உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 06

தாக்கும் சேனையின் பின்புலப் பாதைக்கு உயரே நடந்த விமானச் சண்டையின் இரைச்சலைக் கேட்டவர்கள் அதில் பங்கு கொண்டவர்கள் – சண்டையிடும் விமானங்களின் அறையில் இருந்தவர்கள் – மட்டுமே அல்ல.

சண்டை விமான ரெஜிமென்ட் கமாண்டர் கர்னல் இவனேவும் விமான நிலையத்தில் அலுவலகத்தின் திறன் மிக்க வானொலிக் கருவியில் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். தாமே அனுபவம் மிக்க தேர்ந்த விமானி ஆதலால், சண்டை உக்கிரமாக நடக்கிறது, பகைவர்கள் அதிக பலமுள்ளவர்கள், வானைவிட்டுக் கொடுத்து விலக அவர்கள் தயாராயில்லை என்பதைக் கருவியில் கேட்ட ஒலிகளிலிருந்து அவர் புரிந்து கொண்டார். பாதைகளுக்கு மேலே பேதொத்தவ் கடினமான போர் நிகழ்த்திக் கொண்டிருக்கும் செய்தி விமான நிலையத்தில் விரைவாகப் பரவிவிட்டது. எவர்களுக்கெல்லாம் முடிந்ததோ அவர்கள் காட்டிலிருந்து திறப்பு வெளிக்கு வந்து கலவரத்துடன் தெற்கே பார்க்கலானார்கள். அங்கிருந்து தான் விமானங்கள் திரும்பி வர வேண்டியிருந்தது.

நீளங்கிகள் அணிந்த மருத்துவர்கள் போகிற போக்கில் எதனையோ சவைத்தவாறு சாப்பாட்டு அறையிலிருந்து வெளியே ஓடி வந்தார்கள். பின்புற முகடுகள் மேல் பிரம்மாண்டமான செஞ்சிலுவைகள் பொறித்த மருத்துவ உதவி லாரிகள் புதர்களுக்குள்ளிருந்து யானைகள் போல வெளியேறி, இயங்கும் எஞ்சின்கள் கடகடக்கத் தயாராக நின்றன.

மர முடிக் குவைகளின் பின்னிருந்து முதலில் வெளிப்பட்டு, வட்டம் இடாமல் கீழே இறங்கி விசாலமான திடல் நெடுக ஓடியது முதல் விமான ஜோடி – சோவியத் யூனியனின் வீரர் பெதோத்தவின் “எண் ஒன்றும்” அவரது பின்னோடியின் “அடுத்த இரண்டும்.” அவற்றை அடுத்து உடனேயே இறங்கிற்று இரண்டாவது இணை. திரும்பும் விமான எஞ்சின்களின் இயக்கத்தால் காட்டுக்கு மேலே வானம் தொடர்ந்து ஆர்த்தது.

“ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது…..” என்று எண்ணினார்கள் விமான நிலையத்தில் நின்றவர்கள். மேலும் மேலும் அதிக இறுக்கத்துடன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

இறங்கிய விமானங்கள் திடலிருந்து அகன்று தங்கள் காப்பிடங்களுக்குள் போய் அடங்கிவிட்டன. ஆனால் இரண்டு விமானங்கள் இன்னும் திரும்பவில்லை.

எதிர்பார்த்திருந்தவர்களின் கூட்டத்தில் நிசப்தம் குடி கொண்டது. ஒவ்வொரு நிமிடமும் கழிய மாட்டாமல் மெதுவாகக் கழிந்தது.

“மெரேஸ்யெவும், பெத்ரோவும்” என்று தணிந்த குரலில் சொன்னான் ஒருவன்.

திடீரென ஒரு பெண்ணின் குரல் திடல் முழுவதிலும் கேட்கும்படி களிப்புடன் கீச்சிட்டது:

“வருகிறது!”

எஞ்சினின் கடகடப்பு கேட்டது. பிர்ச் மர முடிகளின் பின்னிலிருந்து, தொங்கவிட்ட சக்கரங்களால் அவற்றை அனேகமாகத் துவைத்துக் கொண்டு பறந்து வந்தது. “பன்னிரண்டாவது” விமானம் அடிபட்டிருந்தது, அதன் வாலின் ஒரு துண்டு பிய்ந்திருந்தது, இடது இறக்கையின் வெட்டுண்ட முனை கம்பியில் இழுபட்டவாறு நடுங்கிற்று. விமானம் விந்தையான முறையில் தரையைத் தொட்டது, உயர எம்பிக் குதித்தது. மறுபடி தரையில் பட்டது, மீண்டும் எம்பிக் குதித்தது. அனேகமாக விமான நிலையத்தின் கோடிவரை இவ்வாறே குதித்துக் குதித்துச் சென்று திடீரென வாலை உயர்த்திக் கொண்டு நின்றுவிட்டது. ஏறுபடிகளில் நின்ற மருத்துவர்களுடன் மருத்துவ லாரிகளும் சில ஜீப் கார்களும் எதிர்பார்த்திருந்த கூட்டம் அனைத்தும் விமானத்தை நோக்கி விரைந்தன. விமானி அறையிலிருந்து யாரும் வரவில்லை.

வளைமுகடு திறக்கப்பட்டது. இருக்கையுடன் ஒண்டியபடி இரத்தக் குட்டையில் மிதந்தது பெத்ரோவின் உடல். தலை சக்தியின்றி மார்பின் மேல் துவண்டு தொங்கியது. நீண்ட வெளிர் முடியின் நனைந்த கற்றைகள் முகத்திற்குத் திரையிட்டிருந்தன. மருத்துவர்களும் நர்ஸ்களும் வார்களை அவிழ்த்தார்கள், இரத்தம் படிந்து குண்டுச் சிதறலால் ஊடறுக்கப்பட்டிருந்த பாராஷூட் பையை அகற்றினார்கள். அசைவற்ற உடலை வெளியே எடுத்துத் தரையில் கிடத்தினார்கள். பெத்ரோவின் கால்களில் குண்டுகள் தாக்கியிருந்தன, ஒரு கை சேதமுற்றிருந்தது. கருங்கறைகள் நீல விமானி உடையில் விரைவாகப் பரவின.

படிக்க :
அர்பன் நக்சல்களுக்கு எதிராக சி.ஆர்.பி.எஃப். நடவடிக்கை : அமித்ஷா !
பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்

அங்கேயே பெத்ரோவின் காயங்களுக்கு உடனடியாகக் கட்டுக்கள் போடப்பட்டன. அவனை ஸ்டிரெச்சரில் கிடத்தி லாரியில் ஏற்றத் தொடங்கிவிட்டார்கள் ஆட்கள். அப்போது அவன் கண்களைத் திறந்தான். ஏதோ கிசுகிசுத்தான். ஆனால் அவனது ஈனக்குரல் ஒருவர் காதிற்கும் எட்டவில்லை. கர்னல் அவன் அருகே குனிந்தார்.

“எங்கே மெரேஸ்யெவ்?” என்று கேட்டான் பெத்ரோவ்.

“இன்னும் திரும்பவில்லை.”

ஸ்டிரெச்சர் மறுபடி தூக்கப்பட்டது. ஆனால் காயமடைந்தவன் தலையை விசையாக ஆட்டி. ஸ்டிரெச்சரில் இருந்து குதிக்க முயல்பவன் போன்று உடலை அசைத்தான்.

“நிறுத்துங்கள், என்னை அப்பால் கொண்டு போகாதீர்கள்! நான் போக மாட்டேன். மெரேஸ்யெவ் வரும்வரை காத்திருப்பேன். அவன் என் உயிரைக் காப்பாற்றினான்” என்றான்.

பெத்ரோவ் தீவிரமாக எதிர்த்தான், கட்டுக்களைப் பிய்த்து அறுத்துவிடுவதாக அச்சுறுத்தினான். எனவே கர்னல் கையை ஆட்டி, முகத்தைத் திருப்பிக்கொண்டு, “சரி, ஸ்டிரெச்சரைக் கீழே வையுங்கள். மெரேஸ்யெவிடம் பெட்ரோல் இன்னும் நிமிடத்திற்கு மேல் காணாது. அதற்குள் இவன் உயிர் போய்விடாது” என்று பற்களை கடித்துக் கொண்டே சொன்னார்.

தமது விமானமானியின் சிவப்பு வினாடி முள் டிக்டிக் கென்று ஒலித்தவாறு எண் வட்டத்தில் சுற்றி வருவதைக் கவனித்தார் கர்னல். எல்லோரும் மெரேஸ்யெவ் விமானம் வரவேண்டிய மங்கிய நீலக் காட்டின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். காதுகளை கூராக்கிக் கொண்டு உற்றுக் கெட்டார்கள். ஆனால் தொலைவில் கேட்ட பீரங்கிக் குண்டுகளின் முழக்கமும், அருகே மரத்தைக் கொத்திக் கொண்டிருந்த மரங்கொத்தியின் அலகோசையும் தவிர வேறு எந்த ஒலியும் கேட்கவில்லை.

சில வேளைகளில் ஒரு நிமிடம் எவ்வளவு நீடிக்கிறது!

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை