கேள்வி: //இந்தியா முழுவதும் ஒரே மொழி சாத்தியமா? இந்த திட்டம் பாஜக- வின் நெடுநாள் கனவு, எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கிவிட்டார்களா, இல்லை வேற காரணமிருக்கா?//

– அசோக்குமார்

ன்புள்ள அசோக்குமார்,

இந்தியா முழுவதும் ஒரே மொழி சாத்தியமில்லை. அரசியல் சாசன சட்டப்படி 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தி தேசிய மொழி அல்ல என்றாலும் அதை ஆங்கிலத்தோடு சேர்த்து அலுவலக மொழியாக வைத்திருக்கிறார்கள். மறைமுகமாக இந்தியை அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக கொண்டு வருவதுதான் பாஜக-வின் இலக்கு. இந்தி பேசும் மாநிலங்களின் வாக்கு வங்கியை கவருவதற்கு வேண்டுமானால் இந்த முயற்சி பலிக்குமே அன்றி, நாட்டின் பெரும்பான்மை பகுதிகள் இந்தியை ஏற்பதில்லை. இந்திதான் இந்தியாவின் அடையாளம் என்று அமித்ஷா சொல்லிவிட்டு, பிறகு தான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக கூறியதற்கு காரணம் நாடெங்கும் எழுந்த எதிர்ப்புதான்.

பாஜக அரசின் காலத்தில் பல்வேறு துறைகளில் இந்தித் திணிப்பு நடந்து வருகிறது. மத்திய அரசின் பணித் தேர்வுகளிலும் இந்தியை திணித்து வருகிறார்கள். இந்தியாவின் நாற்பது சதவீத மக்கள் இந்தியை பேசுவதாக கூறுகிறார்கள். ஆனால் இந்த நாற்பதிலும் உருது, போஜ்புரி, கடிபோலி, மைதிலி மற்றும் இந்துஸ்தானி பேசுகின்ற மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். இவ்வழக்கு மொழிகளை அழித்து செரித்து உருவாக்கப்பட்டதுதான் இந்தி. அதனுடைய லிபி கூட தேவநாகரிதான். 1947 அதிகார மாற்றத்திற்கு பின்னர், அலுவலக மொழிப் பிரச்சினை வந்தபோது சமஸ்கிருதமாக்கப்பட்ட இந்தி மொழிக்கு 78 வாக்குகளும், இந்துஸ்தானி மொழிக்கு 77 வாக்குகள் கிடைத்தன. இப்படி ஒரு வாக்கு வேறுபாட்டில்தான் இந்தி மொழி தேசிய அளவில் பயன்பாட்டிற்கு வந்தது.

இன்றைக்கும் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் இந்தி அல்லாத மொழிகளைத்தான் பேசிவருகிறார்கள். அந்தந்த மாநிலங்களில் அந்தந்த தேசிய இன மொழிகள் அலுவலக மொழிகளாக இருக்கின்றன. இதையெல்லாம் அழித்து விட்டு இந்தியை ஒரே மொழியாக கொண்டு வருவதுதான் பாஜக-வின் திட்டம். இந்து – இந்தி – இந்தியா என்ற இந்துத்துவத்தின் பார்ப்பனமயமாக்க திட்டத்தில் இந்தி மொழி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அதற்காகத்தான் இந்தி மொழிக்கென்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி பரப்பி வருகிறார்கள்.

நன்றி!

படிக்க :
♦ சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 17
♦ 
இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?

♦ ♦ ♦

கேள்வி: //தேசிய கல்வி கொள்கைக்கும் பொருளாதார மந்தநிலைக்கும் தொடர்புள்ளதா? இருக்கிறதெனில் எவ்வாறு?//

– அசுரன்

ன்புள்ள அசுரன்,

இரண்டிற்கும் நேரடியாக தொடர்பில்லை. பொருளாதார நெருக்கடி குறித்த விழிப்புணர்வை திசை திருப்புவதை அவ்வப்போது மோடி அரசாங்கம் செய்து வருகிறது. பசுப்புனிதம், கால்நடைகளுக்கு தடுப்பூசி, இந்திதான் இந்தியாவின் அடையாளம், காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது போன்று அவ்வப்போது செய்து வருகிறது. அதில் ஒன்று தேசியக் கல்விக் கொள்கை. எனினும் இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலில் இத்திட்டங்கள் ஒரு இலக்கோடு தொழிற்படுகின்றன.

தேசியக் கல்விக் கொள்கையின் படி மாநிலங்களின் கல்வி உரிமையை மறுப்பது, கல்வியில் தனியார் மயமாக்கத்தை அதிகரிப்பது, ஏழைகளை கல்வி கற்பதிலிருந்து விலக்குவது, இந்தி திணிப்பு போன்று பல அம்சங்கள் இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை மாற்றுவதும் இதன் நோக்கம். இன்னொருபுறம் விவசாய நலிவு, சிறு குறு தொழிற்துறை மூடல், பெரு நிறுவனங்களின் விற்பனை தேக்கம் காரணமாக மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து போயிருக்கிறது.

புதிய தேசியக் கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் அது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் மக்களின் கல்வி உரிமையை பறிப்பதாக கூடுதல் பிரச்சினையை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு இரண்டிற்கும் தொடர்பிருக்கிறது.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி: //சமீபமாக நடக்கும் ஹாங்காங் போராட்டம் பற்றி சொல்லுங்க?//

– தீபக்

ன்புள்ள தீபக்,

இது குறித்து தோழர் கலையரசன் எழுதிய கட்டுரை முழு விளக்கத்தையும் அளிக்கிறது. இணைப்பிலுள்ளதை படியுங்கள். நன்றி!

♦ ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

♦ ♦ ♦

கேள்வி: //Mnc/IT அல்லது எந்த தனியார் நிறுவனமும் தங்கள் ஊழியர்களிடம் சாதி, மதம், மற்றும் ஆதார் போன்ற மிக முக்கியமான/ sensitive தவல்களை கொடுக்க கட்டாய படுத்தலாமா. தனிநபர் கொடுக்க முடியாது என மறுக்க இயலுமா. மிக விரைவாக பதில் வேண்டும். 20 – செப்டம்பருக்குள் கொடுக்க வேண்டி எங்கள் நிறுவனம் கட்டாயப்படுத்துகிறது.//

– ஆனந்த் குமார்

ன்புள்ள ஆனந்த குமார்,

பொதுவில் தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களிடமும், வேலைக்கு விண்ணப்பவர்களிடமும் சாதி, மதம் குறித்து கேட்பதில்லை. கல்வித் தகுதி, அனுபவத் தகுதிகளையே முக்கியமாக வைத்திருக்கிறார்கள். ஆதாரைப் பொறுத்தவரை சட்டப்படி கேட்கக் கூடாது. ஆனால் நிறுவனங்களின் மனிதவளத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக ஆதார் எண் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பினும் நிறுவனங்கள் இப்படி வாங்கிக் கொள்கின்றன. அதனால் பலரும் வேறு வழியின்றி ஆதார் தகவலை நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். இதை சட்டப்படி கொடுக்க முடியாது என்று தொழிற்சங்கம் வாயிலாக போராடுவது ஒன்றே தீர்வு!

♦ ♦ ♦

கேள்வி: //முஸ்லிம் மதம் இந்தியாவில் எப்படி வந்தது? ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள். கிறிஸ்துவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள். அதுபோல் முஸ்லிம்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்களா அந்த மதம் இந்தியாவில் இருந்ததா?//

– குழலி

ன்புள்ள குழலி,

கண்டிப்பாக இசுலாம் மதமும் அரபுலகிலிருந்துதான் வந்தது. இன்று இந்தியாவின் மக்கள் தொகையில் 14.2% மக்கள் முசுலீம்கள். 2018-ம் ஆண்டு மதிப்பீட்டின் படி சுமார் இருபது கோடி முசுலீம்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். முசுலீம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளுக்கு வெளியே இந்தியாவில்தான் அதிக முசுலீம்கள் வாழ்கிறார்கள். இந்திய முசுலீம்களில் பெரும்பான்மையினர் சன்னி பிரிவு முசுலீம்களாகவும், ஷியா பிரிவில் கணிசமானோரும் வாழ்கின்றனர்.

அரபுலகில் இசுலாம் தோன்றுவதற்கு முன்னரேயே இந்திய துணை தீபகற்பத்துடன் அரபுலக வணிகர்கள் இந்தியாவிற்கு வந்து போய்க்கொண்டிருந்தனர். கேரளம், கொங்கணி, குஜராத் கடற்கரை வழியே இந்த வர்த்தகம் நடந்து கொண்டிருந்தது. இசுலாத்தின் தோற்றத்திற்கு பின் அரபுலக வணிகர்களோடு இசுலாம் மதமும் ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவின் அரபுக் கடற்கரையோரம் வந்து சேர்ந்தது.

குஜராத்திலும், மலபாரிலும் ஏழாம் நூற்றாண்டிலேயே மசூதிகள் கட்டப்பட்டன. இப்பகுதியில் கணிசமானோர் முசுலீம்களாக மாறினர். வட இந்தியாவில் 12-ம் நூற்றாண்டு முதல் இசுலாம் அறிமுகமானது. டில்லி சுல்தான்களில் துவங்கி, முகலாயர் வம்சம், தக்காண சுல்தான்கள் ஆட்சிக்காலம் வரையிலும் இந்தியாவின் பெரும்பான்மை பகுதி இசுலாத்திற்கு அறிமுகமானது. முகலாயர் ஆட்சி, முதல் இந்திய சுதந்திரப் போரான 1857 வரை இருந்தது. இக்காலத்தில் இந்தியாவின் கலை, இலக்கியம், இசை, கட்டிடம், உணவு பண்பாட்டில் முகலாயர்கள் பெரும் பங்கு செலுத்தினர்.

இந்தியாவின் பெரும்பாலான முசுலீம்கள் பார்ப்பனியக் கொடுங்கோன்மை காரணமாகவே எளிதில் முசுலீம்களாக மாறினர். அதே காரணத்தை முன்னிட்டுத்தான் கிறித்தவ மதமாற்றமும் நடந்தது.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி: //நீங்கள் குறிப்பிடும் இரண்டு பகுதிகளும் எதிர் எதிரா தோன்றுகின்றன.

  1. //எத்தகைய உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பால் செரிக்கப்படும் என்பது கிறித்தவத்தின் வரலாற்றில் உண்மையாகிவிட்டது.//

மற்றும்

  1. //அதேசமயம் இத்தகைய பார்ப்பன இந்து மதத்தின் சாதிய – தீண்டாமைக் கொடுமைகளே இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் இசுலாம் – கிறித்தவ மதங்களுக்கு மாறுவதற்குக் காரணமாகிறது. //

1 இன் மூலமாக கிறித்துவ மதத்திலும் தீண்டாமை இருப்பது தெரிகிறது. ஆனாலும், மக்கள் இந்து மதத்தில் இருந்து மாறுவது ஏன் ?

கொதிக்கும் அடுப்பில் இருந்து எரியும் கொள்ளியில் விழுவது ஏன் ?//

– ஆதவன்

முதலில் கிறித்தவ – இசுலாம் மதங்களில் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது இல்லை. இது அம்மதக் கோட்பாடுகளிலும் சரி, புனித நூல்களிலும் சரி தெளிவாக இருக்கிறது. தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ அனைவரும் வழிபாடு செய்யலாம். சாதிக்கேற்ற பிரிவுகளோ, தனி ஆலயங்களோ கிடையாது. அனைவரும் சேர்ந்து உண்ணும் வழக்கமும் உண்டு. எவரும் ஒரு பாதிரியாராகவோ, கன்னியாஸ்தீரியாகவோ, மௌல்வியாகவோ உருவாக முடியும். இவை அனைத்தும் பார்ப்பனியத்தில் கிடையாது. அது பிறப்பு முதல் இறப்பு வரை பாகுபாடு பார்க்கும் ஒரு வாழ்க்கை முறை.

எனவே இந்தியாவில் கிறித்தவ, முசுலீம் மதங்கள் அறிமுகமான போது பெருவாரியான ஒடுக்கப்பட்ட மக்கள் அம்மதங்களுக்கு மாறினர். காலப்போக்கில்தான் இம்மதங்களிலும் சாதிப்பாகுபாடு பார்ப்பனியத்தின் செல்வாக்கினால் நுழைந்தது. இன்றும் முசுலீம் மதத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவு. கிறித்த மதத்தில் கொஞ்சம் அதிகம். சொல்லப்போனால் சாதிய ஏற்றத்தாழ்வை ஏற்றுக் கொண்டதாலேயே கிறித்தவ மதம் கொஞ்சம் வேகமாக பரவியது.

படிக்க :
♦ கேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ?
♦ கேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது ?

அதே நேரம் இன்றும் கிறித்தவ, முசுலீம் மதங்களில் பாதிரியார்களோ, மௌல்விகளோ அனைத்து பிரிவுகளிலிருந்தும் வருகிறார்கள். வந்த பிறகு கிறித்தவ சபையில் சாதிரீதியான அரசியலைச் செய்கிறார்கள். வட இந்திய முசுலீம்களிடத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு உண்டு. இருப்பினும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களையும் மனிதர்களாக கண்ட காரணத்தினாலேயே இம்மதங்களிற்கு மாறியது உண்மை. எனவே இதில் முரண்பாடு ஏதுமில்லை. அல்லது காலம் செல்லச் செல்ல இரு மதங்களும் பார்ப்பனியத்திற்கேற்ற முறையில் தம்மை தகவமைத்துக் கொண்டன. எனினும் அம்மதக்கோட்பாடுகளில் மக்களை ஏற்றத்தாழ்வோடு பாராட்டும் விதிகள் இல்லை என்பதால் இன்று வரையிலும் அம்மதங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் மாறுவது சகஜமாக இருக்கிறது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

1 மறுமொழி

  1. உலகில் தோன்றிய முதல் மனிதன் ஆதம் (அலை) முஸ்லிம்தான், 14 நூற்றாண்டுக்கு முன்பு இஸ்லாம் முழுமை பெற்றது
    ஷியா சுன்னி என்பதெல்லாம் குரானில் இல்லை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க