17/08/2021

பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களில் 24 பேர் அர்ச்சகராக நியமனம் !
சரியான அரசியல் தலைமை, தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !

பத்திரிகை செய்தி !

ஆலயத் தீண்டாமைக்கு எதிராக கோயிலின் உள்ளே சென்று வழிபடும் உரிமையைப் போராடிப் பெற்றதுபோல், கருவறைத் தீண்டாமையை ஒழிப்பதற்காக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து 1970-ல் தந்தை பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

அப்போது அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நாங்கள் சட்டம் இயற்றுகிறோம், நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் பெரியார் போராட்டத்தை ஒத்தி வைத்தார்.

இதன் விளைவாக தமிழக அரசு 1971-ம் ஆண்டு வாரிசுரிமைப்படி அர்ச்சகர்கள் பணி நியமனத்தை ஒழித்து, இந்து சமய அறநிலையச் சட்டத்தில் திருத்தம் செய்தது. இதற்கு எதிராக பார்ப்பனர்களும் மடாதிபதிகளும் இந்த சட்டத்திருத்தம் தங்கள் மத உரிமைக்கு எதிராக உள்ளது என காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

படிக்க :
♦ சாதி மட்டுமே ஒரே தகுதி – அர்ச்சகர் வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு !
♦ கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி!

1972-ல் இவ்வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, அர்ச்சகர் என்பவரும் கோயில் கூலி ஊழியர்தான். வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமன உரிமையை ஒழித்து, தமிழக அரசு இயற்றிய சட்டத்திருத்தம் செல்லும். அதேசமயம் கோயில் பூசகர் தெய்வ வழிபாட்டில் எவ்வளவு வல்லவராக இருந்தாலும் ஆகமங்கள் படி குறித்த இனத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். எனவே, கோயிலின் மரபு வழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட இனத்தைச் சேராத ஒருவர் சாமி சிலையைத் தொட்டால் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பதை அரசு கருத்தில் கொண்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என அறிவியலுக்குப் புறம்பாக, நயவஞ்சமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை பெரியார் “ஆபரேசன் சக்சஸ் நோயாளி மரணம்” என நுட்பமாக கண்டித்தார்.

2002-ம் ஆண்டு கேரளாவில் ஈழவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்க வழக்கத்தின் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டுதான் திமுக அரசு இந்து அறநிலையச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த 2006-ம் ஆண்டில் முதலில் அரசாணையும் பின்பு அர்ச்சகர் பணி நியமனத்தில் பழக்க வழக்கம் மரபு என்பதை ஒழிக்கும் வகையில் அவசர சட்டத்தையும் இயற்றியது. அப்போதும் மதுரையை சேர்ந்த பார்ப்பன ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் இந்த அவசர சட்டத்திற்கு எதிராக 1972 தீர்ப்பின் அடிப்படையில் தடை ஆணையை பெற்றது. இதனால் திமுக அரசு சட்டத் திருத்தத்தில் உள்ள முக்கிய பகுதியை விட்டுவிட்டு சட்டம் இயற்றியது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என 2006-இல் போடப்பட்ட அரசாணையின் படி அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டு 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி முடித்து 2008-ல் தீட்சையும் பெற்றனர். ஆனால், சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை அதையும் போராடித்தான் பெற்றனர். 2015-லேயே இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் 7 ஆண்டுகளாக இருந்த அதிமுக ஆட்சி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை குறித்து எந்தவித தெளிவான தீர்க்கமான முடிவு எடுக்காமலும் பிஜேபி கூட்டணியின் காரணமாகவும் கடைசி வரை தங்களுடைய ஆட்சியில் ஒரே ஒரு மாணவருக்கு அதுவும் ஆகம விதிக்கு உட்படாத ஒரு கோயிலில் மட்டுமே அர்ச்சகர் பணி நியமனம் செய்தது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் போராட்டம் !

அதன்பிறகு திமுக தனது தேர்தல் அறிக்கையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அர்ச்சகராக பணி நியமனம் வழங்குவோம் என்று அறிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் இப்பொழுது பார்ப்பனரல்லாதோர் இருபத்தி நான்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அர்ச்சகர் பணியினை வழங்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம்.

இந்த அர்ச்சகர் பணிநியமனம் என்பது தொடர்ச்சியான வரலாற்று ரீதியான போராட்டத்தின் விளைவே. 1920-களிலேயே தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான சமூக நீதிக்கான குரல் எழத் துவங்கியது. அதிலும் பெரியாரின் தீவிரமான பிரச்சாரமும் போராட்டமும் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக மக்களை தட்டி எழுப்புவதாகவும் பலத்த அடியாகவும் இருந்தது.

அதில் ஒன்றுதான் 1970-களில் அறிவித்த கருவறை நுழைவுப் போராட்டம். பெரியாருக்கு பின் 1970-களில் தமிழகத்தில் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தோன்றியபோது தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகவும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான முன்னெடுப்புகளை செய்தது.

ஆகவே உழைக்கும் மக்களின் மீதான கலாச்சார பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிரான போரட்டத்தினை முன்னெடுப்பதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகம் கட்டியமைக்கப்பட்டது. 90-களில் ம.க.இ.க-வின் அரசியல் தலைமை ஏகாதிபத்தியம் நமது நாட்டை கொள்ளையடிப்பதையும் அடிமையாக்குவதையும் நோக்கமாக கொண்டு அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்கத்தையும் இந்தியாவில் மதக்கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி இந்துக்களை ஒன்றுதிரட்டுவது இந்துராஷ்டிரத்தை அமைப்பது என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்ட இந்து மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலை முறியடிப்பது ஆகிய இரு பிரதான கடமையை உள்ளடக்கிய செயல்தந்திர முழக்கமாக மறுகாலனியாக்கத்தையும், இந்து மதவெறி பாசிசத்தையும் முறியடிப்போம் என  முன்வைத்தது.

இதனடிப்படையில்தான் ம.க.இ.க-வும் அதன் தோழமை அமைப்புகளும் மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள், போராட்டங்களை முன்னெடுத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் கலாச்சாரம் பண்பாடு சாதித் தீண்டாமை போன்றவற்றில் நிலவும் பிற்போக்கு விழுமியங்களையும், தனியார்மயம் தாராளமயக் கொள்கையின் மூலமான மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும் பார்ப்பன இந்துமத மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடுவதை தங்களுடைய முக்கிய கடமையாக உருவாக்கி அதற்கான கூர்மையான செயல்தந்திரத்தை வகுத்து, அதனடிப்படையில் செயல்படத் தொடங்கியது. அக்காலகட்டத்தில்தான் ஆர்.எஸ்.எஸ், சமூகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் அரசியல் சக்திகளாக உருவெடுத்தது.

நாம் அனைவரும் இந்துக்கள். வாருங்கள், ராமருக்கு கோயில் கட்டலாம் என்கிற ஆர்.எஸ்.எஸ்-ன் நயவஞ்சக கருத்துக்களை மக்கள் முன் அம்பலப்படுத்தும் விதமாக, “எல்லோரையும் இந்து என்கிறாயே எங்களை கருவறைக்குள் அழைத்துச் செல்ல தயாரா?” என கேள்வி எழுப்பியது ம.க.இ.க-வின் கருவறை நுழைவுப் போராட்டம்.

பெரியார் காலத்திற்கு பிறகு பார்ப்பனிய எதிர்ப்பு என்பது வலுவிழந்த நிலையில் ம.க.இ.க-வின் கருவறை நுழைவுப் போராட்டத்தை, கிராமங்களிலும் நகரங்களிலும் பிரச்சாரம், வெளியீடு, பாடல்கள் சுவரெழுத்து போன்ற வடிவத்தினூடாக வீச்சாக கொண்டு செல்லப்பட்டது.

மேலும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களையும் இணைத்து ம.க.இ.க தோழர்கள் ஆண்களும் பெண்களும் கருவறையில் நுழைந்து கருவறைத் தீண்டாமைக்கெதிரான ஒரு அரசியல் நடவடிக்கையாக மாற்றியதன் மூலம் உழைக்கும் மக்களை மதவெறியூட்டி மோதவிட்டு பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகத்தை கூர்மையாக அம்பலப்படுத்தியது.

பார்ப்பன, பண்பாட்டு ஆக்கிரமிப்பாக ஒடுக்குமுறையாக இருக்கக் கூடிய தியாகராஜ ஆராதனை விழாவில் ‘தமிழ் நீச பாசை’ என்ற மொழித் தீண்டாமையை எதிர்த்து “தமிழில் பாடு இல்லை.. தமிழ்நாட்டை விட்டு ஓடு” என்னும் முழக்கத்தின் கீழ் போராட்டம் நடத்தப்பட்டது.

பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு நிகழ்வாக தஞ்சையில் “தமிழ் மக்கள் இசை விழா” நடத்தப்பட்டு தமிழ் மக்களின் கலை இசை என்ற வடிவத்தினை தேர்வு செய்து ஆண்டுதோறும் திருவையாறு தியாகராஜ ஆராதனை என்ற பார்ப்பன மேலாதிக்க கலாச்சாரத்தை அவர்கள் நிலைநிறுத்த முயற்சிக்கின்ற ஒவ்வொரு ஆண்டிலும் அதற்கு எதிராக உழைக்கும் மக்களுடைய கலைகளாக தமிழ் மக்களின் கலைகளாக பார்ப்பன எதிர்ப்பு அரசியல் பண்பாட்டு உள்ளடக்கத்தை நடத்துகின்ற நிகழ்வின் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் ஒரு பண்பாட்டு இயக்கமாக வளர்க்கப்பட்டது.

பிறகு 2002-ல் குஜராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் படுகொலையை எதிர்த்து இந்து சாம்ராஜ்ய ஆதிக்கத்திற்கான திட்டத்தை வீழ்த்துவோம் என்ற வகையில் “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நடத்தி இந்து பார்ப்பன மேலாதிக்கத்தை அம்பலப்படுத்தியது. இதன்மூலம் பெரியார் மறைவுக்கு பின் மங்கிப்போன பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வு ம.க.இ.க தொடர் போராட்டத்தின் மூலமாக மீண்டும் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது.

2006-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்துக்கு எதிராக தடையாணை வாங்கிய பிறகு, அது அப்படியே உறங்கிப்போன காலகட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்பான மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இணைந்து பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்யும் இந்த நடவடிக்கையை நாம் நடத்திக் காட்டினால் கருவறையில் இருக்கக் கூடிய தீண்டாமையை அகற்றுகின்ற முயற்சியின் துவக்கமாக அமைந்துவிடும் என்ற அரசியல் நோக்கத்தில்தான் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்றுதிரட்டி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமாக உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு திராவிட இயக்கங்கள் பெரியாரிய இயக்கங்கள் ஆன்மிகப் பெரியோர்கள் போன்றவர்களெல்லாம் இந்தக் கோரிக்கைக்காக பல்வேறு காலகட்டங்களில் குரல் கொடுத்து இருந்தாலும், இது ஒரு அரசியல் இயக்கமாகவும் அதேபோன்று உச்சநீதிமன்றத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக ஒரு இடை தலையீட்டு மனுவைத் தாக்கல் செய்து அந்த வழக்கிலும் வாதங்களை புரிகின்ற வகையில் உச்சநீதிமன்றம் முதல் நம்ம ஊர் தெரு வரைக்கும் அந்தப் போராட்ட இயக்கத்திற்கான கோரிக்கைகளை வலுப்படுத்தி சென்றதுதான் இந்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்.

இதற்காக தமிழகம் முழுக்க இருக்கக் கூடிய பல்வேறு அமைப்புத் தோழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு வெற்றிகரமான பணியாக மாற்றுவதற்கு வரலாற்றுப் பங்களிப்பை ம.க.இ.க, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து செய்தது. எனவே கருவறை நுழைவுப் போராட்டத்தில் இருந்து துவங்கிய ம.க.இ.க-வின் மகத்தான போராட்டம், அதனுடைய சரியான அரசியல் வழிகாட்டுதல் புரிதலோடு இயங்கியப் போராட்டமானது, இன்று ஒரு மிக முக்கியமான வரலாற்று வெற்றியை சாதித்துள்ளது. 24 பார்ப்பனரல்லாத அர்ச்சகர் மாணவர்கள் ஒரே நேரத்தில் இன்று கருவறைக்குள் நுழைந்து பார்ப்பன ஆதிக்கத்தை உடைப்பதற்கான பூசாரிகளாக மாறி உள்ளார்கள்.

படிக்க :
♦ சபரிமலை பெண்கள் நுழைவு : கேரளாவை கலவர பூமியாக்கத் துடிக்கும் பாஜக!
♦ மதுரை 1939-ம் ஆண்டு கோவில் நுழைவு : சாந்துப் பட்டருக்கு சாணி ஊற்றிய பார்ப்பனர்கள்!

ஒரு கம்யூனிச அமைப்பானது, உழைக்கும் மக்கள் மீதான இழிவினை எதிர்த்துப் போராடி அவர்களுடைய கலாச்சார பண்பாட்டு உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை இது உணர்த்தியது.

மேலும், இதன் ஊடாகத்தான் பார்ப்பன மேலாதிக்கத்திற்கான சாதி தீண்டாமையை அனைத்து இடங்களிலும் அகற்றுகின்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக ம.க.இ.க சாதித்துக் காட்டியிருக்கிறது. இந்த அடிப்படையில் ம.க.இ.க அரசியல் தலைமை பிரிவு, குறிப்பாக இந்த அரசியல் செயல்தந்திரத்தை வகுத்து பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தின் ஆதிக்கத்திற்கான அதனுடைய தொடர்ச்சியான இந்து சாம்ராஜ்ய கனவை தமிழகத்தில் கட்டமைக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து விதமான முட்டுக்கட்டைகளையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மக்கள் இயக்கமாக மாற்றுவதில் ஒரு மிகச்சிறந்த பங்காற்றி இருக்கிறது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை.

ஆனால் இன்று அந்த அரசியல் சித்தாந்த வேர்களை புறந்தள்ளிவிட்டு, ஒரு சிலர் தாங்கள் தான் முன்னின்று செய்தவர்களாக காட்டப்படுவது என்பது ஒரு அயோக்கியத்தனமான நாணயமற்ற நடவடிக்கை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆகவே, காவி இருள் சூழ்ந்த இந்நிலையில் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடித்து மக்களை பாதுகாக்கவும், தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றியை முழுமையான வெற்றியாக மாற்றவும் புரட்சிகர ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடுவோம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 9791653200

1 மறுமொழி

  1. தனிநபரை முன்னிலைப் படுத்தும் கும்பலுக்கு விழுந்த சரியான சவுக்கடி பதிவு.

    வாழ்க கூட்டு த்துவம்! வாழ்க அமைப்பு உணர்வு!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க