உண்மை மனிதனின் கதை | ஆசிரியரின் பின்னுரை – 02

னால் அவனது பொய்க் கால்களில் இராணுவப் பாங்கான பூட்சுகள் லாவகமாக அணிவிக்கப்பட்டுத் தரையில் கிடந்தன. அவற்றின் கீழ் முனைகள் படுக்கைக்கு அடியிலிருந்து துருத்திக் கொண்டிருந்தன. அங்கே ஒளிர்ந்திருக்கும் ஒரு மனிதனுடைய கால்கள் போல் காணப்பட்டன அவை. அந்தக் கணத்தில் என்னுடைய பார்வை குழப்பமடைந்ததாகத் தென்பட்டது போலும். ஏனெனில் விமானி என்னைப் பார்த்து, தந்திரமும் மனநிறைவும் ததும்பும் புன்னகையுடன் கேட்டான்:

“நீங்கள் இதை முன்பு கவனிக்கவில்லையா என்ன?”

“இப்படி இருக்கும் என்ற எண்ணமே எனக்கு உண்டாகவில்லை.”

“ரொம்ப நல்லது! இதற்காக நன்றி! உங்களுக்கு ஒருவரும் இதைப் பற்றிச் சொல்லாததுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கள் ரெஜிமென்டில் எத்தனை தேர்ந்த விமானிகள் இருக்கிறார்களோ அத்தனை தம்பட்டமடிப்போரும் இருக்கிறார்கள். ஒரு புதிய ஆளிடம், அதுவும் “பிராவ்தா” செய்தித் தாளிலிருந்து வந்திருப்பவரிடம் இத்தகைய அபூர்வத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளாமல் எப்படி விட்டுவிட்டார்கள்?”

“ஆனால் இது கண்டறியாத சேதியாயிற்றே. கால்கள் இல்லாமல் சண்டை விமானத்தைச் செலுத்துவதும் போரிடுவதும் நம்பவே முடியாத அருஞ்செயல் அல்லவா! விமானப் படை வரலாறு இம்மாதிரி நிகழ்ச்சியை இதுவரை அறிந்ததே இல்லையே.”

விமானி களிப்புடன் சீழ்க்கை அடித்தான்.

“விமானப் படை வரலாறு ஒன்றாவது! அது எத்தனையோ விஷயங்களை அறியவில்லை, இந்தப் போரில் சோவியத் விமானிகளிடமிருந்து தெரிந்து கொண்டது. தவிர இதிலே என்ன நலம் இருக்கிறது? மெய்யாகச் சொல்லுகிறேன், நம்புங்கள்: இந்தப் பொய்க்கால்களோடு இன்றி நிஜக் கால்களுடன் எனக்கு விமானம் ஓட்டுவதே எனக்கு எவ்வளவோ அதிக மனநிறைவு அளித்திருக்கும். ஆனால் என்ன செய்வது? நிலைமைகள் அப்படி வந்து சேர்ந்துகொண்டனவே” என்று விமானி பெருமூச்சு விட்டான். “ஆனால் ஒன்று. சரியாகச் சொல்வதானால் இத்தகைய உதாரணங்களை விமானப்படை வரலாறு முன்பே அறிந்திருக்கிறது” என்றான்.

விமானி கைபெட்டிக்குள் தேடி ஏதோ ஒரு பத்திரிக்கைத் துணுக்கை அதற்குள்ளிருந்து எடுத்தான். அது ஒரேடியாக நைந்து மடிப்புகளில் விட்டுப் போய் ஸெல்லோ பேன் காகிதத்தில் ஜாக்கிரதையாக ஒட்டப்பட்டிருந்தது. ஒரு பாதம் இல்லாமல் விமானம் ஓட்டிய ஒரு விமானியைப் பற்றி அதில் வருணிக்கப்பட்டிருந்தது.

“என்னவாயினும் அந்த விமானியின் ஒரு கால்தான் ஊனமாயிருந்ததே. தவிர அவன் ஓட்டியது சண்டை விமானம் அல்ல, ஏதோ பழங்கால ‘பர்மான்’ விமானம் தானே.”

“ஆனால் நான் சோவியத் விமானி என்பதை மறந்து விட்டீர்களே. நான் பெருமையடித்துக் கொள்கிறேன் என்று நினைக்காதீர்கள். இவை என் சொற்கள் அல்ல. இவற்றை ஒரு காலத்தில் என்னிடம் சொன்னவர் நல்ல, உண்மையான மனிதர்” (’உண்மையான’ என்ற சொல்லை அவன் சிறப்பாக அழுத்தினான்). “அவர் இப்போது காலமாகி விட்டார்.”

விமானியின் துடியான அகன்ற முகத்தில் அன்பு கனிந்த சோகம் பரவியது. விழிகள் பரிவுடன் தெளிந்த ஒளி வீசின. முகம் திடீரெனப் பத்து வயசு அதிக இளமை அடைந்து, சிறுவனது போல ஆயிற்று. ஒரு நிமிடம் முன்பு நடுவயதினனாகத் தோற்றமளித்த அவனுக்கு உண்மையில் வயது இருபத்திரண்டு, இருபத்து மூன்றுக்கு மேல் இராது என நான் உணர்ந்தேன்.

“என்ன, எப்பொழுது, எங்கே என்று யாரேனும் கேட்கத் தொடங்கும் போது சாதாரணமாக என்னால் சகிக்க முடிவதில்லை….. ஆனால் இப்போது எல்லாம் சட்டென நினைவுக்கு வந்துவிட்டன… நீங்கள் இங்கே வெளி ஆள். நாளையே நாம் பிரிந்திடுவோம், அப்புறம் சந்திப்பது சந்தேகந்தான்…. என் கால்கள் பற்றிய கதையைச் சொல்லுகிறேன், கேட்கிறீர்களா?” என்றான் விமானி.

அவன் படுக்கையில் உட்கார்ந்து, கம்பளியை மோவாய் வரை இழுத்துப் போர்த்துக் கொண்டு கதை சொல்லலானான். உடனிருப்பவனை அறவே மறந்து தனக்குத்தானே பேசிக் கொள்பவன் போலச் சொல்லிக் கொண்டு போனான் அவன். எனினும் சுவையாக, விளக்கமாக விவரித்தான். அவனுக்கு நுண் மதியும் தெளிவான நினைவாற்றலும் நல்ல, பெரிய இருதயமும் இருப்பதை உணர முடிந்தது. நான் கேட்பது முக்கியமானது, அபூர்வமானது, அப்புறம் இதை மறுபடி ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாது என்பதைச் சட்டெனப் புரிந்து கொண்டேன்.

“மூன்றாவது ஸ்குவாட்ரனின் போர்ப்பறப்புகள் பற்றிய நாட்குறிப்பு” என்ற தலைப்புடன் மேஜைமேல் கிடந்தது ஒரு நோட்டுப் பத்தகம். அதை எடுத்துக் கொண்டு விமானியின் கதையை அதில் குறித்துக் கொள்ளலானேன்.

இந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டுவிட்டது. எனவே முடிந்தவரை விரிவாகவே அதைக் குறித்துக் கொள்ள முயன்றேன். ஒரு நோட்டுப் புத்தகத்தை எழுதி முடித்த பின் இன்னொரு நோட்டுப் புத்தகத்தைத் தேடி எடுத்து அதையும் எழுதி நிறைத்தேன். நிலவறையின் குறுகிய வாயிலுக்கு வெளியே வானம் வெளுக்கத் தொடங்கியதை நான் கவனிக்கவே இல்லை. “ரிஹ்த்கோபென்” விமான டிவிஷனைச் சேர்ந்த மூன்று ஜெர்மன் விமானங்களை வீழ்த்திய பின், தான் முழு மதிப்புள்ள விமானி என மீண்டும் உணர்ந்த நாள் வரை தன் கதையைச் சொல்லி முடித்தான் அலெக்ஸேய் மெரேஸ்யெவ்.

“அட, நாம் வேகுநேரம் அரட்டையடித்துக் கொண்டிருந்து விட்டோம். எனக்கு நாளைக்குக் காலையிலிருந்து பறப்பு நடத்தியாக வேண்டும்” என்று ஒரு வாக்கியத்தை அரைகுறையாக நிறுத்திவிட்டு அவன் கூறினான். “பேசித் துளைத்துவிட்டேன் அல்லவா நான் உங்களை! மன்னித்துக் கொள்ளுங்கள். இப்போது உறங்குவோம்” என்றான்.

”ஓல்கா விஷயம் என்ன ஆயிற்று? அவள் உங்களுக்கு என்ன பதில் எழுதினாள்?” என்று கேட்டுவிட்டு உடனே நினைவுபடுத்திக் கொண்டு “ஆனால் இந்தக் கேள்வி உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் அப்படியானால் பதில் சொல்ல வேண்டாம்” என்றேன். “பிடிக்காதிருப்பானேன்?” என்று அவன் புன்னகை செய்தான். “ஓல்காவும் நானும் பெரிய விசித்திர பேர்வழிகள். கேளுங்கள். அவளுக்கு ஆரம்பத்திலிருந்தே எல்லாம் தெரிந்திருக்கிறது. என் நண்பன் அந்திரெய் தெக்தியாரென்கோ உடனேயே அவளுக்கு எழுதிவிட்டானாம் – முதலில் விபத்தைப் பற்றியும் அப்புறம் என் கால்கள் வெட்டி அகற்றப்பட்டதைப் பற்றியும். நான் இதை எதனாலோ மறைக்கிறேன் என்பதைக் கண்டு இதைப் பற்றிச் சொல்வது எனக்குக் கஷ்டமாயிருக்கிறது என்று புரிந்து கொண்டாள். ஆகவே ஒன்றும் அறியாதவள் போல நடித்து வந்தாள். இப்படியாக நாங்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வந்திருக்கிறோம், எதற்காகவோ தெரியவில்லை. அவளைப் பார்க்க விரும்புகிறீர்களா?”

விளக்குத் திரியைப் பெரிதாக்கி, அதைப் படுக்கைத் தலைமாட்டில் தொங்கிய நிழல் படங்களின் பக்கத்தில் கொண்டு போனான். அவற்றில் ஒரு படம் தேர்ச்சியற்ற போழுது போக்குப் படப்பிடிப்பாளனால் எடுக்கப்பட்டது. அது அனேகமாக முழுவதும் மங்கித் தேய்ந்து போயிருந்தது. கோடைகாலப் புல் தரையில் பூக்கள் நடுவே கவலையின்றி முறுவலித்துக் கொண்டிருந்த பெண்ணின் வடிவத்தை அந்தப் படத்தில் காண்பது கடினமாக இருந்தது. இன்னொரு படத்தில் ஜூனியர் லெப்டினன்ட் எஞ்சினீயரின் சீருடை அணிந்து அதே மங்கை காணப்பட்டாள். அவளுடைய அறிவு படர்ந்த மெலிந்த முகத்தில் ஒரு முனைப்பாடும் கண்டிப்பும் தென்பட்டன. அவள் மிகச் சிறியவளாக இருந்தமையால் இராணுவச் சீருடை அணிந்த அழகிய பதினாறு வயதுப் பையன் போல் காணப்பட்டாள். ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்தப் பையனின் கண்களில் களைப்பும் பிள்ளைத்தனத்துக்கும் மாறாக கூர்ந்த பார்வையும் இருந்ததுதான்.

”உங்களுக்கு இவளைப் பிடித்திருக்கிறதா?” –

“ஆமாம்” என்று மனப் பூர்வமாகச் சொன்னேன்.

“எனக்குந்தான்” என்று நல்லியல்புடன் புன்னகை செய்தான் விமானி.

“ஸ்த்ருச்கோவோ? இப்போது எங்கே இருக்கிறான் அவன்?”

“எனக்குத் தெரியாது. போன குளிர் காலத்தில் விலீக்கியெ லூக்கி என்னும் இடத்திலிருந்து அவனுடைய கடிதம் கிடைத்தது.

“டாங்கி வீரன்……. அவன் பெயர் என்ன?..”

“கிரிகோரிய் க்வோஸ்தியேவா? அவன் இப்போது மேஜர். ப்ரோஹவ்க்கா என்னும் இடத்திற்கு அருகே நடந்த புகழ்பெற்ற போரிலும் அப்புறம் இங்கே, கூர்ஸ்க்ப் பிரதேசத்தில் டாங்கிப் படைகளை பிளந்து ஊடுருவவும் நடவடிக்கைகளிலும் அவன் கலந்து கொண்டான். அக்கம் பக்கத்தில் போரிடுகிறோம், ஆனால் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை. அவன் டாங்கி ரெஜிமெண்ட் கமாண்டர். இப்போது ஏனோ பேசாதிருக்கிறான். அதனால் பரவாயில்லை. கட்டாயம் சந்திப்போம், உயிரோடிருப்போம். நாம் வாழ வேண்டாமா, ஊம்?…. நல்லது, தூங்குவோம், தூங்குவோம். விடிந்துவிட்டது.”

விளக்கை ஊதி அணைத்தான். அரையிருள் சூழ்ந்தது. மங்கிய புலல்போதின் வெளிச்சம் அதைக் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைக்க தொடங்கிற்று. கொசுக்கள் ரீங்காரம் செய்தன. இந்த அருமையான காட்டு இருப்பிடத்தில் இருந்த ஒரே அசௌகரியம் கொசுக்கள் தாம்.

“உங்களைப் பற்றிப் ‘பிராவ்தா’வில் எழுத மிகவும் விரும்புகிறேன்” என்றேன்.

“அதற்கென்ன , எழுதுங்களேன்” என்று விசேஷ உற்சாகமின்றி இசைந்தான் விமானி. நிமிட நேரத்திற்கெல்லாம் தூக்கக் குரலில் சொன்னான்: “அல்லது ஒரு வேளை வேண்டாமோ? ஹிட்லரின் பிரசார மந்திரி கோயபல்ஸ் கையில் கிடைக்கும், அவன் பிரமாதமாகக் கதை அளக்கத் தொடங்கி விடுவான் – ருஷ்யப் படைகளில் கால்களற்றவர்கள் கூடப் போராடுகிறார்கள், அப்படி இப்படி என்று…… பாசிஸ்டுகள் இப்படிப் கயிறு திரிப்பதில் படு சூரர்கள் ஆயிற்றே.”

மறு நொடியிலேயே அவன் ரசமாய்க் குறட்டை விடத் தொடங்கிவிட்டான். எனக்கோ தூக்கம் வரவில்லை. எதிர்பாராத இந்தச் சுயசரிதை தனது எளிமையாலும் மாண்பாலும் என்னைப் பரவசப்படுத்திவிட்டது. இதன் கதாநாயகன் தானே அருகில் படுத்துறங்கினான், பனித்துளிகள் படிந்தப் பொய்க்கால்கள் புலரத் தொடங்கியிருந்த பகலின் வெள்ளொளியில் துலக்கமாகத் தென்பட்டவாறு தரையில் கிடந்தன. இல்லாவிட்டால் நான் கேட்பது எல்லாம் நல்ல கட்டுக்கதை என எனக்குத் தோன்றியிருக்கும்……..

அதன் பிறகு நான் அலெக்ஸேய் மெரேஸ்யெவைச் சந்திக்கவில்லை. ஆனால் அர்யோல் நகருக்கு அருகிலேயே இந்த விமானியின் அசாதாரணமான கதையை நான் குறித்துக் கொண்டிருந்த இரண்டு நோட்டுப் புத்தகங்களை போர்க் காலத்தில் செல்ல நேர்ந்த இடங்களுக்கெல்லாம் உடன் கொண்டு சென்றேன். சண்டை நடந்து கொண்டிருக்கையிலும், பின்னர் நாஜிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்த போதும் அவனைப் பற்றி ஒரு கட்டுரை எழுத நான் எத்தனையோ தடவை முயன்றேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எழுதியது அவனுடைய வாழ்க்கையின் வண்ணமற்ற வெறும் நிழலாகவே எனக்குப்பட்டது. எனவே அப்புறம் பார்க்கலாம் என்று இருந்து விட்டேன்.

படிக்க :
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?
திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்

கடைசியாக நியூரம்பெர்கில் நடந்த சர்வதேச இராணுவ விசாரணை மன்றத்தின் அமர்வுகளில் நான் உடனிருந்தேன். கெர்மன் கோயெரிங்கின் விசாரணை முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. “ஜெர்மனியின் இரண்டாவது நாஜி” கோயெரிங் எழுத்து மூலமான சாட்சியங்களின் கனத்தைத் தாள மாட்டாமல் பேசத் தொடங்கினான். சோவியத் வழக்குரைஞரின் கேள்விகள் அவனைத் திக்கு முக்காட வைத்தன. அதுவரை தோல்வியை அறியாத பாசிச அரக்கச் சைனியம், சோவியத் நாட்டின் எல்லையற்ற அகல் பரப்பில் சோவியத் சைனியத்தின் தாக்குதல்களால் எப்படிக் கொஞ்சங் கொஞ்சமாகக் கரைந்து தகர்ந்து சிதறிப் போயிற்று என்பதை அவன் விருப்பமின்றியே, பற்களைக் கடித்துக் கொண்டு விசாரணை மன்றத்துக்கு விவரித்தான். தனது கட்சியை நியாயப்படுத்துவதற்காக கோயெரிங்க் மங்கியவிழிகளை வானை நோக்கி நிமிர்ந்து விழிகளை வானை நோக்கி நிமிர்ந்து, “ஆண்டவன் சித்தம் அவ்வாறு இருந்தது” என்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க