மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !!

கஸ்ட் பிற்பகுதியில், குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டுவதற்காக அதன் மதகுகள் மூடப்பட்டன. அவ்வணையின் நீர் மட்டம் உயர உயர, நர்மதா நதி பாய்ந்துவரும் மத்தியப் பிரதேசம், தார் மாவட்டத்திலுள்ள சிகால்டா உள்ளிட்ட 178 கிராமங்களுக்குள் நதி நீர் புகுந்து, அம்மக்கள் அனைவரையும் நிர்க்கதியாக்கிவிட்டது.

“அரசு அணையை நிரப்பி எங்களை மூழ்கடிக்குமென்றும், பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோருக்கு நிவாரணம் வழங்காமல் கைவிடுமென்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை” எனக் கலக்கத்துடன் கூறுகிறார், பாரத் என்ற மீனவர். தனது வாழ்க்கையே தொலைந்து போன நிலையிலும் பூனையொன்று பசியாறுவதற்காக, ஆற்றுநீரில் மூழ்கிப்போன ஒரு தகரக் கொட்டகையின் உச்சியில் ஒரு ரொட்டித் துண்டை எடுத்து வைத்திருந்தார், அவர்.

1989- அணை கட்டுவதற்காக இந்தப் பகுதியிலிருந்து இடம் பெயரச் செய்யப்பட்ட 32,000 குடும்பங்களில் பெரும்பாலானோருக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை, மாற்றுக் குடியிருப்புகள், நிலங்கள் உள்ளிட்டவை எவையும் இன்னமும் வழங்கப்படவில்லை. வீட்டுமனை கொடுக்கப்பட்டிருந்தால், வீடு கட்டத் தேவையான பணம் கொடுக்கப்படவில்லை; விளைநிலம் கொடுக்கப்பட்டிருந்தால், அதில் பாதியளவு நிலம் பயிர் விளையாத மலட்டு பூமி. இதுதான் மக்களுக்குக் கிடைத்திருக்கும் நிவாரண உதவிகளின் இலட்சணம்.

தண்ணீரில் மூழ்கிப் போயிருக்கும் ம.பி.-யிலுள்ள நிஸார்புர் கிராமம்.

ஆனால், நர்மதா கட்டுப்பாட்டு ஆணையமோ, இந்த அணைக்கட்டால் பாதிக்கப்பட்ட குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 230 கிராமங்களில் வாழ்ந்து வந்த 2.5 இலட்சம் மக்களுக்கும் அனைத்து இழப்பீடுகளும் வழங்கப்பட்டு விட்டதாகவும், நிலுவை ஏதுமில்லை என்றும் கூறுகிறது. ஆணையத்தின் கோப்புகள் இந்தக் கிராமங்களில் யாரும் வசிக்கவில்லை என்று கூறுகின்றன. அதனால் அணையின் முழுக் கொள்ளளவிற்கு நீரை நிரப்பிக் கொள்ள குஜராத் அரசிற்கு அனுமதியும் அளித்தது.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அணையின் திறனைப் பரிசோதிப்பதற்காக, அதன் முழு உயரத்திற்கும் (138.68மீ) நீரைத் தேக்கி மதகுகளையும் மூடியதாகச் சொல்கிறது குஜராத் அரசு. உண்மையில் அது மோடியின் பிறந்தநாளுக்காக குஜராத் அரசு அளித்த பரிசு. மோடியை மகிழ்விக்க அணையை நிரப்பிய குஜராத் முதல்வர் மறுபுறத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை ஆற்று நீரில் மூழ்கடித்துவிட்டார்.

மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17, 2019 அன்று நர்மதை ஆற்றில் மலர்தூவிக் கொண்டாடிவிட்டுச் சென்ற சில தினங்களில், வெள்ளப்பெருக்கால் மார்பளவு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது கால்நடைகளை மீட்டெடுக்க போராடினார், பவாதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோலு அம்பாராம்.

காபர் கேடா பகுதியைச் சேர்ந்த 65 வயதான விவசாயி நத்து சீதாராம் முகாட்டி, தனது 2.5 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த மிளகாய் ஆற்று நீரில் முழ்கிப் போனதால், ஒரே நாளில் 1.5 இலட்சம் ரூபாயை இழந்துவிட்டதாகக் கூறி கதறுகிறார்.

படிக்க:
காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !
தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !

செழிப்பான கிராமங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீருக்குள் மூழ்கி மடிந்துபோயின. மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காகப் பல கிராமங்களும், கிராம மக்களும் அவர்களின் வாழ்வாதாரங்களும் நீரால் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

1961-ல் ஜவஹர்லால் நேரு நர்மதா அணைக்கு அடிக்கல் நாட்டியபோதே, அணையால் பாதிப்பு ஏற்படுமோ என பயப்பட்ட மக்கள், 1990-களில் அது உண்மையானதைக் கண்டனர். 18 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்களின் பாசன வசதிக்காகவும், 1450 மெகாவாட் மின் உற்பத்திக்காகவும் வறண்ட கட்ச், சௌராஷ்டிரா கிராமங்களின் நீர்த் தேவைக்காகவும் இந்த அணை கட்டப்பட்டிருக்கிறதெனக் கூறப்பட்டாலும், கட்ச், சௌராஷ்டிரா பகுதி மக்களின் குடிநீர்த் தேவையைக்கூட இந்த அணை இன்றுவரை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை.

ம.பி. மாநிலம் – சோட்டா பர்தா கிராமத்தில் மூழ்கிப்போன வீடுகள் – குடும்பங்கள் குறித்து நடைபெற்ற கணக்கெடுப்பு.

முப்பதாண்டு கால சட்டப் போராட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதப் போரட்டங்களால் தடைபட்டு வந்த அணை கட்டுமானப் பணிகள் மோடி பிரதமரான பின்னர் (2014) துரித கதியில் நடந்தேறின.  2017-ல் தனது பிறந்தநாளின்போது அணையை திறந்து வைத்தபோதுகூட, இந்த அணையால் காலி செய்யப்பட்ட 230 கிராமங்கள் மற்றும் இடப்பெயர்வுக்கு ஆளான 2.5 இலட்சம் மக்களுள் பெரும்பாலோருக்கு நிவாரணம் ஏதும் கொடுக்கப்படவில்லை.

இப்போது வெள்ளத்தால் மேலும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். தன் மூன்று ஏக்கர் விளைநிலத்தையும் வீட்டையும் இழந்த அம்பாராம் “இந்த அரசு எங்களை எறும்புகளைப் போல வெளியேற்றும் என்பதை எதிர்பார்க்கவில்லை” எனக் கலங்குகிறார்.

2017-ல் மத்தியப் பிரதேச அரசால் கட்டப்பட்ட தகரக் கொட்டகையில் நூற்றுக்கணக்கான கிராம மக்களுடன் வாழ்ந்து வரும் அவர், வேலை தேடி அல்லாடுவதாகக் கூறுகிறார். அவரது அழுகுரலைக் கேட்டு ஓடிவந்த மற்றவர்கள், அம்பாராமை பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பெண் பத்திரிகையாளர் ரோஹிணி மோகனை அரசு அதிகாரியாக நினைத்து, “எங்கள் வீட்டு மனைகளைக் கொடுங்கள், எத்தனை வருடங்கள் இதற்கு? எங்கள் பெயர்களையும், எண்களையும் குறித்துக் கொள்ளுங்கள் அம்மா” எனப் படபடவென்று பொரிந்து தள்ளினர்.

இந்த அணையால் நர்மதா பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள பேரழிவுகளும், இழப்புகளும் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுவிட்டன.

படிக்க:
மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி ! சகிப்பவன் குற்றவாளி !!
♦ ஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி !

பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாக, அணையின் கட்டுமானத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அணையை அதன் முழு உயரத்திற்குக் கட்டுவதற்கு அனுமதித்த உச்ச நீதிமன்றம், “பள்ளிகள், சாலை வசதி, குடிநீர் வசதிகள் உள்ள கிராமப்புறங்களில் வீட்டு மனைகள் தந்து பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்த வேண்டும். புதிய வீடு கட்டிக் கொள்ள 5.8 இலட்சம் ரூபாயும், விளைநிலமும் அல்லது இழந்த விளைநிலத்திற்கு மாற்றாக 60 இலட்சம் ரூபாய் இழப்பீடும், நிலமற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார இழப்பீடும், நாட்டுப்புற மீனவர்களுக்கு நீர்த்தேக்கப் பகுதிகளில் மீன் பிடிக்க உரிமமும் தரவேண்டும்” என உத்தரவிட்டது. ஆனால், இவையெல்லாம் நீதிபதிகளின் கையெழுத்துப் பதிவாகியிருந்த காகிதத்தில்தான் இருந்தன.

அந்த மக்களுக்கு இழப்பீடு தருவதற்குப் பதிலாக அணையை நிரப்பி அவர்களை நீரில் மூழ்கடித்துவிட்டது குஜராத் அரசு. இத்தனை ஆண்டுகளில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இடப் பெயர்வுக்கான இழப்பீடுகள் முறையே 19 மற்றும் 33 கிராம மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மிக அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்ட மத்தியப்பிரதேசமோ,  நிவாரண உதவிகளை வழங்குவதில் மிகவும் பின்தங்கியுள்ளது.

மோடி தனது பிறந்த நாளைக் கொண்டாட சர்தார் சரோவர் அணைக்கட்டிற்கு வருவதைக் கண்டித்து, அந்நதியின் மீதான பாலத்தை மறித்து நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம்.

நர்மதா பாதுகாப்பு இயக்கம் 31,593 குடும்பங்கள் இழப்பீட்டு தொகைக்காக அப்பகுதியில் காத்திருப்பதாக வெள்ளம் வருவதற்கு முன்பாக ஜூலை 2019-இல் அறிக்கை அளித்திருந்தது. இது குறித்து கேட்டதற்கு மத்திய பிரதேச அதிகாரிகளும், அணையைக் கட்டிய சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி. ராஜீவ் குப்தாவும், “இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்துச் சொல்ல முடியாது” என மறுத்துவிட்டனர்.

அணை கட்டலாமா, வேண்டாமா? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வெள்ளத்தில் மூழ்கடித்ததை நியாயப்படுத்த முடியுமா?

ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சாலைகள், பாலங்கள் அமைக்க சூறையாடப்பட்டுவிட்ட நிலையில், வெள்ளமும் தன் பங்குக்கு பெருமளவு அழித்துவிட்டது. நிலவுடமையாளர்களைக் காட்டிலும் விவசாயக் கூலிகளைத்தான் இந்த வெள்ளம் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

நந்த்ஹான் கிராமத்தைச் சேர்ந்த ருக்தி ரது, “அரசு மூன்று வேளை உணவு கொடுப்பது சரிதான். ஆனால், வேலையில்லாமல் மருத்துவச் செலவுகள், கால்நடைகளுக்கான உணவு, பள்ளிக்கட்டணம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு என்ன செய்வது?” எனக் கேட்கிறார்.

இழப்பீடு கிடைக்குமென்ற அதிகாரிகளின் வாக்குறுதிகளை நம்பி இடம்மாறிய, போர்ஹெடி கிராமத்தைச் சேர்ந்த 200 பழங்குடியினக் குடும்பங்கள், “இடம்பெயர்ந்தவர்கள் பட்டியலில் தங்களது பெயர்கள் இல்லையென்றால் என்ன செய்வது?” என்ற அச்சத்தில் தற்போது உறைந்து போயுள்ளனர்.

அவர்களுள் கல்வியறிவு பெற்றவரான 35 வயது புவான் சிங் ராவத், அக்கிராம மக்களின் மறு வாழ்வுக்கான கோரிக்கை மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றபோது, “முதலில் அப்பா நிலத்தைக் கேட்டு வந்தால், அடுத்து மகன் வருகிறான்” என அதிகாரிகளால் கேலி செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.

இன்றைக்கு வெள்ளம் அதிகாரிகளின் பல பொய்களைக் காட்டிக் கொடுத்துள்ளது. இன்று மூழ்கிப்போயிருக்கும் காட்னெரா போன்ற பல கிராமங்கள் பாதிக்கப்பட்ட கிராமக் கணக்கில் வரவில்லை. மறுகுடியேற்றம் செய்யப்பட்ட சில கிராமங்கள்கூட தண்ணீரில்தான் மிதந்து கொண்டிருக்கின்றன.

மிகப் பெரியதும் வளமிக்கதுமான நிசார்பூர் கிராமம் மூழ்கடிக்கப்பட்டு பேய் கிராமமாகியுள்ளது. 3 மாடிக் கட்டிடங்கள் கூடப் பனிப்பாளங்கள் போல வெள்ள நீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.

தமது கிராமத்தை, சொந்தங்களை, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 75 வயதான விவசாயி சங்கர் சிங், “உங்களைப் போன்ற நகரவாசிகளால் இதைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். திடீரென உங்களது முன்னோர்கள் வாழ்ந்த கிராமத்தை, நீங்கள் பிறந்த இடத்தை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்படுவது, இருப்பிடத்தை மாற்றுவது போல அவ்வளவு எளிதானதல்ல. நீங்கள் உங்களது தொடர்புகளை, கலாச்சாரத்தை, பாதுகாப்புணர்வை இழந்துவிடுவீர்கள்” என்கிறார்.

இப்படித் தனது வலிமையைக் காட்டுவதற்காக இலட்சக்கணக்கான மக்களின் உலகத்தையே அழித்திருக்கிறார், நரேந்திர மோடி. புதிய இந்தியா, புதிய இந்தியா என மூச்சுக்கு முன்னூறு தடவை கூவி வரும் மோடியின் புதிய இந்தியாவின் வெள்ளோட்டம் இதுதானோ!

மொழியாக்கம்: மேகலை

(தி இந்து ஆங்கில நாளிதழின் சண்டே மெகஸின் என்னும் இணைப்பில், (06.10.2019) ரோஹிணி மோகன் என்ற பெண் பத்திரிக்கையாளர் எழுதிய தமது உலகத்தை இழந்த மக்கள்” என்ற செய்திக் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு.)

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க