போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !

போலீசார் யார் மீது என்ன பொய்வழக்கு வேண்டுமானாலும் போடலாம், எந்தக் கூட்டத்தை வேண்டுமானாலும் தடை செய்யலாம் என்பதுதான் இப்போதைய நிலை. அந்த அளவுக்கு சட்டவிரோதம் என்பதே சட்டமாகி விட்டது.

புதிய தாராளவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களாயினும் சரி, இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டங்களாயினும் சரி, இவற்றில் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாகவே முன்னிலையில் இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சியில் தொடங்கி, சென்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி வரை இந்தப் போராட்டங்களின் தாக்கத்தை நாம் கண்டோம்.

இந்தப் போராட்டங்கள் எல்லாம் தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கின்ற அமைப்புகளால்தான் தூண்டப்படுகின்றன என்றும் மோடியைப் பற்றிய ஒரு எதிர்மறையான பிம்பத்தைத் தமிழக மக்கள் மத்தியில் உருவாக்கியவர்கள் இத்தகைய அமைப்புகள்தான் என்றும் பா.ஜ.க. வினர் பலரும் பலமுறை கூறிவிட்டனர்.

தமிழகத்தின் எதிர்ப்பினை நசுக்குவது எப்படி என்பது பாரதிய ஜனதா கட்சியின் கவலை மட்டுமல்ல, மொத்த ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்க்கத்தின் கவலையும் கூட. எனவேதான், தமிழக அரசின் நிர்வாகம் முற்றுமுழுதாக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மக்கள், தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போலீசு ஆட்சியின் கொடூரத்தை அன்றாடம் அனுபவித்து வருகிறார்கள். டெல்டா மாவட்டக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான போலீசார் எதிரி நாட்டின் மீது படையெடுப்பதைப் போல நுழைகின்றனர். மக்களை நெருங்கவிடாமல் விரட்டியடித்து விட்டு, விளைநிலங்களில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்படுகின்றன. பச்சைப் பயிர்களை அழித்து கெயில் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இந்த போலீசு நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் சட்டம் – ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் என்றும் தேசவிரோதிகள் என்றும் சித்தரிக்கப்படுகின்றனர். தூத்துக்குடி போராட்டத்திற்குப் பிறகு இந்த ஒடுக்குமுறை தீவிரமடைந்திருக்கிறது.

தூத்துக்குடி படுகொலையை நினைவுபடுத்தாதே!

தூத்துக்குடி தியாகிகளுக்கான முதலாண்டு நினைவேந்தல் கூட்டத்தை நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பை எந்த ஊரிலும் போலீசார் அனுமதிக்கவில்லை. “தூத்துக்குடி சம்பவத்தை நினைவுபடுத்தி, பொதுமக்கள் அந்தச் சம்பவத்திற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்துவதற்குத் தூண்டக்கூடிய வகையில் தாங்கள் நடத்தும் கூட்டம் அமைய உள்ளதாகச் சந்தேகம் எழுகிறது. எனவே, அனுமதி மறுக்கப்படுகிறது.” என்று கூறி, திருவாரூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி அரங்கக் கூட்டத்தை போலீசார் தடை செய்தனர்.

தூத்துக்குடி தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு போலீசு விதித்திருந்த தடையை மீறி மக்கள் அதிகாரம் சென்னையில் நடத்திய நினைவேந்தல். (கோப்புப் படம்)

தூத்துக்குடியில் அரங்கக் கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட பாத்திமா பாபு மற்றும் பிற அமைப்பினருக்கு விசித்திரமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. கூட்டத்தில் 250 பார்வையாளர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்றும், பார்வையாளர்களின் அடையாள அட்டையைச் சோதித்த பின்னரே காவல்துறையினர் அவர்களை உள்ளே விடுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்ட நிபந்தனைகளை உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமசபைக் கூட்டங்கள் முயன்றபோது, அத்தகைய கிராமசபைக் கூட்டங்களை நடத்த விடாமல், போலீசு துணையுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் காலவரையின்றி ஒத்தி வைத்துவிட்டனர்.

மக்கள் அதிகாரம் சார்பில் வேதாரணியத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, அந்த வட்டாரம் முழுவதும் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களையும் போலீசே அழித்துள்ளது. சமீபத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கும்பகோணத்தில் நடத்தவிருந்த ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு மாநாட்டுக்கும் இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

கூடங்குளத்தில் அணுக்கழிவை பராமரிப்பது தொடர்பாக மக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, அரசின் முயற்சிக்கு எதிராகக் கருத்துருவாக்கம் செய்வார் என்ற காரணத்துக்காக முன்கூட்டியே
சுப. உதயகுமாரனைத் தடுப்புக்காவலில் கைது செய்வதற்கான சட்ட விரோதமான முயற்சியில் காவல்துறை வெளிப்படையாகவே ஈடுபட்டது.

படிக்க:
தமிழகத்தை நாசமாக்காதே ! சென்னையில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
♦ காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !

குறிவைக்கப்படும் தமிழகம் !

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் திணிக்கப்படும் பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து மக்கள் போராடும் இடங்களிலெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற போதிலும், இவ்விசயத்தில் தமிழகம் தனிச் சிறப்பாகக் குறி வைக்கப்படுகிறது.

கோலாரின் கைவிடப்பட்ட சுரங்கத்தில் அணுக்கழிவை வைக்கலாம் என முடிவு செய்தபோது, அம்மாநிலத்தின் காங்கிரஸ் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, அந்தத் திட்டத்தை ரத்து செய்ய வைத்தனர். ஆனால், இங்கோ இத்திட்டத்திற்கு எதிராகக் கருத்து கூறுவதே தேசத்துரோக குற்றமாகச் சித்தரித்து முடக்கப்படுகிறது.

மும்பை நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அம்மாநில விவசாயிகள் எதிர்ப்பதால், அத்திட்டம் ஓராண்டாகத் தடைபட்டு நிற்கிறது. இங்கே ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் சிறிய அளவு எதிர்ப்புக்கூட கொடூரமான முறையில் நசுக்கப்படுகிறது.

tamil nadu under police state
கருத்துரிமையை நசுக்கும் போலீசு ராஜ்ஜியத்தைக் கண்டித்து மக்கள் அதிகாரம் ஜூலை 17 அன்று நடத்திய தமிழகச் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்.

போராடும் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் போன்றோர் பொதுக்கூட்டம், அரங்குக் கூட்டம், ஆர்ப்பாட்டம் முதலான எந்த வடிவத்திலும் தமது கருத்தைப் பிரச்சாரம் செய்வதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. உரிமை மறுக்கப்பட்ட நிலையே இயல்பான நிலையாக மாற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு மறுப்பதற்கான காரணங்கள் சட்டத்துக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும் என்று போலீசார் கடுகளவும் கவலைப்படுவதில்லை.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்தபோது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, பெரியார் சிலை உடைப்பு ஆகிய சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் சார்பில் அனுமதி கேட்டபோது, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று எழுத்துப் பூர்வமாக காவல்துறை பதிலளித்தது. அதேபோல, தேர்தலின்போது நடைபெற்ற பொன்பரப்பி சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் தேர்தல் நடத்தை விதி என்ற பொய்க் காரணம் சொல்லியே அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் கருத்து வெளியிடலாமா? கூடாதா?, என்னவிதமான கருத்தை வெளியிடலாம் என்று பரிசீலித்து, அதன் அடிப்படையில் அனுமதி மறுப்பதாக எழுதிக் கொடுப்பது சட்டவிரோதமானதாயிற்றே என்றுகூட யோசிக்க முடியாத அளவுக்குச் சட்டவிரோதமான அனைத்தும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இயல்பானவையாகவும் சட்டபூர்வமானவையாகவும் மாறிவிட்டன.

அரசையும் இந்து அமைப்புகளையும் எதிர்த்தால் அனுமதி இல்லை என்கிறது போலீசு!

வேறு பல அனுமதி மறுப்புக் கடிதங்கள், குறிப்பிட்ட அமைப்புகளுக்கு அனுமதி இல்லை என்ற முன்முடிவோடு போலீசு அணுகுவதை வெளிப்படையாகவே தெரிவிக்கின்றன.

மக்கள் அதிகாரம், திருச்சி கிளை, கஜா புயல் பாதித்த நான்கு மாவட்டங்களைத் தேசியப் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியதை நிராகரித்து, காவல் உதவி ஆணையர் அளித்திருக்கும் பதில் இது : “தங்கள் அமைப்பின் செயல்பாடானது நேரடியாக அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும், அரசாங்கம் பொதுமக்களுக்காக செயல்படுத்தும் அனைத்து நல்ல திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் தடுக்கவும் சீர்குலைக்கவும் எடுக்கும் முயற்சியாகவும், மக்களிடம் தவறான கருத்துகளை பரப்புகின்ற செயல்பாடாகவும் தெரிகிறது. எனவே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.”

பள்ளி, கல்லூரி மாணவர்களை ஓ.என்.ஜி.சி. பணிகளுக்கு எதிராகத் தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக தெரிவதால், பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கு எதிரான கூட்டத்துக்கு நன்னிலத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது.

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்! மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கிப் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுத்த கோவை மாநகர காவல்துறை, குறிப்பிட்ட கட்சியையும் இந்து அமைப்புகளையும் நேரடியாகத் தாக்கிப் பேசக்கூடும் என்பதாலும், அரசுக்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் இந்து மக்களுக்கு எதிராகவும் தரக்குறைவாகப் பேசக்கூடாது என்பதாலும் அனுமதி மறுப்பதாக கூறுகிறது.

மக்களவைத் தேர்தலின் போது பா.ஜ.க. அ.தி.மு.க. அணிக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்குப் புரட்சிகர இளைஞர் முன்னணியினருக்குப் பலமுறை அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

போராடுவோரை அச்சுறுத்தும் பொய்வழக்கு எனும் ஆயுதம்!

யாரை ஒடுக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறதோ, அவர்கள் மீது ஒவ்வொரு பொதுக்கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டத்தின் போதும் போலீசார் பொய் வழக்குகளைப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றனர். எந்த வழக்கும் விசாரிக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படவில்லை என்ற போதிலும், இந்தப் பொய் வழக்குகளையே காரணம் காட்டி, எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுப்பதை ஒரு உத்தியாகத் திட்டமிட்டே கையாள்கின்றனர்.

தமிழக போலீசால் போடப்பட்டுள்ள பல்வேறு பொய்வழக்குகளைச் சந்தித்துவரும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், பச்சைத் தமிழகம் மாநிலத் தலைவர் சுப.உதயகுமார்.

சென்ற ஆண்டு காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது அது தொடர்பாகப் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது, தங்கள் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாலும் தங்கள் அமைப்பினர் மீது பல்வேறு மாவட்டங்களில் பல வழக்குகள் உள்ளதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது என்று மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்குப் பதிலளித்தது திருச்சி மாநகர காவல்துறை.

யார் மீதும் என்னவிதமான பொய்வழக்கையும் போலீசார் பதிவு செய்து கொள்ள முடியும் என்பதால், யாரையெல்லாம் முடக்கவேண்டும் என்று அரசு கருதுகிறதோ, அவர்கள் மீதெல்லாம் அடுக்கடுக்காகப் பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது போலீசு.

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மீது டாஸ்மாக் ஊழியரைக் கடப்பாரையால் அடித்துக் கொல்ல முயன்றதாகப் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் மீது குறைந்தபட்சம் 27 பொய் வழக்குகள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, துண்டறிக்கை விநியோகிப்பது போன்ற சாதாரணமான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் தோழர்கள் மீது பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தினார்கள், பேருந்துகளைக் கல்வீசித் தாக்கினார்கள், போலீசைப் பணி செய்ய விடாமல் தடுத்தார்கள், பொதுமக்களை மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்று பலவிதமான பொய்வழக்குகள் பதிவு செய்து வைத்துக் கொள்ளப்படுகின்றன.

திருச்சி நகரில் 8 வழிச் சாலைக்கு எதிராக ஒட்டப்பட்ட ஒரு சுவரொட்டிக்காக, நகரின் வெவ்வேறு காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கரூரில் அலுவலகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மக்கள் அதிகாரம் தோழர்களின் மீது அலுவலகத்தில் சட்டவிரோதமாகக் கூடி அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிக்கொண்டிருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

படிக்க:
மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி
♦ வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் ! பயண அனுபவக் கட்டுரை

கோத்தகிரி நகரில் செவிலியர் போராட்டத்தை ஆதரித்தும், பொதுக் கழிவறை கட்டித்தர மறுக்கும் நகராட்சி நிர்வாகத்தை விமர்சித்தும், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்தும், ஈஷா மையத்திற்கு மோடியின் வருகையை கண்டித்தும், பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்தும் மக்கள் அதிகாரம் சார்பில் ஒட்டப்பட்ட ஒவ்வொரு சுவரொட்டிக்கும் அமைப்பாளர் ஆனந்தராஜ் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் அனைத்திலும் நாட்டு மக்களை ஜனநாயகப் பாதையில் இருந்து நக்சல்பாரி பாதையில் கொண்டு செல்லத் தூண்டுகின்ற வகையில் என்ற வாக்கியம் தொடர்பே இல்லாமல் வேண்டுமென்றே செருகப்பட்டிருக்கிறது.

காவிரித் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி அமைதியான முறையில் நெய்வேலியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீதும், அதில் பங்கேற்ற முன்னணியாளர்கள் மீதும் ராஜத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் வேறொரு வழக்குக்காக வேல்முருகன் கைது செய்யப்பட்டுப் பிணையில் வெளிவர இருந்த போது, இந்த ராஜத்துரோக வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

இதே போல திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துப் பேசியதையொட்டி கைது செய்யப்பட்டபோது, பிணையில் வர முடியாமல் அடுத்தடுத்த பொய் வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் பேராசிரியர் ஜெயராமனும் இவ்வாறு அடுக்கடுக்கான பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.

போராடும் மக்கள் முதல் சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் வரை அனைவர் மீதும் சரஞ்சரமாகப் பொய்வழக்குகள் போடப்படுகின்றன. இந்தப் பொய்வழக்குகள் எதையும் போலீசார் நிரூபிக்கப் போவதில்லை. இருந்த போதிலும், வழக்கில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் வேலைக்குப் போக முடியாது. பிழைப்பைக் கெடுத்து நீதிமன்றத்துக்கு அலைய வைப்பதன் வாயிலாக, ‘சுடுபால் குடித்த பூனையைப் போல’, இனிமேல் எந்தப் பொதுப்பிரச்சினைக்கும் போராடக்கூடாது என்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளுவதுதான் போலீசின் நோக்கம்.

போலீசு சொல்வதே அரசமைப்புச் சட்டம்!

குடிதண்ணீர் முதல் சாலை வரை எந்தப் பிரச்சினையானாலும் அவற்றை போலீஸ்தான் கையாள்கிறது. போலீஸ்தான் அரசின் ஒரே முகம் என்பது தெளிவாக நிறுவப்பட்டு விட்டது. அரசமைப்பு சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் போன்ற சட்டங்கள் எதற்கும் உட்படாமல், போலீசு அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதுதான் சட்டம் என்ற நிலைமை நடைமுறையில் வந்துவிட்டது.

tamil nadu under police state
கூடங்குளம் அருகேயுள்ள விஜயாபதி கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டம். இக்கூட்டத்தில் அணுக்கழிவு மையத்துக்கு எதிராகத் தீர்மானம் இயற்றப் பொதுமக்கள் முயன்றதை அதிகார வர்க்கம் அடாவடித்தனமாகத் தடுத்து நிறுத்தியது.

சமீபத்தில் சென்னையில் நீர்நிலை ஒன்றை ஆய்வு செய்யச் சென்ற அறப்போர் இயக்கத்தினரைத் தடுத்து காவல் நிலையத்தில் வைத்திருக்கின்றனர். இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்குச் சமூக ஊடகங்களில் பரவலாக கண்டனம் எழுந்த காரணத்தினால் வேறு வழியின்றி விடுவித்திருக்கின்றனர்.

துண்டறிக்கை விநியோகிப்பதென்பது ஒரு கருத்துரிமை. இப்போதெல்லாம் துண்டறிக்கை விநியோகித்தால் அனுமதி வாங்கினீர்களா? என்று கேட்டு போலீசார் கைது செய்கின்றனர். அப்படி எந்தச் சட்டமும் கிடையாது என்று வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினால், மேலிடத்து உத்தரவு என்று சமாளிக்கின்றனர். பிறகு தேசத்துரோகம், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் என்று ஏதேனும் ஒரு பொய்வழக்கைப் போட்டு சிறைக்கு அனுப்புகின்றனர்.

போலீசார் யார் மீது என்ன பொய்வழக்கு வேண்டுமானாலும் போடலாம், எந்தக் கூட்டத்தை வேண்டுமானாலும் தடை செய்யலாம் என்பதுதான் இப்போதைய நிலை. அந்த அளவுக்கு சட்டவிரோதம் என்பதே சட்டமாகி விட்டது. பொதுநலனுக்காகப் பேசுவோரையும் போராடுவோரையும் கிரிமினல் குற்றவாளிகளாக நடத்துகிறது எடப்பாடி அரசு.

போலீசின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீதிமன்றங்களில் முறையிட்டு நிவாரணம் பெறுவது இயலாத காரியம் என்பதைப் பலரும் அனுபவத்தில் உணர்ந்து வருகின்றனர். அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் எதையும் பாசிஸ்டுகள் மதிப்பதில்லை என்ற போதிலும், அவர்களைப் பாதுகாக்கும் திசையிலேயே இந்நிறுவனங்கள் இயங்குகின்றன.

மக்கள் தம் வாழ்வாதாரங்களையும் வாழ்வுரிமையையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமானால், தடைகளை மீறி நமது கருத்துரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திரத்தையும் போராடும் உரிமையையும் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால், எந்த ஒரு வாழ்வுரிமைப் பிரச்சினைக்காகவும் நாம் பேசவே முடியாத சூழ்நிலை நிரந்தரமாகிவிடும். இதனை முறியடிப்பதுதான் போராடும் மக்கள் மற்றும் இயக்கங்கள் அனைவரின் முதல் பணியாக இருக்க வேண்டும்.

– சூரியன்

– புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க