குற்றமும் தண்டனையும்

ரு விஷயத்தை யோசித்துப்பாருங்கள். தி. நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு குண்டு வெடிப்பு நடக்கிறது. தமிழகமே அதிர்ந்து போய் கோபத்தில் துடிக்கிறது. மீடியா துடிப்புடன் போலீஸ் கமிஷனரை மொய்க்கிறது. இரண்டு நாள் அங்கே தேடுகிறோம், இங்கே தேடுகிறோம் என்று பேட்டி கொடுக்கிறார். மூன்றாம் நாள் பிரெஸ் மீட் வைத்து இரண்டு கைதிகளை மீடியா முன் நிறுத்துகிறார்கள். ‘இவன் அகில் அஹமத், அவன் முகமது குர்ஷித். இவர்கள் ராயப்பேட்டையில் வசிக்கிறார்கள். அகில் ஒரு பைக் மெக்கானிக், முகமது ஒரு ஹார்டுவேர் கடையில் வேலை செய்கிறான். இவர்கள் இருவர்தான் லஸ்கர் உதவியுடன் இந்த செயலை செய்தவர்கள்,’ என்று அறிவிக்கிறார்கள்.

இப்போது உங்கள் மனதில் என்ன ஓடும்? அப்பாடா, கதை முடிந்தது. குற்றவாளிகள், அதாவது தீவிரவாதிகள், சிக்கி விட்டார்கள். அடுத்ததாக அவர்களை நடுத்தெருவில் தூக்கில் போடு… அல்லது துப்பாக்கியில் சுட்டு தள்ளு என்றெல்லாம் கூச்சல்கள் ஆரம்பிக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு பெரும் எதிர்ப்புகள் உருவாகும்.

ஆனால் ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள். இந்த அகில் குர்ஷித் இருவரும் உண்மையிலேயே அந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களா? என்ற கேள்வியை யாருமே கேட்க மாட்டோம். மீடியா மற்றும் அரசாங்க அழுத்தம் தாங்காமல் போலீசே இரண்டு பேரை ‘பிடித்து’ வந்து இவன்தான் குற்றவாளி என்று காட்ட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம், என்ற கேள்வியை யாராவது யோசித்திருப்போமா?

அது எப்படி யாரையோ பிடித்து தீவிரவாதி என்று காட்ட முடியும், என்று கேட்கலாம். யாரையோ காட்ட முடியாது. ஆனால் மொக்கை குற்றங்களுக்கு மாட்டியவர்கள் அல்லது வேறு ஒரு குற்றத்தில் நிரூபணம் ஆகாதவர்கள் என்று யாரையாவது பார்த்து மாட்டி விடலாம்.

ஷாஹித் ஆஸ்மி வழக்கு இந்த விஷயத்தில் முக்கியமானது. மும்பையை சேர்ந்த ஆஸ்மி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் 13 வயதில் தீவிரவாதம் கற்க போனவன், அங்கே கற்றுக்கொடுக்கப்பட்ட விஷயங்களை தாள முடியாமல் 14 வயதில் அங்கிருந்து ஓடி வந்து விட்டான். அதற்குப் பின் மும்பை குண்டு வெடிப்பில் அவனையும் ஒரு குற்றவாளியாக போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. ஏழு ஆண்டுகள் திஹார் ஜெயிலில் கழித்தான். பின்னர் குற்றம் நிரூபணமாகாமல் விடுதலை ஆன ஆஸ்மி, சட்டக்கல்லூரி சேர்ந்து படித்து தன்னைப்போலவே தீவிரவாத குற்றங்களில் கைதான அப்பாவிகளுக்காக ஆஜராக துவங்கினார். 2008 மும்பை தாக்குதலில் கைதான ஃபஹீம் அன்சாரிக்காக ஆஜராகும் பொழுது, ‘தீவிரவாதத்துக்கு ஆதரவு கொடுக்கிறார்’ என்று குற்றம் சாட்டப்பட்டு, வெறியர்களால் சுடப்பட்டு தன் அலுவலக வாசலிலேயே இறந்தார். ஆனால் ஃபஹீம் அன்சாரி எந்தக்குற்றமும் நிரூபணமாகாமல் பின்னர் விடுதலை ஆனான்.

அதாவது என்ன சொல்ல வருகிறேன்? கையில் கிடைத்தவர்களை கண்டமேனிக்கு கைது செய்வது பரவலாகவே இங்கே நடக்கிறது. குறிப்பாக அதிக சமூக அழுத்தம் கொண்ட வழக்குகளில் இது நிறையவே நடக்க சாத்தியக்கூறு இருக்கிறது.

படிக்க:
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !
♦ ஹைதராபாத் போலி என்கவுண்டர் – தமிழ் ஃபேஸ்புக் கண்டனம்

தில்லியின் ஆருஷி வழக்கு நமக்கெல்லாம் நினைவிருக்கும். இளவயதான பள்ளி மாணவி ஆருஷி தன் படுக்கை அறையிலேயே கழுத்து அறுபட்டு இறந்த செய்தி தில்லியையே உலுக்கியது. இதற்கு முன் எப்போதும் இல்லாத மீடியா வெளிச்சம் இந்த வழக்கின் மேல் விழவே, போலீஸ் மீது பெரும் அழுத்தம் சேர்ந்தது. அவர்கள் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்த ஹேம்ராஜ் என்ற நடுத்தர வயது வேலையாள்தான் குற்றவாளி என்று அறிவித்தார்கள். ஹேம்ராஜுக்கும் ஆருஷிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது என்றும் போலீஸ் சொன்னது. வசதியாக கொலை நடந்த தினத்தில் இருந்து ஹேம்ராஜ் காணவில்லை. எனவே அவன்தான் கொன்று போட்டு ஓடிப்போய் விட்டான் என்று அறிவிக்க முடிந்தது. ஆனால் என்ன அசௌகரியம்; இரண்டு நாள் கழித்து ஹேம்ராஜின் அழுகிய சடலம் ஆருஷி வீட்டின் மொட்டை மாடியிலேயே கிடைத்தது. ஆருஷி கொலையுண்ட அதே நாள் ஹேம்ராஜும் கொல்லப்பட்டு இருக்கிறான்! இப்போது வழக்கின் திசை மாறியது. போலீஸ் மேல் மேலும் அழுத்தம் சேர்ந்து கொண்டது. அடுத்து யார் கிடைப்பார்கள் என்று பார்த்தார்கள். ஆருஷியின் அம்மா, அப்பா சேர்ந்துதான் கொன்று போட்டிருக்கிறார்கள் என்று போலீஸ் அறிவித்தது. அவர்கள் இருவரையும் கைது செய்தார்கள். ஆருஷி-ஹேம்ராஜ் தொடர்பு தெரிய வந்து, அதைப் பொறுக்க இயலாமல் குடி போதையில் அப்பா கொன்று விட்டிருக்கிறார்; என்று கேஸை மூடியது போலீஸ். பற்பல ஆண்டுகள் அம்மா அப்பா இருவரும் சிறைவாசம் செய்து, பின்னர் வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று இருவர் மேலும் வழக்குக்கு முகாந்திரமே இல்லை என்று கேஸ் தள்ளுபடி ஆனது. இருவரும் விடுதலை ஆனார்கள்.

எஸ்.ஏ.ஆர். ஜீலானி

2001 பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதாகிய எஸ்.ஏ.ஆர். ஜீலானி தில்லி பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர். சிறைவாசம் அனுபவித்து தூக்கு தண்டனை வரை போனார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் ஆதாரம் ஏதுமின்றி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலை ஆனார்.

நான் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் போதும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் குற்ற வழக்குகளுக்கு conviction rate, அதாவது குற்றம் நிரூபணமாகும் சதவிகிதம் 46 சதம். இதன் அர்த்தம் என்னவென்றால் நூறு பேர் மேல் போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயகிறார்கள் என்றால் அதில் 54 பேர் கண்டிப்பாக நிரபராதிகள்தான். அவர்கள் எப்படி நிரபராதிகள் ஆவார்கள்? ஏமாற்றி, சாட்சிகளை திரித்து வெளியே வருபவர்களாகவும் கூட இருக்கலாம் அல்லவா என்று நாம் கேட்கலாம். சரி, வெளியே வருபவர்களில் பாதி பேர் இப்படி வழக்கை திரித்து வெளியே வருபவர்கள் என்றே கூட வைத்துக்கொண்டாலும் 27 சதவிகிதம் பேர் முழுக்க முழுக்க நிரபராதிகள். குற்றவியல் ஆய்வின் கடைசி அறிக்கையின் படி இந்தியாவில் மூன்று லட்சம் கைதிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் வாடுகிறார்கள். இவர்களை undertrials என்று சொல்வார்கள். மேலே சொன்ன நமது குறைக்கப்பட்ட கணக்கின்படி பார்த்தாலும் கூட தற்போது மொத்தம் 81,000 நிரபராதிகள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது நாம் சொல்வது என்ன? கீழ் கோர்ட், நடு கோர்ட், மேல் கோர்ட் என்று போகிறவர்கள் கணக்கே இவ்வளவு என்றால் சும்மா கைதாகி வெறுமனே எஃப்.ஐ.ஆர். போடப்படுகிறவர்களில் எத்தனை அப்பாவிகள் இருப்பார்கள் என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டு விடுகிறேன்.

அது ஒரு புறம் இருக்க, நம் போலீஸ் லாக்கப்பில் குற்றத்தை ‘ஒப்புக்கொள்ளும்’ நிர்பந்தம் நிறைய பேருக்கு ஏற்பட்டு விடுகிறது. நாமே பார்த்திருப்போம். இந்த ‘பாத்ரூமில் வழுக்கி’ விழும் விஷயம் நிறைய நடக்கிறது. அடிதாங்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறைய வழக்குகள் பார்த்திருக்கிறோம். லாக்கப் அடி போல அர்த்தமற்ற, வீணான புலனாய்வு உலகிலேயே கிடையாது. என்னையே நாலு முறை சும்மா கன்னத்தில் அறைந்தாலே நியூயார்க் இரட்டை கோபுரத்தை தகர்க்க சதி செய்ததே நான்தான், பின் லேடன் அல்ல என்று வாக்குமூலம் கொடுத்து விடுவேன். அந்த அளவுக்கு பலவீனமான விஷயம் அது.

படிக்க:
போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !
♦ மதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை !

ஆனால் சினிமாவில் போலீஸ் ஹீரோ லாக்கப்பில் அடிப்பதை பார்த்து விசில் அடிக்கும் லெவலில்தான் நாமெல்லாம் இருக்கிறோம். போலீஸ் சித்ரவதை புலன்விசாரணையை துரிதப்படுத்தவோ அல்லது குற்றங்களை குறைக்கவோ உதவுவதாக எந்த புள்ளி விபரமும் உலகில் இதுவரை இல்லை. சொல்லப் போனால் பஞ்சத்துக்கு பிக் பாக்கெட் அடித்தவர்களை தொழில் முறை குற்றவாளிகளாக உருமாற்றம் செய்யவே இந்த சித்ரவதைகள் உதவுகின்றன. அதுவுமின்றி மெக்சிகோ நாட்டை வைத்து ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் லாக்கப் சித்ரவதைகள் ஒட்டு மொத்தமாக ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகின்றன என்று வாதிடுகின்றது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நாம் பார்த்தோம் என்றால் மேற்சொன்ன விஷயங்கள் எல்லாவற்றிலும் பாதிக்கப்படுவது யார் என்றால் பரம ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி / இனத்தவர்தான். பணக்காரர்களோ அல்லது மேட்டுக்குடி சாதியினரோ இல்லை.

உதாரணத்துக்கு தி. நகர் குண்டு வெடிப்பை எடுத்துக்கொள்வோம். மூன்றாம் நாள் போலீஸ் இரண்டு பேரை கைது செய்து முன் நிறுத்துகிறது: ஒருவன் பெயர் ராமசேஷன், இரண்டாமவன் சடகோபன். ராமசேஷன் இன்போசிஸ்சில் வேலை செய்கிறான். சடகோபன் ஒரு ஆடிட்டர்.

டிவியில் இந்த செய்தியைப் பார்த்து உங்கள் ரியாக்சன் எப்படி இருக்கும்? கமிஷனரைப் பார்த்து ‘இதெல்லாம் நம்பற மாதிரியா சார் இருக்கு?’ என்பீர்கள் அல்லவா? ஆனால் யோசித்துப் பாருங்கள் இந்த இரண்டு பெயர்களை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆக்குவது எது? அந்தக் கைதிகளின் சாதியா? அல்லது அவர்களின் வேலையா? படிப்பா?

பிராமணர்கள் நிறைய கொலைகளில் ஈடுபட்டு இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் உ.பி.-யில் நடந்த உன்னாவ் வன்புணர்வு சம்பவத்தில் அந்தப்பெண்ணை எரித்துப் போட்டதாக கைதானவர்கள் எல்லாருமே பிராமணர்கள்தான். இந்தியாவின் முதல் அரசியல் கொலையை செய்து காட்டியது ஒரு பிராமணன்தான்.

ஆனால் போலீசுக்கு தெரியும், ஆடிட்டர் சடகோபனை உங்கள் முன் நிறுத்த முடியாது என்று. எனவே அகில் அகமதுவை நிறுத்துகிறார்கள். இந்தியா முழுக்க ஆதிவாசிகள், தலித்துகள் முஸ்லிம்கள் மற்றும் பரம ஏழைகள் மட்டுமே இந்த போலீஸ் அட்டூழியத்துக்கு ஆளாகிறார்கள். யோசித்துப்பாருங்கள்: சிதம்பரம், அமித் ஷா போன்றோர் எல்லாம் சிறையில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் மேல் போலீஸ் சுண்டு விரல் கூட வைத்திருக்காது. சொல்லப்போனால் அமித் ஷா சம்பந்தப்பட்டிருந்த இர்ஷத் ஜஹான் என்கவுண்டர் ஒரு போலி என்பதும் அந்தப்பெண் தீவிரவாதி இல்லை என்பதும் சந்தேகமற நிரூபணமான ஒன்று. ஆனால் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமித் ஷா எந்த வழக்கும் இன்றி இப்போது உள்துறை அமைச்சராக இருக்கிறார்.

ஆனால் படிப்பறிவு குறைவான ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதி மதத்தை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிரூபணத்துக்கு காத்திருக்கும் கைதிகளில் 30 சதவிகிதம் பேர் எழுத்தறிவற்றவர்கள். Undertrials எனப்படும் இந்த கைதிகளில் 55 சதவிகிதம் பேர் தலித், ஆதிவாசி மற்றும் முஸ்லிம்கள். இவர்கள் எந்த சட்டஅறிவும் பண வசதியுமின்றி தொடர்ந்து சிறையில் வாடுகிறார்கள்.

அப்படி இருந்தும் இவர்களின் சராசரி conviction rate வெறும் 15% மட்டுமே அதாவது தற்போது சிறையில் வாடும் undertrial முஸ்லிம், தலித் ஆதிவாசிகளில் கிட்டத்தட்ட 85 சதவிகிதம் பேர் நிரபராதிகள்.

படிக்க:
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !
♦ சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

மொத்தத்தில் சொல்ல வந்தது இதுதான் :

♦ போலீஸ் ஒருவரை கைது செய்து விட்டார்கள் என்பதாலேயே அவர்கள் குற்றம் புரிந்தவர் என்று ஆகி விட மாட்டார்கள்.

♦ லாக்கப் சித்திரவதைகளை, என்கவுன்டர்களை ஆதரிப்பது ஒரு சமூகமாக நம்மை பின்னுக்கு தள்ளவே செய்யும். ஒரு கோப எதிர்வினையில் ‘அவனை நடுத்தெருவில தூக்குல போடு,’ என்று கூச்சலிடலாம். அது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால் உண்மையிலேயே அப்படி நடுத்தெருவில் தூக்கிலிட துவங்கும் பொழுது, ஒரு சமூகமாக நாம் ஆயிரம் வருடம் பின்னே போகிறோம்.

♦ கண்ணுக்குக் கண் என்ற ஹமுராபி நீதி முறை 5000 வருடத்துக்கு முந்தைய சமூகங்களுக்கு சரியாக இருக்கலாம். 21-ம் நூற்றாண்டில் நவீன சமூகமாக கட்டமைக்க விரும்புபவர்களுக்கு சரியா என்று யோசித்துக் கொள்ளலாம்.

இன்றைக்கும் கூட நடுத்தெருவில் தூக்கில் போடும், கல்லடித்து சாவடிக்கும் தேசங்கள் இருக்கின்றன. சமூகப்பொருளாதார ரீதியாக அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள். அதே சமயம் ஒரு சீரியல் கில்லர் சைக்கோவுக்கும் கூட சட்டரீதியான பாதுகாப்பு கொடுத்து, அவன் மேல் ஒரு சுண்டு விரல் படாமல் வழக்கை நடத்தி முடித்து தண்டனை கொடுக்கும் தேசங்கள் இருக்கின்றன. அந்த தேசங்கள் சமூகப்பொருளாதார ரீதியாக எங்கே இருக்கின்றன என்று பாருங்கள்.

பின்னர், நாம் எந்த நாடுகளின் வரிசையில் சேர வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

நன்றி : Sridhar Subramaniam
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer