பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 08

மாஸ்கோ நகர்ப்புறத்தில் சிறு பயிற்சி விமானத்திடலின் பக்கத்தில் அமைந்திருந்தது விமானப் பயிற்சிப் பள்ளி. பரபரப்புமிக்க அந்த நாட்களில் அங்கே வேலை வெகு மும்மரமாக நடந்துகொண்டிருந்தது.

விமானப் பயிற்சிப் பள்ளி அலுவலகத் தலைவர் சிறுகூடான மேனியர். மிகப் பருத்த செம்முகத்தினர். வலிய உடற்கட்டு வாய்ந்தவர். உறக்கமின்மையால் அவர் கண்கள் சிவந்திருந்தன. மெரேஸ்யெவை அவர் எரிச்சலுடன் பார்த்த பார்வை, “நீ வேறு எதற்காக வந்து இழவு கொடுக்கிறாய்? எனக்கு இங்கே ஏற்கனவே கவலைகள் போதாதென்றா?” எனக் கேட்பது போல் இருந்தது. நியமனப் பத்திரமும் மற்றக் காகிதங்களும் அடங்கிய கட்டை அவர் அவன் கையிலிருந்து வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டார்.

லெப்டினன்ட் கர்னலின் வெகு நாட்களாக மழிக்கப்படாத பரந்த முகத்தில் சுருட்டை சுருட்டையாக மண்டியிருந்த பழுப்பு ரோமங்களைத் திகிலுடன் பார்த்தவாறு, “கால்கள் இல்லாததைக் குறைகாட்டி விரட்டிவிடுவார்” என்று நினைத்தான் மெரேஸ்யெவ். ஆனால் ஏக காலத்தில் இரண்டு டெலிபோன்கள் கணகணத்து அவரை அழைத்தன. ஒரு டெலிபோன் குழாயைக் காதுடன் தோளால் அழுத்திக்கொண்டு, இன்னொரு குழாய்க்குள் பதற்றத்துடன் ஏதோ கூறியபடியே மெரேஸ்யெவின் தஸ்தாவேஜுகள் மீது விரைவாகக் கண்ணோட்டினார் அவர். அவற்றில் ஜெனரலின் தீர்மானம் ஒன்றை மட்டுமே அவர் படித்தார் போலும். ஏனெனில் டெலிபோன் குழாய்களை வைக்காமலே அதன் அடியில் “மூன்றாவது பயிற்சிப் பிரிவு. லெப்டினன்ட் நவூமவுக்கு. சேர்த்துக் கொள்ளவும்” என்று எழுதினார். பிறகு இரு குழாய்களையும் வைத்துவிட்டுக் கனைத்த குரலில் கேட்டார்:

“சாமான் சான்றிதழ் எங்கே? ரேஷன் கார்டு எங்கே? இல்லையா? ஒருவரிடமும் இல்லை. தெரியும், தெரியும் எனக்கு இந்தப் பல்லவி. மருத்துவமனை, களேபரம், இதற்கெல்லாம் நேரமில்லை, அப்படித்தானே? ஆனால் நான் உங்களுக்கு எதைக் கொண்டு சாப்பாடு போடுவதாம்? அறிக்கை எழுதுங்கள். சான்றிதழ் இல்லாமல் பயிற்சிப்பிரிவில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.”

“உத்தரவு!” என்று விரைப்பாக நிமிர்ந்து சல்யூட் அடித்தவாறு சந்தோஷமாக முழங்கினான் அலெக்ஸேய். “போக அனுமதிக்கிறீர்களா?” என்று கேட்டான்.

“போங்கள்!” என்று கையை வீசி ஆட்டினார் லெப்டினன்ட் கர்னல். மறுகணமே அவரது கொடூரமான கர்ஜனை முழங்கிற்று: “நில்லுங்கள்! இது என்ன?” தங்கக் குறியெழுத்துக்கள் பொறித்த கனத்த தடியை – வஸீலிய் வஸீலியெவிச் பரிசளித்ததை – அவர் விரலால் சுட்டிக்காட்டினார். அறையிலிருந்து வெளிச் செல்லுகையில் உள்ளக் கிளர்ச்சி காரணமாக மெரேஸ்யெவ் அதை மூலையில் மறந்து விட்டு விட்டான். “இதென்ன பகட்டு? கைத்தடியுடன் வளைய வருவது? படைப் பிரிவு அல்ல இது, ஜிப்ஸி முகாம்! நகரப் பூங்காதான்: தடிகள் என்ன, பிரம்புகள் என்ன, சவுக்குகள் என்ன, சாட்டைகள் என்ன… விரைவிலேயே கழுத்தில் தாயத்து மாட்டிக் கொள்வீர்கள், விமானி அறைக்குக் கறுப்புப் பூனையைக் கொண்டு வருவீர்கள் – அதிர்ஷ்டத்துக்காக. இனி மேல் இந்தச் தப்புச் தவறெல்லாம் என் கண்ணில் படக்கூடாது! தெரிந்ததா, பகட்டாரே!”

“உத்தரவு, தோழர் லெப்டினன்ட் கர்னல்!”

மூன்றாவது பயிற்சிப் பிரிவின் பயிற்சி ஆசிரியர் லெப்டினன்ட் நவூமவின் பொறுப்பில் மெரேஸ்யெவ் ஒப்படைக்கப்பட்டிருந்தான். முதல் நாளே விமான நிலையத்தில் அவரைத் தேடிப் பிடித்தான் மெரேஸ்யெவ். நவூமவ் சிறுகூடான உடலினர். மிகவும் துடியானவர். அவருடைய தலை பெரியது, கைகள் நீண்டவை. பயிற்சித் திடலில் அவர் ஓடியாடிக் கொண்டிருந்தார். சின்னஞ்சிறு விமானம் பறந்து கொண்டிருந்த வானத்தை நோக்கியவாறு அதை ஓட்டியவனை வைது நொறுக்கினார்.

“கட்டுப்பெட்டி … கோணிப்பை… ‘சண்டை விமானியாக இருந்தானாம்’! கதை. யாரை ஏய்க்கப் பார்க்கிறான்?”

தன் வருங்காலப் பயிற்சி ஆசிரியர் முன் வந்து இராணுவ முறையில் முகமன் தெரிவித்த மெரேஸ்யெவின் வணக்கத்துக்கு விடையாக அவர் வெறுமே கையை ஆட்டிவிட்டு வானத்தைக் காட்டினார்.

“பார்த்தீர்களா? ‘சண்டை விமானியாம்’, வானச் சூறாவளி திறப்பு வெளியில் பூச்செடிபோல ஊசலாடுகிறான்….”

பயிற்சி ஆசிரியரை அலெக்ஸேய்க்குப் பிடித்துவிட்டது. கூட்டு வாழ்க்கையில் இந்த மாதிரிக் கிறுக்கர்களையே – தனது வேலையை உளமார விரும்புபவர்களையே – அவன் விரும்பினான். இத்தகையவர்களுடன் கலந்து பழகுவது திறமையும் விடாமுயற்சியும் உள்ளவனுக்கு எளிது. விமானமோட்டியவனைப் பற்றிச் சில கருத்துக்களை அவன் வெளியிட்டான். லெப்டினன்ட் இப்போது அவனைக் கால் முதல் தலைவரை கவனமாகப் பார்த்தார்.

படிக்க:
அசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி ! வேலை நாள் குறைப்பு சதி !
பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?

“என் பிரிவுக்கு வந்திருக்கிறீர்களா? குலப்பெயர் என்ன? எந்த விமானத்தை ஓட்டினீர்கள்? போரில் பங்கு கொண்டீர்களா? எவ்வளவு காலமாக விமானம் ஓட்டவில்லை?”

தன் பதில்களை லெப்டினன்ட் காது கொடுத்துக் கேட்டதாக அலெக்ஸேய்க்கு நம்பிக்கைப்படவில்லை. அவர் மறுபடி தலையை நிமிர்ந்து, முகத்தில் வெயில் படாமல் உள்ளங்கையால் மறைத்தவாறு முட்டியை ஆட்டினார்.

“மூட்டை தூக்கி!… பாருங்கள் அவன் எப்படித் திரும்புகிறான் என்று! அறைக்குள் நீர்யானை போல” என்றார்.

மறுநாள் பறப்பு தொடங்கும் நேரத்தில் வரும்படியும் உடனே “வெள்ளோட்டம்” விட்டுப் பார்ப்பதாகவும் அவர் அலெக்ஸேயிடம் சொன்னார்.

“இப்போது போய் இளைப்பாருங்கள். பயணத்துக்குப் பின் ஓய்வு கொள்வது பயனுள்ளது. சாப்பிட்டீர்களா? இல்லாவிட்டால் இங்கே குழப்பத்தில் உங்களுக்குச் சாப்பாடு போட மறந்து விடுவார்கள்…… அட குட்டிச் சாத்தான்! வா, வா, இறங்கு, உனக்குக் காட்டுகிறேன் ‘சண்டை விமானியை!’“ என்று பொரிந்துக் கொட்டினார்.

மெரேஸ்யெவ் இளைப்பாறப் போகவில்லை. டெப்போவில் செம்மானைக் கண்டு, தன் ஒரு வார புகையிலை ரேஷனை அவனுக்குக் கொடுத்து, கமாண்டருக்குரிய தோல்வாரைக் கொண்டு பக்கிள்ஸ் வைத்த தனிவகை அமைப்புள்ள இரண்டு இறுக்குவார்கள் தைத்துத் தரும்படி கேட்டுக் கொண்டான். கால்களால் இயக்கும் நெம்படிகளுடன் பொய்க்கால்களை இவற்றின் உதவியால் இறுக இணைத்துக் கொள்ளலாம் என்பது அவன் நோக்கம். பிறகு அவன் விமான நிலையம் திரும்பினான். இருட்டும் வரை, கடைசி விமானம் தன் இடத்திற்கு இட்டு வரப்பட்டு, தரையில் அடிக்கப்பட்டிருந்த முளைகளில் கயிற்றால் கட்டப்படும் வரை அவன் விமானப் பறப்புக்களைக் கவனித்துக் கொண்டிருந்தான் – வானின் தனித் தனிப் பகுதிகளில் வழக்கப்படி பயிற்சிக்காக “ஏறியிறங்குவது” அல்ல இது, தலைசிறந்த விமானிகளின் போட்டி என்பது போல. உண்மையில் ஒவ்வொரு பறப்பையும் அவன் உற்றுப் பார்க்கவில்லை. விமான நிலையத்தின் காரியக் கெடுபிடியையும் விமான எஞ்சின்களின் ஓய்வற்ற இரைச்சலையும் வானக் குழல்களின் அமுங்கிய அதிரொலியையும், பெட்ரோல், மசகெண்ணெய் ஆகியவற்றின் மணத்தையும் தனக்குள் நிறைத்தவாறு விமான நிலையச் சூழ்நிலைமையிலேயே இருந்தான். அவனது உள்ளமும் உடலும் உவகையில் திளைத்தன. மறுநாள் விமானம் மக்கர் பண்ணக்கூடும், தன் ஏவலுக்கு இணங்க மறுக்கக்கூடும், விபத்து நேரக் கூடும் என்று அவன் சிந்திக்கவே இல்லை.

மறுநாள் காலையில் அவன் பறப்புத் திடலுக்கு வந்த போது அது இன்னும் வெறுமையாக இருந்தது. சூடுபடுத்தும் விமான எஞ்சின்கள் இரைத்தன. உந்து விசிறிகளைச் சுழற்றி விட்ட மெக்கானிக்குகள் பாம்பை மிதித்தவர்கள் போல அவற்றிலிருந்து துள்ளி விலகினார்கள். வழக்கமான காலைக் குரலொளிகள் கேட்டன:

“செலுத்தத் தயாராகுக!”

“இணைப்பு ஏற்படுத்துக!”

“அப்படியே, இணைப்பு ஏற்படுத்தியாயிற்று!”

அலெக்ஸேய் இவ்வளவு முன்னதாக விமானங்களின் அருகே எதற்காகச் சுற்றுகிறான் என்று ஒருவன் அவனைத் திட்டினான். அலெக்ஸேய் வேடிக்கையாகப் பேசி அவனிடமிருந்து நழுவினான். குதூகலம் பொங்கிய ஒரு வாக்கியம் அவன் நினைவில் எதனாலோ பதிந்துவிட்டது. “இணைப்பு ஏற்படுத்தி ஆயிற்று, இணைப்பு ஏற்படுத்தி ஆயிற்று, இணைப்பு ஏற்படுத்தி ஆயிற்று” என்று மறுபடி மறுபடி அந்த வாக்கியத்தைத் தனக்குள் சொல்லிக் கொண்டான். முடிவில் விமானங்கள் துள்ளிக்கொண்டு பாங்கின்றித் தள்ளாடியவாறு இறக்கை ஊர்ந்து சென்றன. மெக்கானிக்குகள் அவற்றின் இறக்கைகளின் அடியில் கை கொடுத்துத் தாங்கியவாறு நடந்தார்கள். நவூமவ் அங்கே இருந்தார். தானே சுற்றிய சிகரெட்டை அவர் புகைத்துக் கொண்டிருந்தார். தமது பழுப்பேறிய விரல்களிலிருந்து அவர் புகை இழுத்து விடுவது போலத் தோன்றும் படி அவ்வளவு சிறியதாக இருந்தது சிகரெட்டு.

அலெக்ஸேய் இராணுவ முறைப்படி தெரிவித்த வணக்கத்துக்குப் பதில் வணக்கம் தெரிவிக்காமலே, “வந்து விட்டாயா? அதுவும் சரிதான். முதலில் வந்திருக்கிறாய், முதலில் பறப்பாய். ஒன்பதாம் எண் விமானத்தின் பின் அறையில் உட்கார். நான் இதோ வருகிறேன். பார்ப்போம், நீ எப்பேர்பட்டவன் என்பதை” எனக் கூறினார்.

சின்னஞ்சிறு சிகரெட்டை விரைவாகப் புகை இழுத்துக் குடித்து முடிப்பதில் முனைந்தார் அவர். அலெக்ஸேய் விரைவாக விமானத்துக்கு நடந்தான். ஆசிரியர் வருவதற்குள் கால்களை நெம்படிகளுடன் வார்களால் இணைத்து இறுக்கிக் கொள்ள விரும்பினான் அவன். ஆசிரியர் அருமையான ஆள்தாம், ஆனாலும் திடீரென்று அவர் பிடிவாதம் பிடிக்கலாம், பரீட்சித்துப் பார்க்க மறுக்கலாம், கூச்சல் கிளப்பலாம் – யார் கண்டது? வழுக்கலான இறக்கை மேல் தொற்றி, விமானி அறை விளிம்பைப் பதற்றத்துடன் பற்றியவாறு ஏறினான் அலெக்ஸேய். கிளர்ச்சி காரணமாகவும் பழக்கம் இன்மை காரணமாகவும் அவன் சறுக்கிச் சறுக்கி விழுந்தான். அறைக்குள் காலை எடுத்துப் போடவே அவனால் முடியவில்லை. குறுகிய முகம் கொண்ட, இளமை கடந்துவிட்ட மெக்கானிக் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்து, “குடித்திருக்கிறான், நாய்ப் பயல்” என்று எண்ணிக் கொண்டான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க