அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 06

அதிசயத்தின் “ரகசியங்கள்”

ன்று அதிசயம் நடக்குமா? இதோ இப்போதுதான் எல்லா எழுத்துகளையும் கற்று முடித்த ஆறு வயதுக் குழந்தைகளால் தமது மகிழ்ச்சிகளையும் வருத்தங்களையும் எழுத்து வடிவில் வடிக்க முடியுமா? நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என்றாலும், சென்ற ஆண்டுகளின் அனுபவம் எனக்கு நம்பிக்கையளிக்கிறது. அவர்கள் அடிப்படை எழுத்து வடிவ அம்சங்களைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான் 84 நாட்கள் இவர்களைத் தயார்படுத்தினேன். இதோ எனது முறையியலுக்கான பரிசோதனை நேரம் வந்து விட்டது. இன்றைய பாடத்தின் எல்லா “ரகசியங்களும்” இதில்தான் அடங்கியுள்ளன.

இதோ இந்த “ரகசியங்கள்”.

முதலில் என் வகுப்புக் குழந்தைகள் வார்த்தையின் கட்டமைப்பைப் பகுப்பாய்வு செய்யக் கற்றுக் கொள்கின்றனர். நான் செயற்கையாக நீண்டு இழுத்தபடி உச்சரிக்கும் வார்த்தைகளை இவர்கள் புரிந்து கொள்ளுமாறு செய்கிறேன், அவர்களே இம்மாதிரி உச்சரிக்கச் சொல்லித் தருகிறேன், இவற்றில் எந்த வரிசையில் ஒலிகள் ஒலிக்கின்றன என்பதையும் கவனித்துக் கொள்கிறேன். அட்டை வில்லைகளின் உதவியால் அவர்கள் வார்த்தையின் ஒலியமைப்பைக் கண்டுபிடிக்கின்றனர்.

இது பின்வருமாறு நடக்கிறது: வார்த்தையை மெதுவாக, இழுத்தபடி உச்சரித்து குழந்தை முதல் ஒலியைக் கண்டுபிடித்து அட்டை வில்லையைப் போடுகிறான் – நீல நிற அட்டைவில்லை மெய்யெழுத்தையும் சிவப்பு நிற அட்டைவில்லை உயிரெழுத்தையும் குறிக்கும்; வார்த்தையை மீண்டும் உச்சரித்து இரண்டாவது ஒலியைக் கண்டுபிடித்து அட்டைவில்லையைப் போடுகிறான். இதே போல் அடுத்து வரும் ஒலிகளைக் கண்டு பிடித்து அட்டை வில்லைகளைப் போடுகிறான். இவ்வாறாக வார்த்தையின் மாடல் இதன் ஒலியமைப்புடன் கிடைக்கிறது; இதை அவன் மாற்றியமைக்கலாம், ஒலிகளை மாற்றலாம், ஒரு ஒலிக்குப் பதிலாக வேறு ஒலியை வைக்கலாம், ஏதாவதொரு ஒலியை அகற்றலாம், இச்சந்தர்ப்பங்களில் எல்லாம் வார்த்தை எப்படி மாறுகிறது என்று கவனிக்கலாம்.

இத்திறமை தான் வார்த்தைகளை எழுதும் முறையின் அடிப்படையாகத் திகழுகிறது. நான் வார்த்தைகளை எழுதும் படி குழந்தைகளுக்குச் சொல்ல, அவர்களுக்கு இன்னமும் எழுத்துகள் தெரியாதாகையால், எந்த ஒரு எழுத்திற்கும் பதிலாக வட்டத்தைப் பயன்படுத்துவார்கள். இதை நான் அரை எழுத்து என்கிறேன். ஒவ்வொரு நாளும் செல்லச் செல்ல இந்த முறையில் வார்த்தைகளை எழுதும் திறமை வளருகிறது, ஒலிகளைக் கண்டுபிடிக்க வார்த்தைகளைப் பல முறை திரும்பச் சொல்ல வேண்டியதில்லை. முதல் முயற்சியிலேயே அவன் எழுதுகிறான். இவற்றையெல்லாம் குழந்தைகள் எழுத்துகளைக் கற்கும் முன்னரே கிரகிக்கின்றனர்.

பின்னர் எழுத்துகளைக் கற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்ள, கலப்பு முறையில் (இதுவரை கற்ற எழுத்துகளை அப்படியே எழுதியும் இதுவரை படிக்காத எழுத்துகளுக்கு வட்டங்களைப் பயன்படுத்தியும்) வார்த்தைகளை எழுதுமாறு குழந்தைகளுக்குச் சொல்கிறேன். இவ்வாறாக ஒவ்வொரு புது எழுத்தும் உடனடியாக, எதற்காக தோற்றுவிக்கப்பட்டதோ அந்த முறையினுள் (வார்த்தையின் எழுத்தாக) உடனடியாகச் சேருகிறது. அரை எழுத்து படிப்படியாக முழு எழுத்தாகிறது, எழுத்துகள் வட்டங்களை வெளித் தள்ளுகின்றன. எனவே ஆறு வயதுக் குழந்தைகள் எல்லா எழுத்துகளையும் கற்றுக் கொள்ளும் முன்னரே வார்த்தைகளை எழுதக் கற்கின்றனர். எனது முறையியலின் முதல் “ரகசியம்” இதுதான்.

அடுத்து வாக்கியங்களைப் பற்றி பார்ப்போம். படங்களைப் பார்த்து முக்கோண அட்டைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்குமாறு குழந்தைகளுக்குச் சொல்கிறேன். பின்வருமாறு வாக்கியம் உருவாக்கப்படுகிறது: குழந்தை வாக்கியத்தை உச்சரித்து, முதல் வார்த்தையைக் கண்டுபிடித்து ஒரு அட்டையை வைக்கிறான், மீண்டும் அதே வாக்கியத்தை உச்சரித்து இரண்டாவது வார்த்தையைக் கண்டுபிடித்து மற்றொரு அட்டையை முதல் அட்டையின் அருகே வைக்கிறான், இதே போல் தொடருகிறது. இறுதியில் அவன் என்ன சொல்ல வந்தான் என்பதைப் பொறுத்து முற்றுப் புள்ளி, ஆச்சரியக் குறி அல்லது கேள்விக் குறியுடன் கூடிய அட்டையை வைக்கிறான். இவ்வாறாக வாக்கிய மாடல் கிடைக்கிறது.

இதில் வார்த்தைகளை மாற்றியமைக்கலாம், ஏதாவதொரு வார்த்தையை அகற்றலாம், புதிய வார்த்தையைச் சேர்க்கலாம். ஒவ்வொரு முறையும் அர்த்தம் எப்படி மாறுகிறது, வாக்கிய அமைப்பு எப்படி மாறுகிறது, அதன் உட்பொருள் எப்படி செழுமையடைகிறது அல்லது மோசமாகிறது என்று குழந்தை கவனிக்கிறான், வார்த்தைகளை எப்படி நன்றாக சேர்ப்பது என்று சிந்திக்கிறான். பின்னர் குழந்தைகள் “வாக்கியங்களை எழுத” கற்றுக் கொள்கின்றனர்: வாக்கியத்தை உச்சரித்து, முதல் வார்த்தையைக் கண்டுபிடித்து, அதை ”எழுதுகின்றனர்”, அதாவது நீண்ட முக்கோணத்தை வரைகின்றனர்; மீண்டும் அதே வாக்கியத்தை உச்சரித்து, இரண்டாவது வார்த்தையைக் கண்டுபிடித்து அதே வழியில் “எழுதுகின்றனர்”. வாக்கியத்தின் இறுதியில் முற்றுப் புள்ளியையோ, ஆச்சரியக் குறியையோ, கேள்விக் குறியையோ இடுகின்றனர். படங்களைப் பார்த்து சிறு கதைகளை ”எழுதவும்”, சொந்தக் கருத்துகள், உணர்ச்சிகளை “எழுதவும்” படிப்படியாக குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறேன். இவ்வாறாக இந்த 84 நாட்களில் ஒவ்வொருவரும் ஒரு சில நோட்டுப் புத்தகங்களை முடிக்கின்றனர்.

இதில் என்ன ”எழுதப்பட்டுள்ளது” என்று இவர்களால் மட்டுமே படிக்க முடியும். இவர்கள் தமது ‘கட்டுரைகளைப்’ பாடங்களிலும் இடைவேளைகளிலும் எனக்குப் படித்துக் காட்டினர். எனவே, எழுத்துகளைக் கற்றுக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே தமது மனப்பதிவுகள், உணர்ச்சிகளைப் பற்றி எழுதவும் தமது கருத்துகளை வரிவடிவத்தில் வெளியிடவும் குழந்தைகளுக்குத் தெரிந்திருந்தது என்றாகிறது. எனது முறையியலின் இரண்டாவது “ரகசியம்” இதுதான்.

படிக்க:
காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !
வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !

அடுத்து, உணர்வு பூர்வமாகப் பேச, அதாவது எதை, எப்படி சொல்வது என்று முதலில் யோசித்து பின் பேசச் சொல்லித் தருகிறேன். இதற்கு நான் முதலில் பின்வரும் முறையைப் பின்பற்றுகிறேன்:

ஏதாவது ஒரு விஷயத்தை மெதுவாகத் திரும்பிச் சொல்ல, தம் மனப்பதிவுகள், உணர்ச்சிகளை மெதுவாக வெளியிட குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கிறேன். அதுவும், இதுவரை எனக்குத் தெரியாததைச் சொல்லும்படி குழந்தைகளிடம் கூறுகிறேன். நான் புதிய படத்தைப் பார்க்கவில்லை, குழந்தை இதை நேற்று பார்த்திருக்கிறான். எனக்கு அப்படத்தைப் பற்றி அறிய ஆவல், அவனுக்கோ என்னுடன் பேச விருப்பம். அவன் ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கழித்தான் என்று எனக்குத் தெரியாது, அவனுக்கோ தான் தந்தையுடன் எப்படி உலாவினான் என்று எனக்குச் சொல்ல விருப்பம். இவ்வாறாக எங்களிடம் பேச்சு தோன்றுகிறது, ஆனால் அவன் மெதுவாக, புரியும்படி, தெளிவாக, தேவையில்லாத வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் பயன்படுத்தாமல் சொல்ல வேண்டும்.

அவன் தன் கையில் வார்த்தை அட்டைவில்லைகளை வைத்திருக்கலாம். எனக்கோ, வகுப்பில் உள்ள அனைவருக்குமோ எதையாவது சொல்லும் போது இந்த அட்டைகளை வார்த்தைகளுக்கான அழகிய சிறு பெட்டியில் போடலாம். பகிர்ந்து கொள்ளும் இத்தேவை, எதையாவது தெரிவிக்கும் தேவை மிகவும் வலிமையானது, இது பேச்சின் உள்ளடக்கத்தை முன் கூட்டியே சிந்திப்பதில் தோன்றும் இடர்ப்பாடுகளைக் கடக்கக் குழந்தைகளுக்கு உதவும். இவையெல்லாம், தெளிவற்று, முழுமையின்றி பேச்சில் வரும் மனப்பதிவுகளை தடுத்து நிறுத்தவும் இவற்றிற்கு தெளிவைத் தரவும் இவற்றை வார்த்தைகள், சொற்றொடர்களால் அலங்கரிக்கவும் அவசியம்.

எனது நடைமுறையில், சிந்தனையையும் கருத்துக்களையும் எழுத்து வடிவில் வெளிப்படுத்தும் திறமையைக் குழந்தைகளிடம் வளர்ப்பதானது நன்கு பேசப் பழகும் போது நடைபெறுகிறது. அதுவும் பேச்சு வளர்ச்சி எழுத்து வளர்ச்சியின் ஒரு சில விதிகளின்படி நடைபெறுகிறது. எழுத்தின் அடிப்படைகளைத் தரும் நான் பேச்சுப் பழக்கத்தை அதிக விரைவாக வளர்க்க உதவுகிறேன். எழுதக் கற்றுத் தரும் எனது முறையியலின் மூன்றாவது “ரகசியம்” இதுதான்.

இப்போது எழுதும் விவரங்களைப் பார்ப்போம். குழந்தைகளிடம் எழுத்துப் பழக்கங்கள் உருவாகும் நிகழ்ச்சிப் போக்கை, இவர்களிடம் எழுத்து வடிவிலான உரையாடல் திறமையை வளர்க்கும் நிகழ்ச்சிப் போக்கிலிருந்து பிரிக்காமலிருப்பதுதான் முக்கியமென நான் கருதுகிறேன். இப்பிரச்சினையின் தீர்விற்காக பயிற்சிகள், எழுத்து மாதிரிகள் அடங்கிய நோட்டுப் புத்தகங்களை நான் தயாரித்தேன். எழுதக் கற்றுத்தரும் பொருட்டு எழுத்துகளின் தனிப்பட்ட பகுதிகளை எழுதித் தரும் பயிற்சிகளை நான் தருவதில்லை. மாறாக, தாய்மொழி எழுத்துகளை எழுதும்போது கையை எப்படியெல்லாம் அசைக்க வேண்டுமோ, அத்தகைய அசைவுகளை உள்ளடக்கிய வடிவங்களை வரைவதற்குப் பயிற்சியளிக்க நான் விரும்புகிறேன்.

படிக்க:
குழந்தைகள் உலகில் ஆத்திகம் Vs நாத்திகம் – ஓர் அனுபவம் !
இயற்கை சாதி பார்ப்பதில்லை ! ஆனால் மனிதர்கள் ?

எனவே, பின்னால் எந்த ஒரு எழுத்தையும் எழுதுவதில் குழந்தைகளுக்கு இடர்ப்பாடுகள் இருக்காது. குழந்தைகள் நோட்டுப் புத்தகங்களில் நான் சுயமாக வேலை செய்யப் பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளேன்: படங்களைப் பார்த்து வார்த்தைகளையும் வாக்கியங்களையும் எழுதுவது, ஒலி ஓவியப் புதிர்களைப் போடுவது, வாக்கியங்களில் விட்டுப்போன வார்த்தைகளைப் பூர்த்தி செய்வது, கொடுக்கப்பட்ட எழுத்துகளிலிருந்து இயன்ற அளவு அதிக வார்த்தைகளை உருவாக்குவது, இன்ன பிற பயிற்சிகள் இவற்றிலடங்கும். இவ்வாறாக பல்வேறு எழுத்து வேலைகளைச் செய்யும்போது குழந்தைகள் எழுதும் பழக்கத்தைப் பெறுகின்றனர். எழுதச் சொல்லித் தரும் என் முறையியலின் நான்காவது “ரகசியம்” இதுதான்.

பிரபல சோவியத் மனவியல் நிபுணர் லேவ் விகோத்ஸ்கியின் கருத்து நிலை இந்த ”ரகசியங்கள்” அனைத்தின் அடிப்படையில் உள்ளது. எழுத்துக்கு விசேஷ மனவியல் நியதிகள் உண்டு, இதன் முறையை சாதாரணப் பேச்சு முறையோடு சேர்க்கக் கூடாது என்றார் அவர். இதனால் மனவியலின் பழைய கருத்து நிலை நிராகரிக்கப்படுகிறது. இதன்படி “பேச்சு + எழுத்துகளில் வடித்தல் = எழுத்து” என்றிருந்தது. இந்த எளிய, தவறான கருத்துதான் ஆரம்ப வகுப்புகளில் வழக்கமாக எழுத்துகளை கற்பிக்கும் முறையை இம்சிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

எனது மாணவர்கள் தமது கட்டுரைகளை எனக்குத் தருகின்றனர். இவற்றில் பலவற்றில் பட்டாம்பூச்சிகள், மலர்கள், விமானங்கள், வீடுகள், வேறு படங்கள் உள்ளன. நான் கட்டுரைகளைப் படிக்கிறேன், அவற்றில் கற்பனைகளே இல்லை, எல்லாம் உண்மைகள். குழந்தைகள் தமது மனப்பதிவுகள், உணர்ச்சிகள், இன்ப துன்பங்களைப் பற்றி எழுத முடிந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி. இந்தக் கட்டத்தில் எனது இலட்சியம் அடையப்பட்டு விட்டது. எனக்கு எது மகிழ்ச்சி தருகிறது என்று என்னையும் எழுதச் சொன்னால் நான் இப்படி எழுதுவேன்: “எனது ஆறு வயதுக் குழந்தைகளின் திறமை குறித்து, அதிசயம் நடந்தது குறித்து எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி!” இதற்கு நிரூபணமாகக் குழந்தைகளின் 37 ஒளிவுமறைவற்ற கட்டுரைகளையும் காட்டுவேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க