சென்னை

102-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை சென்னையில் நவம்பர் 7 அன்று புரட்சிகர அமைப்புகள் உற்சாகத்தோடு கொண்டாடினார்கள். மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இவ்விழா நகரின் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கலைக்கல்லூரி மாணவர்களின் ஓவியங்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தோழர்களின் பங்கேற்பில் அரங்கமெங்கும் உற்சாகம் நிரம்பி வழிந்தது.

”இன்று புதியக் கல்விக் கொள்கையால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதே போல் தொழிலாளர்கள் வேலை இழப்பு போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகினாலும் நமக்கான ஒரு விழாவாக இந்த நவம்பர் புரட்சி விழாவினை சிறப்பிக்க வந்திருக்கிறார்கள். அவர்களையும் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரை வரவேற்று மகிழ்கிறேன்” என்றார் வரவேற்புரை நிகழ்த்திய காஞ்சிபுரம் பகுதியின் பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் ரவீந்திரன்.

இவ்விழாவினை தலைமையேற்று நடத்திய பு.மா.இ.மு. சென்னை மாநகர செயலாளர் தோழர் சாரதி, தனது தலைமையுரையில், ”இன்று மோடி ஆட்சியில் 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, புதிய கல்விக் கொள்கையால் ஏற்படப் போகும் ஆபத்துகள். பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலாளர்களின் வேலையிழப்பு போன்றவற்றை சரி செய்ய, ரஷ்யாவில் தோழர்கள் லெனின் – ஸ்டாலின் தலைமையில் 102 ஆண்டுகளுக்கு முன் நடந்த சோசலிசப் புரட்சி போன்று ஒரு புரட்சி நமக்கும் தேவை” என்றார்.

நவம்பர் புரட்சி வந்தால், உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை விளக்கும் பாடலுடன் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின.

“உடம்பில் ஐரோப்பியன் ரத்தம் ஓடாதவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போருக்கு தயாராவோம்” என்ற பெரிய மருது – சின்ன மருதுவின் திருச்சி பிரகடனத்தை கண் முன்னே கொண்டுவந்தார்கள்.

“யாரோ மோடியாமே ரொம்ப தொந்தரவு செய்கிறாராமே செஞ்சிருவோமா… செஞ்சிருவோமா…” என்று கேட்டு அரங்கை அதிர வைத்தாள், நவீன வேலுநாச்சியார்.

‘நிலவுக்கு சந்திராயன் அனுப்பும் இந்த அரசு ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை காப்பாற்ற எந்த கருவியையும் கண்டுபிடிக்கத் துப்பில்லை’ என்று அரசின் அலட்சியத்தின் மீது காறி உமிழ்ந்தார், ‘‘ஆழ்துளைக் கிணறும் அலட்சிய அரசும்‘’ என்ற தலைப்பில் பேசிய சிறுமி ஒருவர்.

மலைவாழ் மக்களின் வாழ்நிலையை விளக்கும் ‘உச்சி மலை மேலே‘ என்ற பாடலோடு, உச்ச நீதிமன்றமே தீர்ப்பு சொன்னாலும் சபரி மலைக்கு பெண்கள் சென்றால் சாமி தீட்டு ஆகிடும் என்ற சங்கிகளுக்கு ‘ஐ யம் சாரி ஐயப்பா’ என்ற கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவினரின் பாடலை பதிலடியாகக் கொடுத்தனர். இந்த சமூகம் அடுத்த தலைமுறைக்கு வாழத் தகுதியானதா என்ற கேள்வி எழுப்பியது, ‘இனிவரும் தலைமுறை’ என்ற மலையாள பாடல். சென்னை சட்டக்ஃ கல்லூரி மாணவர்களின் மலக்குழி மரணங்கள் பாடல், புதிய கல்விக் குறித்த கானா பாடல், ‘மோடி வித்தை‘ நாடகம் ஆகியவை பார்வையாளர்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, சிலம்பாட்டம், சிறுவர்களின் பறை இசை, களியாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளிலும் பெருமளவில் குழந்தைகள் பேரார்வத்தோடு பங்கேற்று தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இக்கலைநிகழ்ச்சிகளை தோழர் செல்வி தொகுத்து வழங்கினார்.

பருவ இதழ் ஒன்றில் தொடராக வெளியான ’நான்காம் சுவர்’ தொடரை எழுதிய எழுத்தாளர் திரு.பாக்கியம் சங்கர் சிறப்பு அழைப்பாளராக இவ்விழாவில் பங்கேற்றார். அத்தொடரை எழுதுவதற்காக அவர் பல்வேறு பிரிவு மக்களைச் சந்திந்து அவர்களுடன் கலந்துரையாடிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ”வெளிச்சத்துல வேலை பார்க்கனுங்கிறதுதான் என்னோட ஆசை” என்று பிணக்கூறாய்வில் உதவியாளராகப் பணியாற்றும் தொழிலாளி ஒருவர் கூறிய கூற்றும், பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட பத்து வயது சிறுமியொருத்தியின் பிணக்கூறாய்வின்போது, கிழித்த உடலை மீண்டும் தைத்து பவுடர் பூசிவிட்டு, பூ வைத்து தன்னை மறந்து முத்தமிட்டு பெற்றோர்களிடம் அவளது சடலத்தை ஒப்படைத்ததாக அத்தொழிலாளி தன்னிடம் பகிர்ந்து கொண்ட சம்பவங்களையும் அவர் விவரித்த போது மொத்த அரங்கமும் உறைந்து போயிருந்தது.

பு.ஜ.தொ.மு.-வின் மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ்குமார். தனது சிறப்புரையில் ‘உலகத் திருமறையை இயற்றிய வள்ளுவரை காவி வர்ணம் பூசி எங்க ஆளு என்று சொல்லிக் கொண்டு வரும் காவி பாசிசத்தையும், உலகம் முழுவதும் முதலாளித்துவம் திவாலாகி தோற்று போய் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட்களிடமிருந்தும் நாட்டை மீட்டு மக்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றால் சோசலிசம் தவிர வேறு எதுவும் தீர்வு இல்லை“ என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச கீதத்துடன் விழா முடிவடைந்தது. விழா முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை.


தருமபுரி

வம்பர் – 7 ரஷ்யா சோசலிச புரட்சியின் 102 – வது விழாவைக் கொண்டாடும் விதமாக நவ – 07 அன்று  காலை 11 மணிக்கு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி, மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் தோழர் பாலன் தலைமை தாங்கினார்.

பு.மா.இ.மு.வின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ச. அன்பு கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். ”நவம்பர் – 7 என்பது அன்றாடம் கடந்து போகும் நாள் போன்று இல்லை. இந்த நாள் என்பது உலக வரலாற்றில் ஓர்‌ உன்னதமான நாள் குறிப்பாக 1917-ம் ஆண்டு ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் தலைமையில் ஜார் மன்னரின் கொடுங்கோன்மையை எதிர்த்து முதலாளித்துவ அரசு கட்டமைப்பை தூக்கியெறிந்து உழைக்கும் மக்களின் ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டிய நாள் தான் இந்த நவம்பர் – 7. அப்படிப்பட்ட இந்த நாளில் நமது நாட்டை அச்சுறுத்தும் கார்ப்பரேட் –  காவி பாசிசத்தை முறியடிக்க உறுதியேற்போம்.” என்றார்.

மேலும், ”இன்று நமது நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார ‌நெருக்கடி முற்றி அதனை தீர்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டு இருக்கிறது முதலாளித்துவம். இவை மட்டும் இல்லை கல்வி பறிப்பு, வேலை இழப்பு, பசி, பட்டினி என மக்களை மரணக் குழியில் தள்ளி கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு மக்களைக் காவு வாங்கிக் கொண்டு இருக்கிறது மோடி –  எடப்பாடி கும்பல். ஒட்டு மொத்த மக்களும் புரட்சிகர அமைப்பின்‌ கீழ் ஒரு புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரள்வோம்”  என்று அறைகூவல் விடுத்தார்.


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்.
தொடர்புக்கு: 6484569228

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க