• கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள்!
  • ஆயிரங்கால் மண்டப திருமணம் – கின்னசு நாட்டியாஞ்சலி
    கணக்கில்லா வசூல் வேட்டை தீட்சிதர்கள் மீது சி.பி.ஐ ரெய்டு நடக்குமா?
  • தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு!

ஆர்ப்பாட்டம்

நாள்: 14-10-2019
திங்கள் காலை 10 மணி,
காந்தி சிலை, சிதம்பரம்.

ன்பார்ந்த பெரியோர்களே!

சிதம்பரம் நடராசர் கோவிலில், தீட்சிதப் பார்ப்பனர்களின் பித்தலாட்டம் என்பது நூற்றாண்டு கால வரலாறு உடையது. கடந்த 11-9-2018 அன்று நடைபெற்ற ஆடம்பர திருமணத்திற்காக கையூட்டாக தங்கம், பட்டு புடவை, பட்டு வேஷ்டி மற்றும் பல கோடிகள் தீட்சிதர்களிடம் கைமாறி உள்ளது என சிதம்பரம் மக்கள் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார்கள். காவல் துறையிடமும், அரசிடமும் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல தரப்பினர் புகார் மனு அளித்து வருகின்றனர். இதுவரை தீட்சிதர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

பொற்கூரைமீது ஏறி

கோவிலில் திருட்டுத்தனமாக வெளியூர் ஆட்களை தங்கவைத்து ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் ஐந்து நட்சத்திர விடுதி போல ஆடம்பர ஏற்பாடு செய்துள்ளனர். பொற்கூரை மீது ஏறி வேலை ஆட்கள் அலங்கரித்துள்ள புகைப்படத்தை பார்க்கும்போது பக்தர்களின் நெஞ்சம் பதறுகிறது. திருமண வீட்டார் தந்த பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வந்த பிற பக்தர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளி தீட்சிதர்களே நீதிபதிகளாக :

நடராசர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது என பத்திரிகை அடித்துதான் சிவகாசி தொழிலதிபர்கள் வீட்டுத் திருமணம் நடைபெற்றுள்ளது. கவனக்குறைவாக நடந்துவிட்டது என ஆயிரம்கால் பித்தலாட்டம் செய்கின்றனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்று தோற்று போனதால் பட்டு தீட்சிதர் என்பவரை இரண்டு மாதம் சஸ்பெண்ட் செய்து ஆயிரத்து ஒரு ரூபாய் அபராதம் விதித்து தீட்சிதர்களே தீர்ப்பளித்துள்ளார்கள். குற்றவாளியும் தீட்சிதர்கள், விசாரணை அதிகாரியும் நீதிபதியும் தீட்சிதர்களே, என்ன கேலிகூத்து? அரசுக்கு கொஞ்சம்கூட சொரணை வரவில்லை. சினிமா கொட்டகைக்கு உள்ள கட்டுப்பாடு கண்காணிப்பு சிதம்பரம் நடராசர் கோவில் மீது அரசுக்கு இல்லை.

மெகாவசூல் கின்னசு நாட்டியாஞ்சலி

ஏற்கனவே நடராசர் கோவில் உள்ளே தீட்சிதர்கள் பீர், பிராந்தி, சிக்கன், மட்டன் அருந்தினார்கள். பெண்கள் சகவாசம், மர்ம மரணங்கள், சாமி நகை களவு, கோவில் சொத்தை முறைகேடாக விற்றது, கோவில் வருமானத்தை யாருக்கும் கணக்கு காட்டாமல் தங்களுக்குள் பிரித்து கொள்வது,  வெளியூர் பக்தர்களிடம் பணம் பறிப்பது. பணம் தரமுடியாத பக்தர்களை அவமானப்படுத்துவது என்ற பல குற்றச்சாட்டுக்கள் இன்னும் முடிவு காணாமல் உள்ளது. கோவில் உள்ளே பல ஆண்டுகள் நடந்து வந்த நாட்டியாஞ்சலி விழாவை, தீட்சிதர்கள் தங்கள் ஏகபோகத்தை நிறுவுவதற்காகவும் மெகா வசூல் செய்யவும் தடை செய்து தாங்களே நடத்தி வருகின்றனர்.

கோவில் வருமானம் – தீட்சிதர்களின் அண்ட புளுகு

சிதம்பரம் கோவிலின் ஆண்டு வருமானம் வெறும் ரூ. 30,000 மட்டுமே. கையிருப்பு வெறும் ரூ. 199 மட்டுமே என நா கூசாமல் தீட்சிதர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணையில் புளுகினார்கள். இதே கோவிலில் அரசு  உண்டியல்கள் வைத்ததில் வசூலான தொகை சுமார் இரண்டு கோடி ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை தீட்சிதர்களிடமே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்தனர். நடராசர் கோவிலில் பிரசாத கடை மட்டும் ஆண்டுக்கு 35 இலட்சத்திற்கு  ஏலம் போனது.  இன்று உண்டியல்கள் இல்லை, பிரசாதக் கடை ஏலம் இல்லை. வருகின்ற வருமானம் எவ்வளவு? என்பதை தமிழக அரசு மக்களுக்கு சொல்ல வேண்டும். இனியும் தீட்சிதர்கள் வசம் கோவில் நிர்வாகம் இருக்கக் கூடாது. சிதம்பரம் கோவிலை நிர்வகிக்கும் அருகதையை தீட்சிதர்கள் இழந்து பல காலம் ஆகிவிட்டது.

சிதம்பரம் கோவிலில் கட்டண விபரங்கள் அறிவிப்பு பலகையாக :

இனி சிதம்பரம் நடராசர் கோவிலில் தீட்சிதர்களால் வசூலிக்கப்படும் கட்டண விபரங்கள் வெளிப்படையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அனைத்திற்கும் இனி தீட்சிதர்களிடம் பக்தர்கள் ரசீது கேட்க வேண்டும். சிதம்பரம் நடராசர் கோவில் எந்த விதிமுறைகளின்படி எப்படி நிர்வாகம் செய்யப்படுகிறது? இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பு கட்டுப்பாடு என்ன என்பதை வாதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தீட்சிதப் பெண்கள், குழந்தைகளின் தனி நபர் சுதந்திரம் :

சிதம்பர நடராசர் கோவிலில் எத்தனை தீட்சிதர்கள் என்னென்ன பணிகள் செய்கிறார்கள். எந்த வேலைக்கு எந்த தீட்சிதர் பொறுப்பானவர்? இத்தகைய பணிகளுக்கு யாருக்கு எவ்வளவு சம்பளம் எடுத்துக் கொள்கிறார்கள். கோவிலின் மொத்த பணத்தையும் தீட்சிதர்கள் தங்களுக்குள் சமமாக பிரித்து கொள்கிறார்களா? அல்லது ஏமாளி தீட்சிதர்கள் இருக்கிறார்களா? கோவிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு அதன் வரவு செலவு கணக்கை தமிழக அரசு தணிக்கை செய்கிறதா? என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தீட்சிதர் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள்? தாங்கள் விரும்பியவரை திருமணம் செய்ய, விரும்பிய , படிப்பை படிக்க அவர்களுக்கு தனி நபர் சுதந்திரம் உண்டா? அல்லது சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கி மிரட்டப்படுகிறார்களா?. இவ்வாறான கேள்விகளுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.

சிதம்பரம் கோவில் நிலங்களை பராமரிக்கும் கோவில் தாசில்தார் கோவில் நிலத்திலிருந்து வரும் வருமானத்தின் மூலம் நடராசர் கோவிலின் மின்சார கட்டணத்தை இன்றுவரை செலுத்தி வருகிறார். தற்போது நடந்த ஆடம்பர திருமணத்தால் ஏற்படும் மின் செலவை யார் கட்டுவார்கள்.?

சிவனடியார் ஆறுமுகசாமி :

சிற்றம்பல மேடையில் அனைவரும் தேவாரம் பாடி வழிபட வேண்டும். தில்லைக் கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை பெரும் மக்கள் திரள் போராட்டத்தில் சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் வெற்றி அடைந்தோம். மறைந்த முதல்வர் ஜெயாவை சந்தித்து கெஞ்சியும், அரசியல் தரகன் சு.சாமியை வழக்கில் உள்ளே நுழைத்தும், உச்சநீதிமன்ற வழக்கில் தீட்சிதர்கள் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பற்ற இருமாப்பில் இருக்கிறார்கள்.

2008-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டுவதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை கோயிலில் அழைத்துச் செல்லப்படுகிறார். (கோப்புப் படம்)

அப்போதைய நமது மக்கள் போராட்டங்களுக்கு எதிராக பிராமணர் சங்கம், பா.ஜ.க விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி, ஆகிய அமைப்புகளை தங்களுக்கு ஆதரவாக களத்தில் இறக்கினர். இவ்வாறு அதிகாரத்திலும் அரசியலிலும் தீட்சிதர்களின் செல்வாக்குதான் இன்று வரை சிதம்பரம் கோவில் மீட்கப்படாமல் இருக்கிறது. கிரிமினல் ஊழல் மயமாக மாறி மக்களுக்கு விரோதமாக அனைத்திலும் செயல்படும் இன்றைய அரசு கட்டமைப்பு தீட்சிதர்களின் ஊழல் முறைகேட்டை,  கூட்டுக் கொள்ளையை தானாக தட்டி கேட்காது. மக்கள் போராடினால் மட்டுமே எதுவும் நடக்கும்.

சிதம்பரம் நகர மக்களே, பக்தர்களே ,

தீட்சிதர்களை கேள்வி கேளுங்கள், தில்லைக்கோவில் பொதுமக்கள் சொத்து நாம்தான் கண்காணிக்க வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சிற்றம்பல மேடையில் தமிழ் உரிமைக்காகவும், கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் தங்களின் ஆதரவுடன் நாங்கள் நடத்திய இடைவிடாத போராட்டம் தாங்கள் அறிந்ததே 14-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொள்ளுங்கள். நிதி உதவி செய்யுங்கள்.

பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம், நம்மோடு தொடங்கவுமில்லை, நம்முடன் முடியப்போவதும் இல்லை. சிதம்பரம் கோவில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து கோவில்களையும் அர்ச்சக பார்ப்பனர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

படிக்க:
தில்லைக் கோயில் தீர்ப்பு: பார்ப்பன “காப்” பஞ்சாயத்து!
தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

தில்லை நடராசர் கோவிலை கையகப்படுத்த தனிச்சட்டம் இயற்று!
கோவில் மூலம் ஆண்டுதோறும் முறைகேடாக பல லட்சம் வசூல் செய்து வரும் தீட்சிதர்களின் சொத்துக்கள் மீது விசாரணை நடந்தது!
சிதம்பரம் நடராசர் கோவில் வருமானம் வரவு செலவு மீது விசாரணை நடத்து!
நடராசர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடு!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

ஒருங்கிணைப்பு:
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 98423 96929, 98423 42583, 93600 61121.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க