதர்ம சமுதாயம் இல்லை.

அந்த நிலையில், இதுதான் மற்றவர்களுக்கு ஆத்திரத்தையெல்லாம் உண்டாக்கியது.

மேலும், அய்யா சொல்லுகிறார்.

”இந்த மாவதன் (வக்கீல்) சங்கதியை வைத்தே திருவனந்தபுரத்து ஈழவ சமுதாயத் தலைவர்கள் சத்தியாகிரகம் ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தனர். வக்கீல் மாதவன், டி.கே. மாதவன், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.பி. கேசவமேனன் இவர்களோடு இன்னும் சிலரும் சேர்ந்து முடிவு செய்தார்கள்.

… ”முறை ஜெபத்தன்று ஆரம்பிப்பது என்று முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்கள். நான் அப்போது தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராக இருக்கிறேன். எந்த ஊரில் சத்தியாகிரகம் ஆரம்பிக்கலாமென்பதற்கு வைக்கத்தையே தேர்ந்தெடுத்தார்கள்.

ஏனென்றால், அந்த ஊரில்தான் ஊர் நடுவில் கோயிலும், அதன் 4 வாசலுக்கு எதிரிலும் 4 நேர் வீதிகளும், கோயில் மதில்கள் சுற்றிலும் பிரகாரம் தெருக்கள் எல்லாம் இருக்கும்.

அந்த வீதிகளில் கீழ்ச்சாதிக்காரர்களான அவர்ணஸ்தர்களும், அயித்தக்காரர்கள் எனப்படும் தீண்டாதாரும் நான்கு புறத் தெருக்களிலும் கோயில் வாசல்களுக்கு முன்னால் நடக்கக்கூடாது! மூன்று ஃபர்லாங் தூரத்திலேயும், 4 ஃபர்லாங் தூரத்திலேயும் இருக்கிற ரோட்டில்கூட நடக்காமல் ஒரு மைல் தூரம் வேறு ரோட்டில் சுற்றிக்கொண்டுதான் எதிர் ரோட்டுக்குப் போகவேண்டும். அயித்தக்காரர்களான தீண்டப்படாதவர்களைப் போலவேதான் ஈழவர்கள், ஆசாரிகள், வாணியர்கள், நெசவாளிகள் முதலியோரும் அந்த ரோட்டில் நடந்து போகக்கூடாது.

இதே மாதிரிதான் சுசீந்திரத்திலும் உள்ள கோயில் மற்றும் அந்த ராஜ்யத்தில் உள்ள மற்றக் கோயில்கள் பக்கம் அமைந்துள்ள தெருக்களிலும் நடக்க இவர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

வைக்கத்தில் கோயிலுக்கு பக்கமாக வாசலுக்கு எதிராக அமைந்த தெருக்களில்தான் எல்லா முக்கிய ஆபீசுகளும், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் முதலியனவும் இருந்தன. ஏதாவது போலீஸ்காரர்களையோ, இன்ஸ்பெக்டர்களையோ, குமாஸ்தாக்களையோ மாற்றுவதானாலும்கூட கீழ்ச்சாதியர்களை அங்கு மாற்ற மாட்டார்கள். ஏனென்றால், அந்தப் போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுக்கள் இருக்கும் இடத்திற்குப்போக கீழ்ச்சாதியார்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், முக்கியமான கடைகளும் அந்த வீதிகளில்தான். ஆனதால் கீழ்ச்சாதிகள், கூலிகள் அங்கு செல்ல முடியாது. (நூலிலிருந்து பக்.9-13)

… காந்தியார் கோவில் பிரவேசத்தைப் பற்றிப் பேசும்போது அதுவும் சுயமரியாதைப் பிரச்சார நிர்ப்பந்தம் காரணமாய் கோவில் பிரவேசத்தை அனுமதிக்க வேண்டி வந்தபோது,

“கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்ல முடியுமோ அந்த அளவுவரையில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்.”

என்று சொல்லி அனுமதித்ததால் அந்த அளவுக்குத்தான் நாடார் சமுதாயம் உள்பட கோவில் பிரவேசமில்லாத எல்லா மக்களுக்கும் அனுமதி கிடைத்தது.

காந்தியாரின் தந்திரம்

அதன்மீது பெரியார் ஆத்திரப்பட்டு, “தீண்டாமை விலக்கு என்பதும், கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்குகாக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள் ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று வேகமாகப் பிரச்சாரம் செய்து வந்தார். இதன்மீது காந்தியார் மக்களை ஏமாற்ற வேறு ஒரு தந்திரம் செய்தார்.

அதாவது, “இதுவரையில் இதற்கு முன் பிராமணர்களுக்கு என்று மாத்திரம் எந்த இடம் இருந்து வந்ததோ அந்த இடத்திற்குப் பிராமணர்களும் செல்லக் கூடாது; மற்ற எல்லா சாதியாருக்கும் அனுமதிக்கப்பட்டிருந்த இடம் வரையிலுமேதான் பிராமணனும் செல்லலாம்” என்று அபிப்பிராயம் கூறி அந்தப்படியே பல கோவில்களில் மூங்கில் கழியைக் கொண்டு தடுப்புகட்டி தடை செய்யப்பட்டது.

பார்ப்பானுக்கு மட்டுமுள்ள தனி உரிமையா?

இதுபற்றி மதுரைக் கோவிலுக்குள் பெரியார் சில தோழர்களுடன் சென்று தடுக்கப்பட்ட இடத்தில் பல பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் நிற்பதைக் கண்டு அங்கேயே அது பற்றிக் கிளர்ச்சி செய்தார்; பத்திரிகையில் எழுதினார் என்றாலும் அர்ச்சகர் என்ற பெயரில் இன்றும் பார்ப்பனர்கள் பார்ப்பனத்திகளும் உள் மண்டபத்தில் இருந்துதான் வணங்குகிறார்கள். இது எப்படியோ இருந்தாலும் பார்ப்பனன்தான் கர்ப்பக கிரகத்திற்குள் சிலை இருக்கும் இடத்திற்குள் போகலாம்; மற்றபடி சூத்திரனோ, பஞ்சமனோ என்பவர்கள் கர்ப்பக கிரகத்திற்குள் போகக்கூடாது என்கின்ற சாதிமுறை சாதிபேத முறை இன்றும்தான் இருந்து வருகிறது.

இது விஷயத்தில் காந்தியாருடையவும் பார்ப்பனர்களுடையவும் சூழ்ச்சி எல்லாம்.

பார்ப்பனர்களின் கவலை!

சாதி ஒழிக்கப்படுவதால், பார்ப்பனர்களுடைய தூய்மை கெட்டுவிடுகிறது என்பதோ, தங்கள் நிலைமை அசுத்தமாக்கப்பட்டுவிடுகிறது என்பதோ அல்லவே அல்ல. மற்றென்னவென்றால், தங்களுக்கு பார்ப்பனர்களுக்கு இருந்துவரும் உயர்வும் தனி உரிமைகளும், பாடுபடாமல் ஊரார் உழைப்பில் அனுபவிக்கும் சுகபோகமும், உயர்வாழ்வும், ஏகபோகமும் அழிந்துபோகுமே என்கின்ற கவலைதான்.

படிக்க:
பெரியார் மண்ணில் கருவறைத் தீண்டாமையை ஒழிப்போம் !
தீண்டாமையின் தலைநகரம் – மோடியின் குஜராத் !

இதை உத்தேசித்தேதான் சாதி என்பதில் எவ்வித தனிக்கடமையும் இல்லாமல் உயர்வு என்கின்ற உரிமையை மாத்திரம் அனுபவிக்கும்படி சட்டத்தால் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டார்கள் இதற்குக் காரணம் காந்தியார் செய்த மோசடியும் சூழ்ச்சியும் ஆன மாபெரும் துரோகம்தான்.  (நூலிலிருந்து பக்.75-76)

நூல் : வைக்கம் போராட்ட வரலாறு
தொகுப்பாசிரியர் : கி. வீரமணி., எம்.ஏ., பி.எல்.

வெளியீடு : திராவிடர் கழக வெளியீடு,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8161 ; 8428 455 455

பக்கங்கள்: 96
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuvalnhm | periyarbooks

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க