அயோத்தி விவகாரம் நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையே நடக்கும் போர் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா

பிரபல வரலாற்றாசிரியர் திவேந்திர நாரயண் ஜா, ஆரம்ப கால இந்திய வரலாற்றில் பொருளாயத கலாச்சாரம் குறித்த ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்தவர். தனது 35 ஆண்டுகால கல்வி துறைசார்ந்த பணியில் பண்டைய கால இந்தியாவின் சமூக, பொருளாதார சூழல் குறித்து ஆழமான ஆய்வைச் செய்தவர். தொழில்முறை வரலாற்றாசிரியரான இவர், வரலாற்று ஆய்வுகளிலிருந்து சமகாலத்தில் எழும் அரசியல் விவாதங்களில் தொடர்ச்சியாக தனது கருத்தினை சொல்லிவருபவர்.

வரலாற்றாசிரியர் திவேந்திர நாரயண் ஜா (டி.என். ஜா)

விளைவாக, இந்துத்துவ கும்பலின் தொடர்ச்சியான தாக்குதலை எதிர்கொண்டுவருபவர். உதாரணத்துக்கு பண்டைய இந்தியாவின் உணவுப் பழக்கமாக மாட்டிறைச்சி உண்பது இருந்தது குறித்த ‘The Myth of the Holy Cow’ நூலில் பல வரலாற்று ஆதாரங்களோடு எழுதியபோது, இவருடைய கருத்தை ஏற்க மறுத்த காவிகள் இவரைக் குறிவைத்தனர். நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு எப்போதும் வரலாற்று ஆதாரங்களுக்கே இவர் முக்கியத்துவம் கொடுத்தார்.

பாபர் மசூதிக்கு அடியில் ஒரு இந்து கோயில் இருப்பதாக வெளியான ஒரு அறிக்கையை நிராகரித்து வரலாறு மற்றும் தொல்பொருள் சான்றுகளை ஆராய்ந்த ஒரு சுயாதீன குழுவில் இவரும் ஒருவர்.

தி வயர் இணையதளத்துக்கு (உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்) அளித்த பேட்டியிலும், பாபர் மசூதிக்கு அடியில் இந்து கோயில் இருந்தது என்பதற்கான கோட்பாட்டை இவர் மறுத்தார். இந்திய தொல்பொருள் ஆய்வகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது, ராமஜென்மபூமி – பாபர் மசூதி விசயத்தில் இந்து முசுலீம் மோதலாக சங்க பரிவாரத்துக்கு எப்படி உதவியது என்பது குறித்தும் இவர் பேசியிருக்கிறார்.

***

விரைவில் உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது தீர்ப்பளிக்க இருக்கிறது. எனவே, இது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஒரு தொழில்ரீதியான வரலாற்றாசிரியர் என்றவகையில் நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அயோத்தி விவகாரம் நெருப்பின் மேலே பல காலமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்துக்களும் முசுலீம்களும் பிரச்சினைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். முன்பே, ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில் சொன்னதுபோல, நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையே நடக்கும் போராகத்தான் நான் இதைப் பார்க்கிறேன்.

அயோத்தியில் பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் சுற்றளவுக்குள்தான் ராமன் பிறந்தார் என்பதை நிரூபிக்கவே சாத்தியமில்லை. இந்த நம்பிக்கையில் எந்தவித எதார்த்தமும் இல்லை. நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றை எழுத முடியாது என்பதை தொழில்முறை வரலாற்றாசிரியாகச் சொல்கிறேன். இங்கே எழுதப்பட்டவை அல்லது சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனாவாதத்தின் அடிப்படையாகக் கொண்டவை.

படிக்க :
♦ பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் !
♦ வாரனாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

‘ராமஜென்மபூமி – பாபர் மசூதி : நாட்டுக்கு ஒரு வரலாற்றாசிரியரின் அறிக்கை’ என்ற வரலாற்றாசிரியர்களைக் கொண்ட குழுவில் நீங்களும் இருந்தீர்கள். உங்களுடைய முக்கியமான கண்டுபிடிப்பு என்ன?

முதலில், ஒருவிசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். சூரஜ் பன், அதர் அலி, ஆர். எஸ். சர்மாவுடன் நானும் சேர்ந்து இந்த அறிக்கையை உருவாக்கினோம். அரசு அல்லது இந்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தரப்பினரிடமிருந்து எந்தவித ஒத்துழைப்பையும் பெறாமல் சுயாதீனமாகவே இந்த அறிக்கையை தயாரித்தோம். எழுத்துப்பூர்வமான, தொல்பொருள் ஆதாரங்களின் அடிப்படையில் மசூதிக்கு அடியில் இந்து கோயில் இல்லை என்ற முடிவுக்கு வந்தோம்.

இந்த மோதலை இந்திய தொல்பொருள் ஆய்வகம் வளர்ப்பதை எப்படி பார்க்கிறீர்கள். இந்திய தொல்பொருள் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில் பாபர் மசூதி, இந்து கோயிலின் நான்கு தூண்களின் மேல் கட்டப்பட்டது எனக் கூறியது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

தூண்களின் அடிப்படையில் அங்கே கோயில் இருந்ததாக இந்திய தொல்பொருள் ஆய்வகமும், ஒரு இந்து கட்சியும் வாதிட்டன. இதில் சில விசயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் முன்னாள் தலைவராக இருந்த பி.பி. லால், முதன் முதலில் ஆயோத்தியில் ஆய்வு மேற்கொண்டவர்; இவர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது முதல் விசயம். தனது முதல் அறிக்கையில் தூண்கள் இருப்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

1988-ம் ஆண்டு Indian Council of Historical Research கருத்தரங்கில் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார். அதிலும் தூண்கள் குறித்து எதுவும் இல்லை. இராமாயணத்தின் வரலாற்று தன்மை குறித்து உரையாற்றிய அவர், தூண்கள் குறித்து பேசவேயில்லை.

அக்டோபர் 1990-ல் ஆர்.எஸ்.எஸ். இவருடைய ஆய்வுக்கட்டுரை ஒன்றை பிரசுரித்தது. அதில், மசூதிக்கு அருகில் தூண் போன்ற அமைப்பு இருப்பதாகக் கூறியிருந்தார். அயோத்தியில் அகழாய்வு நடத்தி 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிச் சொல்கிறார்! அறிஞர்கள் வளர்ந்துகொண்டே இருப்பார்கள், அவர்களுடைய கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், லால் வெறித்தனமான வேகத்துடன் வளர்ந்துவிட்டார். இதுதான் இவருடைய தூண் குறித்த கண்டுபிடிப்பை சந்தேகத்துக்குரியதாக மாற்றுகிறது.

இரண்டாவதாக, மசூதியின் நுழைவாயில் உள்ள இசுலாமிய சித்திரங்கள் இல்லாத 14 கருப்பு தூண்கள், அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டவை; கட்டடத்தின் வலுவை தாங்குவதற்கு நிறுத்தப்பட்டவை அல்ல. இதுபற்றி நாங்கள் நால்வரும் ஆராய விரும்பினோம். ஆனால், இந்திய தொல்பொருள் ஆய்வகம், அகழாய்வு குறிப்புகளை தர மறுத்துவிட்டது.

படிக்க :
♦ அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்
♦ பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம்

இந்திய தொல்பொருள் ஆய்வகம், தனது அறிக்கையை வரலாற்றாசிரியருக்கும் அகழ்வாராய்ச்சியாளருக்கும் வழங்கவில்லையா?

நீதிமன்றம் சொன்ன அகழ்வாய்வின் இறுதி அறிக்கையை நான் பார்க்கவில்லை. ஆனால், இந்த அறிக்கையைப் படித்த அகழ்வாராய்ச்சியாளர்களும் வரலாற்றாசிரியர்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். முதலாவதாக, இந்த அகழாய்வை செய்த இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் முறைப்படி ஆய்வை செய்யவில்லை. இரண்டாவதாக, இங்கே கோயில் இருந்தது என்கிற முன் அனுமானத்தின் அடிப்படையில் இவர்கள் அகழ்வாய்வில் ஈடுபட்டார்கள். மூன்றாவதாக, இந்த அறிக்கை ஆதாரங்களை புறந்தள்ளுகிறது. உதாரணத்துக்கு, இங்கே கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகள், மண்பானைகள், வழவழப்பான தரை ஓடுகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

பெரும்பான்மை இந்தியர்கள், சொல்லப்போனால் நீதிமன்றங்களும்கூட வரலாறு /  வரலாற்று ஆதாரங்களை புறம்தள்ளிய நம்பிக்கையின் அடிப்படையிலான கருத்தின் மூலம், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை புரிந்துகொள்கிறார்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்து கட்சிகளின் நம்பிக்கையை மட்டும்தான் கருத்தில் கொண்டது என்பது என் பார்வை. வரலாற்று சான்றுகள் முற்றிலும் புறம்தள்ளப்பட்டு, குப்பையில் போடப்பட்டன.

ராம ஜென்மபூமிக்கு மேலேதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்கிற கருத்தாக்கம் எப்படி பிரபலமானது? இந்திய வரலாற்றில் ராமர் கோயில்கள் குறித்த எழுத்துப்பூர்வமான, பிற ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா?

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஸ்கந்த புராணம்தான் கடவுள் ராமர் பிறந்த இடம் அயோத்தி என முதன்முதலில் பேசியது. இதன் பல பதிப்புகளில், பெரும்பான்மையும் திருத்தல்களே அதிகம். ஸ்கந்த புராணத்தின் பகுதியாக வரும் அயோத்தியமகத்மியா முழுமையும் 18-ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம்,

அதன் உள் சான்றுகளின் அடிப்படையில் ஆராயும்போது, இது 1600 (கி.மு.)க்கு முந்தையது அல்ல. 30-க்கும் மேற்பட்ட புனித தலங்களைக் குறிப்பிடுகிறது, இதில் ஒன்று ஜன்மஸ்தலம். ஆர்வத்துக்குரியவகையில், உரையை தொகுத்தவர்கள் எட்டு வசனங்களை ஜன்மஸ்தலத்துக்கும் 100 வசனங்களை ராமர் சொர்க்கத்திற்குச் சென்றதாக குறிப்பிடும் இடத்தும் எழுதியிருக்கிறார்கள். அந்த இடம் ஸ்வர்க்கத்துவாரா என்று அழைக்கப்படுகிறது. வி.எச். பி உள்ளிட்ட பிற இந்துத்துவ அமைப்புகள் முதன்மைப்படுத்திக் கூறும் இந்த ஸ்கந்த புராணம், ராமரின் பிறப்பைவிட மரணத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

ஸ்கந்த புராணத்தை தொகுத்தவர்களுக்கு அவர் பிறந்த இடத்தைவிட மரணித்த இடம் முக்கியமாகப் பட்டிருக்கிறது. மேலும், ஸ்வர்க்கத்துவாரா, சராயு நதிக்கரையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது ராமர் பிறந்த இடம் எனக் கூறிக்கொள்ளும் மசூதி இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

1765-க்கு முன்னர் அயோத்திக்கு வருகை தந்த பிரெஞ்சு ஜேசுட் பாதிரியார், அவர்தான் முதல்முறையாக சிதிலமடைந்த கோயிலின் மீது மசூதி நிர்மாணிக்கப்படுவதாகச் சொன்னார். ஆனால், அது பிரபலமடைய காலம் பிடித்தது.

வரலாற்று நூல்களில் அயோத்தி எப்போதும் ஒரு யாத்திரை தளமாகக் கருதப்பட்டதா? துளசி தாஸின் ராம்சரித்மானாஸ் அயோத்தி குறித்து என்ன சொல்கிறது?

பண்டைய காலங்களில் அயோத்தி ஒரு இந்து புனித யாத்திரை தளமாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது 18-ம் நூற்றாண்டின் இறுதியில்கூட பிரபலமாகவில்லை. கொண்டாடப்பட்ட ராம்சரித்மானாஸ் நூலில் ஆசிரியர் துளசிதாஸ், அயோத்தியை யாத்திரை தளமாகக் குறிப்பிடவில்லை. அவர் பிரயாக் யாத்திரைக்கான பிரதான இடமாக இருந்தது என்று மட்டும்தான் குறிப்பிடுகிறார்.

அயோத்தி பிற மதங்களான சமணம் அல்லது பவுத்த மதத்தின் மையமாக இருந்திருக்க வாய்ப்புண்டா?

அயோத்தி மத்திய காலங்களில் முக்கியமான பவுத்த மையமாக இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஸ்வர்த்தன் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகர் இவான் சுவாங், இங்கே பவுத்தர்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இங்கே 100 பவுத்த மடாலங்களும் பத்து பார்ப்பன கடவுளர்களின் கோயில்கள் மட்டுமே இருந்ததாக பதிவு செய்திருக்கிறார்.

பவுத்த மற்றும் சமண உரைகளில் அயோத்தி, சாகெட் என்ற பெயரில் அறியப்படுகிறது. மேலும், தொடக்ககால தீர்த்தங்கரான ரிஷப்நாத் பிறந்த இடம் என்றும் சமணர்கள் கோருகிறார்கள். இரண்டு யூத தீர்க்கதரிசிகள் அயோத்தியில் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அபு ஃபசல் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, இந்த நகரம் பல மதங்களின் முக்கியத்துவம் வாய்ந்த புனித இடமாகும்.

எப்படி, எப்போது அயோத்தி விவகாரம், மதப் பிரச்சினையாக உருவெடுத்தது என நீங்கள் நினைக்கிறீர்கள். உண்மையில், இந்துத்துவ குழுக்கள் இப்போது, பாபர் மட்டுமல்ல, முசுலீம் ஆட்சியாளர்களான அவுரங்கசீப், திப்பு சுல்தான் ஆகியோரும் கோயில்களை அழித்ததாக கோருகிறார்கள்…?

முசுலீம் ஆட்சியாளர் இந்து கோயில்களை அழித்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கோயில்களையோ அல்லது வழிபாட்டுத் தலங்களையோ அழிப்பதில் இந்துக்கள் மிகவும் இழிவானவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சமணர்கள் மற்றும் பவுத்தர்களின் எண்ணற்ற மத தலங்களை அவர்கள் அழித்தார்கள் என்பதை நிரூபிக்க முடியும். நாட்டில் யார் அதிகமாக கோயில்களை அழித்தார்கள் என்பது நிச்சயமாக ஆய்வுக்குரிய விசயம்.

இடைக்கால இந்தியாவில் வகுப்புவாத மோதல் நடந்ததற்கு அதிக ஆதாரங்கள் இல்லை. ஆனால், ஆயோத்தியில் இந்து முசுலீம் மோதல் 1855-ம் ஆண்டு நடந்தது. இந்தப் பிரச்சினை அவாத் நவாபின் அதிகாரிகளால் தீர்த்து வைக்கப்பட்டது. சீதா கி ரசோய் என்று அழைக்கப்படும் சிலைகள் மசூதிக்கு வெளியே வைக்க அனுமதித்தன் மூலம் நவாப்பின் அதிகாரிகள் பிரச்சினையை தீர்த்துக் கொண்டனர். வக்ஃபு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

1885-ம் ஆண்டில் பைசாபாத்தின் துணை நீதிபதியும் அவாத் நீதி ஆணையரும் முசுலீம்கள் தொடர்ந்து மசூதியை வைத்திருப்பது என்றும், சீதா கி ரசோய் இந்துக்களிடமும் தருவதாக நிலப்பிரச்சினையை தீர்த்து வைத்தனர். இந்த விவகாரம் 1930-களில் மீண்டும் எழுந்தபோது, சூழ்நிலை மாறியிருந்தது, மதவாதம் வளர்ந்திருந்தது.

விவகாரத்தின் வகுப்புவாதத்தில் மைல்கல்லாக 1949 டிசம்பரில், ராமரின் சிலை மறைமுகமாக மசூதிக்குள் வைக்கப்பட்டது. 1984-ம் ஆண்டு, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் விசுவ இந்து பரிசத் உருவானபோது, இந்த விவகாரத்தில் வகுப்புவாதம் எதிர்பாராத ஊக்கத்தைப் பெற்றது.

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் கோயில் அழிப்பு கோட்பாடு குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள் இருந்தார்களா? வங்காள மருத்துவ சேவையில் பணிபுரிந்த ஸ்கார்டிஷ் மருத்துவர் பிரான்சிஸ் புக்கனன் 1810-ல் அயோத்திக்கு சென்றதாகவும் இந்தக் கோட்பாட்டை குப்பையில் தள்ளியதாகவும் நீங்கள் ஒரு முறை சொன்னது நினைவிலிருக்கிறது.

நிச்சயமாக, எச். எம். எலியட் மற்றும் ஜான் டாசன், முசுலீம் ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட கோயில்கள் குறித்து 1871-ல் எழுதியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பிரச்சினைகள் அவர்கள் ஆராயவில்லை. இருப்பினும், அவர்கள் அழிக்கப்பட்டது என்பதன் உண்மையை குறிப்பிட்டிருக்கலாம். இந்து கோயில்களின் அழிவு /அவதூது குறித்து சொன்ன முக்கியமான வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்கார் ஆவார்.

படிக்க :
♦ பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
♦ எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்

இடிப்பைத் தொடர்ந்து நடந்த முழு நீதிமன்ற நடவடிக்கைகளிலும் நீதிமன்றங்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களை உள்ளடக்கியிருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக, நீதிமன்ற நடவடிக்கைகளில் வரலாற்றாசிரியர்களை கலந்தாலோசித்திருக்க வேண்டும். மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததா? என்பதை தீர்மானிக்கும் பணியை சர்வதேச நிபுணர்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஒரு வரலாற்று உண்மையின் மேல், நீதிமன்றம் மட்டும் தீர்ப்பை வழங்கிவிட முடியாது. ஆனால், வரலாற்றாசிரியர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களின் அறிக்கையை வெறும் கருத்தாக நிராகரிக்கும் நீதித்துறையிலிருந்து ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும்?

உங்கள் குழு நீங்கள் ஆராய்ந்த அறிக்கையை இந்திய அரசாங்கத்திடம் சமர்பித்தது. அதற்கு அரசாங்கம் சொன்ன பதில் என்ன?

எங்கள் அறிக்கையை அயோத்தி பிரிவின் பொறுப்பாளராக இருந்த திரு வி.கே. தால் மூலம் இந்திய அரசாங்கத்திடம் சமர்பித்தோம். அவரிடமிருந்தோ அல்லது அரசாங்கத்தின் வேறு எவரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை.

இறுதியாக, வரலாற்றின் மாறுபட்ட கண்ணோட்டங்களுக்கிடையில் ஒரு சாதாரண நபர் எப்படி தனது கருத்தை உருவாக்கிக் கொள்கிறார்? அயோத்தியில் ராமர் கோயில் உள்ளது என நம்புகிறவர்கள், மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் மட்டுமே அங்கே கோயில் இல்லை என சொல்வதாகக் கூறுகின்றனர்?

சாதாரண நபருக்கு கற்றுத்தர வேண்டும். மேலும் அவர்கள் பகுத்தறிவு பார்வையில் அதை ஏற்க வேண்டும். என்னிடம் தயாராக இதற்கொரு பதில் இல்லை. ஆனால், தவறு செய்யாதீர்கள். அங்கே கோயில் இல்லை என்பது பரப்புரை செய்யப்பட்டதற்கு மார்க்சியவாதிகள் பொறுப்பல்ல. இந்துத்துவ குழுக்கள்தான், தங்களுடைய வழக்கை வாதிக்க முடியாமல், மார்க்சியத்தின் மீதான அச்சத்தில் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


நேர்காணல்: Ajoy Ashirwad Mahaprashasta.
தமிழாக்கம் :  அனிதா
நன்றி : தி வயர்.