பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம்!!

முன்னாள் மைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுத் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியாவும், ராகுல் காந்தியும் பிணை பெற்றிருக்கிறார்கள். பிணை ரத்து செய்யப்பட்டால், திகார்தான்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் “சாரதா சிட்பண்ட்ஸ்”, “ரோஸ் வேலி” நிதி நிறுவன மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மைய அமைச்சர் ப.சிதம்பரம்.

தமிழகத்திலோ தி.மு.க. மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குகள் பாயப்போவதாகவும் முக்கியத் தலைவர் கைது செய்யப்படலாம் என்றும் எச்.ராஜா நேரடியாகவே மிரட்டுகிறார். கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் மீதான 2 ஜி ஊழல் வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, ப.சிதம்பரத்திற்குப் பிணை வழங்க மறுத்த நீதிபதி அஜய் குமார் குஹார் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர்கள், மற்ற எதிர்க்கட்சியினர் மீது ஊழல் குற்றஞ்சுமத்திக் கைது செய்வதன் மூலம், மோடியும் பா.ஜ.க.வும் தங்களை ஊழலுக்கு எதிரானவர்களாக, அதனைச் சகித்துக் கொள்ளாதவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

பா.ஜ.க., 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ஊழல் எதிர்ப்புப் போராளி என்ற முகமூடியை மாட்டிக்கொண்டுவிட்டது. தனது இப்புதிய வேடத்திற்கு 2ஜி அலைக்கற்றை விற்பனை வழக்கு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கு ஆகியவற்றை கார்ப்பரேட் ஊடகங்களின் ஒத்துழைப்போடு பயன்படுத்திக் கொண்டது.

“எனது அமைச்சரவையில் யாராவது ஒருவர் ஊழல் செய்தார் எனக் காட்ட முடியுமா?” எனச் சவால்விடுகிறார், மோடி. “தேனை எடுத்தவன் புறங்கையை நக்கத்தான் செய்வான்” என ஊழலுக்கு நியாயம் கற்பித்த காலம் பா.ஜ.க. ஆட்சியில் மலையேறிப் போய்விட்டதா, என்ன?

பா.ஜ.க. ஆட்சியில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழலும், கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது நடந்த நில பேர ஊழலும், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழலும் பா.ஜ.க.வின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் பழைய புராணங்கள். இனி உத்தமர் மோடி ஆட்சியில் நடந்து வரும் புதிய ஊழல் புராணத்திற்கு வருவோம்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார்.

அரசுத் திட்டங்களில் சட்டத்தை மீறிக் கையூட்டுப் பெற்றால்தானே ஊழல், ஊழலையே சட்டபூர்வமாக்கிவிட்டால்..? பா.ஜ.க. ஆட்சியில் நடப்பது இத்தகைய சட்டபூர்வ ஊழல்கள்தான். இதற்குப் பணமதிப்பழிப்பு தொடங்கி நாட்டின் சர்வதேச விமான நிலையங்களை இயக்கும் உரிமத்தை அதானிக்கு வழங்கியது வரையிலான மோடி அரசின் பல்வேறு பொருளாதார முடிவுகளை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்களையும் வழக்குகளையும் தனது அரசியல் இலாப நோக்கில்தான் நகர்த்தி வருகிறது, மோடி அரசு.

நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கத்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்ததாகப் பீற்றிக் கொண்டார் மோடி. ஆனால், அச்சட்டபூர்வ நடவடிக்கை, மோடியே கூறிய மூன்றரை இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்குத்தான் பயன்பட்டது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய சுமார் 8 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கடன்கள் பா.ஜ.க ஆட்சியின் கடந்த ஆறு ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  பா.ஜ.க. அளித்த இந்தச் சட்டபூர்வத் தள்ளுபடியின் காரணமாக இந்திய வங்கித்துறையே இன்று திவால் நிலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. அரசுக்கு நட்டமேற்படுத்திய 2ஜி விற்பனையை ஊழல் என்றால், இந்திய வங்கிகளைத் திவால் நிலைக்குத் தள்ளிய வாராக் கடன் தள்ளுபடியை என்னவென்பது?

படிக்க:
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
♦ கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !

காங்கிரசு அரசு 2ஜி அலைக்கற்றைகளைக் குறைந்த விலைக்கு விற்றதை ஊழல் எனச் சாடும் மோடி, தனது அரசு ரஃபேல் போர் விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்கியதைத் தேசப் பாதுகாப்பு என நியாயம் கற்பிக்கிறார். மாமியார் உடைத்தால் மண் குடமாம், மருமகள் உடைத்தால் பொன்குடமாம். ரஃபேல் கொள்முதல் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ப.சிதம்பரம், டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலரை ஊழல் வழக்கில் உள்ளே தள்ளிய மோடி அரசுதான், இந்திய வங்கிகளை ஏமாற்றிய விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் பத்திரமாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்தது. நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுத்தான் விமானம் ஏறியதாக வாக்குமூலமே அளித்தார் விஜய் மல்லையா.

தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு, எந்த முதலாளி எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார் என்பதைக் கணக்குக்காட்டத் தேவையில்லை என்பது சட்டபூர்வமானது. அதாவது இதுநாள் வரை கார்ப்பரேட் முதலாளிகள் இரகசியமாக ஓட்டுக்கட்சிகளுக்கு அளித்துவந்த கருப்புப் பண நன்கொடையை இத்தேர்தல் பத்திரங்கள் மூலம் சட்டபூர்வமாக்கினார் மோடி. இதற்குப் பிரதிபலனாக கார்ப்பரேட் முதலாளிகள் பா.ஜ.க.விற்குத் தமது நன்கொடைகளை வாரி வழங்கினார்கள்.

இது மட்டுமின்றி, ஊழல் ஒழிப்புச் சட்டத்திலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவந்ததன் மூலம் அதிகார வர்க்க ஊழல்கள் அம்பலமாவதையும் அதிகாரிகள் விசாரணைக் கூண்டில் ஏற்றப்படுவதையும் தடுத்தாண்டிருக்கிறார், உத்தமர் மோடி.

ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. முன்னெடுக்கும் நடவடிக்கைகளோ ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற தார்மீக நோக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. மாறாக, ப.சி. போன்ற தனது நேரடி அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும், எதிர்க்கட்சிகளை அடக்கி வாசிக்க வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ப.சிதம்பரத்தையும், டி.கே.சிவக்குமாரையும் உள்ளே தள்ளியிருக்கும் மோடியின் சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் எடப்பாடியையும், விஜயபாஸ்கரையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் இந்த அரசியல் சுயநலம்தான்.

தமிழகத்தில் கூவத்தூரில் தொடங்கிய எடப்பாடி அரசின் ஊழல்களும் முறைகேடுகளும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதை அம்பலப்படுத்தி செய்திகள் வெளிவராத நாட்களே இல்லை. இவற்றையெல்லாம் அமித் ஷா கண்காணித்துக் கொண்டிருப்பதாக கிசுகிசுச் செய்திகள் வெளிவருவதைத் தாண்டி, இவை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவுமில்லை. அ.தி.மு.க.விற்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளோ, ஒன்று ஊறுகாய்ப் பானைக்குள் உறங்குகின்றன; அல்லது குற்றவாளிகளுக்கு விசாரணை அமைப்புகளே நற்சான்றிதழ் கொடுத்து அவ்வழக்குகளை ஊத்தி மூடிவிடுகின்றன.

மணல் மாஃபியா சேகர் ரெட்டியுடன் தமிழகத் துணை முதல்வர் ஓ.பி.எஸ். (கோப்புப் படம்)

பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக, ஓ.பி.எஸ்.-இன் நெருங்கிய கூட்டாளி சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 34 கோடி ரூபாய் பெறுமான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. ஊரே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு அலைந்துகொண்டிருந்த வேளையில் சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களே ஊழல் –  முறைகேட்டின் அழிக்கமுடியாத சாட்சியமாக அமைந்தன.

இந்த வழக்கை விசாரித்து வந்த வருமான வரித்துறை இப்பொழுது சேகர்ரெட்டியை விடுவித்துவிட்டது. கட்டுக்கட்டாகக் கைப்பற்றப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் சேகர் ரெட்டி நேர்மையான வழியில் சம்பாதித்தவை என நற்சான்றிதழும் வழங்கிவிட்டது. இந்தத் தலைகீழ் மாற்றத்துக்குக் காரணம் என்ன? ரெய்டு நடந்தபோது ஓ.பி.எஸ். சசிகலா கோஷ்டியில் இருந்தார். அதன் பின் அவர் பா.ஜ.க.வின் தீவிர விசுவாசியாக மாறினார். அந்த மாற்றத்திற்குக் கிடைத்த மரியாதைதான் சேகர்ரெட்டி மீதான வழக்கு வாபஸ்.

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் கோஷ்டி, ஓ.பி.எஸ். கோஷ்டி என இரண்டாகப் பிரிந்து நின்றபோது, தினகரன் கோஷ்டிக்கு எதிராக வருமானவரிச் சோதனை நடத்தி, பணப்பட்டுவாடா செய்ததாகக் குற்றஞ்சுமத்தி வருமான வரித்துறையினர் கொடுத்த பட்டியலில் விஜயபாஸ்கருடன் எடப்பாடியின் பெயரும் இருந்தது. பா.ஜ.க. மத்தியஸ்தம் செய்துவைத்து, ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும் ஒன்று சேர்ந்த பின்னர் ஓ.பி.எஸ். துணை முதல்வரானார். ஆர்.கே. நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கிலோ வருமான வரித்துறை விசாரணை என்ற பம்மாத்துதான் நடந்து வருகிறது.

படிக்க:
குட்கா ஊழல் : தமிழகத்தை ஆள்வது அம்மாவின் ஆவிதான் !
♦ அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !

2016-ஆம் ஆண்டு சென்னை நகரில் பல இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் சென்னை போலீஸ் கமிசனர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களுக்கு குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்தது. அவ்வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விசாரணை என்ற பூச்சாண்டியைத் தாண்டி அந்த வழக்கில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் நடந்துவிடவில்லை.

அதேசமயம், தமிழ்நாடு முழுவதும் குட்கா விற்பனையோ கொடிகட்டிப் பறக்கிறது. இதற்கென அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீசார் என அனைத்து மட்டத்திலும் மாதம் ஒன்றுக்கு கொடுக்கப்படும் இலஞ்சம் மட்டும் 300 கோடி ரூபாய் என ஜூனியர் விகடன் இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ‘குட்கா’ விஜயபாஸ்கர்.

இவை தவிர, பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு முட்டை வாங்கியதில் ஊழல், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வில் ஊழல், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில் ஊழல், போக்குவரத்துத் துறையையே முற்றிலும் முடக்கிப் போட்டுள்ள போக்குவரத்து ஊழல், அரசு கட்டிடங்களுக்கு முறுக்குக் கம்பி வாங்கியதில் ஊழல், ஏரி மணல் அள்ளுவதில் ஊழல் என திரும்பிய பக்கமெல்லாம் ஊழல் செய்து தமிழகத்தையே கொள்ளையடித்து வருகிறது ஆளும் அ.தி.மு.க. இந்தக் கொள்ளைக்கூட்டத்தோடு கூட்டணி கட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க. மேலிடத்திற்கு, அ.தி.மு.க. கட்டும் கப்பம் எவ்வளவு என்பதுதான் இவ்வூழல்களில் பொதிந்திருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

அ.தி.மு.க. என்று மட்டுமல்ல, தனக்கு ஆதாயம் என்றால் எத்தகைய கிரிமினல் பேர்வழிகளையும் காத்து இரட்சிக்க பா.ஜ.க. தயங்குவதேயில்லை.

எடுத்துக்காட்டாக, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் நான்கு பேர் மீது வருமான வரித்துறைச் சோதனைகள் நடத்தப்பட்டு, வருமான வரி மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், அப்பொருளாதாரக் குற்றவாளிகளை மோடி எவ்விதக் கூச்சமும் இன்றித் தனது கட்சியில் சேர்த்துக்கொண்டு, நாடாளுமன்ற மேலவையில் தனது பலத்தைக் கூட்டிக்கொண்டுவிட்டார். இனி அந்த வழக்குகளின் கதி அதோகதிதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை உள்ளே தள்ளிய மோடி – அமித் ஷா இணை, பொருளாதாரக் குற்ற வழக்குகளைச் சந்தித்துவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகுல் ராயை பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக்கி அழகு பார்த்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான முகுல் ராய் பா.ஜ.க.விற்குத் தாவியதற்கு அளிக்கப்பட்டிருக்கும் பரிசுதான் இந்தத் தலைவர் பதவி.

எனவே, பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு என்பதெல்லாம் ஈயத்தைப் பார்த்துப் பித்தளை இளித்த கதை போன்றதுதானே தவிர, அக்கட்சிக்கோ, தனிப்பட்ட விதத்தில் மோடிக்கோ ஊழலை எதிர்த்து சவுண்டு விடுவதற்குக் கடுகளவும் தகுதி கிடையாது.

அழகு

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க