ரசு பொது மருத்துவமனைகளில் வேலை செய்யும் மருத்துவ ஊழியர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யும் ஊழியர்களைப் பார்த்தால் இந்த சமூகத்திற்கு எப்படித் தெரிகிறது ? என்று தெரியவில்லை.

தமிழக சுகாதாரத்துறையில் தினசரி இரண்டு கோடி புறநோயாளிகளை கவனித்து வருகின்றன இந்த அரசு மருத்துவமனைகள். ஆறு மணிநேரத்தில் இரண்டாயிரம் நோயாளிகளைப் பார்த்து அவர்களுக்கு ஊசி தேவையென்றால் அதைப் போட்டு மருந்துகளைக் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.

பணியில் அதிக பட்சம் நான்கு ஐந்து மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்ப்பார்கள். ஒவ்வொரு மருத்துவனும் தினசரி முன்நூறு முதல் நானூறு நோயாளிகளை பார்த்தாக வேண்டும்.

rajiv_gandhi_GH
சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை.

இது நம் நாடு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் தொகை சார்ந்து ஒவ்வொரு மருத்துவர் மீதும் மருத்துவ ஊழியர் மீதும் விதிக்கப்பட்ட சுமை. இதை ஏற்று தான் உங்கள் ஊருக்கு ஊழியம் செய்ய ஒவ்வொரு அரசு மருத்துவத்துறை ஊழியரும் வருகிறார்கள்.

அரசு பொது மருத்துவமனைகளில் காலை 8 மணிக்கு புறநோயாளிகள் பிரிவு ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொண்டால் மதியம் 12 வரை இடைவிடாது மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருப்பார்கள். கண் சிமிட்டக்கூட நேரம் இருக்காது மக்களே.

ஒரு டீ குடிக்க…
சிறுநீர் கழிக்க நேரம் இருக்காது…

ஒரு நோயாளிக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால் பின்னால் வரிசையில் நிற்கும் பெருசுகள் இருமுவார்கள். பின் உறுமுவார்கள்.
“தம்பி.. பஸ்ஸு போயிரும். ஒருத்துருக்கே எம்புட்டு நேரம் பாப்பீக” என்பார்.

படிக்க:
அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ மகாராட்டிரம் : 483 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் !

கடகடவென பார்த்து அனுப்பவேண்டும். இதற்கு நடுவில் சாலை விபத்துக்களில் அடிப்படை எமர்ஜென்சி வந்தால் அதைப்பார்க்க ஒரு டாக்டர் செல்வார். பிரசவம் பார்க்க தாய்மார் வந்தால் அங்கே ஒரு பெண் மருத்துவர் சென்று விடுவார்.

இருவர் பார்க்க வேண்டிய 400 முதல் 500 புறநோயாளிகளும் மீதம் இருக்கும் இருவர் மீதுதான் சுமையாக ஏறும்.

நீங்களே சொல்லுங்கள். நாவரண்டு தொண்டை காய்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது இது போன்ற சமூக விரோதிகள் நடுவே வந்து மொபைல் போனை வைத்து படம் எடுத்து சீண்டினால் கோபம் வரத்தானே செய்யும். அந்த நியாயமான கோபம் தான் மருத்துவனுக்கும் வருகிறது. மருத்துவனும் ரத்தமும் சதையும் இருக்கும் மனிதன் தானே.

இதில் 24 மணிநேர ட்யூட்டி உண்டு…

அப்போது மது அருந்திவிட்டு வரும் குடிகாரர்கள் தரும் தொல்லை தனி. மிக மன அழுத்தம் நிறைந்த பணி சகோதரர்களே. எங்களையும் சகோதரர்களாக மதியுங்கள்.

அரசு மருத்துவமனைகளாவது தாலுக்காவில் உள்ள நல்ல ரோடு வசதி உள்ள ஊர்களில் இருக்கின்றன. அதை அடைவது ஓரளவு எளிது. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் கிராமங்களில் குக்கிராமங்களில் இருக்கின்றன.

Govt-Hospital
மாதிரிப் படம்

இவற்றை காலை ஒன்பது மணிக்கு அடைய ஒரு மருத்துவர் / நர்ஸ் / மருந்தாளுனர் காலை ஏழு மணிக்கெல்லாம் பேருந்தில் ஏறி உட்கார்ந்து வந்தடைகிறார் என்பதை அறிவீர்களா?

ஆக ஒன்பது மணிக்கு ட்யூட்டி ஆரம்பித்தாலும் அவரைப்பொறுத்த வரை ஏழு மணிக்கே கிளம்பி ஆக வேண்டும். அந்த கிராமத்திற்கும் காலை ஒரு பஸ் மாலை ஒரு பஸ் என்று தான் இருக்கும். மாலை செல்ல வேண்டிய பஸ்ஸை விட்டால் அவ்வளவு தான். ஊர் உலகை சுற்றி இரவு தான் வீடு போய் சேர முடியும்.

சரி அந்த ஊரிலேயே தங்கலாம் என்றால் பாதுகாப்பு குறைபாடு இருக்கும். நல்ல உணவகம் கூட இருக்காது. பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க பல கிலோமீட்டர் தூரம் உள்ள மாவட்ட தலைநகருக்கு அனுப்ப வேண்டும்.

இப்படியான இன்னல்களை தாண்டி ஒரு மருத்துவ ஊழியன் அந்த கிராமத்தில் பணி புரிவதை சேவை என்பதை விடுத்து வேறு வார்த்தைகளில் சுட்ட முடியுமா?

இதே கதைதான் கிராமங்களில் இருக்கும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும்.

ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைந்தபட்சம் 150 முதல் 400 புறநோயாளிகள் வரை வருவார்கள். இதைp பார்க்க இரண்டு மருத்துவர்கள் இருப்பார்கள். ஆக இவர்களும் 200 புறநோயாளிகளை பார்த்தாக வேண்டும். நடுவே அவசர சிகிச்சை மற்றும் பிரசவம் நடக்கும். அதையும் சேர்த்து கவனிக்க வேண்டும்.

பல கிராமத்தவர்களுக்கு நினைப்பு என்னவென்றால் “எங்க காச தான சம்பளமா வாங்குறீங்க? நாங்க தான உங்களுக்கு சம்பளம் தரோம்” என்று அறியாமையால் பேசுகிறார்களா? கர்வத்தில் பேசுகிறார்களா? தெரியாது.

ஆனால் அன்பர்களே ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும். அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் தருவது அரசாங்கம். அரசாங்கத்துக்கு பணம் கிராமங்களில் இருந்து மட்டும் வருவதில்லை. அரசாங்கம் கிராமங்களை வலுவாக்க பல திட்டங்களை கொண்டு வருகிறது. அதில் பள்ளிகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் அடங்கும்.

அதில் பணிபுரிய வரும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் ஊழியர்களும் உங்களுக்கு சேவை செய்ய வருகிறார்கள். அவர்களை நீங்கள் வரவேற்க வேண்டும். அன்பை வாரி வழங்க வேண்டும். ஆனால் இங்கு நிகழ்வதோ வேறு.

படிக்க:
இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! – மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ 5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ! பு.மா.இ.மு கண்டனம் !

உங்களுக்குத் தெரியுமா. இது போன்ற பிரச்சனைக்குரிய கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் நிரப்பப்படாமல் இருக்கும்.

அதன் ஆணிவேரை கவனித்தால் அந்த ஊர் மக்களின் எண்ண ஓட்டம் தவறாக இருக்கும். அந்த ஊருக்கு பணி செய்ய வரும் அரசு ஊழியனின் நிலையை ஏற்காமல் இவர்கள் எஜமானர்கள் போல் நடப்பது. மரியாதைக் குறைவாக நடப்பது போன்றவற்றால் அந்த ஊரில் யாரும் வந்து வேலை செய்ய ஆசைப்பட மாட்டார்கள்.

இது நிதர்சனமான உண்மை. மேலும் சில ஊர்களில் எப்போதும் மருத்துவ இடங்கள் காலியாகவே இருக்காது. ஆசிரிய இடங்களும் உடனே பூர்த்தி ஆகும். அதற்கு காரணம் அது அந்த ஊர் மக்கள் மற்றும் அவர்களின் சிறந்த பண்பாகத்தான் இருக்கும்.

doctor-service-in-rural-india-1

ஏனய்யா.. ஒரு அரசாங்க பெண் ஊழியர் அவர் டாக்டரோ நர்ஸோ, கிராம சுகாதார செவிலியிரோ, சத்துணவு பணியாளரோ, ஆசிரியையோ அவளது வீடு பிள்ளைகள் அனைத்தையும் விட்டு காலை எழுந்து தனது வீட்டு வேலைகளை முடித்து விட்டு உங்கள் கிராமத்தை தேடி பல கிலோமீட்டர் பேருந்தில் பயணம் செய்து வருவது உங்களுக்கு சேவை செய்யத்தானே..

உங்கள் ஊரில் பிரசவ மரணம் நிகழக்கூடாது.
உங்கள் ஊரில் யாரும் கொள்ளை நோய்க்கு மடியக்கூடாது.
உங்கள் ஊரில் யாரும் படிக்காத குழந்தைகள் இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே?

அவர்களை நீங்கள் வம்புக்கு இழுத்து அடித்து துன்புறுத்துவதன் மூலம் மிகப்பெரும் இழுக்கை உங்கள் ஊருக்கு சம்பாதிக்கிறீர்கள். உங்கள் அரசியலைக் கொண்டு வந்து மருத்துவமனைகளிலும் பள்ளிகளிலும் செய்யாதீர்கள்.

மருத்துவமனைகளும் பள்ளிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. உங்கள் சிற்றின்பத்திற்கு பல நல்லவர்கள் பயன்பெற்று வந்த சேவைகளை இழக்கிறீர்கள்.

கையில் மொபைல் போன் ஒன்று இருந்தால் போதும் உடனே காணும் அனைத்தையும் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் போட்டு வைரலாக்கலாம் என்று நினைக்கிறீர்கள். அதனால் உங்களுக்கே பெரிய பிரச்சனைகள் உண்டாகலாம் என்பதை மறக்காதீர்கள்.

அரசு மருத்துவமனைகளையும், அரசு பள்ளிகளையும் அதன் போக்கில் சிறப்பாக நடக்க விடுங்கள் உங்களுக்கு சேவை செய்யவே அவை நடக்கின்றன.

மருத்துவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக உங்கள் சமுதாயத்தில் சிலர் பொய் பித்தலாட்ட வேலைகளில் இறங்கினால் அவர்கள் உங்களுக்கு தீமையையே செய்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களைப்போன்ற சமூக விரோதிகளை அடக்கி வையுங்கள்.

அதுவே உங்கள் எதிர்கால சந்ததியினரின் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும், சுகாதாரத்திற்கும் நன்மை பயக்கும் செயல். அரசு மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் எந்த செயலையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

சமுதாயம் திருந்தும்…
தவறு செய்பவர்களை திருத்தும் என்று எதிர்பார்க்கிறேன்!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.