உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 02

துரு துருவென்று செயல் புரியத் துடித்த சீனியர் லெப்டினன்ட் சாப்பாட்டு அறையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளைக் கடைசி வரை ஆர அமர இருந்து சாப்பிட பெத்ரோவை விடவில்லை. வழியே சென்ற பெட்ரோல் லாரியில் ஏறி உட்கார்ந்து அவர்கள் ஊருக்கு வெளியே காட்டோரமாக இருந்த விமான நிலையம் சென்றார்கள். ஸ்குவாட்ரன் கமாண்டர் காப்டன் செஸ்லோவுக்குத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அவர் பேசாவாயராக உர்ரென்றிருந்தார். ஆனால் மட்டுமீறிய நல்லியல்பு வாய்ந்தவர் என்பதைக் கண்டு கொள்ள முடிந்தது. பேச்சை வளர்த்தாமல் அவர், லாடவடிவில் அமைந்து முகட்டில் புல் பரப்பியிருந்த காப்பிடத்துக்கு அவர்களை இட்டுச் சென்றார். மெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது “லா-5” ரக விமானங்கள் அங்கே நின்று கொண்டிருந்தன. அவற்றின் வால்கள் மீது “11”, “12”, என்ற எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன. புதியவர்கள் அவற்றையே ஓட்ட வேண்டியிருந்தது. நறுமணமுள்ள பிர்ச் மரச் சோலையில் புட்கள் கூட்டாக இசைத்த கீச்சொலி விமான எஞ்சின்களின் பெரு முழக்கத்துக்கும் மேலாக ஆர்த்தது. புதியவர்கள் தங்கள் புதிய மெக்கானிக்குகளுடன் வார்த்தையாடி, ரெஜிமென்ட் வாழ்க்கை நிலவரங்களைக் கேட்டறிந்தவாறு, எஞ்சிய மாலை நேரத்தை இந்தக் காட்டில் கழித்தார்கள்.

பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரேயடியாக ஈடுபட்டு விட்டமையால், கடைசி லாரியில் அவர்கள் ஊர் திரும்பியபோது இருட்டிவிட்டது, மாலைச் சாப்பாட்டு நேரம் கடந்துவிட்டது. இதனால் அவர்கள் பெரிதும் வருந்தவில்லை. வழிச் சாப்பாட்டுக்காகத் தரப்பட்ட உணவுப் பண்டங்கள் அவர்களிடம் பத்திரமாக இருந்தன. இராத்தங்க இடம் பிடிப்பதுதான் கடினமாகத் தென்பட்டது. களைப் பூண்டுகள் அடர்ந்து ஆளரவம் அற்றிருந்த வெற்றுவெளிகளின் நடுவே பாலைவனச் சோலை போலத் திகழ்ந்த அந்தச் சிற்றூரில் இருவிமானப் படை ரெஜிமென்ட்டுகள் இருந்தன. அவற்றைச் சேர்ந்த விமானிகளும் அலுவலக ஊழியர்களும் அங்கே இருக்க இடமின்றி நெளிந்தார்கள். இருப்பிட வசதிப் பொறுப்பதிகாரி, பிதுங்கப் பிதுங்க நிறைந்து வழிந்த கிராம வீடுகளுக்குள் ஒவ்வொன்றாக நுழைந்து பார்த்தார். புதிதாகத் தங்க வருபவர்களைப் புகவிட விரும்பாத வீட்டுக்காரர்களுடன் சச்சரவிட்டார், வீடுகள் விருப்பப்படி நீட்டிக்கொள்ள வசதியாக ரப்பரால் கட்டப்படவில்லையே என்று தமக்குத் தாமே தத்துவ விசாரம் செய்தார், அப்புறம் எதிர்பட்ட முதல் “வீட்டுக்குள்” புதியவர்களைப் புகச் செய்தார்.

“இராப் பொழுதை இங்கே கழியுங்கள். காலையில் பார்ப்போம்” என்றார்.

அந்தச் சிறு குடிலில் ஏற்கனவே ஒன்பது ஆட்கள் அடைந்திருந்தார்கள். சிலர் கட்டில்களிலும் பெஞ்சுகளிலும் இடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் தரையில் தீனிப் புல்பற்றைகளைப் பரப்பி மலைக்கோட்டுகளை அவற்றின் மேல் விரித்து அருகருகாக முடங்கியிருந்தார்கள். தற்காலிகமாகத் தங்கியிருந்த ஒன்பது பேர் தவிர வீட்டுச் சொந்தக்காரியான கிழவியும் அவளுடைய வயது வந்த மகளும் வேறு தங்கி இருந்தார்கள். ருஷ்ய முறைப்படி அடுப்புக்கு உயரே அமைந்த பரணில் அவர்கள் இருவரும் படுத்திருந்தார்கள்.

புதியவர்கள் படுத்துறங்கும் இந்த எல்லா உடல்களையும் எப்படித் தாண்டிச் செல்வது என்று தெரியாமல் கணப்போது நிலைவாயிலில் தயங்கி நின்றிருந்தார்கள். அடுப்புப் பரண் மேலிருந்து கிழவியின் எரிச்சல் மண்டும் குரல் அவர்களை அதட்டியது:

“இடமில்லை! இடமே இல்லை! பார், செம்மச் செம்ம நிறைந்திருக்கிறது. விட்டத்தில் படுப்பீர்களா என்ன?”

பெத்ரோவ் தெருவுக்குத் திரும்பிச் செல்லத் தயராகக் கதவருகே அசட்டுப் பிசட்டென்று தயங்கி நின்றான். ஆனால் மெரேஸ்யெவா பதபாகமாக அடி வைத்து உறங்குபவர்களை மிதித்துவிடாதிருக்க முயன்றவாறு குடிலின் மறு பக்கத்திலிருந்த சாப்பாட்டு மேஜையை அணுகிவிட்டான்.

“அம்மா, எங்களுக்குச் சாப்பிட மட்டும் இடம் கிடைத்தால் போதும். பகல் பூராவும் நாங்கள் சாப்பிடவில்லை. ஒரு தட்டும் இரண்டு கோப்பைகளும் கிடைத்தால் நன்றாயிருக்கும், ஊம்? இராப் பொழுதை நாங்கள் வெளியே கழித்துக் கொள்வோம். உங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்த மாட்டோம். கோடை காலம் ஆயிற்றே” என்றான்.

கிழவி ஏதோ முணுமுணுத்தாள். ஆனால் அதற்குள் அவள் முதுகுக்குப் பின்னாலிருந்து யாருடையவோ இரண்டு சிறு வெறுங்கால்கள் வெளியே துருத்தின. கொடி போன்ற மெல்லிய ஓர் உருவம் பேசாமல் பரணிலிருந்து வழுகி இறங்கிற்று. தூங்குபவர்களுக்கு மேலே லாவகமாக உடலைச் சமப்படுத்திக் கொண்டு அறைக்கு வெளியே சென்று மறைந்தது. அடுத்த கணமே தட்டுக்களையும் மெல்லிய விரல்களில் கோத்த பல்வண்ணக் கோப்பைகளையும் எடுத்துக்கொண்டு திரும்பியது.

அவள் பத்து பன்னிரண்டு வயதுச் சிறுமி என்று பெத்ரோவுக்கு முதலில் தோன்றியது ஆனால் அவள் மேஜையை நெருங்கியதும் புகை படிந்த விளக்கின் மஞ்சள் ஒளி அவள் முகத்தை இருள் மங்கலிலிருந்து தெளிவாகப் புலப்படச் செய்தபோது அவள் பருவ மங்கை, அழகியவள், புத்திளமை முகையவிழும் வயதினள் என்பதை அவன் கண்டுகொண்டான். பழுப்பு நிற ஜாக்கெட்டும் நற்சணல் ஸ்கர்ட்டும், தலையையும் மார்பையும் மூடி, கிழவிகள் போல முதுகுப்புறம் முடிச்சிடப்பட்டிருந்த கிழிந்த தலைக் குட்டையும் தாம் அவளது வனப்பை வெகுவாகக் கெடுத்தன.

“மரீனா, மரீனா, வா இங்கே, இழிமகளே!” என்று பரணில் இருந்தபடி சீறினாள் கிழவி.

ஆனால் பெண் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. மேஜைமேல் துப்புரவான செய்தித்தாளை லாவகமாக விரித்தாள், பெத்ரோவைக் கடைக்கண்ணால் சட்டெனப் பார்த்துவிட்டு பாத்திரங்களையும் முள்கரண்டிகளையும் அதன் மேல் ஒழுங்காக வைத்தாள்.

“வயிராரச் சாப்பிடுங்கள். உங்களுக்கு எதையேனும் நறுக்கவோ சூடுபடுத்தவோ வேண்டுமோ ஒருவேளை? இதோ நொடியில் சூடுபடுத்திவிடுகிறேன்” என்றாள்.

“மரீனா, வா இங்கே!” என்றுக் கூப்பிட்டாள் கிழவி.

“அம்மாவை கவனிக்காதீர்கள். அவளுக்கு மனது கொஞ்சம் சரியாயில்லை. ஜெர்மானியர்கள் அவளைக் கிலி கொள்ளச் செய்து விட்டார்கள், ராத்திரி வேளையில் படை வீரர்களைக் கண்டுவிட்டால் போதும், என்னைப் பத்திரமாக மறைத்து வைப்பதே குறி ஆகிவிடுகிறாள். அவள் மேல் கோபித்துக் கொள்ளாதீர்கள். இரவு வேளையில் மட்டுமே இப்படி. பகலில் அவள் நல்லவள்” என்றாள் நங்கை.

மெரேஸ்யெவின் சாமான் பையில் இறைச்சிப் பணியாரமும் டப்பியிலிட்ட உணவுப்பண்டங்களும் மெலிந்த விலாக்களில் உப்புப் பூத்திருந்த இரண்டு பூவாளை மீன்களும் இராணுவ ரொட்டியும் இருந்தன. பெத்ரோவ் செட்டு குறைந்தவன் போலும். அவனிடம் இறைச்சியும் ரஸ்குகளும் மட்டுமே இருந்தன. மரீனாவின் சிறு கைகள் இவற்றை எல்லாம் கூறு போட்டு, நாவில் நீர் ஊறும்படி தட்டுக்களில் ஒழுங்காக வைத்தன. நீண்ட இமைமயிர்களால் மறைக்கப்பட்டிருந்த அவளுடைய மின் விழிகள் பெத்ரோவின் முகத்தை மறுபடி மறுபடி பார்த்தன. பெத்ரோவும் மறைவாக அவளை நோக்கலானான். இருவர் விழிகளும் சந்தித்த போது இருவரும் முகஞ்சிவந்து, களிப்புடன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்கள். தவிர இருவரும் மெரேஸ்யெவ் மூலமாகவே உரையாடினார்கள், தமக்குள் நேரில் பேசிக் கொள்ளவில்லை. அவர்களைப் கவனிப்பது மெரேஸ்யெவுக்கு வேடிக்கையாக இருந்தது. அதே சமயம் அவனுக்குச் சற்று ஏக்கமும் உண்டாயிற்று. அவர்கள் இருவரும் புத்திளைஞர்களாக இருந்தார்கள். அவர்களோடு ஒப்பிடுகையில் தான் கிழவன், களைத்துச் சோர்ந்தவன், நிரம்ப வாழ்ந்து விட்டவன் என்று அவனுக்குத் தோன்றியது.

“இந்தா அம்மா, மரீனா, வெள்ளரி ஊறுகாய் இருக்குமா?” என்று கேட்டான்.

“இருக்கும்” என்று மென்முறுவலுடன் விடையளித்தாள் அவள்.

“வெந்த உருளைக் கிழங்குகள் இரண்டொன்றாவது கிடைக்குமா?”

“கேளுங்கள் கிடைக்கும்.”

உறங்குபவர்களிடையே லாவகமாக அடிவைத்து, ஓசையின்றி, வண்ணத்திப் பூச்சி போன்று லேசாகத் துள்ளிச் சென்று மறுபடி மறைந்துவிட்டாள் அவள்.

படிக்க:
கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் !
ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை

“தோழர் சீனியர் லெப்டினன்ட், அவளிடம் இப்படிப்பேச உங்களால் எப்படி முடிகிறது? முன்பின் தெரியாத மங்கை, அவளை ஒருமையில் கூப்பிடுகிறீர்கள், வெள்ளரி ஊறுகாய் கேட்கிறீர்கள்….” என்று வியப்புடன் கேட்டான் பேத்ரோவ்.

அவன் பேச்சைத் தொடரும்முன் மெரேஸ்யெவ் கட கடவென்று சிரித்தான்.

“ஏன் தம்பீ, எங்கே இருப்பதாக உன் நினைப்பு? நாம் போர்முனையில் இருக்கிறோமா இல்லையா?” என்று சொல்லி விட்டுக் கிழவியை விளித்து, “பாட்டீ, முணுமுணுத்தது போதும். இறங்கி வா. சாப்பிடுவோம். ஊம்?” என்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க