கேள்வி: //இந்தியாவில் கிறிஸ்துவ மதம் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது ? இப்போதுள்ள கிறிஸ்துவர்கள் அக்காலத்திலேயே மதமாற்றம் செய்யப்பட்டவர்களா?//

– கமல ஹாசன்

ன்புள்ள கமலஹாசன்,

இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு குறித்து “கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் ஒரு அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. அதையே இங்கு கொஞ்சம் சுருக்கி இணைக்கிறோம்.

ஏசுநாதரின் நேரடிச் சீடரான புனித தாமஸ் முதல் நூற்றாண்டிலேயே இந்தியா வந்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அப்போதைய கிறித்தவம் ஒரு மத நிறுவனமாக மாறியிருக்கவில்லை. எனவே வெறும் சமயக் கொள்கையைப் பரப்புதல் என்பதோடு அது நின்று விட்டது. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகே கிறித்தவ மதமாற்றம், ‘மிஷனரிகள்’ எனும் சமயநெறி பரப்பும் நிறுவனங்கள் மூலமாக உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது.

Saint-Thomasகிறித்தவ மிஷனரிகள் என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245-ம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.

அதன்பின் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் துவங்கியது. முதலாளித்துவப் புரட்சி நடப்பதற்கான சூழ்நிலைகள் அரும்ப ஆரம்பித்தன. ஐபீரிய தீபகற்ப நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் வணிகம் செய்யவும், காலனிகளை உருவாக்குவதற்கும், இந்தியாவைப் போன்ற பழைய உலகைச் சேர்ந்த நாடுகளுக்குப் புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் போட்டியிட்டன. அப்படி வழி கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளைப் போட்டித் தகராறின்றி ஸ்பெயினுக்கும், போர்ச்சுகலுக்கும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுக்கும் ‘புனிதப் பணியினை’ போப் செய்து வந்தார். கூடவே கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் கடமையையும் அறிவுறுத்தினார்.

1534-ல் இக்னேஷியஸ் லயோலா ஆரம்பித்த ‘ஜெசூட்ஸ்’ என்ற ஏசு சங்கம் இத்தகைய மிஷனரி மற்றும் பாதிரி – துறவியர்களுக்கு முன்னோடியாக விளங்கியது. இதன்பின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிஷனரி அமைப்புகள் தோன்றின. இவற்றில் போப்புக்கும் திருச்சபைக்கும் கட்டுப்பட்டவை ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தும், ஏனையவை புராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்தும் இருந்தன. இருப்பினும் இரு பிரிவைச் சேர்ந்த மிஷனரிகளும் மதத் தொண்டுப் பணிகளோடு தத்தமது நாட்டு ஆட்சியாளர்களின் காலனியாதிக்க நலன்களுக்குச் சேவையாற்றுவதையும் முக்கியமாகக் கொண்டிருந்தனர். இனி இந்தியாவுக்குத் திரும்புவோம்.

படிக்க :
♦ அரசு பொது மருத்துவமனை ஊழியர்களும் மனிதர்கள்தான் | ஃபரூக் அப்துல்லா
♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

போர்ச்சுக்கல் நாட்டின் கடலோடி நாயகனான வாஸ்கோடகாமா தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி, மடகாஸ்கர்தீவு வழியாக இந்திய மாலுமிகளின் உதவியோடு கேரளத்தின் கோழிக்கோடு கடற்கரையில் 1498, மே மாதம் 27-ம் தேதி கரை இறங்கினார். ஆரம்பித்தில் போர்ச்சுக்கீசியர்களின் நோக்கம் வியாபாரம் செய்வதும் கிறித்தவ மதப் பிரச்சாரம் செய்வதும் என்பதாக இருந்தது. வலிமை வாய்ந்த இசுலாமியப் பேரரசினைப் போல கிறித்தவமும் அப்படி உருவாக வேண்டும் என்று திருச்சபையினால் ஊக்கங் கொடுக்கப்பட்ட போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவில் குறிப்பாக கோவா மற்றும் கேரளாவில் சுவிசேசப் பணியைத் துவங்கினர். முதலில் இந்தியாவும் கிறிஸ்தவ நாடுதான் என்று நம்பிய போர்ச்சுக்கீசியர்கள் பின்னர் அப்படி இல்லை எனப் புரிந்து கொண்டனர். எனினும் கேரளாவில் ஏற்கனவே சிரியன் கிறித்தவப் பிரிவு மக்கள் அரைகுறை கிறித்தவ மரபோடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களெல்லாம் முறையான கிறித்தவ மரபிற்கு உட்படுத்தப்பட்டு திருச்சபையின் வலைப் பின்னலில் சேர்க்கப்பட்டனர்.

francis xavier
பிரான்சிஸ் சேவியர்

ஆரம்பத்தில் அடாவடி வழிகள் மூலமாக மறை பரப்பிய போர்ச்சுக்கல் மிஷனரிகள் பின்னர் தமது வழிமுறைகளை மாற்றிக் கொண்டனர். இந்தியக் கிறித்தவ வரலாற்றில்  கோவாவில் மட்டுமே வன்முறைப் பாதையினை மேற்கொண்ட முதலும் – கடைசியுமான மிஷனரிகள் இவர்கள் மட்டுமே. அதேசமயம் தொண்டுப் பணியியைத் துவக்கி வைத்தவர்களும் இவர்கள்தான். 1541-ல் பிரான்சிஸ் சேவியர் என்ற புகழ்பெற்ற பாதிரியார்  கோவாவில் வந்திறங்கினார். இயேசு சங்க (ஜெசூட்ஸ்) நிறுவனரான இக்னோஷியஸ் லயோலாவின் சீடரான இவர், கப்பலை விட்டிறங்கி  முதலில் தொழுநோயாளிகளின் மருத்துவமனைக்குத் சென்றுவிட்டு பின்னரே ஆர்ச் பிஷப் அரண்மனைக்குச் சென்றார்.  அடுத்த வருடமே கோவாவில் புனித – பால் கல்லூரி நிறுவப்பட்டது. இது ஆசிய மற்றும் ஐரோப்பியப் பாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக விளங்கியது. சேவியரின் முயற்சியினால் கோவாவிலும், கேரளத்தில் மலபார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கிறித்தவத்தைத் தழுவினர். இந்தியாவில் பெருந்திரளான மக்கள் கத்தோலிக்கத்தில் இணைக்கப்பட்டது இதுவே முதன்முறை.

அதன்பின் ஏனைய ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் செழிப்பான பொருளாதாரத்தைச் சுரண்டும் நோக்குடன் வணிகம் செய்ய வந்தன. போர்ச்சுக்கீசியர்கள் கோவா, டாமன், டையூவிலும், டச்சுக்காரர்கள் (ஹாலந்து) கொச்சியிலும், பிரெஞ்சுக்காரர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி, மாஹேயிலும், ஆங்கிலேயர்கள் சென்னை, மசூலிப்பட்டினம், சூரத், கொல்கத்தா என ஏனைய இந்தியப் பகுதிகளிலும் காலூன்றினர். இவர்களில் போர்ச்சுக்கீசியர்கள் கத்தோலிக்கப் பிரிவையும், ஏனைய நாடுகள்  புராட்டஸ்டண்ட் பிரிவையும் சார்ந்திருந்தன. 17, 18-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் நிலைகொண்ட ‘புராட்டஸ்டண்ட்’ நாடுகள் முதலில் முக்கியமாக வணிகத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தன. பின்னர்தான் ஆசியாவில் தமது அரசியல் ஆதிக்கத்திற்கு மதமாற்றம் உதவுமென்பதைப் புரிந்து கொண்டனர். 17ஆம் நூற்றாண்டில் முடிவுற்ற போர்ச்சுக்கீசியர்களின் மதமாற்றம் பெருமளவு மக்களைச் சேர்ப்பதில் தோல்வியுற்றது.

அதன் பின்னரே 18, 19, 20-ம் நூற்றண்டுகளில் பெருமளவு மக்கள் பல்வேறு மிஷனரிகளால் கிறித்தவர்களாய் மாறினர். இன்று இந்திய கிறித்தவ மக்களின் எண்ணிக்கை நார்வே, டென்மார்க், பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம். மொத்த கிறித்தவர்களில் 70 சதவீதம் பேர் தென்னிந்தியாவிலும், 30 சதவீதம் பேர் வடக்கிலும் வாழ்கின்றனர். அந்தந்த மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாடு 5%, கேரளா 26%, ஆந்திரா 4%, கோவா 36%, நாகலாந்து 53%, மணிப்பூர் 19% என கிறித்தவ மக்களின் விகிதம் இருக்கிறது. இப்படிப் பெருந்திரளான மக்கள் மாறுவதற்குக் காரணம் என்ன?

இந்து மதவெறியர்கள் கூறுவதுபோல் கிறித்தவ மிஷனரிகள் ஆசைகாட்டியோ, அச்சுறுத்தியோ இதைச் செய்யவில்லை. பார்ப்பனியத்தின் கொடூரமான சாதிய சமூக அடக்குமுறையின் காரணமாக, தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மக்களிடம் தோன்றிய விடுதலை ஆர்வமே முதன்மையான காரணம்.

படிக்க :
♦ மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
♦ ‘இந்து கடையிலேயே வாங்கு!’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு…..?

10-ஆம் நூற்றாண்டில் இருந்து தீவிரமான பார்ப்பனமயமாக்கத்திற்கு உள்ளாகிய மாநிலம் கேரளம். வடக்கிலிருந்து வந்த நம்பூதிரிகள் சில பத்தாண்டுகளுக்குள்ளாகவே கேரளத்தின் சமூக பொருளாதார ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். நம்பூதிரி, நாயர், கம்மாளர், ஈழவர் மற்றும் புலையர் என்ற இறுக்கமான சாதிய அமைப்பு கொடூரமான விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்டது. அதற்கென்றே ‘சங்கர ஸ்மிருதி’ எனும் ‘பார்ப்பனக் குற்றவியல்’ சட்டத் தொகுப்பும் இயற்றப்பட்டது. மனுஸ்மிருதியின் கேரளப் பதிப்பான இந்நூலின் விதிமுறைப்படி தொலைவில் வரும் புலையரை ஒரு நம்பூதிரியின் கண்கள் பார்த்து விட்டாலே நம்பூதிரியைத் தீட்டுப்படுத்திய குற்றத்திற்காக அந்தப் புலையரைக் கொலை செய்யலாம். நாயர்களின் மணப் பெண்கள் தமது முதலிரவை நம்பூதிரிகளின் படுக்கையில் கழிக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகள் இந்நூற்றாண்டின் ஆரம்பம் வரை அமலில் இருந்துள்ளன. கேரள சாதியக் கொடுமைகளைக் கண்ட விவேகானந்தர் கேரளாவை ‘பைத்தியக்காரர்களின் நாடு’ என்றழைத்தார். கேரளாவில் இலட்சக்கணக்கான மக்கள் மதம் மாறுவதற்கு இவையே காரணங்கள். பார்ப்பனியத்தின் சமூக அடக்குமுறைக்கு எதிராக ஈழவ மக்களுக்குத் தன்மானமளித்த நாராயண குரு தோன்றுவதற்கான காரணமும் இதுதான்.

காலனிய ஆட்சியின்போது கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கி தென்கேரளத்தை ஆண்டு வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் ஆயிரக்கணக்கான மீனவர்களும், நாடார் சாதி மக்களும் கிறித்தவத்தைத் தழுவினர். ‘பள்ளு, பறை, சாணான், சக்கிலியன்’ என்ற தாழ்த்தப்பட்டவர்களின் படியமைப்பில் மூன்றாம் நிலையிலிருந்த சாணான் என்றழைக்கப்பட்டவர்கள் நாடார் சாதி மக்களாகும். ‘நாடார் பெண்கள் மாராப்பு போடக்கூடாது’ என்ற பார்ப்பன அடக்குமுறை அங்கே சட்டமாகவே இருந்தது. தமது போராட்டத்தின் மூலம் திருவிதாங்கூர் அரசை மாராப்பு போடக்கூடாது என்ற சட்டத்தை இரத்து செய்ய வைத்தார்கள் நாடார் சாதிப் பெண்களும், ஆண்களும். நாடார்கள் கோவில்களுக்குள் நுழையக்கூடாது என்பதை எதிர்த்துத் தனிக்கோவில்  – வழிபாட்டு முறையை உருவாக்கினார்  ஐயா வைகுண்ட நாதர். நாராயண குருவைப் போல குமரி மாவட்டத்தில் தோன்றிய இச்சீர்த்திருத்தப் பெரியவரின் கொள்கையை ஏற்றவர்கள் ‘ஐயா வழி’ மக்கள் என இன்றும் வாழ்கிறார்கள்.  எனவே குமரி மாவட்டத்தில் மதமாற்றம் எளிதில் நடந்தேறியதில் வியப்பில்லை.

ஒரிசாவின் சோட்டா நாக்பூர் பகுதியில் முந்த்தா ஆரோன், காரியா போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். பார்ப்பன மேல் சாதி நிலப்பிரபுக்களிடம் நிலமிழந்து, வாழ்விழந்து அடிமையில் உழன்று கொண்டிருந்த இம்மக்களுக்கு பொருளாதார, கல்வி உதவிகளைச் செய்த மிஷனரிகள் வெகு விரைவிலேயே அவர்களுடைய நம்பிக்கை நட்சத்திரமாய் மாறினார்கள். 19-ம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்திற்கு மாறிய இம்மக்கள், அதன் மூலமே ஓரளவிற்கேனும் தமது சுயமரியாதையையும், வாழ்க்கையையும் மீட்க முடிந்தது.

பெண் குழந்தைத் திருமணம், வல்லுறவில் இறந்து போகும் சிறுமிகளான மணப்பெண்கள், குலின் எனப்படும் பார்ப்பனப் பிரிவில் விதவைகள் விபச்சாரிகளாக மாற்றப்பட்டது, விதவைகளுக்கும் – விபச்சாரிகளுக்கும் பிறக்கும் கள்ளக் குழந்தைகள் ஒரு மாதத்தில் சராசரியாக 1000 வரை கொல்லப்படுவது – இவையெல்லாம் வங்காள மாநிலத்தில் பார்ப்பன இந்து மதம் ஏற்றி வைத்த மணி மகுடங்கள்.

இத்தகைய பார்ப்பன ஒடுக்கு முறைகளை ஒழிக்க முகலாயப் பேரரசர்களும், முசுலீம் குறுநில மன்னர்களும் பெரிதும் முயன்றாலும் வெற்றி பெறவில்லை. பின்னர் மிஷனரிகளின் முயற்சியாலும், கிறித்தவக் கல்லூரிகளில் பயின்ற இராஜாராம் மோகன்ராய் போன்ற இந்து அறிவாளிகளின் போராட்டத்தினாலும் ஆங்கிலேய அரசு தடைச் சட்டங்களைக் கொண்டு வந்தது.

இனி, இந்து மதவெறியர்கள் அபாயச் சங்கு ஊதும் வடகிழக்கு மாநிலங்களைப் பார்ப்போம். அஸ்ஸாமும் அதைச் சுற்றியுள்ள 6 மாநிலங்களும் அடங்கிய வடகிழக்குப் பகுதி ஏனைய இந்தியாவிலிருந்து இயற்கை, இனம், மொழி, பண்பாடு என பலவற்றிலும் வரலாற்று ரீதியாகப் பிரிந்தே காணப்படுகிறது. பிரம்மபுத்திரா, பாரக் நதிகளின் இரு பள்ளத்தாக்குகளும் இவற்றினைச் சுற்றி நெருக்கமான மலைகளும் இருக்கின்றன. மலைப் பகுதியில் மங்கோலிய இனப்பிரிவைச் சேர்ந்த பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இம்மக்கள் சீனா, திபெத் வழியாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பேயே குடியேறியவர்கள். பள்ளத்தாக்குப் பகுதியில் கலப்பின மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

காமரூபம் என்று வரலாற்றில் அழைக்கப்படும் (ஆரியர்களை எதிர்த்து நின்ற) இப்பகுதியை வேதங்கள் ‘கிராதர்கள், மிலேச்சர்கள் வாழும் நாடு’ எனக் குறிப்பிடுகின்றன. 13-ம் நூற்றாண்டில் பர்மிய மன்னரான அஹோமி இப்பகுதியைக் கைப்பற்றிய பின்னர், அவனது வம்சத்தின் ஆட்சி ஏறக்குறைய 6 நூற்றாண்டுகள் நீடித்தது. அஹோமி என்பதே பின்னர் அஸ்ஸாம் என்பதாக மாறிற்று. கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஆரியர்கள் அஸ்ஸாமில் குடியேற ஆரம்பித்தனர். பழங்குடி மக்கள் மலைப்பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். பார்ப்பனியத்தின் வர்ண – சாதிச் சமூகமும், அதை நடைமுறைப்படுத்தும் சட்ட திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டன. அஹோமி வமிச மன்னர்களும் வைணவ இந்து மதத்தைத் தழுவிய பின்னர் ஆரியமயமாக்கம் முழு வேகத்தில் நடந்தேறியது. தாந்திரீகம் எனப்படும் மந்திர வழிபாடும், நரபலி, நிர்வாண பூஜை, சக்தி வழிபாடு எனக் கொடூரமான சடங்குகள் வெறியாடும் பிரதேசமாக அஸ்ஸாம் மாறியது.

Buddhaஇதை எதிர்த்து வந்த புத்த மதம் நெடுங்காலம் செல்வாக்குடன் நீடித்தது. வடகிழக்கில்  வர்ண சமூகம் குலைக்கப்பட்டு, புத்த மதம் வந்தது பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் வருத்தப்பட்டார். அதனால்தான் வங்கத்தில் இசுலாமும், வடகிழக்கு மாநிலங்களில் கிறித்தவமும் எளிதில் பரவமுடிந்தது என்று குமுறுகிறார் கோல்வால்கர். இன்றும் வடகிழக்கு மாநில இந்துக்களிடம், ஏனைய இந்திய இந்துக்கள் மத்தியில் காணப்படும் அசமத்துவச் சடங்குகள், இறைச்சி உண்பதில் பேதங்கள், கீழ் சாதியிடம் உணவு பெறுவதைத் தீட்டாகக் கருதுவது போன்ற பார்ப்பனப் பண்புகள் பெருமளவில் கிடையாது. காரணம் இம்மக்களிடம் மரபுரீதியாக இருந்து வந்த பழங்குடியினப் பண்பாடுதான்.

1825-ம் ஆண்டு பர்மியர்களை ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு வடகிழக்கு மாநிலங்களில் காலனி ஆதிக்கம் தொடங்கியது. அப்போதிருந்து கிறித்தவ மிஷனரிகளின் தொண்டுப் பணியும் தொடங்கியது.  பல்வேறு பழங்குடியின மொழிகளுக்குக் கிறித்தவப் பாதிரிகள் ரோமானிய வரி வடிவம் கொடுத்தனர். தாய்மொழிக் கல்விக்கும், ஏனைய மருத்துவ பொருளாதார முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்கு முக்கியமானதாகும். இதனாலேயே கேரளாவிற்கு அடுத்து இலட்சக்கணக்கான மக்கள் இங்கே மதம் மாறினர்.

காலனிய ஆட்சியில் ஒன்றுபட்ட அஸ்ஸாமாக இருந்த வட கிழக்குப் பிரதேசம் வெள்ளையர்கள் வெளியேறிய பிறகு அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர், மேகாலயா என ஏழு மாநிலங்களாக இந்திய அரசால் பிரிக்கப்பட்டன. இவற்றில் 3 மாநிலங்கள் கிறித்தவப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கின்றன. ஏராளமான பழங்குடியினப் பிரிவுகளையும், மொழிகளையும், வளர்ச்சி பெறாத தேசிய இனங்களையும் கொண்டிருக்கும் இம்மாநிலங்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கி இருப்பதற்குக் காரணம் இந்திய அரசுதான்.

படிக்க :
♦ கேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா ?
♦ இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! – மக்கள் அதிகாரம் கண்டனம் !

வரலாற்று ரீதியாக இந்தியாவிலிருந்து பிரிந்திருந்த இம்மக்கள் இன்று  தமது வாழ்வுரிமைக்காக இந்திய அரசை எதிர்த்துப் போரிடுகிறார்கள். இந்தப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் அஸ்ஸாம் – போடோ, குக்கி – நாகா என ஒன்றுக்கெதிராக மற்றொரு இன மக்களை நிறுத்தி மோதவிட்டது இந்திய அரசின் சதி வேலையாகும்.  தற்போது அசாம் விடுதலைக்காகப் போராடி வரும் ‘உல்ஃபா’ இயக்கம் பெரும்பான்மையாக இந்துக்கள் அடங்கிய ஒரு குழுதான். அதனால் இவ்வமைப்பை இந்து மதவெறியர்கள் அங்கீகரிக்கிறார்களா என்ன? அவர்களை அடக்க கூடுதல் இராணுவத்தைத்தானே அனுப்புகின்றார்கள். எனவே வடகிழக்குப் பிரச்சினைகளுக்குக் கிறித்தவ மத மாற்றம் காரணமல்ல.

இந்தியாவில் மதமாற்றம் செய்ய வந்த மிஷனரிகளுக்கும் அவர்தம் நாடுகளுக்கும் ஆதிக்கம் செய்யும் நோக்கம் இருந்தது உண்மையே. ஆனால், மக்களோ, பார்ப்பனிய சாதிக் கொடுமைகளிலிருந்து விடுபடவே மதம் மாறினார்கள். பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியம் மறுத்த கல்வியைக் கிறித்தவம் கொண்டு செல்ல முயன்றது. அசாமி, வங்க மொழி, தமிழ், ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தேசிய மொழிகளில் முதன் முறையாகப் பள்ளிகளும், கல்லூரிகளும் நிறுவப்பட்டன. 18-ம் நூற்றாண்டிலேயே பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்காக கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. அச்சகங்களும், வட்டார மொழி நூல்களும்  –  பைபிளும் வெளியிடப்பட்டன. நவீன வங்க இலக்கியம் தோன்றுவதற்கு மிஷனரிகளே காரணமாயின. வீரமாமுனிவரும், பெர்க்லி பாதிரியாரும் தமிழுக்குச் செய்த தொண்டு அளவிடற்கரியது. ஆங்கில – வட்டார மொழி அகராதிகள் வெளியிடப்பட்டன. இன்றும் இந்திய அளவில் 15 சதவீத பள்ளி மாணவர்களும், 10 சதவீத கல்லூரி மாணவர்களும் கிறித்தவ நிறுவனங்களில்தான் படிக்கின்றனர். 15% மருத்துவச் சேவையும் கிறித்தவ மருத்துவமனைகளால்தான் இப்போதும் அளிக்கப்படுகின்றது.

இப்படி கல்வி, வட்டார மொழி வளர்ச்சி, சுகாதாரம், மருத்துவம், சிறு தொழில்கள் எனப் பல்வேறு சேவைகள் மூலம் கிறித்தவம் மக்களைக் கவர்ந்தது. சூத்திரரும், பஞ்சமரும் தங்களை முதன் முதலில் மனிதர்களாக மதித்தவர்களைக் கண்டனர்.

இருப்பினும் இந்திய மக்களைப் பெருமளவில் மதம் மாற்றுவதில் கிறித்தவம் தோல்வியுற்றது. பார்ப்பனியத்தின் சகல நோய்களையும் தீர்க்கும் வீரிய மருந்து பைபிளிடம் இல்லை. அதாவது பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை மிஷனரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனாலேயே இந்தியக் கிறித்தவ மதம் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டு சாதிய அமைப்பையும் ஏற்றுக்கொண்டது.

1606-ம் ஆண்டு, மதுரையில் திருமலை நாயக்கன் ஆண்ட காலத்தில் மதப்பிரச்சாரம் செய்ய வந்தார் நொபிலி என்ற பாதிரியார். அவர் தன்னை பிரம்மா அனுப்பிய பார்ப்பனனென்றும், தன்னுடன் 5-வது வேதத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் கூறிக்கொண்டார். அதன் மூலமே பார்ப்பன மேல் சாதியினர் உள்ளிட்டு ஒரு சிலரை மதம் மாற வைத்தார். மதப்பிரச்சாரம் செய்ய அனுமதியும் பெற்றார். தமது சாதியச் சமூகச் சுரண்டலுக்கும் – ஆதிக்கத்திற்கும்  கிறித்துவ மதம் தடையில்லை என உணர்ந்த பிறகே பார்ப்பன மேல் சாதியினர் இந்தியாவெங்கும் கிறித்தவ மதமாற்றத்தை ஓரளவிற்கு அனுமதித்தனர்.

மேலும் மிஷனரிகளின் கல்வி – ஏனைய தொண்டுப் பணிகள் மூலமாக இந்து மதத்தின் ஆதிக்க சாதிப் பிரிவே கணிசமான ஆதாயங்களைப் பெற்றது. இவ்வாறு காலனியாதிக்கத்தின் சலுகைகளைப் பெற்று பிழைப்புவாதிகளாக மாறியதும் இவர்களே. இன்றும் நாடெங்கும் உள்ள செயின்ட் ஜோசப் – பீட்டர்ஸ் – ஜான்ஸ் – லயோலா போன்ற மிகப் பிரபலமான கிறித்தவக் கல்லூரிகளில் படித்துப் பயனடைபவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பன ‘மேல்சாதி’ மேட்டுக்குடியினர்தான். அவ்வளவு ஏன், இன்று இந்து மதவெறியர்களின் பிரபலமான தலைவர்கள் பலரும் கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர்களே!

இவையெல்லாம் கிறித்தவ மதமாற்றத்தின் இன்னொரு பக்கம். பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மதத்தைத் தழுவிய கேரளம் கூட இன்று தலைகீழாக மாறிவிட்டது. கேரளத்தில ‘புதுக் கிறிஸ்தியானி’ என்ற பெயர் மிகவும் பிரபலம். அதன் பொருள் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் என்பதே. மேலும் இவர்கள் சமீபத்தில் மதம் மாறியவர்கள், பரம்பரைக் கிறித்தவர்கள் அல்ல என்றும் ஒதுக்கப்படுகிறார்கள். அதேபோல ‘சிரியன் கிறித்தவர்’ என்ற ‘பரம்பரைக் கிறித்தவப் பிரிவு’ இந்துக்களின் நம்பூதிரி – நாயரைப் போன்ற ‘மேல்சாதி’ கிறித்தவர்களைக் குறிக்கும். இவர்களைத் ‘தம்புரானே, பணிக்கரே’ என்றுதான் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் விளிக்க வேண்டும். மேலும் தீண்டாமையும் வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் உண்டு. தேவாலயங்களில் கூட சாதிகளுக்குக்கேற்பத் தனி வழிபாடுகள், அல்லது தனித் தேவாலயங்கள் என்பதெல்லாம் சகஜமாகி விட்டன. தமிழ்நாட்டின் பல கிறித்தவ இடுகாடுகளில் தாழ்த்தப்பட்ட கிறித்தவப் பிணங்கள் நுழைய முடியாது.

எனவே, இந்தியாவில் எந்த மதமானாலும், எத்தகைய உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பால் செரிக்கப்படும் என்பது கிறித்தவத்தின் வரலாற்றில் உண்மையாகிவிட்டது.

அதேசமயம் இத்தகைய பார்ப்பன இந்து மதத்தின் சாதிய – தீண்டாமைக் கொடுமைகளே இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் இசுலாம் – கிறித்தவ மதங்களுக்கு மாறுவதற்குக் காரணமாகிறது. இவை இந்து மதவெறியர்களுக்குத் தெரியும். அதனால்தான் “சாதி – தீண்டாமையை ஒழிக்கிறோம், யாரும் மதம் மாறாதீர்கள்” என்று கூறுவதற்குப் பதில், மதமாற்றத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்.  அதனாலேயே கிறித்தவப் பாதிரிகள் எரிக்கப்படுவதும், தேவாலயங்கள் இடிக்கப்படுவதும் தொடர்கின்றது.

பார்ப்பனச் சாதிய அமைப்பு என்பது வெறும் சாதிய உணர்வு என்ற கௌரவம் சார்ந்த கருத்து மட்டுமல்ல; ஒரு சமூகப் பொருளாதாரச் சுரண்டல் நிறுவனமாக இருக்கிறது என்பதுதான் அதன் பலம். மதமாற்றத்திற்கெதிரான இந்து மதவெறியர்களின் வெறுப்பும் – திமிரும் அதிலிருந்துதான் பிறக்கிறது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

5 மறுமொழிகள்

 1. வழக்கம் போல் கிறிஸ்துவ பொய்களை வினவு பரப்பி கொண்டு இருக்கிறது. கிறிஸ்துவத்தில் இல்லாத பாகுபாடா ஹிந்து மதத்தில் உள்ளது ? கிறிஸ்துவ மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை வீட்டிற்குள் சேர்க்க வேண்டாம், அவர்களிடம் பேச வேண்டாம் என்று ஆரம்பித்து அவர்களை கொலை செய்தால் கூட தவறில்லை என்று நிலை கிறிஸ்துவத்தில் உள்ளது.

  கிறிஸ்துவமும் இஸ்லாம் மதத்தை போல் இந்தியாவில் கத்தி முனையில் பரப்பப்பட்ட மதங்கள் அதற்கு ஆதாரம் கோவா ஒரு சிறிய உதாரணம்… இன்றும் கூட ஹிந்துக்கள் மிசோரம் பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது, காஷ்மீரில் நடந்தது போல் மிசோரம் பகுதியிலும் கிறிஸ்துவர்கள் அல்லாதவர்கள் மிசோரமில் வாழ கூடாது என்று சொல்லி பல ஆயிரம் பேரை விரட்டி அடித்து இருக்கிறார்கள்.

  உங்களுக்கு ஒரு தகவல் செயின்ட் தாமஸ் தென் இந்தியாவிற்கு வரவில்லை என்பதை போப் அறிவித்து மிக சமீபத்தில் கேரளாவில் உள்ள பாதிரியார்கள் இதை சொல்லியிருக்கிறார்கள்.

  உங்களின் கிறிஸ்துவ மத பிரச்சார பொய்களை வேறு யாரிடமாவுது சொல்லுங்கள்.

  • //San Thome Basilica is the principal church of the Roman Catholic Archdiocese of Madras and Mylapore. In 1956, Pope Pius XII raised the church to the status of a Basilica Minor, and on 11 February 2006, it was declared a national shrine by the Catholic Bishops’ Conference of India. The San Thome Basilica is a pilgrimage centre for Christians in India. The church also has an attached museum.[1]//

   No one can beat you in lying.

   • ஒரு உதாரணம் சொல்கிறேன் கொஞ்ச நாட்களுக்கு முன்னாள் சபரிமலைக்கு அருகில் செயின்ட் தாமஸ் கொண்டு வந்ததாக ஒரு மர சிலுவையை கொண்டு வந்தார்கள். செயின்ட் தாமஸ் காலத்தில் கிறிஸ்துவம் என்ற மதம் கிடையாது
    அவர் காலத்தில் கிறிஸ்துவத்தின் சின்னமாக சிலுவை இருந்தது இல்லை இது பிற்காலத்தில் “கான்ஸ்டான்டின்” காலத்தில் வந்த ஒரு விஷயம். ஆனால் செயின்ட் தாமஸ் கொண்டு வந்ததாக சபரிமலையில் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    Pope Benedict XVI made the statement at the Vatican on September 27, 2006. Addressing the faithful during the Wednesday catechises, he recalled that St Thomas first evangelised Syria and Persia, and went on to Western India (Today’s Pakistan) there is no evidence that Saint Thomas came to South India.

    ஒரு சிலுவைக்கே இவ்வுளவு பொய் பித்தலாட்டங்களை செய்யும் கிறிஸ்துவர்கள், இந்தியாவிற்கே வராத செயின்ட் தாமஸ் (ஆதாரம் Pope Benedict XVI statement) சென்னை வந்தார் அவரை ஒரு பிராமணர் கொலை செய்தார் போன்ற கட்டு கதைகளை கட்டிவிடுவதா பெரிய விஷயம்.

    வெளிநாட்டுக்காரன் கொடுக்கும் பணத்திற்காக நம் நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டின் மீது வெறுப்பை கிறிஸ்துவர்கள் விதைத்து கொண்டு இருக்கிறார்கள்.

    வினவு கூட்டங்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் சேர்ந்து செய்யும் செயலுக்கு பெயர் “Cultural Genocide” இதுவும் ஒரு வகை பயங்கரவாதமே

 2. இந்துக்களிலே – தீண்டப்படாதவர்களைத் தவிர ஏனைய பிரிவினர் ‘வர்ணஸ்தர்கள்’ என்றும் – தீண்டப்படாதவர்கள் இதற்கு நேர் எதிராக ‘அவர்ணஸ்தர்கள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். அதேபோல் இந்துக்கள் சதுர்வனிகர் என்றும், தீண்டப்படாதவர்கள் நேர்மாறாக பஞ்சமர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இப்படி வேறுபாடுகளை கவனிப்பதற்கு ‘சொற்களே’ வழக்கத்தில் வந்துவிட்ட நிலையில், தீண்டப்படாதவர்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடியும்?
  இரு பிரிவினருக்கும் ‘பொது மதம்’ என்ற ஒரு மதம் இருக்குமானால், வழிபாட்டு முறைகளில் பொதுவான பங்கேற்பு இருக்க வேண்டுமல்லவா? அப்படி வழிபாட்டில் தீண்டப்படாத மக்களுக்கு பொதுவான பங்கேற்பு இல்லையே; தீண்டப்படாதவர்கள் ஒதுக்கப்படுகிறார்களே! அன்னியர்களைப்போல அவர்கள் வேறுபட்டுத் தானே நிற்கிறார்கள்?
  ஒரே கடவுளை கும்பிடுகிறவர்கள்; ஒரே வழிபாட்டு முறையைக் கொண்டவர்கள் எல்லாம் ஒரே சமுதாயம் என்றால், ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர்கள், இத்தாலியர் அனைவரும் ஒரே சமுதாயத்தினர் ஆகிவிடுவார்களா? இவர்கள் அனைவரும் ஒரே மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்; ஒரே கடவுளைக் கும்பிடுகிறவர்கள்தானே?
  இந்துவத்தின் அடிநாதமாக இருக்கும் இந்துமதம் ஜாதியையும் – தீண்டாமையையும், மதத்தின் கட்டளைகளாகப் பிரகடனப்படுத்துகிறது; ஜாதியும், தீண்டாமையும் பிரிவினையின் மறுவடிவங்கள் அல்லவா? ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமையை வலியுறுத்தும் ஒரு கலாச்சாரம் எப்படி – அனைத்து மக்களுக்குமான தேசியக் கலாச்சாரமாக இருக்க முடியும்?
  இந்தியாவில் ஜாதிகளில் சிறப்பு அம்சம் ஒதுக்கி வைத்தலும், ஒதுங்கி இருத்தலுமே; இந்தக் கோட்பாடு மத நம்பிக்கையோடு இணைக்கப்பட்டு, வாழ்க்கை நெறியாகவும் வலியுறுத்தப்படுகிறது; இத்தகைய கொடூரமான ஒரு மதம் – உலகில் வேறு எங்கும் கிடையாது.

 3. ஒரே கடவுளை கும்பிடுகிறவர்கள்; ஒரே வழிபாட்டு முறையைக் கொண்டவர்கள் எல்லாம் ஒரே சமுதாயம் என்றால், ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர்கள், இத்தாலியர் அனைவரும் ஒரே சமுதாயத்தினர் ஆகிவிடுவார்களா? இவர்கள் அனைவரும் ஒரே மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்; ஒரே கடவுளைக் கும்பிடுகிறவர்கள்தானே?
  இந்துவத்தின் அடிநாதமாக இருக்கும் இந்துமதம் ஜாதியையும் – தீண்டாமையையும், மதத்தின் கட்டளைகளாகப் பிரகடனப்படுத்துகிறது; ஜாதியும், தீண்டாமையும் பிரிவினையின் மறுவடிவங்கள் அல்லவா? ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமையை வலியுறுத்தும் ஒரு கலாச்சாரம் எப்படி – அனைத்து மக்களுக்குமான தேசியக் கலாச்சாரமாக இருக்க முடியும்?
  இந்தியாவில் ஜாதிகளில் சிறப்பு அம்சம் ஒதுக்கி வைத்தலும், ஒதுங்கி இருத்தலுமே; இந்தக் கோட்பாடு மத நம்பிக்கையோடு இணைக்கப்பட்டு, வாழ்க்கை நெறியாகவும் வலியுறுத்தப்படுகிறது; இத்தகைய கொடூரமான ஒரு மதம் – உலகில் வேறு எங்கும் கிடையாது.

Leave a Reply to Ram G பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க