தலையங்கம்:

மரம் ஓய்வை நாடினாலும் காற்று தணிந்துவிடாது !

”நாடு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக”த் தனது ஆட்சியின் 100 நாள் சாதனை குறித்துத் தம்பட்டம் அடித்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. அத்தகைய மிகப்பெரிய மாற்றம் எது? அவற்றால் யாருக்குப் பலன் விளைந்திருக்கிறது?

மோடியின் இரண்டாம் தவணை ஆட்சி 100 நாட்களைக் கடப்பதற்குள்ளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தைக்கூட (உண்மையில் மூன்று சதவீதம்) எட்டிப்பிடிக்க முடியாமல் சரிந்துவிட்டது. இப்பொருளாதார மந்தத்தை முட்டுக் கொடுக்க அவரது அரசு அறிவித்திருக்கும் சலுகைகளோ கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியைத் தீர்க்கப் பயன்படுமேயொழிய, வேலையிழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட்ட தொழிலாளிகளுக்கு எள்ளளவும் பலன் அளிக்கப் போவதில்லை. தொழிலாளி வர்க்கத்தைக் கைதூக்கிவிடுவதற்கு மாறாக, தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலும் கைவிடும் வண்ணம் அச்சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முயலுகிறது, அவரது அரசு.

அந்நிய நிதி நிறுவனங்களும் உள்நாட்டு முதலீட்டாளர்களும் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியைத் தள்ளுபடி செய்திருக்கும் மோடி அரசு, கடன் சுமையில் தத்தளித்துவரும் விவசாயிகளுக்கு வட்டித் தள்ளுபடியைக்கூட அறிவிக்கவில்லை. நாடே திவாலானாலும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் இலாபத்திற்கு எந்தப் பங்கமும் வந்துவிடக் கூடாது என்பதுதான் மோடி விரும்பும் மாற்றம்.

இப்படிப்பட்ட மாற்றத்தை எதிர்க்கக்கூடிய அமைப்புக்களை மட்டுமல்ல, கருத்துக்கூறத் துணியும் தனி நபர்களைக்கூடப் பயங்கரவாதிகளாகக் குற்றஞ்சுமத்தக்கூடிய வகையில் சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தில் (ஊபா) மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது, மோடி அரசு.

இவை மட்டுமா? சாலை விதிகளை மீறுவோருக்கு 100 ரூபாய், ஐநூறு ரூபாய் என நூற்றுக்கணக்கில் அபராதம் விதித்துவந்த மாநிலப் போக்குவரத்துச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு, அதனிடத்தில் பத்தாயிரம் முதல் இலட்ச ரூபாய் வரை வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் மத்தியச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

3, 5, 8 வகுப்புக்களுக்குப் பொதுத் தேர்வு. மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு நீட் தேர்வு. மருத்துவராகி வெளியே வருவதற்கு நெக்ஸ்ட் தேர்வு. இப்படித் தரம் என்ற போர்வையில் தேர்வுக்கு மேல் தேர்வுகள் மாணவர்களின் மீது ஏவுகணைகளாக ஏவப்படுகின்றன.

இந்திய மருத்துவ கவுன்சில் ஒழிக்கப்பட்டு, அதனிடத்தில் தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கிறது, மைய அரசு. இனி பணக்கார வீட்டுக் குலக்கொழுந்துகள் மட்டும்தான் மருத்துவக் கல்வி பயில முடியும் என எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள்.

முத்தலாக் மணவிலக்கு முறையைத் தடை செய்ததோடு நில்லாமல், அதனை கிரிமினல் குற்றமாக்கியிருக்கிறது மோடி அரசு. முஸ்லீம் பெண்களைப் பாதுகாப்பதற்குத்தான் இம்மாற்றத்தைக் கொண்டுவந்திருப்பதாக நியாயப்படுத்துகிறார்கள், சங்கிகள். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறது!

குடிமக்களை 24 மணி நேரமும் வேவு பார்க்கும் வண்ணம் ஆதார் சட்டங்களும், இணைய தளச் சட்டங்களும் மாற்றியமைக்கப்படுகின்றன. மேலும், வன உரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றங்கள் அச்சட்டங்களின் நோக்கங்களையே சிதைத்துவிட்டன.

தேசியப் புலானய்வு முகமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றங்கள் மூலம் மாநில போலீசின் அதிகாரத்தை மத்திய அரசு வாரிச் சுருட்டிக் கொள்கிறது.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370- பிரிவைச் செயலற்றதாக்கியதோடு, தொலைத்தொடர்பு துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத்தரவு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் இராணுவக் கண்காணிப்பு ஆகியவை மூலம் அம்மாநில மக்களின் மீது அவசர கால நிலையைவிடக் கேடுகெட்ட கொடுங்கோன்மையை ஏவிவிட்டிருக்கிறது, மோடி அரசு.

♦ ♦ ♦

நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் ஊடகம் என்ற நான்கு தூண்களின் மீது ஜனநாயகம் நிற்பதாகக் கூறுவார்கள். பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றிருக்கிறது என்பது மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் பலவீனம் மற்றும் கூட்டுக் களவாணித்தனத்தாலும் நாடாளுமன்றம் இன்று இந்து மதவெறி பாசிஸ்டுகளின் மடமாகி விட்டது. அதிகார வர்க்கம் அதனின் கூஜாவாகிவிட்டது. சுதந்திரமானவை எனக் கூறப்படும் நீதித்துறையும் ஊடகமும் இம்மாற்றங்களுக்கெல்லாம் ஆற்றும் எதிர்வினையோ மிகக் கேவலமாக இருக்கிறது.

வெளிநாட்டுப் பத்திரிகைகள் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திக் கட்டுரைகளை வெளியிட்டுவரும்போது, இந்திய ஊடகங்களோ காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதாக மோடி அரசின் பொய்களை வாந்தியெடுக்கின்றன.

நீதித்துறையோ, ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை மோடி அரசு காலில் போட்டு மிதிப்பதை அலட்சியப்படுத்தி வருகிறது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், இளைஞர்களை விடுவிக்கக் கோரும் வழக்கில் அரசின் அடக்குமுறையைக் கேள்விக்குள்ளாக்காமல், தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டிருப்பவர்களைப் பார்ப்பதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் அரசின் ஜனநாயகப் படுகொலையைச் சகஜமாக்க முயலுகிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் முதலுமல்ல, முடிவுமல்ல. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ராமானியின் பதவி விலகல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்தளவிற்கு மோடி – அமித் ஷா கும்பலின் தலையாட்டிப் பொம்மைகளாக நடந்து வருகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தும் இன்னொரு சான்று.

370 ரத்து செய்ததையும் காஷ்மீர் மக்களின் கருத்துரிமையைப் பறித்ததையும் கண்டித்து சசிகாந்த் செந்தில், கண்ணன் கோபிநாதன் என்ற இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பதவி விலகியிருக்கிறார்கள்.

மோடி அரசால் பொய்வழக்கில் ஆயுள்தண்டனை விதித்துப் பழிவாங்கப்பட்டிருக்கும் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் சிறையிலிருந்து எழுதியிருக்கும் கடிதம் பாசிசக் கும்பலை எதிர்த்து நிற்போருக்கு ஒரு ஊக்க மருந்து.

நாற்பது நாட்கள் கடந்த பிறகும் காஷ்மீர் மக்களை மோடி – அமித் ஷா கும்பலால் பணிய வைக்க முடியவில்லை. தொலைபேசி தொடங்கி உயிர் காக்கும் மருந்துகள் வரை மறுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டபோதும், அவர்களது போர்க்குணம் அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கக் கோரி பஞ்சாபில் போராட்டம் நடக்கிறது. தேர்தல் கட்சிகள் கோழைத்தனமாகச் சரணடைந்துவிட்டாலும், எண்ணற்ற அறிவுத்துறையினரும் பத்திரிகையாளர்களும் துணிவுடன் மோடி- ஷா கும்பலை எதிர்த்து நிற்கிறார்கள்.

படிக்க:
வாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் !
தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி

பாசிச அடக்குமுறை முன்பு மனித மாண்பு தோற்றுப்போய்விடவில்லை என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுக்களாக உள்ளன. மரம் ஓய்வை நாடினாலும் காற்று அதனை விடுவதில்லை என்பது போல, பொருளாதார நெருக்கடியும் ஒடுக்குமுறைகளும் தவிர்க்கவியலாமல் மக்களைப் போராட்டக் களத்துக்கு இழுக்கும். அவர்களை வரவிடாமல் தடுப்பதற்குத்தான் எதிரிகள் அவநம்பிக்கையையும் அச்சத்தையும் பரப்புகிறார்கள். அவநம்பிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும், பாசிசம் என்பது ஆளும் வர்க்க வெற்றியின் வெளிப்பாடல்ல, தோல்வியின் வெளிப்பாடு.


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க