“டெலிபோன் என்ற ஒன்று வந்தபின்னர் பெண்களிடம் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. எங்கு பார்த்தாலும் செல்போனை வைத்துக்கொண்டு கிசுகிசு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் தவறு செய்தால் அது போற போக்குல நடந்துடும். பெண்கள் அந்த விசயத்துல தவறு செய்தால் அது மிகப்பெரிய தப்புல கொண்டுபோய் விட்டுவிடும். சொல்லும்போது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் வேற வழியில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். ஆண் சின்ன வீடு வைத்துக்கொண்டால் அந்த வீட்டுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்துவிடுவான். அதே நேரத்தில் பெரிய வீட்டை தொந்தரவு செய்யமாட்டான்.

பெண்களிடம் அந்த கட்டுப்பாடு இல்லை. அதனால்தான், கள்ளக்காதலால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி, குழந்தையை அடித்துக்கொன்ற தாய் என்று செய்திகள் வருகின்றன. பெண்கள் இடம் கொடுப்பதால்தான் தவறுகள் நடக்கின்றன. ஆண்களை குறை சொல்லி பிரயோஜனமில்லை. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு பெண்கள்தான் காரணம். பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு’’

மேற்படி முத்தை உதிர்த்தவர் மார்க்கெட் போன பழைய காமெடி நடிகர் கே. பாக்கியராஜ்.

***

டாஸ்மாக் சரக்கால் குடலுக்கு என்ன நேர்கிறதோ அதே தான் நமது சினிமாக்காரர்களால் மூளைக்கும் நேர்கின்றது. கவனிக்க… நமக்கு சினிமாவின் மீது எந்த வாய்க்கா வரப்புத் தகறாரும் இல்லை – சினிமாக்காரர்கள் தான். குறிப்பாக தமிழ் சினிமாக்காரர்கள்.

சினிமாவில் நடித்து விட்டோம்; திரையில் நமது முகம் தெரிந்து விட்டது; கோணங்கி சேட்டைகளுக்கு மக்களும் கை தட்டி விட்டார்கள்; நடித்ததில் நாலைந்து படம் வசூலித்தும் விட்டது – இவ்வளவு போதும். நமது நடிகர்களுக்கு தலையில் கொம்பு முளைத்து கொம்பைச் சுற்றி ஒளிவட்டமும் தோன்றி விடுகின்றது. அதன் பின் பூமிக்கு மேல் வானத்திற்கு கீழ் உள்ள சகலத்தைப் பற்றியும் கருத்து சொல்லும் துணிவு வந்து விடுகின்றது.

படிக்க:
பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?
♦ பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி

அதில் மார்க்கெட் போன பழைய பூட்டகேசுகளின் இம்சை ஒரு தனி ரகம்; அதிலும் குறிப்பாக மார்க்கெட்டும் போய் தொழிலில் உருப்படாத வாரிசும் அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம். அப்பேர்பட்ட ஆசாமிகளிடம் மேடையும் மைக்கும் கிடைத்து விட்டால் விளைவு மேலே உள்ளதைப் போல் தான் இருக்கும்.

பெண்கள் தவறு செய்தால் அது தவறு – ஆண்கள் தவறு செய்தால் அது தவறல்ல என்கிற இந்த உயரிய கோட்பாட்டை பாக்கியராஜ் பேசும் போது யாரும் குறுக்கிடவில்லை. சொல்லப் போனால் பாக்கியராஜ் பொதுபுத்தியில் என்ன உள்ளதோ அதைத் தான் பேசியிருக்கிறார். மேலும், “கள்ளக்காதலால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி” குறித்த செய்திகளை தினத்தந்தியில் படித்து உள்ளபடியே அச்சமடைந்துள்ளார். எனவே தான் அந்த கொலைகளில் இன்னொரு “ஆண்” தொடர்பு இருப்பதை பார்க்க மறந்து விட்டிருக்கிறார்.

மேலும், இதே கள்ளக்காதல் விவகாரங்களுக்காக ஆண்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் செய்திகளும் பாக்கியராஜ் படிக்கும் அதே தினத்தந்தியில் வரத்தான் செய்கின்றன. பிரச்சினை என்னவென்றால் அந்த செய்திகளையெல்லாம் அவரது கண்கள் பார்த்திருக்கும்; ஆனால், மூளை பார்க்க மறுக்கின்றது.

பாலியல் தொடர்பாக நடக்கும் குற்றங்களில் பெண்கள் ஈடுபட்டிருப்பதை பார்த்து கலவரமடையும் பாக்கியராஜ், அதே குற்றங்களில் ஈடுபடும் ஆண்களைப் பார்த்து ஏன் அச்சப்படவில்லை? அல்லது, ஆண்கள் பாலியல் ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடுவது ஏன் அவருக்கு உறுத்தலாக இல்லை?

இந்த சிந்தனைகள் எல்லாம் பெண்களை சக உயிர்களாக பார்க்காமல், வெறுமனே ஆண்டு அனுபவிக்கும் உடைமையாக, பொருளாக, சொத்தாக பார்க்க பயிற்றுவித்துள்ள பார்ப்பனிய கண்ணோட்டத்தில் இருந்தே எழுகின்றன. அதிலும், சினிமாக்காரன் என்பதால் இந்த திமிர் கொஞ்சம் தூக்கலாகத் தான் இருக்கும். இந்தியாவின் சினிமாத்துறை என்பது பாலியல் ரீதியிலான சுரண்டலும், ஒடுக்குமுறையும் கோலோச்சும் இடம். “பெண்களின் ஒழுங்கீனம்” தோற்றுவிக்கும் அச்சத்தை விட அவர்களும் தன்னைப் போன்றே (பல சந்தர்பங்களில் தன்னை விட மேம்பட்ட ரீதியிலும்) சிந்திக்கத் தெரிந்த ஒரு சக உயிரினம் என்பதே பாக்கியராஜைப் போல் சினிமாத்துறையில் குப்பை கொட்டிய பழம் பெருச்சாளிகளுக்கு உள்ளூர கலவரத்தை உண்டாக்க கூடியது.

பார்ப்பனியம் மனிதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் சித்தாந்தம் என்பது நமக்குத் தெரியும் – அது சாதி வாரியாக மட்டும் மனிதர்களை பிளவு படுத்தவில்லை, பாலியல் ரீதியாகவும் ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்றது. அதுவே இந்திய சமூகத்தின் ஆன்மாவாக உறைந்து கெட்டிதட்டிப் போயுள்ளது. பாக்கியராஜ் போன்ற தமிழ் சினிமா ‘படைப்பாளிகள்’ பார்ப்பனிய பொதுபுத்தி என்கிற நாட்டு சரக்கை ராவாக அடித்து விட்டு மேடையேறினால், இப்படி நாற்றமடிக்கும் வாந்தி தானே எடுத்தாக வேண்டும்?

***

தில்லி பெண் நிர்பயாவை பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்த குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கபபட்டனர். குற்றவாளிகள் போலீசாரிடம் பிடிபட்ட போது இவ்வாறு சொன்னார்கள் : “ நாங்கள் முதலில் சீண்டினோம், அந்தப் பெண் முரண்டு பிடித்தாள். அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வன்புணர்வு செய்து கொன்று போட்டோம்”. பாலியல் தூண்டுதலை விட அந்த குற்றவாளிகளுக்கு தங்களுடைய “ஆண்” திமிரை ஒரு பெண் உரசி விட்டாள் என்பது பிரதானமாக இருந்திருக்கிறது.

அந்த குற்றவாளிகளின் வாழ்க்கை வரலாற்றில் அந்த குறிப்பிட்ட இரவு நிகழாமல் போயிருந்தால் ஒருவேளை அவர்கள் “படைப்பாளிகள்” ஆகியிருக்க கூடும்; யார் கண்டது, சினிமாவில் ஒரு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியராகவும் ஆகியிருக்க கூடும்.

பெண்களை இழிவு படுத்துவது பார்ப்பனிய சித்தாந்தம் என்றால், அந்த மலத்தின் மேல் சீனி தூவி கடை விரிப்பதுதான் பாக்கியராஜ் போன்ற படைப்பாளிகளின் படைப்பியக்கத்தின் சாரம். தொடர்ந்து நாற்றமடிக்கும் இந்த அசிங்கத்தோடு புழங்கிக் கொண்டிருப்பதும், சினிமாக்காரன் என்றால் என்னத்தையும் பேசலாம் என்கிற ஒரு துர்பாக்கிய சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதாலும் தான் இவ்வாறான மேடைப் பேச்சுகளை நாம் கேட்டுத் தொலைய வேண்டியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களும் தவறு நடக்க காரணம் என்று பாக்கியராஜ் குறிப்பிட்டுள்ளார். பாக்கியராஜும் கோவை மாவட்டம்தான். நாளைப் பின்னே அங்கே போய் வரத் தானே வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தார் பாக்கியராஜின் இந்த தத்துவார்த்த கருத்தை குறித்து அவர் அடுத்த முறை கோவை செல்லும் போது நேரில் சந்தித்து ‘விளக்கம்’ கேட்க வேண்டும்.


– சாக்கியன்
செய்தி ஆதாரம் : நக்கீரன்