பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 1

1943-ம் ஆண்டு கோடைகாலம். வெக்கை மிகுந்த பகல். முன்னேறிச் சென்ற சோவியத் சேனை டிவிஷன்களின் வண்டிகளால் தடம் பட்டிருந்த போர்முனைப் பாதையில், பண்படுத்தப்படாமல் சிவப்புக் களைச் செடிகள் செழித்து மண்டியிருந்த விசாலமான வயலின் ஊடாக முனைமுகத்தை நோக்கி விரைந்தது ஒரு பழைய லாரி. நொடிகளில் அது அசைந்தாடி எகிறிக் குதித்தது, அதன் மரச்சட்டங்கள் பொருந்திய அற்றலைந்த பின் பகுதி கடகடத்தது. அடிபட்டு, புழுதி படிந்திருந்த அதன் விளிம்பில் வெள்ளைக் கோடுகளும் “போர்க்களத் தபால்” என்ற குறிப்பும் அரிதாகவே கண்ணுக்குப் புலப்பட்டன. அது கிளப்பிய சாம்பல் நிறப் புழுதிப் படலம் பிரமாண்டமான வால் போல, இறுக்கம் நிறைந்த அசைவற்ற காற்றில் மெதுவாக மிதந்தவாறு அதன் பின்னே நீண்டது.

கடிதங்கள் அடங்கிய கோணிப் பைகள் செம்மச் செம்ம நிறைந்திருந்த அதன் பின்பகுதியில் புதிய செய்தித்தாள் கட்டுகளின் மேல் சாமான்களுடன் அசைந்தாடியவாறு உட்கார்ந்திருந்தார்கள் இரண்டு படைவீரர்கள். கோடைகால உடுப்புக்களும் நீல ரிப்பன்கள் சுற்றிய தொப்பிகளும் அணிந்திருந்தார்கள் அவர்கள். அவர்களில் இளையவன் விமானப்படை சீனியர் சார்ஜென்ட் என்பது அவனுடைய புத்தம் புதிய, கசங்காத பதவிச் சின்னங்களிலிருந்து தெரிந்தது. ஒடிசலான வடிவமைந்த மேனியும் வெண்முடியும் கொண்டவன் அவன். அவனுடைய முகம் பெண்ணினது போன்ற மென்மை உள்ளதாக இருந்தது. அதன் வெண் தோல் வழியே இரத்தம் ஒளிர்வது போலத் தோன்றியது. பார்வைக்கு அவனைப் பத்தொன்பது வயதுக்கு மதிப்பிடலாம். அவன் பற்களின் இடுக்குவழியே துப்பினான், கரகரத்த குரலில் வசவு மொழிகள் பகர்ந்தான், விரல் பருமன் சிகரெட் சுருட்டினான், எதுவுமே தனக்கு ஒரு பொருட்டில்லை போலப் பாவனை செய்தான் – இவ்வாறு அனுபவம் முதிர்ந்த படை வீரனாகத் தோற்றமளிக்க எல்லா வகையிலும் முயன்றான். ஆயினும் இப்போது தான் முதல் தடவையாக அவன் முனை முகத்துக்குப் போகிறான் என்பதும் தெளிவாகப் புலப்பட்டன.

அவனுடன் பயணம் செய்த சீனியர் லெப்டினன்டோ, போர்முனை அனுபவம் மிக்கவன் என்பதைத் தவறின்றி ஊகிக்க முடிந்தது. முதல் பார்வைக்கு அவன் வயது இருபதுக்கு மேல், இருபத்து நான்குக்கு உள்ளாகவே இருக்கும் என்று தோன்றியது. ஆனால், வெயிலிலும் காற்றிலும் அடிபட்டிருந்த அவன் முகத்தையும், கண்களின் அருகிலும் நெற்றியிலும் வாயின் பக்கங்களிலும் நுண்ணிய இழைகளாக விழுந்திருந்த சுருக்கங்களையும், சிந்தனையில் ஆழ்ந்த, களைத்த கருவிழிகளையும், உற்றுக் கவனித்த பின் அவனது வயதில் இன்னும் பத்து ஆண்டுகளைக் கூட்டலாம் போலிருந்தது. அவன் பார்வை எதிலும் – நிலைக்காமல் சுற்றிலும் வழுகிச் சென்றது.

செய்தித்தாள் கட்டுக்களைப் பரப்பி வசதியாகச் சாய்ந்து – உட்கார இடம் செய்து கொண்டு சீனியர் லெப்டினன்ட் உறங்கிவழிந்தான். பொற் கூட்டெழுத்துச் சின்னம் பொறித்த விந்தையான கனத்த கருங்காலி கைத்தடி மீது மோவாயை அழுத்தியவாறு கண்ணயர்வதும், எப்போதாவது இந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டவன் போல மகிழ்ச்சியுடன் சுற்றிலும் கண்ணோட்டுவதும், வெதுவெதுப்பான நறிய காற்றை ஆர்வத்துடன் மூச்சிழுத்து நெஞ்சில் நிறைத்துக் கொள்வதுமாக இருந்தான் அவன். பாதையிலிருந்து எங்கேயோ ஒரு புறத்தில் தொலைவில் அரிதாகவே தென்பட்ட இரண்டு மங்கிய புள்ளிகளை அவன் திடீரென்று கண்ணுற்றான். கவனமாக உற்று – நோக்கிய பின் அவை விமானங்கள் என்பது தெரிந்தது. ஒன்றையொன்று துரத்தி விளையாடுவது போல, அவசரமின்றிக் காற்றில் நீந்தின அவை. அப்போது சீனியர் லெப்டினன்ட் சுறுசுறுப்பு அடைந்து அந்த மங்கிய புள்ளிகளிலிருந்து பார்வையை அகற்றாமலே, காரோட்டி அறை முகட்டை உள்ளங்கையால் தடதடவென்று தட்டினான்.

“பகை விமானங்கள்! லாரியை ஒருபுறம் திருப்பி ஒதுக்கு!” என்று கத்தினான்.

அவன் எழுந்து நின்று, பழக்கமான பார்வையால் அந்த இடத்தைச் சீர்தூக்கிப் பார்த்து ஓர் ஓடையின் களிமண் கரைச்சரிவைக் டிரைவருக்குக் கையால் காட்டினான். பல்வகைக் காட்டு மலர்ச் செடிகள் அங்கே பூத்து மண்டியிருந்தன.

படிக்க:
உழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி !
ஜம்மு காஷ்மீர் : இரும்புத்திரையை கிழிக்கும் இளைஞர் !

இளையவன் அசட்டைத் தோன்ற முறுவலித்தான். விமானங்கள் ஒரு தீங்கும் செய்யாமல் எங்கோ தொலைவில் கரணமடித்துக் கொண்டிருந்தன. ஏக்கந்ததும்ப வெறிச்சோடிக் கிடந்த வயல்களுக்கு மேலே பிரமாண்டமான வால் போலப் புழுதிப் படலத்தைக் கிளப்பியபடி சென்ற தன்னந்தனி லாரி மேல் அவற்றுக்கு எவ்வித அக்கறையும் இல்லை போலத் தோன்றியது. ஆனால் அவன் எதிர்த்து எதுவும் சொல்வதற்குள் காரோட்டி லாரியை பாதையிலிருந்து திருப்பிவிட்டான். பின்பகுதி தடால் தடால் என்று தூக்கிப்போட, லாரி ஓடைக் கரைக்கு விரைந்தது.

சீனியர் லெப்டினன்ட் அக்கணமே லாரியிலிருந்து இறங்கி, புல்லில் உட்கார்ந்து பாதையைக் கூர்ந்து நோக்கலானானன்.

“அட நீங்கள் என்ன இப்படி… ” என்று அவனைக் கேலியுடன் பார்த்தவாறு சொல்லத் தொடங்கினான் இளையவன்.

அதற்குள் சீனியர் லெப்டினன்ட் புல்லில் விழுந்து, “படு!” என வெறிக் கூச்சலிட்டான்.

நொடிப் போதில் விமான எஞ்சின்களின் இறுக்கம் நிறைந்த முழக்கம் கேட்டது. இரண்டு பிரமாண்டமான நிழல்கள் காற்று அதிர்ந்து நடுங்க, விந்தையாகத் தடதடத்தவாறு அவர்களது தலைகளுக்கு நேர் மேலாக விரைந்தன. இளையவனுக்கு இதுவும் பெருத்த அச்சந்தருவதாகப்படவில்லை. சாதாரண விமானங்கள், ஒரு வேளை நம்மவை போலும் என்று நினைத்தான் அவன். சுற்றுமுற்றும் பார்வை செலுத்தியவன், பாதையின் அருகே குப்புறக் கிடந்த துருப்பிடித்த லாரி ஒன்று புகைந்து மளமள வென்று மூண்டு எரிவதைக் கண்டான்.

குண்டால் தகர்க்கப்பட்ட எரிந்து கொண்டிருந்த லாரியை நோட்டமிட்டு, “அட பயல்கள், எரிகுண்டால் தாக்குகிறார்கள். லாரிகளை வேட்டையாடக் கிளம்பியிருக்கிறார்கள்” என்று வறட்டுப் புன்னகை செய்தான்.

“வேட்டை விமானங்கள்” என்று புல்லில் செளகரியமாக நீட்டிப்படுத்தபடி அமைதியாகக் கூறினான் சீனியர் லெப்டினன்ட். “நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். அவை இதோ திரும்பும். தாழப் பறந்து பாதையைக் கண்காணிக்கின்றன. லாரியை இன்னும் அப்பால் கொண்டுபோ, தம்பீ. அதோ அந்த பிர்ச் மரம் வரையிலாவது.”

ஜெர்மானிய விமானிகள் தங்கள் திட்டத்தை அப்போதுதான் அவனுக்குத் தெரிவித்தது போல அவ்வளவு நிச்சயத்துடனும் அலட்சியமாகவும் இவ்வாறு சொன்னான் சீனியர் லெப்டினன்ட். சார்ஜென்ட் மிகவும் கூச்சப்பட்டானாயினும் அசட்டையாகக் கூறினான்:

“நாம் மேலே போவதே நல்லது. நேரத்தை வீணாக்குவது எதற்காக? தூக்கில் மடிய விதிக்கப்பட்டவன் மூழ்கிச் சாக மாட்டான் என்று ருஷ்யப் பழமொழி உண்டே”

நிம்மதியாகப் புல்லைக் கடித்துக் கொண்டிருந்த சீனியர் லெப்டினன்ட், கோபத் தோற்றம் காட்டிய கரு விழிகளில் அரிதாகவே புலப்பட்ட நேயம் ததும்பும் கேலிப் புன்னகையுடன் இளையவனை ஏறிட்டுப் பார்த்தான்.

“கேள், நண்பா. இந்த மட்டிப் பழமொழியை, நேரம் கடந்து விடுவதற்குள் மறந்துவிடு. இதையும் கேள், சீனியர் சார்ஜன்ட். போர்முனையில் மேலதிகாரிகள் சொற்படி நடக்க வேண்டும் என்பது சட்டம். ‘படு’ என்று அவர்கள் உத்தரவிட்டால் படுக்க வேண்டியது தான்.”

இப்படி சொல்லிவிட்டு அவன் புளியாரைக் கீரையின் சாறு நிரம்பிய தண்டைப் புல்லில் கண்டெடுத்து அதன் நார்த்தோலை நகங்களால் உரித்து அகற்றிவிட்டு, அதைக் கறுக்குக் கறுகெனக் கடித்துச் சுவைத்துத் தின்னலானான். மறுபடி விமான எஞ்சின்களின் கடகடப்பு கேட்டது. இறக்கைகள் இடமும் வலமுமாக முறையே சாய, பாதைக்கு மேலே தாழப் பறந்து சென்றன சற்றுமுன் வந்த அதே விமானங்கள். அவற்றின் இறக்கைகளது மஞ்சட் பழுப்பு வண்ணப்பூச்சும், வெண்கறுப்புச் சிலுவைகளும், கிட்ட இருந்த விமானத்தின் உடலில் தீட்டப்பட்டிருந்த இஸ்பேட்டு ஆஸின் சித்திரமும் துலக்கமாகத் தெரியும் படி அவ்வளவுதாழ்வாக பறந்தன அவை. சீனியர் லெப்டினன்ட் இன்னும் சில புளியாரைத் தண்டுகளைச் சோம்பலுடன் கிள்ளி எடுத்துக் கொண்டு கடிகாரத்தைப் பார்த்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க