மரவள்ளி… புட்டு… வேர்க்கடல…ய்…! மாநகரத்து நடைபாதையில் கிராமத்து வாசனை!

சென்னை தி. நகர் பேருந்து நிலையம். அருகிலேயே ரெங்கநாதன் தெரு இருப்பதால், ஒருவருக்கொருவர் மோதாமல், இடிக்காமல் சர்வ சாதாரணமாக நடைபாதையில் நடந்து போய்விட முடியாது. அதற்குத் தனித்திறமை வேண்டும். அந்த இடத்தில் சகலரும் விரும்பிச் சாப்பிடும் கிராமத்து திண்பண்டத்தை விற்கும் உழைப்பாளி ஜோடியைப் பார்க்க முடியும்.

நடைபாதையில் திண்பண்டங்கள் வியாபாரம் செய்யும் வடிவம்மாள் – ஆறுமுகம் காதல் தம்பதியினர்.

வெடித்து மலர்ந்திருக்கும் மரவள்ளிக் கிழங்கு, வேகவைத்த வேர்க்கடலை. மேலும் தேங்காய், சர்க்கரை கலந்த சிவப்புப் புட்டரிசி. அந்தப் பக்கமாகச் செல்வோர், அவசர நடையிலும் இந்தத் தின்பண்டத்தைப் பார்த்ததும் சட்டென பிரேக் போட்ட மாதிரி நின்று, பழைய பள்ளிக்கூட நினைவுக்குச் சென்று வருவார்கள்.

10 ரூபாயை நீட்டி விருப்பமானதை வாங்கிக் கொண்டு, நடையை கட்டுகின்றனர் பாதசாரிகள். பெரும்பாலும் கிராமத்து வாசனை மாறாதவர்கள், தயக்கமே இல்லாமல் இயல்பாக சிரித்தபடி வாங்கிக் கொள்கிறார்கள். நகர்ப்புறத்து பெண்களும், இளசுகளும் ஓரக்கண்ணால் பார்த்தபடி அதை விட்டுப் போகவும் மனதில்லாமல், பார்க்காதது மாதிரி பார்த்துக் கொண்டே கடக்கிறார்கள்.

புட்டரிசி வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே உழைப்பாளி ஜோடியிடம் பேச்சு கொடுத்தோம். அவர்கள் நம்மிடம் இயல்பாக பேச ஆரம்பித்தவுடன், அவர்களை கலாய்க்க ஆரம்பித்தோம்.

“எந்த முதலும் போடாமல் இவ்வளவு முக்கியமான இடத்தில், இவ்வளவு பெரிய வியாபாரம் செய்கிறீர்களே, இதற்கு ஜி.எஸ்.டி, இன்கம் டாக்ஸ் எல்லாம் கட்டுகிறீர்களா என்று உங்களை சோதிக்க வந்துள்ளோம்.” என்றோம்.

அவர்களும், “ஆமா…மா…, வா … வா… வந்து செக் பண்ணு. பணத்த எடுத்தா எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்துட்டுப் போ” என்று ஏகத்துக்கும் நம்மை ஓட்டினார்கள்.

படிக்க:
சரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை
♦ ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ

“எவ்வளவு வருசமா இந்த வியாபாரம் செய்கிறீர்கள்? இதுவரை எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறீர்கள்?” என்றோம்.

அதற்கு அந்த வயதான ஜோடியின் குடும்பத்தலைவரான ஆறுமுகம், “நான் சிந்தாதிரிப்பேட்டை பொறுக்கி. எங்க அம்மா, ‘டேய் தறுதல எங்கடா போனே’ன்னுதான் என்னைய ஆசயா கூப்பிடுவாங்க. கொஞ்சம் வளர்ந்த பிறகு, அப்படியே மாட்டு புரோக்கராகி தமிழ்நாட்டுலேயே தலைகீழா சுத்துனேன். ஆந்திரா, கேரளா பக்கம்கூட போயிருக்கேன். நல்ல பணம். அப்போ தமிழ்நாட்டுல இருக்குற எல்லா பேங்குலயும் என் கையெழுத்து இருக்கும்” என்றார்.

கொஞ்சம் கிண்டலாக, “ஏன் பேங்குக்குக்கூட கடன் கொடுத்தீர்களா” என்றோம்.

அவர், “இல்ல, இல்ல… எம்ஜியார் பீரியடுல விவசாயிகளுக்கு மாட்டு லோன் கொடுத்தாரு. அப்ப பேங்க் மேனேஜருங்க அந்த மாடுகள நான்தான் வாங்கிக் கொடுத்தேன்னு எங்கிட்டே கையெழுத்து கேட்டாங்க. காசா பணமா… சும்மா கையெழுத்துத்தானேன்னு சரஞ்சரமா போட்டுக் கொடுத்தேன். அதெல்லாம் ஒரு காலம்.

இவளகூட லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிட்டேன். நான் பொறுக்கியா அலையிறேனுன்னு என்னோட மாமன், பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிட்டான். விடுவேனா தூக்கிகிட்டுப் போயி தாலி கட்டிட்டேன். கல்யாணம் கட்டுன புது ஜோர்ல ஒரு படம் விடுறதில்ல. மெட்ராஸ்ல இருக்குற எல்லா தியேட்டருக்கும் போயிருக்கோம். பாக்காத படமே கிடையாது, அப்படி ஊர் சுத்துவோம். அப்புறம் குழந்தைங்க பொறந்துச்சு, எல்லாம் அடங்கி போயிருச்சு.

எனக்கும் வயசாக வயசாக பல நோய்ங்க வந்துடுச்சு. முதல்ல ஹார்ட், அப்புறம் எர்னியா (இரணியல்) கம்ப்ளய்ண்டுன்னு ஒவ்வொன்னா வர ஆரம்பிச்சிடுச்சு. தண்ணி அடிக்கிறத விட்டுட்டு சிகரெட் மட்டும் புடிச்சிட்டிருப்பேன். ஒரு நாள் ஜிஎச் பெரிய டாக்டரு பக்கத்துல செக்கப்புக்கு உக்காரும்போது, ‘டேய் மரியாதயா எழுந்து வெளியே போ… இவன வெளியே தள்ளுங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டாரு. ஏன்னா என்மேலே அவ்வளவு சிகரெட் கப்பு. ஹார்ட் பிரச்சினைன்னு சொல்லிட்டு சிகரெட் கப்போட போனா டாக்டர் சும்மா இருப்பாரா. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. அதிலேருந்து சிகரெட்ட விட்டுட்டு, இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்.

இப்போவும் இந்த நோயோடுதான் பஸ்ல ஏறி இறங்கிக்கிட்டிருக்கேன். குறைஞ்சது ஒரு நாளைக்கு 50 பஸ்சாவது ஏறுனாத்தான், 100 பாக்கெட் ஓட்ட முடியும். அப்பத்தான் ஒரு 300 ரூபாயாவது பார்க்க முடியும். இங்கே இவ கடையிலேயே (நடைபாதை) உக்காந்த மாதிரி வியாபாரம் பாத்துக்குவா. எதோ எங்க செலவ பாத்துகிணு யாருகிட்டேயும் கை நீட்டாம கவுரவமா வாழுறோம்” என்றார்.

“இந்த வயசான காலத்துல பஸ்சில ஏறி இறங்குறது ஆபத்து இல்லையா!” என்றோம்.

“உயிருக்கு ஆபத்துன்னு, வயிறு பசிக்காது இருக்குமா! அதயும் சந்திச்சுத்தான் ஆகணும். டிரைவரு, கன்டக்டருங்க எனக்கு ரொம்ப ஒத்தாசயா இருப்பாங்க. வண்டி எடுக்கப் போறாங்கன்னு பதட்டத்தோடு எறங்குனாகூட, ‘நைனா பாத்து இறங்கு’ன்னு வாஞ்சையா சொல்வாங்க. கீழே எறங்குன பிறகுதான் வண்டிய ஸ்பீடா எடுப்பாங்க. எல்லாருமே மரியாதையா நடந்துக்குவாங்க. நான் வேர்க்கடலை கொடுத்தாக்கூட சும்மா வாங்க மாட்டாங்க. அவங்களோட ஒத்தாசயாலத்தான் எம் பொழப்பும் போகுது” என்றார்.

படிக்க:
சென்னை கோயம்பேடு பழச்சந்தை – படக்கட்டுரை !
♦ சிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை !

“மரவள்ளி, கடலை, சிவப்பரிசி புட்டு போன்றவற்றை எங்கே வாங்குவீர்கள்? எப்படி தயார் செய்கிறீர்கள்” என்று கேட்டபோது,

“விடியற்காலை 4 மணிக்கு எழுந்து டிவிஎஸ் ஃபிப்டியை ஓட்டிகிட்டு கோயம்பேடு போயி சரக்கு வாங்கி காலை 6 மணிக்கெல்லாம் திரும்பிடுவேன். வயசானதுனால கண்ணு ரெண்டும் சரியா தெரியாது. மூனு அடிக்கு அப்பால் இருக்குற எந்தப் பொருள் தெரியாது. உங்கக்கிட்டே கூட ஏதோ குத்து மதிப்பாத்தான் பேசிகிட்டிருக்கேன். ஏதோ, பழக்கப்பட்ட ரோட்டுலயே போயி வர்றதுனால நிதானமா வீடு வந்து சேந்துடுறேன். அதுக்குப் பிறகு அவளோட வேல.

பொருள் எல்லாம் பிஞ்சு பொறுக்கி எடுத்துட்டு சுத்தம் பண்ணி, அலசி, கிருஷ்ணாயில் ஸ்டவ்ல வேக வைப்போம். இப்படியே 11 மணியாயிடும். வேல முடிஞ்சாதான் கால சாப்பாடே சாப்பிடுவோம். 12 மணிக்கு மேலே கௌம்பி வந்துடுவோம். நான் பஸ் வியாபாரத்த பாத்துக்குவேன், இவ கடை வியாபாரத்த பாத்துக்குவா.

உடம்பு கிடம்பு சரியில்லன்னா வேலைக்கு வர முடியாது. எம் பையன்தான் சோறு எடுத்தாந்து கொடுப்பான். எனக்கு மொத்தம் ஏழு புள்ளைங்க, அதுல ரெண்டுதான் நின்னது. பையன் ஒன்னு, பொண்ணு ஒன்னு. அதயும் கட்டிக் கொடுத்துட்டேன். அவங்களும் பக்கத்துலதான் 10 ரூபா பழக்கட போட்டிருக்காங்க. பேரப்புள்ளைங்க படிக்கிறாங்க” என்றார்.

ஆறுமுகத்தின் மனைவி வடிவம்பாளிடம், “வீட்டு வேலையை முடித்து இங்கே வந்து எப்படி வியாபாரமும் செய்கிறீர்கள்?” என்றோம்.

“நான் கடைக்கு லீவு விட்டாத்தான் அன்னிக்கு வீட்டுல சோறாக்குவேன். மத்த நாளெல்லாம் ஓட்டல் சோறுதான். பழகிபோயிடுச்சு. இவரும் ஒன்னும் சொல்ல மாட்டாரு. கொடுக்குறத சாப்பிடுவாரு. ஆசப்பட்டா ஒரு நாளைக்கு மீன் குழம்பு சோறு. ஒடம்பு மக்கர் பண்ணினா அன்னிக்கு தயிர் சோறுதான்.

பல நேரம் முட்ட புரோட்டா, சமோசான்னு வாங்கிச் சாப்பிட்டு அதோட சாப்பாட்ட முடிச்சுக்குவோம். இதுவற எனக்கு உடம்புக்குன்னு எதுவும் பெரிசா வரல. அப்படியே ஓடுது” என்றார்.

“தி.நகர் பகுதிக்கு வருபவர்களிடம் வியாபாரம் செய்வது ரொம்ப கஷ்டமாச்சே, எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்றோம்.

“சாதாரண ஜனங்க, பொருள் என்ன சின்னதா இருக்கு, கொஞ்சமா இருக்குன்னு கேப்பாங்க, ஆனா கண்டிப்பா வாங்கிடுவாங்க. ஆனா, படிச்சவங்க இருக்காங்களே… ‘ஒரே மண்ணா இருக்குதே, ஈ மொய்க்குதே, மூடி வக்கிறதில்லயா’ன்னு நோண்டி நோண்டி கேப்பாங்க. அதுல சில பேருதான் வாங்குவாங்க. சின்னப் பசங்க எப்போதுமே ‘ஆயா ஆயா’ன்னு கேட்டு வாங்கிப் போவாங்க. வியாபாரம்னா ஆயிரம் இருக்கும். எல்லாத்தயும் அனுசரிச்சுத்தான போகணும்” என்றார்.

“உங்களுக்கு நிறைவேறாத ஆசை எதுவும் இருக்கா?” என்றோம்.

அவர், உதட்டைப் பிதுக்கியபடி, “அப்படியெல்லாம் பெருசா எந்த ஆசயும் இல்ல; சாப்பிட கொஞ்சம் சோறும், போட்டுக்க துணியும் கெடச்சா போதும். உழைக்கும் போதே இந்த உயிரு போயிடணும், யாருக்கும் பாரமா இருக்க விரும்பல…” என்று சொல்லிக்கொண்டே, ஒரு கையில் வேர்க்கடலை பாக்கெட்டுகளையும் மறு கையில் புட்டுத் தாம்புலத்தையும் சுமந்து சென்றார்.

அந்த இடத்தைக் கடந்து வெகு நேரமாகிவிட்டது. ஆனாலும், இந்த உலகத்தின் மூச்சுக் காற்றாய் ஆறுமுகத்தின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

3 மறுமொழிகள்

 1. அழகான காதல் ஜோடி. அளவான உரையாடல்களுடன் மிக நேர்த்தியாக புகைப்படக் கட்டுரை எடுக்கப்பட்டுள்ளது.

  வாழ்த்துக்கள்!!!!

 2. சாமான்ய மக்களின் வாழ்க்கையை மிக எதார்த்தமாக,நேர்த்தியாக அணுகி கட்டுரையாக வெளியிட்டுள்ள வினவுக்கு நன்றி.
  இதை படிக்கும்போது அவர்களுடனே பயணிப்பது போல இருக்கிறது.
  வாழ்துக்கள் வினவு…

 3. சர்வதேசிய,இந்திய,தமிழக அரசியல்,போராட்டங்களை மட்டுமே பார்த்து வந்த வினவில் சமீபமாக மருத்துவம்,மக்களின் வாழ்க்கை முறைகள்,கல்வி,வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளின் கட்டுரைகளை படிக்கும்போது புத்துணர்வு பெறுகிறேன்.
  வினாவுக்கு நன்றி

Leave a Reply to சரவணன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க