”எழுபது ஆண்டுகளில் காணாத பொருளாதார நெருக்கடி”  என்கிறார்  நிதி ஆயோக்கின் துணைத் தலைவர். ”மீள வழி தெரியாத பொருளாதார மந்தத்தை எதிர்நோக்கியிருக்கிறோம் என்றும்” முதலாளித்துவ பொருளியல் வல்லுநர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் மட்டுமின்றிக் கிராமப்புற –  நகர்ப்புற ஏழைகள் பயன்படுத்தும் மிகவும் அடிப்படையான நுகர் பொருட்களை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் லீவர், டாபர் போன்ற நிறுவனங்களும் விற்பனை வீழ்ச்சியைச் சந்திக்கின்றன.

பார்லே,  பிரிட்டானியா நிறுவனங்களின் 3, 5 ரூபாய்  பிஸ்கெட்டு பாக்கெட்டுகளின் விற்பனையே வீழ்ச்சியடைந்திருப்பது கிராமப்புற வறுமையின் கோரநிலையை எடுத்துக் காட்டுகிறது. ஆனால், விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட அமைப்பு சாராத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் மக்கள் சந்திக்கும் நெருக்கடியைப் பேசுவாரில்லை.  பன்னாட்டு, தரகு முதலாளிகளின் பிடியில் இருக்கும் ஆட்டோமொபைல்,  ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்பொருள் தொழில்களின் நெருக்கடிதான் அரசு மற்றும் ஊடகங்களின் கவனத்தைப் பெறுகிறது.

பொருளாதாரம் ஆண்டுக்கு 5% வளர்கிறது என்பது உண்மையல்ல. (சுமார் 3.5% தான் இருக்கும் என்பது முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியத்தின் மதிப்பீடு) முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் அதற்கேற்ப அதிகரிக்கவில்லை. ஏனென்றால் 94% மக்களுக்கு வேலை கொடுத்து, 45% உற்பத்தியை அளிக்கின்ற விவசாயம்  உள்ளிட்ட அமைப்பு சாராத தொழில்களை, மேற்சொன்ன வளர்ச்சிவீதம்  குறித்த புள்ளிவிவரம் கணக்கில் கொள்ளவே இல்லை. ரயில்வே, போக்குவரத்து, தொழில்துறை, வங்கி, இன்சூரன்சு போன்ற துறைகளை மட்டும் கணக்கில் கொண்டு கூறப்படும் இந்த வளர்ச்சி வீதம் உண்மையல்ல என்றும், கடந்த பல ஆண்டுகளாகவே கிராமப்புற நுகர்வின் வளர்ச்சி என்பது பூஜ்ஜியமாக தான் இருந்து வருகிறது” என்றும் கூறுகிறார் பிரபல பொருளாதார அறிஞர் பேரா.அருண்குமார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதத்தில் பாகிஸ்தானை விடப் பின்தங்கிய நிலைக்கு இந்தியாவைக் கொண்டு வந்த ஒரே பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் மோடி.

♦♦♦

நிலைமை இவ்வாறு இருக்க,  செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி,   ஐந்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை  3  இலிருந்து    5 ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்தப் போகிறேன், நாடு முழுவதும் 100 சுற்றுலா மையங்களை உருவாக்கப் போகிறேன்” என்று கூசாமல் சவடால் அடிக்கிறார்.  நாட்டு மக்கள்  ஒவ்வொருவரும்  ஆண்டுக்கு 15 சுற்றுலா மையங்களுக்காவது உல்லாசப்பயணம் போக உறுதி ஏற்கவேண்டும் என்று  மூன்று ரூபாய் ரொட்டி வாங்கமுடியாத இந்தியர்களுக்கு  அறைகூவல் விடுக்கிறார்.

தமிழக பா.ஜ.க. மாநிலச் செயலர் கே.டி.ராகவன், மூத்த பத்திரிகையாளர்கள் மாலன், கோலாகல சீனிவாசன் உள்ளிட்ட ”பொருளாதார மேதைகளுடன்” விவாதிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தவிடு தின்னும் ராசாவின் முறம் பிடிக்கும் மந்திரியான நிர்மலா சீதாராமன்,  எந்த நெருக்கடியும் இல்லை என்று ஆணவமாகச் சமாளித்து பார்த்தார்.  ரிசர்வ் வங்கி நான்குமுறை வட்டி வீதத்தைக் குறைத்துப் பார்த்தும் முதலீடுகள் வரவில்லை. வெளியேறின. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு முதலீடுகள் வீழ்ச்சியடைந்தன. பட்ஜெட் தில்லுமுல்லுகளை மறைப்பதற்கு ப.சிதம்பரம் கைது என்பன போன்ற திசைதிருப்பல்கள் அம்பலமாகின.

பொருளாதார நெருக்கடி குறித்து  ஆளும்  வர்க்கமே  கூவத் தொடங்கிவிட்டது. வேறு வழியின்றிச் சில சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.  அவை  ரொட்டி வாங்கமுடியாத இந்தியர்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான சலுகைகள் அல்ல. பட்ஜெட்டில் போடப்பட்ட சூப்பர் ரிச் வரி நீக்கம், கருப்பு பண முதலைகளுக்கு ஏஞ்செல் வரி ரத்து, சி.எஸ்.ஆர். மீறல் குற்றம் என்ற விதி நீக்கம், பொதுத்துறை வங்கிகள் மூலம் தாராளக் கடன் வழங்க ஏதுவாக 70,000 கோடி மறுமூலதன உதவி, கார்ப்பரேட் கடனுக்கான வட்டி குறைப்பு, அரசு இலாகாக்கள் புதிய கார்களை வாங்குதல் … என அனைத்துமே பன்னாட்டு நிதிமூலதனச் சூதாடிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான சலுகைகள்.

வரி வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, ரிசர்வ் வங்கியிலிருந்து 1.73 இலட்சம் கோடி ரூபாயை எடுக்க வேண்டிய நிலையில் அரசு இருக்க, ஏற்றுமதியாளர்களுக்கு 50,000 கோடி வரிச்சலுகை வழங்கியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். பெருநகரங்களில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி பிளாட்டுகள் சுமார் 7 இலட்சத்துக்கு மேல் வாங்குவார் இல்லாமல் கிடக்கும் நிலையில், கட்டி முடிக்காத கட்டிடங்களை முடிப்பதற்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு 10,000 கோடி வழங்கியிருப்பதுடன், அவர்கள் வெளிநாடுகளில் கடன் வாங்கிக் கொள்ளவும் அனுமதி வழங்கியிருக்கிறார். அரசின் அறிவிப்புகள் எதுவும் பொருளாதாரத்தை மீட்கப் போவதில்லை என்று கூறுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். கரடியே காறித்துப்பி விட்டாற்போல, ஆட்டோ மொபைல் நெருக்கடிக்கு ஒலா, உபரைக் காரணம் சொன்ன அம்மையாருக்கு மாருதி நிறுவனமே மறுப்பு வெளியிட்டு விட்டது.

♦♦♦

நீண்ட பொருளாதார மந்தத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறோம். பண மதிப்பழிப்பு, தவறாக அமல்படுத்தப்பட்ட  ஜி.எஸ்.டி. ஆகியவை சிறு, குறு தொழில்கள் அனைத்தையும் அழித்து விட்டன. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்று பெருமை பேசும் மோடி அரசு, விவசாயிகளுக்கு நியாய விலை கொடுக்காமல்   50% மக்களை வறுமையில் தள்ளியதன் வாயிலாகத்தான் அதைச் சாதித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார் மன்மோகன்சிங்.

மன்மோகன் சிங் கூறும் இந்தக் காரணங்களைப் பல வல்லுநர்களும் ஏறத்தாழ வழிமொழிகிறார்கள். இவை மட்டுமின்றி, கார்ப்பரேட்டுகளின் வாராக்கடன்களால் முடங்கிப்போன வங்கிகள், ஐ.எல்.எஃப்.எஸ். இன் மோசடிகள் தோற்றுவித்த திவால் நிலை காரணமாக ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறைகளில் ஏற்பட்ட முடக்கம் போன்றவையும் இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளன என்பது உண்மையே.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தவிர்த்திருந்தால், ஜி.எஸ்.டி. முறையாக அமல்படுத்தியிருந்தால், இந்த நெருக்கடியிலிருந்து தப்பியிருக்க முடியுமா என்பதுதான் நாம் விடை தேடவேண்டிய கேள்வி.

பணமதிப்பழிப்பு என்பது முன்யோசனையற்ற நடவடிக்கை அல்ல. விவசாயம், சிறு தொழில்கள் மற்றும் வணிகம் போன்ற பணப்பொருளாதாரத்தில் இயங்குகின்ற, அமைப்புசாரா தொழில்களை வங்கிப் பொருளாதாரத்துக்குள் இழுத்து வருவதற்கான நடவடிக்கையே அது. எண்ணற்ற தொழில்களை அழிவுக்குத் தள்ளும் என்று தெரிந்தும், வரி வலையை அகலப்படுத்தும் நோக்கத்துக்காகவும், முறைசாராப் பொருளாதாரம் என்பதே இல்லாமல் மொத்தப் பொருளாதாரத்தையும் சர்வதேச நிதிமூலதனத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே பணமதிப்பழிப்பு.  ஜி.எஸ்.டி.யின் நோக்கமும் அதுதான்.

மோடி அரசின் மேற்சொன்ன நடவடிக்கைகள் மக்களின் பொருளாதாரத்தை பேரழிவுக்குள் தள்ளுவதில் பெரும்பங்காற்றின என்பது உண்மையே. எனினும், இவற்றைத் தவிர்த்திருந்தால் நெருக்கடியே வந்திருக்காது என்பது உண்மையல்ல. இன்று ஏற்பட்டிருக்கும் வேண்டல் (demand) சுருக்கம் அல்லது மக்களின் வாங்கும் சக்தியின்மை என்பது அடிப்படையில் புதிய தாராளவாதக் கொள்கை தோற்றுவித்திருக்கும் விளைவு.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு என்ற அறிக்கையை கவுன்சில் ஃபார் சோசியல் டெவலப்மென்ட் என்ற அமைப்பு ஜூன் மாதம் வெளியிட்டுள்ளது.  2000 ஆண்டுகளில் சமூக ஏற்றத்தாழ்வு 6 மடங்கு அதிகரித்திருக்கிறது.  2015 ஆண்டில் மக்கட்தொகையின் மேல் தட்டில் இருக்கும் 1 விழுக்காடு கோடீசுவரர்கள் நாட்டின் செல்வத்தில் 22% வைத்திருந்தனர். அது 2018 58.4% ஆக அதிகரித்து விட்டது என்று கூறுகிறது அவ்வறிக்கை.

1990 புதிய தாராளவாதக் கொள்கை அமல்படுத்தப்பட்ட போது, செல்வம் முதலில் மேல்தட்டுப் பிரிவினருக்குத்தான் கிடைக்கும்; – அதன் பின் மெல்ல மெல்லக் கீழிறங்கி ஏழைகளுக்கும் கிடைக்கும் என்றும் மன்மோகன் முதலான பலரும் விளக்கமளித்தனர். ஆனால், செல்வம் கீழிருந்து மேலே செல்வதுதான் முதலாளித்துவ சுரண்டலின் விதி என்பதை மேற்சொன்ன புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன.

2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி வீதம் இப்போதைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருந்தது. இருப்பினும் அது மக்களுக்கு வேலைவாய்ப்பையோ வருவாயையோ அளிக்கவில்லை. மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டு ஆண்டுக்கு 2 கோடி வேலை என்று பொய் வாக்குறுதி அளித்து பதவியைக் கைப்பற்றினார் மோடி. ஸ்கில் இந்தியா,  ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா,  மேக் இன் இந்தியா என்பன போன்ற மோடியின் புதுப்புது பஞ்ச் டயலாக்குகள்தான் மக்களுக்குக் கிடைத்ததேயொழிய, வேலை கிடைக்கவில்லை.

மேக் இன் இந்தியா என்று மோடி கூறியபோது, உலகப்பொருளாதாரம் தேக்கத்தை சந்தித்து வருவதால், ஏற்றுமதிக்கான வாய்ப்பே கிடையாது, மேக் ஃபார் இந்தியா (இந்திய சந்தைக்காக உற்பத்தி செய்வது) ஒன்றுதான் தீர்வு” என்றும் ரகுராம்ராஜன்  கூறினார். எதார்த்த நிலையை மறுக்க முடியாமல், ஒரு முதலாளித்துவ பொருளாதாரவாதியிடமிருந்தே வந்த கருத்து இது என்பது மட்டுமல்ல, புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்விக்கும் அவரது கூற்று ஒரு சான்று.

இன்று கிராமப்புற பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு, விவசாய விளைபொருட்களின் விலையைக் குறைத்து விவசாயிகளைப் பட்டினி போட்டதுதான் காரணம் என்று மோடி அரசை இப்போது குற்றம் சாட்டுகிறார் மன்மோகன்சிங். விவசாயிகளின் ரத்தம் குடிப்பதென்பது புதிய தாராளவாதக் கொள்கை கூறும் வழிமுறைதான். அதனை ஈவிரக்கமின்றி மோடி அமல்படுத்துகிறார். விவசாய உள்ளீடு பொருட்களுக்கு மானியம் கூடாது, விளைபொருளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கூடாது, – விலையைச் சந்தை தீர்மானிக்க விட்டுவிடவேண்டும், அரசுக் கொள்முதல் கூடாது, விவசாய விளைபொருட்களுக்கு ஏற்றுமதி  இறக்குமதி கட்டுப்பாடுகள் கூடாது என்பன போன்ற உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைகளை கடந்த 30 ஆண்டுகளாக எல்லா கட்சி அரசுகளும் அமல்படுத்தியதன் விளைவுதான் இன்று நாம் காணும் விவசாயத்தின் அழிவு.

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தைத் தலைமுழுகிவிட்டு, விவசாயம், சிறு – நடுத்தரத் தொழில்களை ஆதாரமாக கொண்ட சுயசார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்காத வரையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை. ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியோ அல்லது மக்கள் எழுச்சி மூலம் நிறுவப்படும் மாற்று அதிகாரமோதான் இந்தத் திசையில் பொருளாதாரத்தைக் கொண்டு செல்ல இயலும்.

கிராமப்புற வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை காரணமாக அங்கிருந்து வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து தெருவோரங்களில் வசித்துவரும் குடும்பங்கள். (கோப்புப் படம்)

அத்தகையதொரு மாற்றுப்பாதையை மக்கள் சிந்திக்கவே விடாமல் தடுக்க, புதிய தாராளவாதக் கொள்கைக்கு மனித முகம் அணிவிக்கும் முயற்சிதான் நூறுநாள் வேலைத்திட்டம். பரம ஏழைகளான 5 கோடி குடும்பங்களுக்கு மாதம் 6000 ரூபாய் வழங்குவதாக சென்ற தேர்தலுக்கு காங்கிரசு அளித்த வாக்குறுதியும் சரி, விவசாயிகளுக்கு மோடி அறிவித்திருக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாயும் சரி, மரணப்படுக்கையில் கிடப்பவனுக்கு ஊற்றப்படும் உயிர்த்தண்ணீர் தானே தவிர, எழுந்து நடமாடச் செய்யும் நடவடிக்கைகள் அல்ல. இந்தத் திட்டங்கள் இவர்களது சொந்தச் சரக்குகளும் அல்ல.

விவசாயத்தின் அழிவு, நான்காவது தொழில்நுட்பப் புரட்சி மற்றும் ஆட்டோமேசன் காரணமாக உலகின் பெரும்பகுதி மக்களைத் தேவையற்றவர்களாக கழித்துக் கட்டும் திசையில் முதலாளித்துவ உற்பத்தி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலை தோற்றுவிக்கும் சமூகக் கொந்தளிப்பையும் பேரழிவையும் சமாளிப்பதற்கும், தனியார்மய கொள்கைகளை அமல்படுத்தும்போது வரும் மக்களின் எதிர்ப்புகளைத் தணிப்பதற்கும், அனைவருக்குமான அடிப்படை வருவாய் என்று (Universal Basic Income) மாதந்தோறும் ஒரு தொகையை வழங்கிவிட்டு, மற்றெல்லா மானியங்களையும் நிறுத்தி விடலாம் என்பது அரசுகளுக்கு ஐ.எம்.எப். கூறியிருக்கும் யோசனை.

ஆகவே, விவசாயிகளைக் காவு கொடுத்துத்தான் மோடி அரசு பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது என்று மன்மோகன் சிங் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. இதே கொள்கையைத் தனது அரசு பின்பற்றியதன் விளைவுதான் வரலாறுகாணாத விவசாயிகளின் தற்கொலைகள் என்பதை மட்டும் அவர் கூறவில்லை.

♦♦♦

நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய தங்கம் விலை, அரசு ஊழியர் ஊதியம் ஆகியவற்றோடு ஒப்பிட்டுத் தங்கள் விளைபொருட்களின் விலை ஏறாத அநீதி குறித்து விவசாயிகள் கதறுவதைப் பலரும் கேட்டிருப்போம். பெட்ரோல் முதல் எல்லா விலைகளும் விண்ணில் பறந்தாலும், விளைபொருளின் விலையைக் குறைத்து கிராமப்புறத்தில் பண வாட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம்தான் மொத்தப் பொருளாதாரத்தின் பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டு வருகிறது.

”விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை நிர்ணயம் செய்!” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

இதன் முதன்மையான நோக்கம் பன்னாட்டு நிதிமூலதனச் சூதாடிகளைத் திருப்திப்படுத்துவதாகும். உள்நாட்டு சந்தையை சார்ந்திராமல், அந்நிய மூலதனத்தையும் அந்நியச்செலாவணி இருப்பையும் அச்சாக கொண்டு சுழலும் இந்தியப் பொருளாதாரத்தின் கடவுளர்கள் அவர்கள்தான். பணவீக்கம் அவர்களது முதலீட்டின் உண்மை மதிப்பை வீழ்த்தும். அவர்கள் வெளியேறிவிடுவார்கள்.

அது மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரம் எனப்படுவது 10% மட்டுமே உள்ள நடுத்தர, உயர்நடுத்தர நுகர்வோரும் அவர்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் கார்ப்பரேட்டுகளும்தான். இவர்களுக்கு அஞ்சித்தான் அஞ்சாத சிங்கம் மோடி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த விவசாயிகளைப் பலி கொடுக்கிறார்.

பொருளாதார மந்தத்திலிருந்து விடுபடுவதற்கு பற்றாக்குறை பட்ஜெட் போட்டு, உள் கட்டுமானத் திட்டங்களை அரசே நிறைவேற்றினால், வேலைவாய்ப்பு பெருகி மக்களின் வாங்கும் சக்தி கூடி மந்தநிலை விலகும் என்று சில வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால், கஜானா காலி. வரி வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுகட்டத்தான் 1.73 இலட்சம் கோடியை ரிசர்வ் வங்கியி லிருந்து சூறையாடியிருக்கிறது மோடி அரசு.

பற்றாக்குறை பட்ஜெட் போட்டு திட்டங்களை அரசே நிறைவேற்றலாம். ஆனால், பற்றாக்குறை பட்ஜெட் போடக்கூடாது என்ற சர்வதேச நிதிமூலதனத்தின் விதியை அமல்படுத்த நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் (FR BMA) என்றொரு சட்டத்தையே இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது.

கார்ப்பரேட் முதலாளிகளின் வசதிக்காகக் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சிறுதொழில் மற்றும் வணிகத்திற்குப் பாதகமாக இருப்பதைக் கண்டித்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

மேற்சொன்ன விதியை மீறினால் சர்வதேசத் தரநிர்ணய நிறுவனங்கள் இந்தியாவின் தரத்தை குறைக்கும். பன்னாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவார்கள். அதனால்தான் மோடி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் எதுவும் மக்கள் கையில் காசைக் கொடுக்காமல், நிதிமூலதனச் சூதாடிகளுக்கு வாரி வழங்குபவையாக இருக்கின்றன.

ஆட்டோமொபைல் தொழிலிலும் சரி, நுகர்பொருள் உற்பத்தித்துறையிலும் சரி முதலாளிகளுடைய உற்பத்திப் பொருளின் அடக்கவிலையில் தொழிலாளர்களின் ஊதியம் என்பது அதிகபட்சம் 4% தான். தற்போதைய விற்பனை வீழ்ச்சியின் சுமையைத் தொழிலாளிகள் தலையில் வைத்துவிட்டு, தங்களது இலாபத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்கின்றனர். வேலையிழந்த தொழிலாளிகளுக்கு நிவாரணம் தருவதற்குப் பதிலாக, முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது அரசு. இந்தத் தலைகீழ் தர்க்கம் அரசின் எல்லா நிவாரண நடவடிக்கைகளிலும் பிரதிபலிப்பதைக் காணலாம்.

♦♦♦

த்தனை சலுகைகள் அளிக்கப்பட்ட பின்னரும் முதலீடுகள் வெளியேறுகின்றன. காரணம், இப்போது நாம் எதிர்கொண்டிருப்பது இந்தியாவுக்கு மட்டுமான நெருக்கடி அல்ல. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் சுழற்சி முறையில் வழமையாக  வரும் நெருக்கடியுமல்ல. மீளமுடியாத உலக முதலாளித்துவக் கட்டமைப்பு நெருக்கடி.

2008 தொடங்கிய இந்த நெருக்கடி எவ்வித மீட்சியையும் காணவில்லை. சப் பிரைம் நெருக்கடியின் போது ஜெர்மனி, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், இந்த முறை நெருக்கடி உலகு தழுவியதாக இருக்கும் என்று பல வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.

அதனால்தான் டாலரின் தாயகமான அமெரிக்க அரசின் நீண்டகாலப் பத்திரங்களை நோக்கி பன்னாட்டு முதலீடுகள் செல்கின்றன. வட்டி குறைவு என்றபோதிலும் அவற்றில் முதலீடுகள் அதிகரிப்பது (inversion of the yield curve) நீண்ட பொருளாதார மந்தம் வரவிருப்பதற்கான முன்னறிவிப்பு என்கிறார் சி.பி.சந்திரசேகர் (Frontline, sep. 13, 2019)

இங்கே மக்களிடம் நாம் காணும் வாங்கும் சக்தியின்மை ஒரு உலகுதழுவிய பிரச்சினை. உலகமயமாக்கம் காரணமாகத் தொழில்களும் சேவைகளும் மலிவான உழைப்பைத் தேடி ஆசிய நாடுகளுக்கு நகர்ந்து விட்டதால், மேலை நாடுகளிலும் ஏற்றத்தாழ்வும் வாங்கும் சக்தியின்மையும் அதிகரித்து, வேண்டல் இல்லாத காரணத்தால் பொருளாதாரங்கள் தேங்கி நிற்கின்றன. வீட்டு மனைகளில் மதிப்பைச் செயற்கையாக ஊதித் தனது தேக்கத்திலிருந்து தப்பித்துக் கொண்ட அமெரிக்கா,  குப்பை பத்திரங்களைப் பிற நாட்டினர் தலையில் கட்டுவதன் மூலம் 2008 நெருக்கடியை உலகமயமாக்கியது.

இப்போது குமிழிகளை உருவாக்குவதற்கான வாய்ப்பே இல்லை. வட்டியே வேண்டாம், பணத்தைப் பிடி என்றாலும், வீட்டுக்கடன், கார் கடன் வாங்க ஆளில்லை. டென்மார்க்கில் 100 ரூபாய் கடன் வாங்கி 90 ரூபாய் திருப்பினால் போதும் என்று வங்கிகள் கையைப்பிடித்து இழுத்தாலும் வாடிக்கையாளர்கள் கையை உருவிக்கொண்டு ஓடுகிறார்கள்.

இந்நெருக்கடியிலிருந்து முதலாளி வர்க்கம் எப்படித்தான் மீள்வது? தனது நெருக்கடியை சீனாவின் மீது தள்ளிவிடுவதற்குத்தான் பொருளாதார ரீதியில் காப்புவாதத்தையும் அரசியல் ரீதியில் தேசவெறியையும் தூண்டுகிறார் டிரம்ப். இதுவும் பிரெக்சிட்டும் உலகமயமாக்கலின் தோல்விக்கு சான்றுகள்.

மேலை நாடுகளில் அகதிகள் எதிர்ப்பு, நிறவெறி பாசிசக் கட்சிகள், இங்கே பார்ப்பன பாசிஸ்டுகள் ஆகியோரின் வளர்ச்சி வரவிருக்கும் நெருக்கடியை முன்னறிவிக்கின்றன.

ஏகாதிபத்தியங்களும் தரகு முதலாளிகளும்தான் எதிரிகள் என்று மக்கள் அடையாளம் கண்டுவிடாமல் மறைப்பதற்கு, முஸ்லீம்கள், அகதிகள், ஆசியர்கள் என்று பொய்யான எதிரிகளை நோக்கி மக்களின் கோபத்தைத் திசை திருப்புவதும்,  கொடிய வரி விதிப்புகள், வேலை நீக்கங்கள், உரிமை பறிப்புகள், வாழ்வாதாரப் பறிப்புகள் போன்ற நடவடிக்கைகளை பாசிசக் கொடுங்கரம் கொண்டு மக்கள் மீது திணிப்பதும்தான் ஆளும் வர்க்கத்தின் முன் இருக்கின்ற வாய்ப்புகள்.

சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி, – தனிநபர் சுவீகரிப்பு என்ற முரண்பாடு செல்வத்தை ஒரு முனையில் குவித்துப் பெரும்பான்மை மக்களை ஏதிலிகளாக்கியிருக்கிறது. மூலதனத்தின் பசிக்குத் தீனி போட மக்களிடம் எதுவும் இல்லை – உயிரைத் தவிர. அந்த உயிரைத்தான் பலியாக கேட்கிறது மூலதனம். வேலையின்மையாக, பட்டினிச் சாவாக, மதவெறி, –  சாதிவெறிப் படுகொலையாக, போராக!

படிக்க:
மோடியின் 100 நாள் ஆட்சி : புதிய ஜனநாயகம் தலையங்கம்
ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி !

ஒரு ஆலையில் திட்டமிட்ட உற்பத்தி, அந்தத் துறையில் திட்டமற்ற அராஜகம் என்ற முரண்பாடு காரணமாக இலட்சக்கணக்கான வாகனங்களும் நுகர் பொருட்களும் வாங்குவாரின்றிக் குவிந்து கிடக்கின்றன. அதிகமாக உற்பத்தி செய்த தொழிலாளிக்கு வேலை போனது. அதிகம் விளைவித்த விவசாயி பட்டினி கிடக்கிறான்.

இலாபத்தை நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டிலிருந்து விடுபடுவதற்கு, சோசலிசம் (புதிய ஜனநாயகம்) தவிர வேறு தீர்வு இல்லை. இந்தக் கண்ணோட்டத்துடன், நெருக்கடியின் சுமையை மக்களின் மீது தள்ளிவிடும் மோடி அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடவேண்டும்.

அஜித்


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

1 மறுமொழி

  1. கட்டுரை முழுவதும் முழுவதும் முதலாளிய உற்பத்தி முறையினால் ஏற்பட்ட நெருக்கடிகளைப் பற்றியும், அந்த நெருக்கடிகளுக்கான காரணமாக முதலாளிய உற்பத்திமுறையில் உள்ள முரண்பாடுகளைப் பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார். ஆனால் அவற்றிற்குத் தீர்வாக தீர்வாக //இலாபத்தை நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டிலிருந்து விடுபடுவதற்கு, சோசலிசம் (புதிய ஜனநாயகம்) தவிர வேறு தீர்வு இல்லை.// எனக் கட்டுரையின் இறுதியில் ஆசிரியர் கூறுகிறார். தீர்வு சோசலிசமா அல்லது புதிய ஜனநாயகமா? சோசலிசமும் புதிய ஜனநாயகமும் ஒன்றா? புதியஜனநாயகம் என்பதில் உள்ள ஓர் அம்சம் முதலாளிய வளர்ச்சிக்குத் தடையாக உள்ள நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையையும் நிலப்பிரபுத்துவ அரசியல் அதிகாரத்தையும் வீழ்த்துவது; அதைப் பாட்டாளி வர்க்கத் தலைமையில் நிகழ்த்துவது; அதன் மூலம் முதலாளியத்தை வளர்த்தெடுப்பது; முதலாளிய வளர்ச்சிக்குத் தடையாக உள்ள நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையை வீழ்த்துவதற்கு வைக்கப்படும் புதிய ஜனநாயகத் தீர்வை கட்டுரையில் விவரிக்கப்படும் வளர்ச்சியுற்ற முதலாளிய உற்பத்திமுறையில் உள்ள முரண்பாட்டுக்குத் தீர்வாக எவ்வாறு வைக்க முடியும்? இங்கு நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை மாறாமலேயே முதலாளிய உற்பத்திமுறை வளர்ச்சி பெற்று முரண்பாட்டில் சிக்கிக் கொண்டதா? அல்லது நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை அழிந்து முதலாளிய உற்பத்திமுறை வளர்ச்சியுற்று முதலாளிய முரண்பாட்டில் சிக்கிக் கொண்டதா? நிலபிரபுத்துவ உற்பத்திமுறை இல்லை என்றால் புதிய ஜன நாயகத்திற்கு இங்கு என்ன வேலை?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க