அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 37

அத்தியாயம் ஏழு | பெஞ்ஜமின் பிராங்க்ளினும் அட்லாண்டிக் மாகடலுக்கு அப்பால் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியும்

அ.அனிக்கின்

18-ம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர்களில், எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிந்தனையாளர்களில் கடைசியாக வந்தவர்களில் ஒருவர் பிராங்க்ளின். வட அமெரிக்காவில் அவர் வகித்த பாத்திரத்தை அறிவு வளர்ச்சிக்குக் காரணமான மாபெரும் முன்னோடிகளோடு ருஷ்யாவில் லொமனோசொவ், இங்கிலாந்தில் நியூட்டன், பிரான்சில் டெகார்ட் போன்றவர்களோடு ஒப்பிடுவது அவசியம்.

அவர் ஒரு பெளதிக விஞ்ஞானி; நவீன மின்னியல் விஞ்ஞானத்தைப் படைத்தவர்களில் ஒருவர். தம் காலத்திய சமூகத்தின் புதிய, முதலாளித்துவ ஜனநாயகக் கருத்துக்களைத் தற்சிந்தனையோடு எடுத்துக் கூறிய தத்துவஞானி, எழுத்தாளர். அவர் அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர். அமெரிக்கப் புரட்சி மற்றும் புதிய அரசின் விடுதலைப் போராட்டத்தின் அதிகத் தீவிரமான தலைவர்களில் ஒருவர். புத்தகம் அச்சிடுவதே தன்னுடைய முக்கியமான தொழில் என்று கருதிய அந்தப் புகழ்மிக்க அமெரிக்கரின் ஈடுபாடுகள், பணிகள் ஆகியவற்றைப் பற்றிய இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.

அவர் தன்னுடைய தத்துவஞான, அரசியல் பணிகளின் சுற்றுவட்டத்துக்குள்ளாக அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றியும் எழுதினார். அமெரிக்கா என்ற புதிய உலகத்தில் பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடிகளில் அவரும் ஒருவர்.

அவர் வாழ்க்கையும் எழுதிய நூல்களும்

பிராங்க்ளின் எழுதிய சுயசரிதை குறிப்பிடத்தக்க வகையிலிருக்கின்ற வரலாற்று, இலக்கிய ஆவணமாகும். அவர் தன்னுடைய எழுபத்தொன்பதாம் வயதில் இந்தப் புத்தகத்தை எழுதினார். அதில் ஒரு அத்தியாயத்தில் தன்னுடைய நீண்ட வாழ்க்கையில் தனக்குத் தொடர்ச்சியாக மகிழ்ச்சி இருந்ததைப் பற்றி எழுதுகிறார். குடிமகன், அறிஞர், தனிப்பட்ட மனிதர் – இப்படி ஒவ்வொரு வகையிலும் அவர் மகிழ்ச்சியோடிருந்தார். அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதி முழுவதும் வட அமெரிக்காவின் சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அந்த இலட்சியம் அவருடைய வாழ்க்கைக் காலத்திலேயே வெற்றியடைந்தது. அவர் விஞ்ஞானத்துக்குச் செய்த சேவைகளை உலகம் முழுவதும் அங்கீகரித்தது. அவர் சொந்த வாழ்க்கையிலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியோடிருந்தார் (அவருடைய ஒரே மகனான வில்லியம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில் தன் தகப்பனாருக்கும் தாய்நாட்டுக்கும் விரோதமான எதிரிகளை – ஆதரித்ததை நாம் ஒதுக்கி விடலாம்).

பெஞ்ஜமின் பிராங்க்ளின்

ஒரு ஏழைப் பயிற்சியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய பிராங்க்ளின் தன்னுடைய வாழ்க்கையின் இறுதியில் பெரும் பணக்காரராக இல்லாவிட்டாலும் சுமாரான பணக்காரராக இருந்தார். அவருக்குப் பல வீடுகளும் அதிகமான நிலங்களும் சொந்தமாக இருந்தன. அந்தக் காலத்தில் குறிப்பாக அமெரிக்காவில் செல்வத்தின் முக்கியமான சின்னங்கள் இவைதான்.

பிராங்க்ளின் புதிய உலகத்தைச் சேர்ந்தவர். அங்கே, மார்க்ஸ் எழுதியிருப்பது போல், ”முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் அவற்றின் பிரதிநிதிகளோடு சேர்த்து இறக்குமதி செய்யப்பட்டு வரலாற்று மரபு இல்லாததை ஈடு செய்யும் விதத்தில் மிக அதிகமான இயற்கை வளத்தைக் கொண்டிருந்த மண்ணில் அவை வேகமாக விளைந்தன”. (1)

இங்கிலாந்திலிருந்த மத, அரசியல் ஒடுக்குமுறையைத் தாங்க முடியாமல் ஓடி வந்த பரிசுத்தவாதிகள் அங்கே முதன் முதலாகக் குடியேறியவர்களில் பெரும்பான்மையினர். அவர்களின் வழிவந்தவர்கள் கன்னி நிலங்களைப் பயிரிட்டு விவசாயத்தைத் தொடங்கினார்கள்; வெகு சீக்கிரத்தில் நகரங்களில் கைத்தொழில்களைத் தொடங்கினார்கள். அவர்களும் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களைப் போலவே பணக் கடவுளை வழிபட்டார்கள் – ஆனால் அந்த முறை வேறுவிதமாக இருந்தது.

அவர்கள் வரலாற்றிலேயே மிகவும் முந்திய, அதிக முழுமையான முதலாளித்துவ ஜனநாயகத்தை ஏற்படுத்தினார்கள்; தனிநபர் சுதந்திரம், நிர்வாக அதிகாரத்தைத் தேர்ந்தெடுத்தல், சுதந்திரமான நீதித்துறை ஆகிய கருத்துக்களை அவர்கள் ஆதரித்தார்கள். ஆனால் இந்த ஜனநாயகத்தில் சட்டத்துக்கு முன்பு சம்பிரதாய ரீதியான சமத்துவம் அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மூடிமறைக்கும் திரையாகப் பயன்பட்டது; அங்கே சம்பிரதாயத்துக்கு விரோதமான கருத்துக்கள் ஒடுக்கப்பட்டன.

படிக்க:
அண்டப் புளுகு … ஆகாசப் புளுகு … ஆர்.எஸ்.எஸ். புளுகு !
♦ வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்

இந்தப் புதிய அமெரிக்க இனத்தில் செல்லரித்துப் போன நிலப்பிரபுத்துவ உயர் வகுப்பு இல்லை; அவர்கள் பட்டங்களையும் குடும்பங்களின் தனிச் சலுகைகளையும் ஏளனம் செய்தார்கள். ஹெர்மன் மெல்வில் எழுதிய இஸ்ரேல் பாட்டர் என்ற நாவலின் கதாநாயகனான அமெரிக்கன் விவசாயியாகவும் மாலுமியாகவும் இருப்பவன். அமெரிக்க சுதந்திரப் போர் நடைபெறும் காலத்தில் இங்கிலாந்துக்கு வந்தான். அவனால் ஆங்கில அரசவையினரைப் பார்த்து “சர்” என்று சொல்ல முடியவில்லை; மூன்றாம் ஜார்ஜ் மன்னரிடம் பேசும் பொழுது “மாட்சிமை பொருந்திய” என்று சேர்த்துச் சொல்ல முடியவில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பென்சில்வேனியாவின் நில உடைமையாளர்களும் மஸாசூ ஸெட்ஸ் வணிகர்களும் ஆணவத்தில் ஆங்கிலப் பிரபுக்களுக்குச் சற்றும் குறைந்தவர்களல்ல.

USAமேற்கு ஐரோப்பாவோடு ஒப்பிடுகின்ற பொழுது அமெரிக்காவில் மத சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் நிலவும் என்று நம்பப்பட்டது. ஆனால் பிராங்க்ளின் பிறப்பதற்குச் சில வருடங்களுக்கு முன்பு அவருடைய சொந்த ஊரான போஸ்டன் நகரத்துக்கு மிக அருகேயுள்ள சேலம் என்ற இடத்தில் “சூனியக்காரிகள்” விசாரிக்கப்பட்டு சிரச் சேதம் செய்யப்பட்டனர். அங்கே வெவ்வேறு மதப்பிரிவுகளைப் பின்பற்றியவர்களும் ஒருவரோடொருவர் கூடி வாழவில்லை; தனித்தனியே பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; அவர்களுடைய வாழ்க்கையில் மதகுருக்கள், திருச்சபை வட்டாரத்தைச் சேர்ந்த பணக்காரர்களின் ஈவிரக்கமற்ற ஆதிக்கம் எப்பொழுதும் மேலோங்கியிருந்தது. மதப் பாசாங்கில் அமெரிக்கர்கள் ஆங்கிலேயர்களையும் மிஞ்சிவிட்டனர். அவர்கள்தான் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்து முதலில் போராடியவர்கள்; ஆனால் அவர்கள் ஈவிரக்கமற்ற வகையில் சிவப்பு இந்தியர்களை அழித்தார்கள்; தெற்கு மாநிலங்களில் அடிமைமுறையை ஏற்படுத்தினார்கள்.

இந்த விவசாயிகளும் கைவினைஞர்களும் அடிப்படையில் சுதந்திரத்தை நேசிப்பவர்களாக, வீரமானவர்களாக, சுறுசுறுப்பானவர்களாக இருந்தார்கள். இப்படிப்பட்ட பின்னணியிலிருந்து தான் பிராங்க்ளின் வந்தார். அந்தத் தேசியம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது; அதன் சிறப்புமிக்க அம்சங்கள் எல்லாவற்றையும் பிராங்க்ளின் ஈர்த்துக் கொண்டார். ஆனால் தன்னுடைய நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்பாடுகளையும் அவருடைய ஆளுமை பிரதிபலித்தது. அவர் ஆழமான ஜனநாயக உணர்வோடு செல்வம் மற்றும் அதிகாரத்தை மதிப்பதையும் இணைத்துக் கொண்டார். அவர் வறட்டுத்தனமான மதக் கோட்பாடுகளையும் சடங்குகளையும் எதிர்த்தார். ஆனால் “தெய்வம் இருப்பதையும், அவர் உலகத்தைப் படைத்து அதைத் தன்னுடைய பேரருளால் காப்பதையும் ஒருபோதும் சந்தேகித்ததில்லை” என்று அவரே எழுதியிருக்கிறார். அவர் அடிமை முறையை எதிர்த்தார், தேசிய சுதந்திரத்துக்காகப் போர் புரிந்தார். எனினும் அவர் ஆங்கில- சாக்ஸானிய இனத்தின் விசேஷமான குறிக்கோளில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் எளிமையானவர், எல்லோரும் விரும்பும் தன்மைகளைக் கொண்டவர்; ஆனால் பல சந்தர்ப்பங்களில் குறுகிய மனம் படைத்த ஆசானாகவும் சிறு திறமான அறநெறியாளராகவும் அவருடைய வாசகர்களுக்கும் கேட்போருக்கும் தோன்றினார்.

படிக்க:
காஷ்மீர் : நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்
♦ சிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் !

பெஞ்ஜமின் பிராங்க்ளின் 1706-ம் வருடத்தில் போஸ்டன் நகரத்தில் ஒரு பரிசுத்தவாதியின் மகனாகப் பிறந்தார். அது பெரிய குடும்பம். தகப்பனார் சோப்பு, மெழுகுவத்திகள் தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு எவ்வகையிலும் முறையாகக் கல்வி கற்பிக்கப்படவில்லை; அவர் பெட்டியைக் காட்டிலும் கூட அதிகமான அளவுக்கு சுயமாகக் கல்வி கற்றவர். ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் இரண்டு வருடங்கள் படித்த பிறகு அவருடைய மூத்த சகோதரன் (அவருடைய தகப்பனாரின் முதல் மனைவியின் மகன்) நடத்தி வந்த அச்சகத்தில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டார். “… என்னுடைய சகோதரர் உணர்ச்சிவசப்பட்டவர்; என்னைப் பல முறை அடித்திருக்கிறார்; நான் அதைப் பற்றி மிகவும் ஆத்திரப்பட்டதுண்டு. அவர் என்னைக் குரூரமாகக் கொடுமைப்படுத்தியதுதான் சர்வாதிகாரத்தைக் கண்டு அருவருப்படையுமாறு எனக்கு போதித்தது என்று நினைக்கிறேன்; என் வாழ்நாள் முழுவதும் இந்த உணர்ச்சி என்னிடம் நிலைத்துவிட்டது.”(2)  

இந்தக் காலத்தில்தான் ஆற்றல், முன்முயற்சி, அசாதாரணமான உழைப்பு, அறிவு வேட்கை போன்ற அவருடைய தனித்தன்மை மிக்க பிற அம்சங்கள் வளர்ச்சியடைந்தன. அவர் ஏராளமான புத்தகங்களைப் படித்தார்; புலமைமிக்கவர்களோடு நெருங்கிப் பழகினார்; அவர் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். மதத்தைப் பற்றி ஓரளவுக்கு விமரிசனத்தன்மை கொண்ட அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். அவர் தனது பதினேழாவது வயதில் குடும்பத்தையும் சொந்த ஊரையும்விட்டு வெளியேறினார். பென்சில்வேனியாவில் கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினரான குவேக்கர்களின் தலைநகரமாக இருந்த ஃபிலடெல்ஃபியாவுக்குச் சென்றார். அங்கே ஒரு அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு அச்சுக் கலையை சிறப்பாகப் பயில்வதற்கும் அச்சு இயந்திரங்கள் வாங்குவதற்காகவும் இங்கிலாந்துக்குப் போனார். அவருக்குப் பணமும் சிபாரிசுக் கடிதங்களும் அனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள்; ஆனால் இந்த வாக்குறுதிகள் பேச்சோடு நின்றுவிட்டன.

பிராங்க்ளின் இங்கிலாந்தில் ஒன்றரை வருட காலத்துக்கு மேல் இருந்தார்; லண்டனிலுள்ள அச்சகங்களில் வேலை செய்து அச்சுக் கலையில் அறிவும் அனுபவமும் பெற்றார். 1726-ம் வருடத்தில் இளைஞர் பிராங்க்ளின், தன்னுடைய வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடு ஃபிலடெல் ஃபியாவுக்குத் திரும்பினார். அவரிடம் பணம் இல்லை; இங்கிலாந்திலிருந்து புத்தகங்களையும் அச்சு மாதிரிகளையும் கொண்டு வந்திருந்தார்; எல்லாவற்றிலும் மிக முக்கியமானது என்னவென்றால் அவரிடம் கருத்துக்களும் தன்னம்பிக்கையும் எதிர்காலத்தைப் பற்றி அதிகமான நம்பிக்கையும் நிறைந்திருந்தன.

அவர் முன்முயற்சி உடைய அச்சிடுபவர் என்ற முறையில் ஃபிலடெல்ஃபியாவில் வெகு சீக்கிரத்தில் கௌரவமான அந்தஸ்தைப் பெற்றார்; அந்த நகரத்தின் குடிகளில் மிகவும் சிறந்தவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். அவரைச் சுற்றி விஞ்ஞானத்திலும் இலக்கியத்திலும் புதிய முயற்சிகளில் அக்கறை கொண்ட இளைஞர் குழு ஏற்பட்டது. அவர் தன்னுடைய வாழ்க்கை, நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் கடைசி நிமிடம் வரையிலும் கறாராக ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொண்டார். அவர் சோர்விலா ஊக்கத்தோடு ஈடுபட்ட ஒவ்வொரு துறையையும் குறித்துச் சொல்வது கூட இயலாது.

அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை நிறுவினார்; முதல் விஞ்ஞானக் கழகத்தையும் பொது நூலகத்தையும் அமெரிக்காவிலேயே முதன்முறையாகத் தீயணைப்புப் படையையும் ஏற்படுத்தினார். அமெரிக்காவில் முதன் முதலாக தேசிய செய்தித்தாள் நடத்தியதும் அவரே. தபால் இலாகாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1754-ம் வருடத்தில் நடைபெற்ற அல்பனி காங்கிரசில் அவர் தன்னுடைய மாகாணத்தின் சார்பில் கலந்து கொண்டார். அமெரிக்காவிலுள்ள எல்லாக் குடியேற்றங்களையும் இங்கிலாந்தின் அரசரின் கீழ் – ஆனால் ஓரளவு சுயாட்சி அதிகாரத்தோடு ஒன்றுபடுத்தக் கூடிய திட்டத்தை முன்வைத்தார். ஆனால் லண்டனில் இருந்தவர்கள் அமெரிக்கக் குடியேற்றங்கள் ஒன்று சேர்ந்து விடுமோ என்று மிகவும் அதிகமாக பயந்து கொண்டிருந்த காரணத்தால் அவருடைய திட்டம் நிராகரிக்கப்பட்டது.

பிராங்க்ளின் இயற்கை விஞ்ஞானங்களைப் பற்றி அதிகமான அக்கறை எடுத்துக் கொண்டார்; அவர் தன்னுடைய கைகளைக் கொண்டு பல காரியங்களைத் திறமையாகச் செய்து கொள்ளக் கூடியவர். அவர் பூகம்பங்களின் தன்மையைப் பற்றி ஆராய்ந்தார்; நுட்பமான அமைப்புக் கொண்ட எரியுலையைக் கண்டுபிடித்தார். 1743-ம் வருடத்தில் மின்சாரத்தை உபயோகப்படுத்தும் சில பரிசோதனைகளைக் கண்டார். அந்தக் காலத்தில் ஊர் ஊராகச் சென்று வேடிக்கை காட்டுபவர்கள் இத்தகைய வித்தைகளைச் செய்வதுண்டு. அவர் இந்தப் பரிசோதனைகளில் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டார்; உடனே தனக்கு வழக்கமான உற்சாகத்தோடும் வேகத்தோடும் அவற்றைச் செய்தார்; ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்குள் நிலைமின் இயல் சம்பந்தமான ஆயிரக்கணக்கான பரிசோதனைகளைச் செய்தார்; இவை அந்தக் காலத்துக்கு அதிகமான நுணுக்கமும் திறமையும் கொண்டிருந்தன. அவர் தன்னுடைய பரிசோதனைகள் மூலம் நிலைமின் இயலுக்கு அடிப்படை அமைத்தார். அவர் மின்சாரத்தின் ஒருமைத் தத்துவத்தை உருவாக்கினார்; நேர், எதிர் மின்பொறி ஆகிய கருத்துக்களை நுழைத்தார் (அவருக்கு முன்பு இரண்டு விதமான மின்சாரம் இருக்கிறது என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்), பிராங்க்ளின் மின் உராய்வினால் தான் மின்னல் ஏற்படுகிறது என்பதை நிரூபித்தார்; வானவெளி மின்சார நிகழ்வை விளக்கினார்; இடிதாங்கியைக் கண்டுபிடித்தார்.

1757-ம் வருடத்தில் பிராங்க்ளின் பென்சில்வேனியாவின் (பிறகு மற்ற மாநிலங்களின்) பிரதிநிதியாக இங்கிலாந்தின் அரசாங்கத்தோடு பேசுவதற்காக இங்கிலாந்துக்குப் போனார். அடுத்த முப்பது வருடங்களின் பெரும் பகுதியை அவர் ஐரோப்பாவில் கழித்தார். முதலில் இங்கிலாந்திலும் பிறகு பிரான்சிலும் இருந்தார்; இரண்டு தடவைகள் மட்டுமே தாய் நாட்டுக்குத் திரும்பினார். இந்தக் காலகட்டத்தில் அவர் ராஜியவாதியாக, மூத்த அரசியல் தலைவராக, அரசியல் எழுத்தாளராகப் பெரும் புகழ் பெற்றார். ”தாய் நாட்டுக்கும்” அமெரிக்கக் குடியேற்றங்களுக்கும் யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமென்று அவர் பல வருடங்களாகப் பாடுபட்டார், பிரிட்டிஷ் பேரரசுக்குள் சுயாட்சி அந்தஸ்துக் கிடைப்பதற்கு வழிகளைத் தேடினார். ஆனால் இங்கிலாந்து எத்தகைய சலுகைகளையும் கொடுக்க மறுத்தது. இனி கலகத்தைத் தவிர வேறு வழியில்லை. 1775-ம் வருடத்தில் யுத்தம் வெடித்தது.

அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் பிரதானமாக டி. ஜெபர்சனால் எழுதப்பட்டது என்பது நமக்குத் தெரியும்; ஆனால் அதில் பிராங்க்ளினுடைய கைவண்ணமும் உண்டு. அந்த வருடத்தின் இலையுதிர் காலத்தில் புரட்சி செய்திருக்கும் குடியேற்றங்களின் பிரதிநிதியாகக் காங்கிரஸ் அவரை பிரான்சுக்கு அனுப்பியது; அப்பொழுது தான் பிறந்திருந்த குடியரசுக்கு பிரான்சின் இராணுவ, பொருளாதார உதவி மிகவும் அவசியமாக இருந்தது. அவர் பல நெருக்கடிகளையும் சமாளித்து பிரான்சுடன் இராணுவக் கூட்டணியை ஏற்படுத்தினார். யுத்தம் இங்கிலாந்துக்கு பாதகமான வகையில் திரும்பியது. 1783-ம் வருடத்தில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் சுதந்திரத்தை அங்கீகரித்தது.

பிராங்க்ளின் 1790-ம் வருடத்தில் மரணமடைந்தார். அவர் கடைசியாக எழுதி வெளிவந்தது அடிமை வர்த்தகத்தைக் கண்டித்து ஒரு செய்தித்தாளின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடிதம் அவர் மரணமடைவதற்கு இருபத்து நான்கு நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. அவர் தன்னுடைய பிற்கால வாழ்க்கை முழுவதும்-பென்சில்வேனியா மாநிலத்தின் தலைவர் என்ற முறையிலும் 1787-ம் வருடத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு மாநாட்டின் பிரதிநிதி என்ற முறையிலும் அடிமை முறையை எதிர்த்துப் போராடினார். கடைசிக் காலத்தில் அவர் எழுதிய இலக்கிய வடிவம் அதிகமான தனிச்சிறப்பைக் கொண்டிருக்கிறது. அவர் எழுதிய காரசாரமான, சிறு அங்கதக் கட்டுரைகள் ஊசி போலக் குத்தின.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) K. Marx, A Contribution to the Critique of Political Economy, Moscow, 1970, p. 55.

(2)  B. Franklin, The Autobiography and Other Writings, N.-Y., 1961, | p. 33.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க