ந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் (FORUM AGAINST HINDUTVA FASCIST OFFENSIVE – FAHFO)

”செப்-22, 2019: கலாச்சார எதிர்ப்பியக்க நாளாகக் கொண்டாடுவோம்!”

செப்-22: காலை 10 மணி. ஐதராபாத்தில் உள்ள ‘சுந்தரய்யா விஞ்ஞான கேந்திரத்தின் அருகே உள்ள பூங்காவைச் சுற்றி பலவித தப்புக்கள்-முழவுகள்-மத்தளங்கள் முழங்கின. பெண்கள்-ஆண்கள்-சிறுவர்களின் ஆரவாரமான ஆட்டங்களுடன் ஊர்வலமாக வந்த புரட்சிகரக் கலைக் குழுக்கள் அரங்கை வந்தடைந்தன. இது அரசின் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான கலாச்சார எதிர்ப்பியக்க அரங்கம். சுமார் 800 பேருக்கு மேல் திரண்டிருந்த அரங்கில் – அரசின் பாசிச கிரிமினல் திட்டங்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுந்தன.

தொடக்கச் சிறப்புரை : பேராசிரியர் சம்சுல் இசுலாம்

மேடையில் பெண்ணும் ஆணும் பறைகளோடு ஆடிப்பாடும் தோற்றத்தோடு இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிர்ப்பை அறிவிக்கும் FAHPO பதாகை அமைக்கப்பட்டிருந்தது.

இந்துத்துவ மற்றும் ஏகாதிபத்தியப் பண்பாட்டு நஞ்சுக்கு மாற்றான பண்பாட்டு எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டி எழுப்பும் முன்முயற்சியோடு அமைக்கப்பட்டு ‘பாசிச’த்துக்கு எதிரான கலச்சார எதிர்ப்பு நாளாக அன்றைய நாள் மேடையிலிருந்து அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.

வரவேற்புரைக்குப்பிறகு அரங்கின் கரவொலியோடு – பிரஜாகலா மண்டலி, அருணோதயா, அருணோதயா பண்பாட்டுக் கூட்டமைப்பு, மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க. – PALA), RCF உள்ளிட்ட ஆறு புரட்சிக் கலைக்குழுக்களின் பிரதிநிதிகளும், தொடக்கச் சிறப்புரை வழங்கவிருக்கும் நிஷாந்த் நாடக மஞ்ச் இயக்குனரும், டெல்லிப் பேராசிரியருமான சம்சுல் இசுலாமும் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

இந்துத்துவச் சக்திகள் (ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.) திணிக்கும் ஒற்றைத்தன்மையான பண்பாட்டுக்கு எதிராகப் பல்வேறுபட்ட தேசிய இனங்களில்  செழுமையான உழைக்கும் மக்கள் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் பண்மைக் கலாச்சாரத்தை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள FAHFO அரங்கம் – மத்திய அரசில் ‘சட்டவிரோத’ முறையில் அதிகாரக் குவிப்போடு தீவிரமாக இறங்கியுள்ள ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலை அம்பலப்படுத்தி எதிர்க்கும் விதத்தில் மக்கள் மத்தியில் எழுச்சியோடு இயங்கும் என்று கூட்டத்தலைவர் அறிவித்தார்.

தொடக்கச் சிறப்புரை வழங்கிய சம்சுல் இஸ்லாம் பாசிசம் கொலைவெறியோடு மக்களை அழித்த நாட்களை உலக வரலாற்று ரீதியிலும், அத்தகைய சக்திகளையும் ஏகாதிபத்தியங்களையும் வரவேற்றுக் குலாவிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கிரிமினல் வரலாற்றையும் இன்றைய கட்டம் வரை எடுத்துக்காட்டுகளோடு விவரித்தார். தலித் – முஸ்லீம்கள் – அனைத்துத் தரப்பு கொதிப்போடும் விவரித்தார்.

பாசிஸ்டுகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் தொடுத்த வீரமிகு போராட்டங்கள், அவற்றோடு அரணாய் நின்று பிரச்சாரம் செய்த மக்கள் பண்பாட்டுப் போராளிகள் பற்றியும், நெருக்கடி நேரத்திலும் துணிந்து எதிர்த்த ஜெர்மானிய நாடகக் கலைஞர் பெர்போல்ட் பிஃரெக்டின் வலிமை மிக்க கவிதை வரிகளையும் (”இருண்ட காலங்களில் பாடல் இசைக்க முடியுமா?… இருக்கும், இருண்ட காலங்கள் பற்றிய இசை இருக்கும் … அல்லது மௌனம் இருக்கும்”) ஜெர்மன் பாஸ்டர் நீமுல்லரின், கவிதை வரிகளையும் (”அவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடினார்கள்….”) மேற்கோள் காட்டி ஆவேசம் மிக்க எழுச்சி உரையாற்றினார்.

FAHPO-வுக்கு ஆதரவாக நிற்கும் ம.க.இ.க. கலைக்குழுவின் ‘நெருங்குதடா’ பாடல் நிகழ்ச்சியின் முதல் பாடலாகத் தொடங்கியது. இன்றைய எதார்த்த நிலையை அப்படியே மக்கள் முன்வைத்து – ‘தருணமிது துணிந்து நில்லடா’ என்று எதிர்ப்புப் போராட்டத்துக்கும் அழைத்தது. அடுத்ததாக, RCF, மகாராட்டிரக் கலைக்குழுத் தோழர்கள் – செங்கொடியின் தலைமையை முன்வைத்து ஒரு பாடலை இசைத்தனர்.

அடுத்தடுத்து, ஆடல் பாடல்களோடும், நாடகங்களோடும் இரவுவரை நீண்ட நிகழ்ச்சிகளில் புரட்சிப் பாடல்கள் இசைக்கப்பட்டன. அருணோதயா கலைக்குழுவின் கருப்பு உடை இளைய தோழர்களின் அடக்குமுறைக்கு எதிரான காட்சிப் படிமங்களும், மோடி முகமூடியை அணிந்தவரைச் சுற்றிவந்து ஆடிய வண்ணமிகு சவால்/கேலி ஆட்டங்களும், மற்றொரு அருணோதயா கலைக்குழுவின் தோழர்கள் பாசிச எதிர்ப்பு ஜமுக்கல்கதா நிகழ்வை வைத்து பாரம்பரிய வடிவத்தில் புதிய உள்ளடக்கத்தை நிரப்பிய முயற்சிகளும், அருணோதயா விமலக்கா பெண்கள் குழுவினர் அனைத்துக் குழுக்களையும் இணைந்து நிகழ்த்திய ஆடல் நிகழ்வுகளும் தலித் மற்றும் இசுலாமிய மக்கள் இந்துத்துவச் சூலத்தால் கொல்லப்படுவதும்; மக்கள் உரிமைப் போராளிகள் – சாயிபாபா மற்றும் புரட்சி எழுத்தாளர், வழக்குரைஞர்கள் – சிறைப்பட்டிருப்பதையும் இணைத்துக் காட்சிப்படுத்திய நாடகமும், பெய்ஸ்-அகமது பெய்ஸின் கவிதைக்கு இசை அமைத்த பாடலும், இக்பால் பானுவின் குரலில் துணிச்சலாக இசைக்கப்பட்ட அந்த நாளைய மதவெறி எதிர்ப்புப் பாடலும், பால்ராப்சனின் OLD MAN RIVER REEPS ROLLING பாடலை – ஆங்கிலம், வங்காளி, அசாமி பாடல்களாக வடிவமைத்ததை வரிசையிட்டுப் பாடினார் அருணோதயா குழுவின் ஒற்றைப்பாடகர்.  அவை அற்புதப் படிமங்களாக புரட்சிகர சர்வதேச உணர்வைக் கிளர்த்தின.

நிகழ்ச்சியின் இறுதிப்பாடல்களாக, முத்தாய்ப்பாக அமைந்தவை ம.க.இ.க.-வின் ”ஹைட்ரோ கார்பன்” எதிர்ப்பு சூஃபி வடிவப்பாடலும், காஷ்மீர் மீதான அடக்குமுறை எதிர்ப்புப் பாடலும் ஆகும்.

படிக்க:
பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் ! தோழர் மருதையன்
♦ முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!

பாசிசம் என்றும் வென்றதில்லை; பாட்டாளிச் செம்படை தோற்றதில்லை. அது எண்ணற்ற தியாகங்களை ஈந்து உலக மக்களைக் காத்து வந்ததே வரலாறு. ஐதராபாத் (FAHPO) அரங்க நிகழ்ச்சி வரப்போகும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன் அறிவிப்பதாக இருந்தது.

தகவல் : ம.க.இ.க., தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க