கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! பாதுகாப்போம் ! பரப்புவோம் ! – மதுரை அரங்கககூட்டம்

  • 2600 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியின் தொன்மை, தமிழ்சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு!
  • கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள்! பாதுகாப்போம்! பரப்புவோம்!

என்கின்ற தலைப்பில் கடந்த 21-ம் தேதி அன்று மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் மதுரையில் அரங்கக்கூட்டம் நடந்தது.

இந்நிகழ்விற்கு தோழர். ராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தன்னுடைய தலைமையுரையில்;

“அத்திவரதரை பார்க்க சென்றதை போன்று கூட்டம் கூட்டமாக தமிழக மக்கள் கீழடிக்கு சென்று பார்க்கின்றனர். ஒரு தொல்லியியல் ஆய்வை இவ்வளவு மக்கள் சென்று பார்ப்பது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தருகிறது. ஆனால் எதிரிகளுக்கு அச்சத்தை தருகிறது. ஏனென்றால் தமிழன் என்றாலே இந்துதான் என்று சொல்லித்திரியும் பார்ப்பன பிஜேபி கும்பலுக்கு அவர்களுடைய வேத மரபுக்கான எந்த ஆதாரமும் கீழடியில் கிடைக்க வில்லை எனும் போது அச்சம் வரத்தானே செய்யும். அதனால்தான் கீழடியை இந்த அரங்கக்கூட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சுவரொட்டியை ஒட்டிய தோழர்களை கூட காவல்துறையை விட்டு கைது செய்கிறது அரசு.

அதேபோல் பகவத்கீதையை அண்ணா பல்கலை பாடத்திட்டத்தில் சேர்த்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்க சென்ற போது காவல் ஆய்வாளர் “குரான், பைபிள் சேர்த்தால் இப்படி எதிர்ப்பீர்களா” என்று பிஜேபி உறுப்பினர் போல பேசி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தார். எனவே இந்து பார்ப்பன பாசிசம் நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் இந்த சூழலில்தான் கீழடியில் தொல் தமிழர் நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. எனவேதான் அத்தகைய அடையாள சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என்கிறோம்” என்று பேசினார்.

படிக்க :
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !
♦ திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். கதிரவன் “2600 வருடங்களுக்கு முன்னரே ஒரு நகர பண்பாட்டை தமிழர்கள் பெற்று இருந்தனர் என்பதை தமிழக மக்கள் அனைவரும் பெருமையோடு பார்க்கின்றனர். மேலும் அபோதே எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழகம் இருந்திருக்கிறது. எனவே மார்க்சியத்தின் அடிப்படையிலேயே பார்த்தால் கூட கீழடி போன்ற கண்டுபிடிப்பு ஆவனங்களை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழ் இலக்கிய ஆளுமைகள் அனைவரும் சொன்னதை போல சங்க கால இலக்கியங்கள் வெறும் கற்பனை அல்ல என்பது கீழடியின் மூலமாக இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்போது திடீரென மகாபாரத போரை பற்றி ஏதோ தடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெரிய அளவில் விளம்பரப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த கண்டுபிடிப்பை பற்றி இந்திய தொல்லியியல் ஆய்வு நிறுவனம் இதுவரை கால கண்டுபிடிப்பை உறுதி செய்யவில்லையாம். இப்படி உறுதிபடுத்தப்படாத தகவல்களை வைத்துக்கொண்டுதான் இவர்கள் கீழடியை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார்கள். வெறும் 50 சென்ட் நிலத்தில் மட்டும்தான் தற்போது கீழடியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 100 ஏக்கர் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பல் இந்த ஆய்வை தடுத்து நிறுத்தாமல் பார்த்துகொள்வது நம் அனைவரின் கடமையாகும்” என்று பேசினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்ததாக சிறப்புரையாற்றிய ஓய்வு பெற்ற‌ தொல்லியல் ஆய்வாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள் தன்னுடைய உரையில்

“தானும் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் மொழியின் வரலாறு கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்றுதான் இருந்தேன். ஆனால் அது சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஆசானாக நினைத்திருந்த திரு. நாகசாமி அவர்களால் தவறு என்பதை உணர்ந்தோம். அவர் தமிழ் மொழியை சமஸ்கிருந்தத்திற்கு அடுத்தநிலையில் வைத்து ஒரு புத்தகம் எழுதினார், அடுத்த சில வாரங்களில் அவருக்கு மத்திய அரசின் விருது கொடுக்கப்பட்டது. இப்போது அறிவுஜீவிகள் என்பவர்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றனர். விருதிற்காக தங்களையும் தங்களுடைய அறிவையும் விற்றுவிடுகிறார்கள்.

பொதுவாக பிராமி என்ற ஒரு எழுத்து வடிவ பெயரே கிடையாது, பம்மி என்றுதான் முன்பு இருந்தது அதுதான் மருவி பிராமி என்று வந்தது. அதே போல் அசோகர் காலத்தில் இருந்த எழுத்து வடிவங்களை பற்றி ஒரு பழைய புத்தகம் இருக்கிறது, அதில் திராவிடி என்ற எழுத்து வடிவமும் இடம் பெற்றிருக்கிறது. எனவே அப்போதே திராவிடி என்று தனி எழுத்து வடிவம் கொண்டிருந்ததை எதற்காக தமிழ் பிராமி என்று அழைக்க வேண்டும்? தமிழி என்றே அழைக்கலாம்.

படிக்க :
♦ கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !
♦ பாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் !

மேலும் ‘திராவிட நாகரிகம் அல்ல சுத்தமான தமிழர் நாகரிகம்தான்’ என்று சொல்பவர்களுக்கும் இதுவே பதில் கொடுத்துவிடுகிறது. தமிழ் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்றுதான். இதற்காகத்தான் தமிழ் மொழியின் மேல் குறிப்பாக வட இந்தியர்கள் மற்றும் பிராமணர்கள் வெறுப்பாக இருப்பதற்கு காரணம். ஏனென்றால் தற்போதையநிலையில் அவர்களுடைய அத்தனை புராண கதைகளையும் ஒவ்வொன்றாக பொய்யாக்கும் விதமாக தமிழ் சமூக வரலாறுகள் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழாய்வுகள் மூலமாக வெளிச்சத்திற்கு வருகின்றன” என்று பேசினார்.

மேலும் அவர் தன்னுடைய பணிக்கால அனுபவங்களிலிருந்து தமிழ் மற்றும் இந்திய சமூக வரலாறுகள் பலவற்றை குறிப்பிட்டு அதிலிருந்து கீழடியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக பேசியதும். இறுதியாக நடந்த கேள்வி பதில் கூட்டத்தில் கலந்துகொண்டோர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததும் ஒட்டு மொத்தமாக இந்திய சமூக மற்றும் எழுத்து வரலாற்றின் அடிப்படையை புரிந்து கொள்வதாக இருந்தது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.
தொடர்புக்கு : 97916 53200.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்