உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 08 அ

னது வளையாத காலை விமானி அறைக்குள் முடிவில் ஒரு விதமாக வைத்து விட்டான் அலெக்ஸேய். நம்ப முடியாத அளவு அரும் பிரயாசை செய்து மறு காலையும் அறைக்குள் இழுத்து, தொப்பென்று இருக்கையில் சாய்ந்தான். அதே நொடியில் தோல் வார்களால் பொய்க்கால்களை நெம்படிகளுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டான். அமைப்பு சரியானதாக வாய்த்திருந்தது. வார்கள் பொய்க்கால்களை நெம்படிகளுடன் மிகுவாகவும் உறுதியாகவும் அழுத்தி இறுக்கியிருந்தன. பிள்ளைப் பருவத்தில் நன்றாகப் பொருத்தப்பட்ட ஸ்கேட்டுகளைப் பாதங்களுக்கு அடியில் உணர்ந்தது போலவே நெம்படிகளை இப்போது உணர்ந்தான்.

ஆசிரியர் அவனது அறைக்குள் தலையை நீட்டினார்.

“ஏன் தம்பீ, நீ குடித்திருக்கிறாயா என்ன? ஊது” என்றார்.

அலெக்ஸேய் ஊதினான். மதுவிற்கு பழக்கமான வாடை வராமையால் ஆசிரியர் மெக்கானிக்கை அச்சுறுத்தும் பாவனையில் முட்டியை ஆட்டினார்.

“செலுத்தத் தயாராகுக!”

“இணைப்பு ஏற்படுத்துக!”

“அப்படியே, இணைப்பு ஏற்படுத்தியாயிற்று!”

எஞ்சின் சில தடவைகள் காதைத் துளைப்பது போல உறுமியது. பின்பு அதன் பிஸ்டன்கள் அடிக்கும் துலக்கமானத் தனி ஓசை கேட்டது. களி மிகுதியால் மெரேஸ்யெவ் கத்தியும் விட்டான். பெட்ரோல் செலுத்துவிசையைக் கையால் தன்னுணர்வின்றியே இழுத்தான். அதற்குள் பேச்சுக் குழாய் வழியே வந்தது ஆசிரியரின் கோபக் குரல்:

“குருவுக்கு மிஞ்சின சீடன் ஆகப் பார்க்காதே!”

ஆசிரியர் தாமே பெட்ரோல் செலுத்துவிசையைப் போட்டார். எஞ்சின் கடகடத்தது, ஊளையிட்டது. விமானம் எகிறிக் குதித்தவாறு பறப்பு முன்னோட்டம் தொடங்கியது. தன்னுணர்வின்றியே இயக்கியவாறு நவூமவ் பிடியைத் தம் பக்கம் இழுத்தார். தட்டான் பூச்சி வடிவான விமானம், எல்லா விமானிகளும் ஒரு காலத்தில் விமானமோட்டக் கற்றுக் கொண்ட அந்தப் பறப்பூர்தி, செங்குத்தாக வானில் கிளம்பியது.

சாய்வாக வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் புதிய பயிற்சி மாணவனின் முகத்தைக் கண்டார் ஆசிரியர். நீண்ட இடை நிறுத்தத்துக்குப் பின் முதல் விமானப் பறப்பின் போது இத்தகைய எத்தனையோ முகங்களை நவூமவ் கண்டிருந்தார். தேர்ந்த விமானிகளின் பெரிய மனிதப் பாங்கான நல்லியல்பை அவர் பார்த்திருந்தார். ஒன்றன் பின் ஒன்றாக ஆஸ்பத்திரிகளில் நீண்ட காலம் தங்கிவிட்டு மறுபடி தங்கள் வழக்கமான சூழ்நிலைமைக்கு வந்துள்ள உற்சாகிகளான விமானிகளின் விழிகளில் சுடர் வீசுவதை அவர் கண்டித்திருக்கிறார்.

பயங்கர விமான விபத்தில் படுகாயமடைந்து திரும்பியவர்கள் விமானம் வானில் கிளம்பியதும் வெளிறுவதையும் பதற்றமடையத் தொடங்குவதையும் உதடுகளைக் கடிப்பதையும் அவர் அவதானித்திருந்தார். முதல் முறை தரையிலிருந்து வானில் எழும்பும் கற்றுக் குட்டிகளின் சுறுசுறுப்பு ததும்பும் ஆவலை அவர் பார்த்திருந்தார். ஆனால் விமானம் ஓட்டுவதில் அனுபவம் உள்ளவனாகத் தோன்றிய இந்த அழகிய சாமள நிற இளைஞனின் முகத்தில் இப்போது கண்ணாடி வாயிலாக அவர் கண்ட விந்தையான பாவத்தை நவூமவ் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றிய பல ஆண்டுகளில் ஒரு தரங்கூடக் காணவில்லை.

ஜுரத்தினால் ஏற்படுவது போன்ற புள்ளிகள் அடர்ந்த செம்மை புதியவனின் சாமள நிறத் தோலின் ஊடாகப் பரவியது. அவன் உதடுகள் வெளிறின, ஆனால் அச்சத்தால் அல்ல, நிச்சயமாக இல்லை, நவூமவுக்குப் புரியாத, மாண்பு சான்ற கிளர்ச்சி காரணமாக. அவன் யார்? அவனுக்கு என்ன நேர்ந்துவிட்டது? மெக்கானிக் அவனைக் குடிகாரன் என்று எண்ணியது ஏன்?

விமானம் தரையிலிருந்து கிளம்பிக் காற்றில் மிதக்கத் தொடங்கியதும், காப்புக் கண்ணாடிகள் இன்னும் போடப்படாத புதியவனின் விழிகளில் – ஜிப்ஸியுடையவை போன்று கருமையான, பிடிவாதம் நிறைந்த விழிகளில் – திடீரெனக் கண்ணீர் மல்கியது. கன்னத்தில் வழிந்த கண்ணீர் திருப்பத்தின் போது முகத்தில் அடித்த காற்றுத் தாரையால் பூசப்பட்டது. இதை எல்லாம் ஆசிரியர் கவனித்தார்.

“யாரோ விசித்திரப் பிரகதி! இவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்ன செய்வானோ, யார் கண்டது?” என்று தீர்மானித்துக் கொண்டார் நவூமவ். ஆனால் சதுரக் கண்ணாடியிலிருந்து தம்மை நோக்கிய அந்தக் கிளர்ச்சி பொங்கிய முகத்தில் இருந்த ஏதோ ஓர் உணர்ச்சி ஆசிரியரையும் பற்றிக் கொண்டது. தமது தொண்டையிலும் ஏதோ அடைத்துக் கொள்வதையும் உணர்ந்து அவர் வியப்பு அடைந்தார்.

“ஒட்டும் பொறுப்பை உனக்குக் கொடுக்கிறேன்” என்று அவர் சொன்னார். ஆனால் அப்படிக் கொடுத்துவிடவில்லை. கைகளையும் பாதங்களையும் தளர்த்த மட்டுமே செய்தார். ஓட்டும் பொறுப்பை விளங்காத இந்த விசித்திரப் பரகிருதியிடமிருந்து எந்தக் கணத்திலும் வலிய எடுத்துக் கொள்ள ஆயத்தமாக இருந்தார் அவர்.

அலெக்ஸேயின் ஒவ்வொரு அசைவையும் நவூமவ் முன்னிருந்த கருவிகள் அப்படியே இயங்கிக் காட்டின. புதியவன் தன்னம்பிக்கையுள்ள, கைதேர்ந்த விமானி என்பதை அவற்றிலிருந்து அவர் கண்டுகொண்டார். அனுபவம் முதிர்ந்த போர் விமானியான பயிற்சிப் பள்ளித் தலைவர் “வரப்பிரசாதம் பெற்ற விமானி” என்று இத்தகையவர்களைக் குறிப்பிடுவது வழக்கம்.

முதல் சுற்றுக்குப் பின் நவூமவ் தன் சீடனைக் குறித்து அஞ்சுவதை விட்டுவிட்டார்.

விமானம் தயக்கமின்றி, உரிய முறையில் இயங்கியது. ஒரு விஷயந்தான் சற்று விந்தையாகப்பட்டது. விமானத்தைச் சமமட்டத்தில் செலுத்துகையில் பயிற்சியாளன் ஓயாமல் இடமும் வலமுமாகச் சிறு சிறு திருப்பங்கள் செய்தான். சில வேளைகளில் விமானத்தைச் சிறிது மேலே கிளப்பினான். சில வேளைகளில் கீழே இறக்கினான். தனது தேர்ச்சியை அவன் சோதித்துப் பார்ப்பது போல் இருந்தது. புதியவனை மறு நாளே தனியாகப் பயிற்சிப் பகுதியில் பறக்க அனுமதிக்கலாம் என்றும், இரண்டு மூன்று பறப்புக்களுக்குப் பின் சண்டை விமானத்தின் சிறு நகலான “ஊத்-2” ரகப் பயிற்சி விமானத்தை ஓட்ட விடலாம் என்றும் தமக்குள் தீர்மானித்துக் கொண்டார் நவூமவ்.

குளிராயிருந்தது. இறக்கைத் தம்பத்தின் மேலிருந்த வெப்பதட்பமானி நீர் உறைமட்டத்துக்குக் கீழ் பன்னிரண்டு டிகிரி குளிர் இருந்ததாகக் காட்டியது. கூரிய காற்று, விமானி அறைக்குள் புகுந்து நாய்த் தோல் பூட்சுகளுக்குள் புகுந்து பயிற்சி ஆசிரியரின் கால்களை விரைக்கச் செய்தது. திரும்ப நேரம் ஆகிவிட்டது.

ஆனால் “தரையில் இறங்குக!” என்று அவர் குழாய் வாயிலாக உத்தரவு இட்ட போதெல்லாம் ஆர்வம் பொங்கும் கரு விழிகளில் மெளன வேண்டுகோள் தென்படுவதைக் கண்ணாடியில் கண்டார். அது வேண்டுகோள் கூட இல்லை, கோரிக்கை. உத்தரவை மறுபடி இடுவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. வழக்கமான பத்து நிமிடங்களுக்குப் பதில் சுமார் அரைமணி நேரம் அவர்கள் பறந்தார்கள்.

விமானி அறையிலிருந்து வெளியே துள்ளி, விமானத்தின் அருகே குதித்தார் நவூமவ். கையுறைகளைத் தட்டிக் கொண்டார், பாதங்களைத் தொப்புத் தொப்பென்று அடித்தார். ஆரம்ப குளிர் அன்று காலையில் உண்மையிலேயே கடுமையாக இருந்தது. பயிற்சி மாணவனோ, வெகு நேரம் அறைக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தான். பின்பு அதிலிருந்து மெதுவாக, விருப்பமற்றவன் போல வெளியே வந்தான். தரையில் இறங்கியதும் இறக்கையின் அருகே உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் உவகை ஊற்றெடுத்தது போன்று அது தோற்றம் அளித்தது. குளிராலும் இன்பக் கிளர்ச்சியாலும் செம்மை சுடர்ந்தது அது.

“விரைத்துப் போனாயோ? என்னை பூட்சுகள் வழியாக எப்படிக் குளிர் தாக்கிவிட்டது தெரியுமா? அடே, நீ சாதாரண ஜோடுகள் அல்லவா அணிந்திருக்கிறாய்! கால்கள் குளிரில் மரத்துப் போகவில்லையா?”

“எனக்குக் கால்கள் இல்லை” என்று தனது எண்ணத்தால் புன்னகைத்தவாறு பதிலளித்தான் பயிற்சி மாணவன்.

“என்ன?” என்றார் நவூமவ், உணர்ச்சிகளுக்கேற்ப விரைந்து மாறும் அவர் முகம் நீண்டுவிட்டது.

“எனக்குக் கால்கள் இல்லை” என்று தெளிவாகத் திருப்பிச் சொன்னான் அலெக்ஸேய்.

“‘கால்கள் இல்லை’ என்றால் என்ன அர்த்தம்? நோயுள்ளவையா அவை?”

“இல்லை என்றால் இல்லை, அவ்வளவுதான். இவை பொய்க்கால்கள்.”

யாரோ தலையில் சம்மட்டியால் அடித்து தரையில் பதித்து விட்டது போல நொடிப்பொழுது மலைத்து நின்று விட்டார். இந்த இளைஞன் அவரிடம் சொன்ன விஷயம் முற்றிலும் நம்ப இயலாததாக இருந்தது. கால்கள் இல்லையாவது? இப்போது தானே இவன் விமானம் ஓட்டினான், அதுவும் நன்றாகவே ஓட்டினான்!…

“காட்டு” என்று ஏதோ அச்சத்துடன் சொன்னார் ஆசிரியர்.

இந்த ஆவல் அலெக்ஸேய்க்குக் கோபமூட்டவோ அவமதிப்பாகப்படவோ இல்லை. மாறாக, வேடிக்கையான இந்தக் குதூகல மனிதரை ஒரேயடியாக வியப்பில் ஆழ்த்த அவனுக்கு விருப்பம் உண்டாயிற்று. சர்க்கஸ் செப்படி வித்தைக்காரன் போன்று காற்சட்டையை உயர்த்தி ஏககாலத்தில் இரண்டு கால்களையும் காட்டினான்.

தோலாலும் அலுமினியத்தாலும் ஆன பொய்க்கால்கள் மேல் நின்றான் பயிற்சி மாணவன். ஆசிரியரையும் மெக்கானிக்கையும் முறைக்காகக் காத்திருந்த பயிற்சியாளர்களையும் புன்னகையுடன் நோக்கினான்.

படிக்க:
சந்திரயான் 2 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள குறைப்பு !
மூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு !

இந்த மனிதனின் உள்ளக் கிளர்ச்சி, இவன் முகத்தில் காணப்பட்ட அசாதரணத் தோற்றம், இவனுடைய கருவிழிகளில் பொங்கிய கண்ணீர், பறப்பு உணர்ச்சியை நீடிப்பதற்கு அவன் காட்டிய பேரார்வம், எல்லாவற்றையும் நவூமவ் அக்கணமே புரிந்துகொண்டார். இந்தப் பயிற்சி மாணவன் அவரைப் பரவசப்படுத்திவிட்டான். அலெக்ஸேய் அருகே பாய்ந்து வெறி கொண்டவர் போல அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.

“அடேயப்பா, எப்படி உன்னால் முடிந்தது? அருமையான ஆள் நீ! அட உனக்கே தெரியாது நீ எப்பேர்பட்ட மனிதன் என்று!…” எனத் தொண்டை தழுதழுக்கக் கூறினார்.

முக்கியமான காரியம் இப்போது நிறைவேற்றப்பட்டு விட்டது. பயிற்சி ஆசிரியரின் அபிமானத்தைப் பெற்றாயிற்று. மாலையில் அவர்கள் சந்தித்துப் பயிற்சித் திட்டத்தைச் சேர்ந்து வகுத்தார்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க