சென்னையின் ரிச்சி தெரு தென்னிந்தியாவின் மினி சிங்கப்பூர். இங்கு கிடைக்காத உபகரணங்களே இல்லை. வாழ்க்கையின் கடைகோடி நடைபாதைவாசிகள் வாங்கக்கூடிய, 300 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கும் விலையுள்ள பழைய கைப்பேசி ஹெட்ஃபோன் முதல் சினிமா நடிகர்கள், நடிகைகளின் வீடுகளை அலங்கரிக்கும் 10 லட்சம் மதிப்புள்ள ஆடியோ சிஸ்டம் வரை கொட்டிக் கிடக்கும் அதிசயம்.

பழமையான ரேடியோ மார்கெட் எனப்படும் ரிச்சி தெரு. ஸ்பீக்கர் விற்கும் ஒவ்வொரு கடைக்கு முன்பும், பெட்டிகள் தயாரிக்கும் பணிகளும், பரபரப்பாக வண்டிகளில் பொருட்களை ஏற்றி இறக்குவதுமாக இருந்ததை இப்போது பார்க்க முடிவதில்லை.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் ரேடியோ மார்கெட் என்ற பெயரால் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி ஏராளமான நாகரிக மாற்றங்களோடு, இன்று பல ஆயிரம் சிறு குறு வியாபாரிகளை – தினக் கூலிகளை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு வியாபாரம் ஆடியோ ஸ்பீக்கர் விற்பனை. ஊர்த்திருவிழாக்களில், கட்சிக் கூட்டங்களில் வைக்கப்படும் ஆளுயர ஸ்பீக்கர்கள் தெருக்களை அலங்கரித்துக் கொண்டிருந்தது ஒருகாலம். ஒவ்வொரு கடைக்கு முன்பும் ஸ்பீக்கரின் அளவிற்கேற்ப பெட்டிகள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும். ஆனால், இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே கடைகளைப் பார்க்க முடிகிறது.

படிக்க:
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?
♦ ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ

ஸ்பீக்கர் விற்கும் சிறு கடை வியாபாரி விக்னேஷ் என்ற இளைஞரைச் சந்தித்தோம்.

“பத்து ஆண்டு காலமாக தொழில் நடத்தி வருகிறேன். எங்க அப்பா நடத்திய கடை. தமிழ்நாடு மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று தென் மாநிலங்கள் முழுக்க எங்களுக்கு கஸ்டமர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் கடைகோடி கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி என்று பல நகரங்களுக்கும் வியாபாரம் செய்கிறோம்.

சிறு கடை வியாபாரி விக்னேஷ்

முழுக்க முழுக்க அவுட்டோர் பர்பசுக்கு மட்டுமே இந்த ஸ்பீக்கர்கள் பயன்படும். இந்து, முசுலீம், கிறித்தவர்கள் என்று பல மதத்தவர்களுக்கும் இந்த ஸ்பீக்கர் செட்டு இல்லாமல் விழா நிறையாது. அந்த விழாக்களுக்கு கலை என்றால் இது இருந்தால்தான். பல தேவைகளுக்கு எல்லா சைஸ்களிலும் ஸ்பீக்கர் செய்து கொடுப்போம். ஒரு இன்ச் ஸ்பீக்கரிலிருந்து 64 இன்ச் ஸ்பீக்கர் வரை உள்ளது. அந்த ஸ்பீக்கர் பொறுத்தப்படும் மரப்பெட்டி, ஒரு ஜான் உயரத்திலிருந்து ரெண்டாளு உயரம் வரை செய்வோம். ஆனால், இப்போது அதிகபட்சம் 1,500 வாட்சுக்கு மேல் ஸ்பீக்கர் இல்லை. அதற்கு தடை போட்டாங்க. இறைச்சல் மாசு, அபராதம் தவிர்க்க 18 இன்ச் ஸ்பீக்கர்தான் இப்போது கடைசி. வெறும் 12 இன்ச் ஸ்பீக்கர் நாலை இணைத்து சதுர வடிவில் மர பாக்ஸ் அடிக்கிறோம். அதுதான் இப்போ அதிகமாக ஓடுது. இதைப் போலவே 800, 1000 வாட்சுக்கும் தயாரிப்போம்.

சாலையோரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் பெட்டி.

இதில் 20-க்கும் மேற்பட்ட தரத்தில் பல பிராண்ட் ஸ்பீக்கர்கள் ரூ.3,000-லிருந்து 20ஆயிரம் வரை உள்ளது. சாமியானா பந்தல் வாடகைக்கு விடும் வியாபாரிகள் நடுத்தரமானதையும், கல்லூரி, பள்ளி, இந்து மற்றும் கிறித்துவ மத கலைநிகழ்ச்சிகளுக்கு சற்று தரமானதையும் வாங்குகிறார்கள். ஒருதடவை வாங்கி விட்டால் பல ஆண்டு எந்தச் செலவும் வைக்காது. கையாளும்போது ஏதாவது உடைந்தால் அதை சிறு ரிப்பேர் பார்த்தாலே சரியாகிவிடும்.

வாடிக்கையாளரின்றி கலையிழந்து இருக்கும் ஸ்பீக்கர் விற்கும் கடை.

வழக்கமான வாடிக்கையாளர்கள் ஃபோனிலேயே பேசி ஆர்டர் கொடுப்பார்கள். நாங்கள் பார்சலில் அனுப்பி வைப்போம், அவர்கள் செக்காக பணத்தை அனுப்பி விடுவார்கள். இப்போது பொதுக்கூட்டங்கள் பேச பல தடைகள் விதிப்பதால் முன்பு மாதிரி ஆர்டர் வருவதில்லை. தேவையும் குறைந்து போனது. அதனால் மார்கெட் டல்லடிக்கிறது.”

என்று பேசிக் கொண்டே ஃபோன் ரிங்டோன் ஒலித்தவுடன் அதை நோக்கி ஓடினார்.

***

சூர்யா, தொழிலாளி

சூர்யா (ஸ்பீக்கர் பாக்ஸ்களை மீன்பாடி வண்டியில் ஏற்றி வந்தவர்)

“8 வருசமாக இந்த ஸ்பீக்கர் லோடு அடிக்கிறேன். ஒரு ட்ரிப்புக்கு கூலி 250 ரூபாய். முன்னெல்லாம் ஒரே கடைக்கு மூனு ட்ரிப் அடிப்பேன். இப்போ நாலு கடைக்காரங்க சேர்ந்து ட்ரிப் கூலி கொடுக்குறாங்க. வியாபாரம் இல்லேன்னு பல நாளு வேலைக்குக் கூப்பிட மாட்டேங்குறாங்க. பெரம்பூர், அயனாவரம், சூளை இப்படி 10 கி.மீ சரவுண்டிங்கில ஸ்பீக்கர் பெட்டி தயாரிக்கிறாங்க. அங்கேயும் 50 பட்டறைக்கு மேல் இருந்தது, இப்போ இருபதா கொறைஞ்சி போச்சு” என்று சொல்லிக்கொண்டே வண்டியைத் தள்ளிச் சென்றார்.

***

இதே ஸ்பீக்கர், ஆனால் விலையோ பல லட்சங்கள். சிங்கப்பூர், இத்தாலி, பிரான்சு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு பிராண்டுகள். போஸ், டெனான், டைனாடியோ, போல்க், ஹார்மன் காடன், ஜே.எல்.எக்ஸ், சோனாஸ், கிளிப்ஸ், மராண்ட்ஸ். இப்படி அதனுடைய ஆம்பிளிபயர் மட்டும் 1 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் வரை இருக்கு. ஊஃபர், சப் ஊஃபர், சரவுண்ட், ஃபிரண்ட், ஃபிரண்ட் வய்டு, ஃபிரண்ட் ஹைட், சென்டர், பேக், பேக் ஒய்டு, ஸ்கை (சீலிங்) இப்படி காற்று தவழும் எட்டுத் திக்கு மட்டுமல்ல, 80 கோணங்களிலும் இசை காதில் நிறைய வேண்டும்.

விலையுயர்ந்த ஸ்பீக்கர்கள்.

வீடியோ திரையில் விமானம் பறந்தால், தரைக்கு மேல் பறப்பது மாதிரி இருக்கும். கதாநாயகி நீர்வீழ்ச்சியில் குளித்தால், வீடியோ பார்ப்பவர்களின் முதுகு ஈரமாவது போல் உணர முடியும். இப்படி இசை சிலிர்ப்பு கிடைக்கும். சுமார் ஏழு லட்சம் வரை செலவு செய்தால், நீங்கள் உலகத் தரத்தில் இசை ரசிகராக உலாவ முடியும்.

விலை உயர்ந்த ஆடியோ பொருட்கள் விற்கும் கடை உரிமையாளரிடம் பேசினோம்.

விலையுயர்ந்த ஆடியோ பொருட்கள் விற்பனை செய்யும் டெசிபில் ஆடியோ கார்னர் கடை உரிமையாளர்

“முன்பெல்லாம் மாதத்திற்கு 3 முறை சிங்கப்பூர் சென்று பொருட்களை தேடித் தேடி வாங்கிவந்து விற்போம். இப்போது 2 மாதத்திற்கு ஒரு முறைகூட போகமுடிவதில்லை. எனக்கு இந்தத் தொழில் உயிர். நான் சிறு வயது முதல் இசைப் பிரியன். 10 ஆண்டு காலம் லண்டனில் வாழ்ந்தேன். எனக்கு எல்லா இசையும் அத்துப்படி.

கண்களைக் கவரும் மல்டி மீடியா ஸ்பீக்கர்.

இசை நுணுக்கம் தெரிந்தவர்கள், பணம் படைத்தவர்கள், விலையை பெரிதாகக் கருத மாட்டார்கள். பிராண்ட், ஒரிஜினல் – அதுதான் அவர்களுக்கு முக்கியம். செல்ஃபோன், வாட்ச், கார் மாதிரி இதையும் அடிக்கடி டாப் பிராண்டுகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்ளை தற்போது பார்க்க முடிவதில்லை. அந்த இசை ரசிகர்களுக்கு இப்போ என்ன ஆனதென்றே தெரியவில்லை. எல்லாம் இந்த டிமானிஸ்டேசன், ஜி.எஸ்.டியால் வந்த வினை.

இந்த வருடம் பல நாட்கள் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாமல் கடையைத் திறந்து மூடிக்கொண்டிருக்கிறேன். எதிர்காலம் எப்படி போகும் என்று புரியவில்லை. ஆனால், எல்லாம் சரியாகிவிடும், பார்ப்போம்” என்றார் விரக்தியாக.

“நீங்களோ இசை ரசிகர், தனிமையில வேற உட்கார்ந்திருக்கீங்க. காதுக்கு இனிமையா தரமான பாட்டு போட்டுக் கேட்கலாமே” என்றோம்.

“ஆளில்லா கடையில ஏன் டீ ஆத்தணும்” என்று சிரித்தபடியே வழியனுப்பினார்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க