தலையங்கம் : மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை!

ந்த வருட தீபாவளி போனசாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு வேலையிழப்பு என்ற தண்டனையையும்; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பங்குச் சந்தை சூதாடிகளுக்கும் வரிக் குறைப்பு, வரித் தள்ளுபடி உள்ளிட்டப் பலவிதமான சலுகைகளையும் வழங்கியிருக்கிறது, நரேந்திர மோடி அரசு.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த 34.94 சதவீத வரியை 25.17 சதவீதமாகக் குறைத்தது உள்ளிட்டுப் பெருநிறுவன வரிவிதிப்பில் செய்திருக்கும் மாற்றங்களின் மூலம் அந்நிறுவனங்களுக்கு 1,45,000 கோடி ரூபாய் பெறுமான வெகுமதி; ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகள்; ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தமது கட்டுமானத் திட்டங்களை முடிப்பதற்காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு; பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் அந்நிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரி நீக்கம்; தொழில் முனைவோர் மீது விதிக்கப்பட்டு வந்த ஏஞ்செல் வரி ரத்து எனச் சலுகைக்கு மேல் சலுகையாக அறிவித்து வருகிறது, மத்திய பா.ஜ.க. அரசு.

கார்ப்பரேட் வரிக் குறைப்பு மற்றும் வரித் தள்ளுபடிகளுக்கு அப்பால், வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி 5.15 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிக் கடன் கிடைக்காமல் தவிக்கக்கூடாது என்பதற்காகவே, பொதுத்துறை வங்கிகளுக்கு அரசின் நிதியிலிருந்து 70,000 கோடி ரூபாய் வரை கூடுதல் மூலதனமும் வழங்கப்பட்டிருக்கிறது.

stop PSU bank Stop merger
பொதுத்துறை வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் புதுதில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இந்தச் சலுகைகளையெல்லாம் மோடி அரசு புதிய நோட்டுக்களை அச்சடித்து வழங்கப் போவதில்லை. அரசின் கஜானாவிலிருந்துதான் தூக்கிக் கொடுக்கவுள்ளது. இதன் காரணமாக இந்த நிதியாண்டில் மட்டும் மைய அரசிற்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பு 2.85 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அபரிமிதமான சலுகைகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இந்த வரிக் குறைப்பால் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கிடைக்கும் பணத்தை அவர்கள் தொழிலில் முதலீடு செய்வார்கள், அதனால் வேலைவாய்ப்புகள் பெருகும்” என்று நியாயப்படுத்துகிறார்கள் நிபுணர்கள் என்ற போர்வையில் உலவும் முதலாளி வர்க்கக் கைத்தடிகள்.

உற்பத்தி செய்யப்பட்ட ஐந்து ரூபாய் பிஸ்கெட்டுகள்கூட விற்பனையாகவில்லை எனப் புலம்பிவரும் முதலாளித்துவ வர்க்கம், இம்மந்த நிலையிலும் புதிய முதலீடுகளைச் செய்ய முன்வரும் என முட்டாள்கூட நம்பமாட்டான். ஆனால், மோடி அரசோ கேப்பையில் நெய் வழியும் என நம்பச் சொல்கிறது.

இவ்வரி குறைப்புக்கு முன்பாக கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது 30 சதவீதம் அளவிற்கு வருமான வரி விதிக்கப்பட்டிருந்தது. அந்த முப்பது சதவீத வரி மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிகள், செஸ் வரிகளையும் சேர்த்து அவ்வரி 34.94 சதவீதமாக இருந்தது. எனினும், இந்தளவிற்கான வரியை கார்ப்பரேட் முதலாளிகள் ஒரு நாளும் முழுமையாகச் செலுத்தியதில்லை. அந்நிறுவனங்களுக்குச் சட்டப்படியாகவே வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளால் அவை குறைந்த வரியைத்தான் செலுத்தி வந்தன. இவ்வரிச் சலுகைகளால் சிமெண்ட் நிறுவனங்கள் 20.74 சதவீதமும், இரும்புப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் 17.80 சதவீதமும், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் 18 சதவீதமும்தான் வரி செலுத்தியதாக அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகைகளை, அதாவது கார்ப்பரேட் மானியத்தைக் கணக்கிட்டால் நமக்கு மயக்கமே வந்துவிடும். 2005 ஆண்டு பட்ஜெட் தொடங்கி 2013-  ஆண்டு பட்ஜெட் முடியவுள்ள ஒன்பது ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வருமான, சுங்க, உற்பத்தி வரித் தள்ளுபடிகளின் மொத்த மதிப்பு ஏறத்தாழ 36 இலட்சம் கோடி ரூபாய்” எனக் குறிப்பிடுகிறார், பத்திரிகையாளர் சாய்நாத்.

மோடி ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் (2015 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட மொத்த வருமான வரித் தள்ளுபடி 2.48 இலட்சம் கோடி ரூபாய்; அதே ஆண்டுகளில் வழங்கப்பட்ட சுங்க வரித் தள்ளுபடி 1.80 இலட்சம் கோடி ரூபாய்; உற்பத்தி வரித் தள்ளுபடி 1.50 இலட்சம்  கோடி ரூபாய்.

இவ்வளவு சலுகைகளையும் பெற்றுக்கொண்டு தமக்கு ஒரு பைசாகூட இலாபமே கிடைக்கவில்லை எனக் கணக்கு எழுதி வரியே கட்டாமல் தப்பித்துக்கொள்ளும் நிறுவனங்களும் உண்டு. அப்படி இலாபமே காட்டாத நிறுவனங்களும் குறைந்தபட்ச வரி கட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பையும் 18 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைத்திருக்கிறது, மோடி அரசு.

ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனமும் தான் போட்டிருப்பதாகக் கூறும் மூலதனத்தைவிடப் பல மடங்கு அதிகமாகவே வரிச் சலுகைகளையும் இலாபத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடுவதை நோக்கியா விவகாரம் அம்பலப்படுத்தியிருக்கிறது. வெறும் 600 கோடி ரூபாய் முதலீடு செய்து சென்னையில் தொழிலைத் தொடங்கிய பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அத்தேசங்கடந்த நிறுவனம், வரி ஏய்ப்புகளின் மூலம் மட்டும் 25,000 கோடி ரூபாயைத் தனது நாட்டிற்குக் கடத்திச் சென்றதாக வருமான வரித்துறையே குற்றஞ்சுமத்தியது.

6,100 கோடி ரூபாய் முதலீடு செய்து சென்னைக்கு அருகே ஒரகடத்தில் கார் தொழிற்சாலை அமைத்திருக்கும் நிஸான் நிறுவனம், மைய அரசும், தமிழக அரசும் தனக்கு 5,390 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சலுகைகளை அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாகவும், அதனை உடனே அளிக்க வேண்டுமெனக் கோரிப் பன்னாட்டு நடுவர் மையத்தை அணுகியிருக்கிறது. (திஇந்து, அக்.18)

இச்சட்டபூர்வ வரித் தள்ளுபடிகள், சலுகைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திவரும் பல்வேறு விதமான வரி ஏய்ப்புகளைக் கணக்கில் கொண்டால், அம்மோசடிகளின் மதிப்பு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டும். பல்வேறு நாடுகளில் கிளைகளைப் பரப்பிக்கொண்டு செயல்பட்டு வரும் நவீனத் தகவல் தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 50,000 கோடி டாலர் அளவிற்கு – ஏறத்தாழ 35 இலட்சம் கோடி ரூபாய் – வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக”க் குறிப்பிடுகிறார், ஜே.என்.யு. பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் ஜெயதி கோஷ். (திஇந்து, அக்.14)

சில ஆயிரம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மொய்யாக எழுதப்பட்டு வரும் இத்துணை இலட்சம் கோடி ரூபாய்களும் மைய, மாநில அரசுகளின் வழியாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களின் மூலமும்; விவசாயம், எரிபொருள், போக்குவரத்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மானியங்கள் மூலமும் மக்களைச் சென்றடைந்திருக்க வேண்டும்.

மோடி அரசோ இதனைத் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது. மக்களிடமிருந்து பிடுங்கி கார்ப்பரேட்டுகளின் கஜானாவை நிரப்புகிறது.

இப்பொருளாதார நெருக்கடி எந்தவொரு கார்ப்பரேட் முதலாளியையும் வாழ வழியற்ற நிர்க்கதியான நிலைக்குத் தள்ளிவிடவில்லை. தொழிலாளர்களும், சிறு விவசாயிகளும், சிறுதொழில் முனைவோரும்தான் அத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்திலும் ஒரு ரூபாய் அளவிற்குக்கூடச் சலுகை அளிக்க மோடி அரசு முன்வரவில்லை.

ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் தடவும் மோடியின் இந்த நடவடிக்கையைக் கூச்சமின்றி ஆதரிக்கும் பொருளாதார நிபுணர் கூட்டம், இச்சலுகைகளால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?” என நரித்தனமாகக் கேள்வி எழுப்புகிறார்கள். இதன் பொருள், இதனை ஈடுகட்ட மக்களை எந்தெந்த வழிகளில் கொள்ளையிடப் போகிறீர்கள்?” என்பதுதான்.

அக்கொள்ளைக்கான முன்னேற்பாடுகளில் மோடி அரசு ஏற்கெனவே இறங்கிவிட்டது என்பதே உண்மை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 1.45 இலட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகையை அளித்திருப்பதை ஈடுகட்டும் நோக்கத்தோடுதான் ரிசர்வ் வங்கியிடமிருந்து 1.76 இலட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை அபகரித்திருக்கிறது, மோடி அரசு. மேலும், இலாபமீட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்று ஒரு இலட்சம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. இது முதலாளிகளுக்கு இட்ட படையலை பொதுச்சொத்தை விற்று ஈடு செய்வதாகும்.

கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு வரிக் குறைப்பு அறிவித்த அதேநேரத்தில்தான் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரை அதிகரிக்கப்பட்டன. நல்ல வருமானம் தரக்கூடிய ரயில் வழித்தடங்களைத் தனியாருக்கு விற்கும் அரசின் முடிவு, மக்களை கார்ப்பரேட் முதலாளிகள் நேரடியாகக் கொள்ளையிடுவதற்குச் செய்து கொடுக்கப்படும் ஏற்பாடாகும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

எதிர்வரும் ஐந்து மாதங்களுக்குள் சந்தையிலிருந்து மேலும் 2.68 இலட்சம் கோடி ரூபாய் கடனாகப் பெறுவது, வங்கி சேமிப்புகளுக்கான வட்டியைக் குறைப்பது, சிறு சேமிப்புத் துறை மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலுள்ள மக்களின் சேமிப்பைக் கடன், பொதுத் திட்ட முதலீடுகள் என்ற போர்வையில் உருவிக் கொள்வது என இந்தக் கொள்ளை பல வழிகளில் நடைபெறவிருக்கிறது.

வரிக் குறைப்பால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைச் சமாளிக்க சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை வெட்டப் போவதில்லை” எனக் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பாசிஸ்டுகளின் மொழியில் இதன் பொருள் என்ன வென்பதை விளக்க வேண்டிய தேவையில்லை.

இப்பொருளாதார மந்த நிலையிலும் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வீதம் சரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே வருமான வரிச் சட்டம் திருத்தப்பட்டு, வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தை சூதாடிகள் மீது விதிக்கப்பட்டிருந்த சூப்பர் ரிச் வரி கைவிடப்பட்டிருக்கிறது.

மோடி அரசு மக்களுக்கு எதிரான, கார்ப்பரேட் அடிவருடி அரசு எனப் புரிந்துகொள்ளுவதற்கு இதனைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. இந்த அரசை மட்டுமல்ல, மக்களைக் கொள்ளையிட்டு முதலாளிகளின் இலாபத்தைப் பன்மடங்கு பெருக்கும் தனியார்மய  தாராளமயக் கட்டமைப்பையும் வீழ்த்துவதற்கு மக்களை அணிதிரட்டுவதுதான் நமது உடனடியாகக் கடமையாக அமைய வேண்டும்.

அவ்வாறு மக்கள் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காகவே, காஷ்மீரை முன்வைத்து தேசிய வெறியையும் ராமர் கோவிலை முன்வைத்து இந்து மதவெறியையும் கிளறிவிட்டு, மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களைத் திசைதிருப்ப முயலுகிறது, பார்ப்பன பாசிசக் கும்பல்.

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க