பார்ப்பனியம் : சமத்துவத்தின் முதல் எதிரி

பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்கத்தைத் தகர்த்தெறி! என்ற முழக்க அட்டையைக் கையிலேந்தி நிற்கிறாள் ஒரு பெண். தனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்ட அந்த முழக்கத்தின்” வீரியம் என்னவென்று தெரியாமல் அதைக் கையில் பிடித்துக்கொண்டு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி. இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளி வந்தவுடனே அண்டம் கிடுகிடுத்தது.

ஒரு சிறுபான்மை சமூகத்தை இழிவுபடுத்திவிட்டதாகவும், துவேசத்தைப் பரப்புவதாகவும், யூதர்களைப் போல தங்களை வேட்டையாடுவதாகவும் முன்னாள் இன்போசிஸ் இயக்குநர் மோகன்தாஸ் பாய், ரிபப்ளிக் டிவியின் ஆலோசகர் சித்ரா சுப்ரமணியம், காங்கிரசின் மனிஷ் திவாரி ஆகியோர் முதல் கிரீன் கார்டு அம்பிகள் வரையிலான பார்ப்பன சர்வதேசியர்கள் எழுப்பிய கூச்சலுக்கு டிவிட்டர் பணிந்தது. அந்த அட்டைக்கும் டோர்சிக்கும் இடையிலான உறவு எத்தகையதோ அத்தகையதுதான் ஜனநாயகத்துக்கும் அமெரிக்காவுக்குமான உறவு என்ற கசப்பான உண்மையை வாஷிங்டனை வணங்கும் லிபரல்கள் விழுங்க வேண்டியதாயிற்று.

” பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்கத்தைத் தகர்த்தெறி!” என்ற முழக்க அட்டையைக் கையில் ஏந்தி நிற்கும் டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி.

பார்ப்பனிய எதிர்ப்பை சர்வதேசப் பிரச்சினையாக உயர்த்திய இந்தப் படத்தை உருவாக்கியவர் அமெரிக்காவில் பணிபுரியும் தென்மொழி சவுந்தரராசன். இவர் ஒரு தலித் பெண், அதிலும் தமிழ்நாட்டுப்பெண் என்பதற்காக நாம் பெருமைப்படுவோம். பார்ப்பனக் கும்பலின் எதிர்ப்பைக் கண்டு அவர் அசரவில்லை.

பார்ப்பனிய தந்தைவழி ஆதிக்கம் என்று கூறுவது ஒரு வன்முறை அல்ல. அது ஒரு உண்மை விவரம். பார்ப்பனிய ஒடுக்குமுறைக் கட்டமைப்பைப் பற்றி நாம் பேசுகிறோம். இந்த கட்டமைப்பினால் ஆதாயம் அடைபவர்கள், அதனை மறைத்துக் கொள்வதற்காக, தனிப்பட்ட பார்ப்பனர்கள் மீதான தாக்குதல்” என்று இதனை திசை திருப்புகிறார்கள். பல நூற்றாண்டுகளாக சலுகையை அனுபவித்த ஆதிக்க சாதியினர், சமத்துவம் என்று சொன்னாலே, அதனைத் தங்கள் மீதான அடக்குமுறையாக உணர்கிறார்கள்” என்று இதற்குப் பதிலளித்தார் தென்மொழி சவுந்தரராசன்.

பார்ப்பனியம் என்பது படிநிலை சாதி – வர்க்க ஆதிக்கம் – தீண்டாமையையும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும், மொழி – இன ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்துகின்ற, போற்றிக் கொண்டாடுகின்ற சித்தாந்தம். இது வெறும் பண்பாடாக இல்லை, சட்டமாகவே இருந்தது. நமது அரசமைப்பு சட்டத்திலும் தொடர்கிறது. அதில் சிறியதொரு மாற்றத்தைக்கூட அனுமதிக்க முடியாது என்றுதான் சபரிமலையில் கலகம் செய்கிறார்கள் பார்ப்பன பாசிஸ்டுகள்.

தென்மொழி சவுந்தரராசன்.

”தந்தைவழி ஆதிக்கத்தை தகர்ப்போம்” என்று மட்டும் சொல்லியிருக்கலாமே, எதற்காக பார்ப்பனிய” என்ற முன்னொட்டு?” என்று கேட்கிறார்கள் பார்ப்பன லிபரல்கள். இடைநிலைச் சாதிவெறியர்களையும், நகர்ப்புறப் பார்ப்பனர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு பார்ப்பன லிபரல்களின் இந்த ஆதங்கம் நியாயமானதாகவே தெரியும்.

பார்ப்பன, சத்திரிய, வைசிய குலப் பெண்களை நமது” வேதங்களும் சாத்திரங்களும் எவ்வளவு இழிவுபடுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளாதவரை, அட்டையில் எழுதிய முழக்கம்” தங்களை இழிவு படுத்திவிட்டதாகத்தான் அவர்கள் நம்பிக் கொண்டிருப்பார்கள்.

பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்கம்” குறித்து 1993-இல் உமா சக்ரவர்த்தி எழுதிய நீண்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கே மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறோம். (Conceptualising Brahmanical Patriarchy in Early India: Gender, Caste, Class and State, Uma Chakravarti, Economic and Political Weekly Vol.28, No.14 (Apr. 3, 1993), pp. 579&585)

பார்ப்பனியம்” என்று சொல்வதற்குக் கூச்சப்படும் பார்ப்பனரல்லாத ஜென்டில்மேன்களுக்கும், தங்களை சாதி உணர்வற்றவர்கள் என்று கருதிக் கொண்டிருக்கும் லிபரல் பார்ப்பன நண்பர்களுக்கும் இதனைப் படிக்கக் கொடுங்கள். ஒருவர் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டவராக இருப்பின், அவர் என்ன சாதியில் பிறந்திருந்தாலும் பார்ப்பனியம் என்பது அவருடைய பொது எதிரி. சமத்துவத்தை எதிர்ப்பவர் எனில், அவர் என்ன சாதியில் பிறந்திருந்தாலும் அவர் பூணூல் அணியாத பார்ப்பனரே என்பதைப் புரிய வையுங்கள்.

இனி, உமா  சக்ரவர்த்தியின் கட்டுரையிலிருந்து….

சாதி ஆதிக்கம், பாலின ஆதிக்கம் ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை. இவற்றின் அடிப்படையில்தான் பார்ப்பனிய சமூக ஒழுங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது… இந்து சமூகத்துக்கு மட்டுமே உரிய சாதிப் புனிதத்தை பேணுவதற்கும் தந்தை வழி மரபுரிமையை பராமரிப்பதற்கும் ஆதிக்க சாதிப் பெண்களை பாலியல் ரீதியாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பார்ப்பனியத்துக்கு மிகவும் அவசியமாக இருந்தது…

பெண்களின் புனிதத்தை பேணினால்தான் சாதிப் புனிதத்தை பேண முடியும்.  பூப்பெய்தல் சடங்குகள் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமும் இதுதான். சாதிப் புனிதத்தை கறாராகக் காப்பாற்றும் நோக்கத்துக்காகத்தான், ஆதிக்க சாதியினருக்கு, அதிலும் குறிப்பாக பார்ப்பன சாதியினருக்கு பால்ய விவாகம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது…

பெண்கள்தான் சாதியமைப்பின் நுழைவாயில்களாக கருதப்படுகிறார்கள். கீழ் சாதி ஆணின் பாலினக் கவர்ச்சியிலிருந்து மேல் சாதிப்பெண்களை காப்பாற்றுவதற்கான நிறுவனரீதியான ஏற்பாடு தேவைப்பட்டது. சாதிக்கலப்பை தடுக்க முடியவில்லையென்றால், சாதி அடிப்படையில் கட்டியமைக்கப்பட்ட சமூக ஒழுங்கு முழுவதும் நொறுங்கிச் சரிந்து விடும் என்று பார்ப்பன சாத்திரங்கள் அஞ்சின…

கீழ் சாதி ஆண்களும் மேல் சாதிப் பெண்களும் தமக்கு விதிக்கப்பட்ட நெறிகளை மீறும் காலம்தான் கலியுகம் எனப்படுகிறது. பகவத்கீதை இதைப்பற்றிப் பேசுகிறது. குடும்பங்கள் உடைகின்றன, சடங்குகள் மறக்கப்படுகின்றன, பெண்களின் புனிதம் கெடுகிறது. இந்த ஒழுக்கக்கேட்டின் விளைவாக சாதிகள் ஒன்றுகலக்கின்றன” (கீதை, ஐ, 41-44)

வேதகால சடங்குகளை விவரிக்கும் சதபத பிராமணம் எனும் நூல், தமது மனைவிமார்கள் வேறு ஆண்களுடன் போய்விடுவார்கள்” என்ற அச்சத்தை வெளியிடுகிறது. அப்படி கணவனைத் தவிர்த்து வேறொருவனுடன் உடலுறவு கொண்ட பெண்ணை தேவலோகத்தைச் சேர்ந்த வருணன் பிடித்து இழுத்து வந்ததாக” கூறுகிறது.  பெண், சூத்திரன், நாய், காக்கை ஆகியவை அனைத்தும் பொய்மை, பாவம் மற்றும் இருளின் வடிவங்கள்” என்று சித்தரிக்கிறது….

பெண்கள் எவனுடனும், எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானாலும் போகக்கூடியவர்கள். பாலியல் ரீதியாகவே அதுதான் அவர்களது இயல்பு. எனவே, தனது வாரிசுகள் தூய்மையானவர்களாக இருக்க வேண்டுமானால், கணவன்மார்கள் தமது மனைவியரை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்” என்கிறான் பார்ப்பனிய சமூக அமைப்பின் சித்தாந்த குருவான மனு…

ஆளும் வர்க்கத்தினர், நில உடைமையாளர்கள் மற்றும் புரோகித வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களின் பாலுணர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகத்தான் சாத்திர நூல்கள் பெரிதும் கவலைப்படுகின்றன….

இந்து பாரம்பரியம் : மதுராவில் கொண்டு தள்ளப்படும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அனாதரவான கைம்பெண்கள். (கோப்புப் படம்)

இருபிறப்பாளர்களான பார்ப்பன, சத்திரிய, வைசிய வருணத்தினருக்கு சேவை செய்வது என்பது கீழ் சாதியினருக்குரிய தருமம். கீழ் சாதியினரின் பிறவிக்குணம் அதற்குப் பொருத்தமாகவே இருக்கிறது. ஆனால், கணவனுக்கு விசுவாசமாக இருப்பது என்பது பெண்களுக்குரிய ஸ்த்ரீதருமம்.  ஆனால், பெண்களின் பிறவிக்குணமோ,  அவர்களை வேற்று ஆண்களை நோக்கி இழுக்கிறது”  என்கின்றன பார்ப்பன சாத்திரங்கள். (அதாவது சூத்திரர்களைக்கூட நம்பலாம்.  சொந்தப் பெண்டாட்டியை நம்ப முடியாது என்பதே இதன் பொருள்- மொர்)

எனவே, பெண்கள் மீதான பாலியல் ரீதியான கட்டுப்பாட்டை உத்திரவாதப்படுத்த அவர்களை ஒருங்கிணைந்த முறையில்  அடிமைப்படுத்தும்  ஏற்பாடு அவசியமாயிற்று.  இதற்கு 3 வழிமுறைகள் கையாளப்பட்டன.

முதலாவது, சித்தாந்த ரீதியான அடிமைத்தனம்.

பதிவிரதா தருமத்தைக் கடைப்பிடித்து வாழும் பெண்தான் சமூகத்தின் இலட்சியப்பெண்ணாக சித்தரிக்கப்பட்டாள். அதாவது கற்பு நெறி மாறாத பதிவிரதைதான் பார்ப்பனர்களால் வடிவமைக்கப்பட்ட தந்தை வழி சாதி – வர்க்க ஆதிக்க சமூகத்தின் இலட்சியப்பெண். ஒரு பெண் மறுபிறவியில் மோட்சம் அடைவதற்கான வழியே பதிவிரதையாக இருப்பதுதான்” என்று வகுக்கப்பட்டதால், பெண்களின் சொந்த இலட்சியமாகவே அது மாறியது. சீதை, சாவித்திரி, அனுசூயா, அருந்ததி போன்ற புராண நாயகிகளின் வாயிலாக கற்புநெறி பிறழாமையே  பெண்மையின் இலட்சியம் என்று நிலைநாட்டப்பட்டது…

இங்ஙனம், கற்பு நெறி என்பது பெண்ணுக்கான சித்தாந்த ரீதியான பர்தாவாகவும், பார்ப்பனிய சாதி-வர்க்க ஆதிக்க சமூக ஒழுங்கை பெண்ணின் ஒத்துழைப்புடன்  மறு உற்பத்தி செய்வதற்கான முகமூடியாகவும் தொழிற்பட்டது…

இரண்டாவது, வன்முறை.

வீட்டை விட்டு வெளியில் சுற்றும் பெண்ணை மூங்கில், சாட்டை அல்லது கையால் அவளுடைய பின்புறத்தில் அடிக்குமாறு” அர்த்தசாத்திரத்தில் கவுடில்யன் கூறுகிறான். பார்ப்பனக் கணவனை ஏமாற்றிவிட்டு வேறொருவனோடு சென்ற மனைவியை மாட்டுச் சாணத்தை தின்ன வைத்தும் சாட்டையால் அடித்தும் வழிக்கு கொண்டு வந்ததாக” ஜாதகக் கதைகள் விவரிக்கின்றன…

ஒரு கணவனால் தனது மனைவியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அது அவர்களது தனிப்பட்ட குடும்ப விவகாரமாக விடப்படவில்லை.  அந்தப் பெண்ணின் நடத்தை என்பது பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்க சமூக ஒழுங்கையே கேள்விக்குள்ளாக்குவதால், அத்தகைய பெண்ணை  தண்டிக்கும் அதிகாரமும், கட்டுப்படுத்தும் அதிகாரமும் மன்னனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இது மூன்றாவது வழிமுறை…

சந்தேகத்துக்கு இடமான சூழலில் வேற்று ஆணுடன் ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தால், அவளை ஊருக்கு நடுவில் வைத்து ஒரு சண்டாளனைக் கொண்டு . சாட்டையால் அடிக்கவேண்டும்” என்கிறது அர்த்த சாத்திரம். (சண்டாளன் – தீண்டத்தகாத ஆணுக்கும் உயர் வருண பெண்ணுக்கும் பிறந்தவன்)

கீழ் சாதியைச் சேர்ந்த ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணை, ஊருக்கு நடுவில் வைத்து நாய்களுக்கு தின்னக் கொடுக்குமாறு மன்னன் உத்தரவிடவேண்டும்” என்கிறான் கவுதமன் எனும் முனிவன்.  கீழ்சாதிக்காரனை உயிருடன் கொளுத்த வேண்டும் என்றும் மேல் சாதிப் பெண்களை நிர்வாணமாக்கி,  மொட்டையடித்து,  கழுதைமேல் ஊர்வலம் விடவேண்டும் என்றும்” கூறுகிறான் வசிட்டன்…

இத்தகைய நடத்தை கெட்ட” பெண்களை தண்டிப்பதன் வாயிலாக நிலவுடைமை உறவுகளையும் சாதிய ஒழுங்கையும் மன்னன் பாதுகாக்கிறான்.  பெண்ணின் தூய்மைதான் சாதித் தூய்மையைப் பாதுகாக்கிறது.  சாதித்தூய்மையின் வழியாக பார்ப்பனிய சமூக ஒழுங்கையும் பாதுகாக்கிறது…

படிக்க:
பிற்போக்கான பார்ப்பனியமும் பெண் கல்வி, கருத்துச் சுதந்திரம் கோரும் முதலாளியமும் முரணின்றி நீடிக்க முடியுமா ?
ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !

எனவே தந்தைவழி ஆணாதிக்கம்” என்பது வெறும் கருத்தியலாக மட்டும் நிலவவில்லை. இந்தியாவைப் பொருத்தவரை சாதி, வர்க்கம், அரசு ஆகியவை ஒரு நிறுவனக் கட்டமைப்பாக  ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கின. பெண்ணுக்கு எதிரான பாலின ஒடுக்குமுறை என்பதும் இந்தக் கட்டமைப்பின் வழியேதான் இயங்கியது…

இருப்பினும் பார்ப்பன தந்தைவழி ஆதிக்கத்துக்கு பெண்கள் தம் உளப்பூர்வமான ஒப்புதலை வழங்கிவிடவில்லை. பெண்களுக்கு எதிரான விரிவான விதிமுறைகளும், விதி மீறல்கள் குறித்த கதைகளும் இதையே காட்டுகின்றன. கட்டாயப்படுத்தித்தான் பெண்களைப் பணியவைக்க வேண்டும் என்ற சூழல் நிலவியதிலிருந்து, பார்ப்பனிய சித்தாந்தம் பெற்ற தோல்வியை நாம் புரிந்து  கொள்ள முடிகிறது.  அதே நேரத்தில் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் சாதி அமைப்பின் விழுமியங்களை  ஏற்றுக்கொண்டிருந்ததும் தெளிவாகத் தெரிகிறது…

பெண்களைப் பொருத்தவரை, அவர்கள் பாலின ஒடுக்குமுறைக்கு உள்ளான போதிலும், ஆதிக்க சாதிக்குரிய சலுகைகள் கிடைக்கப்  பெற்றதன் காரணமாக, சாதி அமைப்பை மறு உற்பத்தி” செய்வதற்கு அவர்கள் ஒத்துழைத்தார்கள்.  தீண்டத்தகாத சாதியினர் இருவரைக் கண்ணால் கண்டுவிட்ட இரண்டு மேல் சாதி பெண்கள்  உடனே தங்கள் கண்களைக் கழுவுவதற்கு ஓடியதாக” சொல்கிறது ஒரு ஜாதகக் கதை…

தங்களுடைய சொந்த அடிமைத்தனத்தையும் உள்ளடக்கிய பார்ப்பன தந்தை வழி ஆதிக்க சமூக கட்டமைப்பிற்கு ஒத்துழைப்பவர்களாக  பெண்கள் மாறிவிட்ட காரணத்தினால், அவர்களுடைய  பாலியல் தூய்மையைக் கண்காணிப்பது குறித்து பெரிதும் கவலைப்படுகின்ற சாத்திரங்களும் விதிமுறைகளும்   அவசியமற்றவையாகிவிடுகின்றன.

இன்று டிவிட்டரில் கொந்தளிக்கும் ஐ.டி. தயிர்சாதங்கள், சபரிமலையில் கொந்தளிக்கும் நாயர்குலப் பெண்கள் ஆகியோரின் மூளையிலும், பெற்ற பெண்ணையே கொலை செய்யத் துணியும் (நந்தீஷ்) சுவாதியின் அம்மாவுடைய மூளையிலும் சம்மணமிட்டு அமர்ந்திருப்பவர்கள் வசிட்டன், கவுதமன் போன்ற பிராம்மணோத்தமர்கள். அவர்களை சூத்திரர்கள் என்றோ, ஜிகாதிகள் என்றோ நாம் அழைக்க முடியாதல்லவா?

மருதையன்

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart