கேள்வி: //வணக்கம்…. நான் சில மாதங்களாக வினவை இணையத்தில் வாசிக்கும் வாசகன். அதே நேரம் இடதுசாரி சிந்தனையும் பெரியார் மற்றும் அம்பேத்கரிய சிந்தனைகளால் ஈர்க்கபட்டவன். கேள்வி என்னவெனில் தாங்கள் கூறும் பார்பனியம், சனாதன கோட்பாடு இவைகள் தான் இன்றும் இந்தியாவை ஆள்கிறதா? ஆம் எனில் எப்படி?

வலதுசாரி சிந்தனையற்ற நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி அதெப்படி 3% உள்ளவர்கள் 97% மக்களை ஆள முடியும்? அதுவும் அரசின் முழு அதிகாரமும் எப்படி இயலும்? நானும் என்னளவில் இட ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசு உயர் பதவிகளில் அவர்களின் ஆதிக்கம் என எவ்வளவோ கூறினாலும் திருப்தி இல்லை, அவருக்கும் எனக்கும்.

BJP போன்ற கட்சிகளுக்கு மட்டும்தான் இது பொருந்துமா. அல்ல காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளில் நிலை என்ன. இதேவேளையில் இடதுசாரி தலைவர்களும் அவாள்தான் என இன்னொரு பேச்சு எழுகிறது.. உண்மையா?

“என்றும் நினைவில் கொள், மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது..” என்ற மார்க்ஸின் தத்துவத்தின் மீதும் சமூக நீதியின் மேல் பற்றும் கொண்ட எனக்கு என் அறிவிற்கு எட்டியவரை குழப்பத்துடன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளேன். காத்திருக்கிறேன் பதிலுக்காக.//

– ஜி. ஆனந்தன்

ன்புள்ள ஆனந்தன்,

பார்ப்பனியம் என்பது சமூக அளவிலும், அரசு ரீதியிலும் செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம். அது நபர்களை வைத்து மட்டும் இயங்கவில்லை.

பார்ப்பனியம் என்பது படிநிலை சாதி – வர்க்க ஆதிக்கம் – தீண்டாமையையும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும், மொழி – இன ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்துகின்ற, போற்றிக் கொண்டாடுகின்ற சித்தாந்தம். இது வெறும் பண்பாடாக மட்டும் இல்லை, வரலாற்றில் சட்டமாகவே இருந்தது. இன்று நமது அரசமைப்பு சட்டத்திலும் தொடர்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு 1972-ம் ஆண்டிலேயே சட்டம் இயற்றியிருந்தாலும், அது தொடர்பாக பல வழக்குகள் போட்டிருந்தாலும் இன்று வரை அமலுக்கு வரவில்லை. கருவறையில் பார்ப்பனரல்லாத சாதியினர் நுழைந்து விடக்கூடாது என்பது இன்று வரையிலும் அமலில் இருக்கிறது. திருப்பதி வெங்கடசாலபதி, மயிலை கபாலிஸ்வரர், திருவரங்கம் ரெங்கநாதர், மதுரை மீனாட்சி, திருச்செந்தூர் செந்திலாண்டவர் என எந்தக் கோவிலிலும் சூத்திரர்களோ, பஞ்சமர்களோ பூசாரிகளாக மாற முடியாது. மாறாக அவர்களது குல தெய்வ வழிபாட்டுக் கோவில்களில் மட்டும்தான் பூசை செய்ய முடியும். இத்தெய்வங்களை சிறு தெய்வம், கறி சாப்பிடும் தெய்வம் என்று பார்ப்பனியம் இழிவுபடுத்தி வருகிறது.

archagar
அர்ச்சகர் பயிற்சி முடித்திருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி நியமனம் பெற இயலாது உள்ள மாணவர்கள்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவும், ஆலயத் தீண்டாமையை ஒழிக்கவும் 1993-ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது மக்கள் கலை இலக்கியக் கழகம். அந்தப் போராட்டம் நடந்த பிறகு தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். அந்தக் கோவிலின் கருவறையை சுத்தப்படுத்தும் பூசை நடத்தி  ’தீட்டுக் கழித்துக்’ கொண்டார்கள் பார்ப்பனர்கள். 2007-ல் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி, உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். தங்களுக்குப் பணி நியமனம் கோரி பத்து ஆண்டுகளாக அர்ச்சக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தி விட்டார்கள். ஒன்றும் பயனில்லை. ஏனெனில் இது பார்ப்பனியம் ஆளுகின்ற நாடு.

ஒரு பாதிரியாரோ, ஒரு மௌல்வியோ பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுவதில்லை. ஆனால் இந்து மதத்தில் மட்டும்தான் கடவுளுக்கு பூஜை செய்யும் வேலையை பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள். கூடவே மற்ற சாதியினர் தொட்டால் தீட்டு என்றும் பகிரங்கமாகவே கூறுகிறார்கள்.

படிக்க :
♦ ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !
♦ சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் !

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருந்தாலும் இன்று வரை அங்கே பெண்கள் செல்ல முடியவில்லை. பா.ஜ.க-வும் காங்கிரசும் போட்டி போட்டுக் கொண்டு அங்கே பெண்களை தடுக்க வேண்டும் என்று போராடுகின்றன. பார்ப்பன இந்துமதவெறி பக்தர்களோ ரவுடிகள் போல அங்கே வரும் பெண்களை தடுப்பதற்கு காத்திருக்கிறார்கள். இப்படி ஒரு நீதிமன்றம் தீர்ப்பே வழங்கிய பிறகும் பெண்கள் கோவிலுக்கு போக முடியவில்லை என்றால் இங்கே பார்ப்பனியத்தின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதறியலாம்.

அதே போன்று தாய் மொழி வழிபாடும் தடை செய்யப்பட்டு சமஸ்கிருதத்தில்தான் பூஜை, புனஸ்காரங்கள் நடந்து வருகின்றன. தமிழ் மொழி நீச பாசை என்று இழிவுபடுத்தப்படுகிறது. சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடுவதற்கு சிவனடியார் ஆறுமுக சாமியார் இறக்கும் வரை போராட வேண்டியிருந்தது. அந்தப் போராட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகமும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும் பல ஆண்டுகள் நடத்த வேண்டியிருந்தது. மக்கள் பேசும் மொழியாக இல்லாத சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கோடிகளைக் கொட்டிக் கொடுத்து பரப்பி வருகிறது. பல்வேறு பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருத துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு வருகிறது.

chidambaram-temple-arumugasami-05
தன் வாழ்நாள் முழுவதும் தில்லையில் தமிழ்பாட போராடி மறைந்த ஆறுமுகசாமி.

மதத்தை தாண்டி செல்வாக்குடன் இருக்கும் சங்கர மடங்கள் அனைத்திலும் பார்ப்பனர்களே சங்கராச்சாரிகளாக பட்டமேற்க  முடியும். அதே போன்று சைவ ஆதினங்களில் சைவ வேளாளர்களே ஆதீனங்களாக பதவியேற்க முடியும். இந்த மடங்களுக்கென்று பெரும் சொத்தும், விவசாய நிலங்களும் உள்ளன. சூத்திர, பஞ்சம மக்களோ இந்த நிலங்களில் வேலை பார்க்கும் தகுதியைத்தான் பெற்றிருக்கின்றனர். பார்ப்பனர்களும் இதர உயர்சாதியினரும் விவசாயம் வேலைக்காகாது என நிலங்களை சென்ற நூற்றாண்டிலேயே விற்று விட்டு, சென்னை, தில்லி, அமெரிக்கா என்று குடியேறி விட்டனர். மற்ற சாதி மக்கள்தான் வயிற்றில் அடித்தாலும் விவசாயத்தை விடமுடியாமல் இன்றும் வேலை பார்க்கின்றனர்.

பிறப்பின் அடிப்படையில் தொழில்களை வரையறுத்திருக்கிறது பார்ப்பனியம். அதன்படி இன்றுவரை அருந்ததி இன மக்கள் துப்புரவு தொழில்களையே மேற்கொண்டு வருகின்றனர். சலவை தொழிலாளி, முடிவெட்டும் தொழிலாளி, என்று சாதியின் அடிப்படையில் பணி செய்வது இன்றும் தொடர்கிறது. ஆகப்பெரும்பான்மையான தலித் மக்கள் விவசாயக் கூலிகளாகவே இன்றும் இருக்கின்றனர். இந்த வேலைகளில் ஒரிரு விதி விலக்குகள் தவிர பார்ப்பன, ஷத்ரிய, வைசிய சாதிகளைச் சார்ந்தோரை பார்க்க இயலாது.

இந்தியாவின் தொழில் துறை பெரும்பாலும் பார்ப்பன – பனியா சாதிகளைச் சார்ந்தோரால்தான் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று ஊடகங்களில் பெரும்பான்மை பார்ப்பன ஊடகங்களாகவும், பார்ப்பன கருத்தியல்களை பரப்பும் நிறுவனங்களாகவும் உள்ளன. வெள்ளி அன்று ஆன்மீக மலர் போடாத நாளேடு இல்லை. அதில் கிறித்தவ, முசுலீம் மதங்களுக்கு ஐந்து சதவீத இடத்தை ஒதுக்கிவிட்டு மற்றவை பார்ப்பன புராண புரட்டுக்களும், ஜோசிய பலன்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது இது சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்டு அனைத்து டி.வி சானல்களில் காலை நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

Rasi-Palanஅரசு விடுமுறைகளில் இந்துப் பண்டிகைகளுக்குத்தான் விடுமுறை அதிகம். தீபாவளி, அக்ஷய திரியை போன்ற பண்டிகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்பனைக்காக முன்னிலைப்படுத்துகின்றன. சந்திராயன் 2 வெற்றிகரமாக அமைவதற்கு மட்டுமல்ல, விடும் ஒவ்வொரு செயற்கை கோளுக்கும் திருப்பதி சென்று ஆசி வாங்குகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம். அதே போன்று கப்பற்படைக்கு ஒரு புதிய கப்பல் வெள்ளோட்டம் விடப்படுகிறது என்றால் தேங்காய் உடைத்து, ஐயர் பூசை செய்துதான் விடுகிறார்கள். சரஸ்வதி பூஜை என்று அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் அலுவலக ரீதியாகவே கொண்டாடுகின்றன.

பெண்களைப் பொறுத்தவரை பார்ப்பனிய பிற்போக்குத்தனங்கள் இன்றும் செல்வாக்கோடு அடிமைப்படுத்துகின்றன. ஆணவக் கொலை, குழந்தை திருமணம், வரதட்சிணைக் கொடுமைகள், காதல் மணம் மறுப்பு என்பதை ஆதிக்க சாதி இந்துக்கள் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். அதற்கான வழிகாட்டும் கோட்பாடுகள் கீதை, மனுஸ்மிருதியில் இருப்பது இன்றும் செல்லுபடியாகிறது.

கோமாதாவின் புனிதத்தை இந்திய அரசியல் சட்டமே வரையறுத்து வைத்திருக்கிறது. அதன்படி பசுவை எங்கேயும் கொல்ல முடியாது. வட இந்தியாவில் மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம்களும், தலித்துக்களும் தாக்கப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். கொலை செய்த குற்றவாளிகளோ நிரபராதிகளாக வரவேற்கப்படுகின்றனர். மாட்டு மூத்திரத்தை ஆய்வு செய்து சந்தைப்படுத்த நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. வட இந்தியாவில் இறைச்சி சாப்பிடுவதையே ஒரு குற்றம் போல ஆக்கி விட்டனர். இதனால் கால்நடை இறைச்சி தொழில் சரிந்து போயிருக்கிறது.

படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி !
♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

இது போக தலித்துக்களும், முசுலீம்களும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். ரோகித் வெமுலா, அக்லக், பெஹ்லுகான் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கட்டப் பஞ்சாயத்து செய்யும் அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய சதி என அப்பாவி முசுலீம்களை கைது செய்ய தேசிய புலனாய்வு முகமை தமிழகத்திற்கு விரைந்தோடி வருகிறது. ஆனால் இந்துமதவெறியர்கள் நடத்திய கொலைகள், கலவரங்களில் யாரும் தண்டிக்கப்படவில்லை. மட்டுமல்ல பிரக்யா சிங் தாக்கூர் எம்.பியாகவே தெரிவு செய்யப்படுகிறார். அசீமானந்தா விடுதலை செய்யப்படுகிறார்.

rohith vemulaஅதிகார வர்க்கத்தின் உயர் பிரிவில் பார்ப்பன – உயர் சாதியினரே கோலேச்சுகின்றனர். ரா, சிபிஐ, இராணுவம், பிரதமர் போன்ற பதவிகளுக்கு முசுலீம்கள் வரக்கூடாது என்பது எழுதப்படாத சட்டமாகவே பின்பற்றப்படுகிறது. முசுலீம்கள் அவர்களது மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப எந்த துறையிலும் இல்லை. பாராளுமன்றத்திலும் இல்லை.

இப்படி இந்தியாவின் 24 மணி நேர வாழ்விலும் பார்ப்பனியம் முழு செல்வாக்கு செலுத்துகிறது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பா.ஜ.க. தீவிர இந்துத்துவத்தை பின்பற்றுகிறது என்றால் காங்கிரசு மிதவாத இந்துத்துவத்தை பின்பற்றுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசு அரசுகள் இந்துத்துவ அஜெண்டாக்களை போட்டி போட்டுக் கொண்டு செயல்படுத்துகின்றனர்.

இடது சாரிகளைப் பொறுத்தவரை பிறப்பின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து பயிற்சி அளிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. மற்றபடி பார்ப்பனியத்தின் செல்வாக்கு என்பது இடதுசாரி பிரிவில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கை – திட்டத்தோடு தொடர்புடையது. சி.பி.எம்., சி.பி.ஐ கட்சிகள் பார்ப்பனியம் என்று வரையறுத்து செயல்படுவதில்லை. இந்து மதத்தில் நல்ல இந்து மதம் இருப்பதாக அவர்கள் இந்துக்களிடம் அரசியல் பேசுகின்றனர். பார்ப்பனிய பண்டிகைகளுக்கு சிறப்பிதழ் கொண்டு வருகின்றனர். மார்க்சிய லெனினிய இயக்கம் தான் பார்ப்பனியம் என்ற வரையறுப்பை வைத்து செயல்படுகிறது.

இந்தியாவில் சமூக மாற்றம் குறித்து செயல்பட விரும்பும் எவரும் நமது மக்களை அடிமைச் சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் பார்ப்பனியத்தை எதிர்த்து பல்வேறு துறைகளில் அரசியல், பண்பாட்டு போராட்டங்களை நடத்த வேண்டியிருப்பது முன் நிபந்தனையாக இருக்கிறது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்