சென்னை ..டி.யில் முஸ்லீம் மாணவி ஃபாத்திமா தற்கொலை!
காரணமான ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய்!

டந்த நவம்பர் 8-ம் தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை பயின்று வந்த கேரளாவை சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்துகொண்டார். இது அவருடைய பெற்றோரை மட்டுமல்ல, அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வகுப்பில் முதல் மாணவியான இவரை, அத்துறை இணைப் பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் உளவியல் தாக்குதல் நடத்தி, தற்கொலைக்கு தள்ளியுள்ளார். ’’எனது தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் தான் முக்கிய காரணம்’’ என மாணவி ஃபாத்திமா லத்தீஃப் குறிப்பும் எழுதி வைத்துள்ளார். அந்தக் குறிப்பில் மேலும் சில பேராசிரியர்கள் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

பாத்திமா லத்தீப்.

தனது தந்தையிடம் பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் செய்யும் சித்திரவதை குறித்தும், இண்டர்னல் தேர்வில் தனக்கு உரிய மதிப்பெண் வழங்காமல் அநீதி இழைக்கப்படுவதையும் முன்கூட்டியே தெரிவித்துள்ளார். தற்போது அவருடைய பெற்றோர்களும் இதை பகிரங்கமாக வெளிப்படுத்தி, போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர். மாணவி ஃபாத்திமாவை சித்திரவதை செய்து தற்கொலைக்கு தள்ளியவர் சுதர்சன் பத்மனாபன் தான் என தெரிந்த பின்பும் அவர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஐ.ஐ.டி. நிர்வாகமும், போலீசும் பாதுகாத்து வருகின்றன. இதை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மாணவி ஃபாத்திமாவை உளவியல் சித்திரவதை செய்து தற்கொலைக்குத் தள்ளிய பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மாணவி ஃபாத்திமா தற்கொலை குறித்து அவருடைய தந்தை பல நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளார். தனது மகளுக்கு கயிறு எங்கிருந்து கிடைத்தது? இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று ஆழமாக விசாரிக்க வேண்டும் என்றுள்ளார். அவருடைய தாய் ’’அவளுடைய பெயரே இந்த நிலைக்கு காரணமாகிவிட்டது, வட மாநிலங்களுக்கு படிக்கச் சென்றால் பாதுகாப்பு இருக்காது என்பதால்தான் தமிழ்நாட்டில் படிக்க வைத்தோம்’’ என அவர் மீது இருந்த மத ரீதியிலான ஒடுக்குமுறை பற்றி கூறியுள்ளார்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி. பார்ப்பனர்களின் கூடாரமாக திகழ்கிறது. அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை, மாட்டுக் கறி சாப்பிட்டதால் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டது, நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்துவிட்டு, சமஸ்கிருதப் பாடலான மஹாகணபதி பாடல் பாடப்படுவது வரை தனது பார்ப்பனிய நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறது.

ஐ.ஐ.டி. இயக்குனர், டீன், பேராசிரியர்கள், படிக்கும் மாணவர்கள் என அனைத்திலும் பார்ப்பன ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மாணவர்கள் ஐ.ஐ.டி.க்குள் மிக, மிக குறைவு. அதுவும் சமீப ஆண்டுகளில்தான் இந்தப் பிரிவு மாணவர்கள் ஐ.ஐ.டி.-க்கு படிக்க வர முடிந்துள்ளது. பேராசிரியர் பணியிடங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதே இல்லை. முழுக்க முழுக்க பார்ப்பனர்கள் ஆதிக்கம்.

இப்படி காவி இருள் சூழ்ந்திருக்கும் சென்னை ஐ.ஐ.டி.-யில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் எப்படி சுதந்திரமாக படிக்க முடியும்? தங்கள் பாதிப்புகளை யாரிடம் போய் பேச முடியும்? இங்கு இதுவரை ஒரு பார்ப்பன மாணவர் கூட பாதிக்கப்பட்டது இல்லை. ஆனால், உரிய தகுதி திறமையுடன் வரும் தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவது அதிகரிக்கிறது.

பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன்.

இன்னொரு பக்கம், இந்தியாவின் உயர் தொழிற்நுட்பக் கல்விக் கழகமான ஐ.ஐ.டி.-களில் தனியார்மயம் தீவிரமாகி வருகிறது. அதன் காரணமாக கட்டணங்களை உயர்த்துவது, மதிப்பெண்களை குறைப்பது, படிப்புச் சுமையை அதிகரிப்பது, தேர்ச்சியை தடுப்பது, ஆய்வுகளை முடிக்கவிடாமல் செய்வது என மாணவர்கள் மீதான நிர்வாக அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், எதிர்காலம் குறித்த மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் கடும் மன அழுத்தத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாகிறார்கள். விளைவு தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சென்னை ஐ.ஐ.டி.யில் 14, காரக்பூர் ஐ.ஐ.டி.யில் 13, குவஹாத்தியில் 8, ரூர்க்கியில் 5, டெல்லி ஐ.ஐ.டி.யில் 4, கான்பூரில் 4, ஹைதராபாத்தில் 2, மும்பையில் 2 என மொத்தம் 52 மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

படிக்க:
ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?
பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !

இது குறித்து விரிவான – நேர்மையான ஒரு நீதி விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, மாணவர் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.-யில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும். மாணவி ஃபாத்திமாவை சித்திரவதை செய்து தற்கொலைக்குத் தள்ளிய குற்றவாளிகளை கொலைக்குற்றத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என எமது பு.மாஇ.மு வலியுறுத்துகிறது.


த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க