கேள்வி : //வெங்காய விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன? இது போன்ற நிலைமைகளில் அரசின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?//

இளம்பரிதி

ன்புள்ள இளம்பரிதி,

இன்றைய நிலையில் இந்தியாவெங்கும் உள்ள நகரங்களில் வெங்காயத்தின் சராசரி விலை ஒரு கிலோவுக்கு ரூ.100-ஐ தாண்டி விட்டது. சில நகரங்களில் 150, 200 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. தமிழக நிலவரப்படி மக்கள் ரூ100 முதல் 150 ரூபாய் வரை வெங்காயத்தை வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. பல உணவகங்களில் வெங்காயம் இல்லாமலோ; குறைத்தோ உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆம்லேட்டுக்கான வெங்காயத்தில் கூட அதற்குப்பதில் முட்டைக்கோசு இடம்பெற ஆரம்பித்திருக்கிறது. அன்றாட உணவிலும், சமையலிலும் வெங்காயம் என்பது இந்திய மக்களின் அத்தியாவசிய காய் ஆகும். வட இந்தியாவில் வெங்காயமும், உருளைக் கிழங்கும் ஒவ்வொரு வேளை சமையலிலும் இடம் பெறுகின்றன.

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் வழமைக்கும் அதிகமாய் மழை பொழிந்திருக்கிறது. இதனால் காரிஃப் பருவ வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்திருக்கிறது. ஈரம் இல்லாத தரமான வெங்காயத்தின் சாகுபடி குறைவாக இருப்பதால் சந்தையின் தேவைக்கு ஏற்ப வெங்காயங்கள் அனுப்பப்படுவதில்லை.

இந்த நிலைமையில் அரசாங்கங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில் இந்தியாவில் வெங்காய உற்பத்தி, சேமிப்பு, விநியோகத்திற்கான மையப்படுத்தப்பட்ட திட்டம் இல்லை. இதன் முதல் பாதிப்பு விவசாயிகளுக்குத்தான். வெங்காயம் விலை உயர்ந்தாலும் அவர்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இரண்டாவது பாதிப்பு மக்களுக்கு; வருடத்தில் சில மாதங்களாவது இத்தகைய வெங்காய விலை உயர்வை சந்திக்க வேண்டிய துயரம் அவர்களுக்கு!

மையப்படுத்தப்பட்ட திட்டம் என்றால் என்ன?

இந்தியாவிற்கு அன்றாடம் எவ்வளவு வெங்காயம் தேவைப்படுகிறது? மாதம், காலாண்டிற்கு எத்தனை டன் தேவைப்படுகிறது என புள்ளிவிவரங்களை வைத்து ஆய்வு செய்து இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அடுத்து நாடு முழுவதும் எங்கே அதிகம் விளைகிறது, எங்கே குறைவாக விளைகிறது அவற்றின் குறைந்தபட்ச தூர விநியோகம் எப்படி சாத்தியம் என்பதை திட்டமிடவேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் சாகுபடிக்கும் திட்டமிடவேண்டும்.

அடுத்து வருடந்தோறும் மழை பெய்யும் மாதங்களில் வெங்காயத்தை காப்பாற்ற என்ன செய்வது என ஆராய வேண்டும். முன்கூட்டியே மழை பொழிவையோ அதன் சராசரியையோ குறைந்தபட்சமாவது கணித்துக் கொண்டு சாகுபடி நாட்களை திட்டமிட வேண்டும். மேலும் நாடெங்கும் பிராந்திய அளவில் வெங்காயத்தை சேமிக்கும் கிட்டங்கிகளை அமைத்து அவற்றில் குறைந்த பட்ச இருப்பை ஆண்டு முழுவதும் பராமரிக்க வேண்டும்.

மழை பொழிந்து வெங்காய வரத்து குறையும் நாட்களை ஈடு செய்யும் விதத்தில் இந்த சேமிப்பு இருக்க வேண்டும்.

படிக்க:
வெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா ? மனுஸ்மிருதி என்ன சொல்கிறது ?
♦ பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?

விவசாயிகளுக்கும், வாங்கும் மக்களுக்கும் விலை ஒரு சீராக இருக்கும் வண்ணம் இந்த மையத்திட்டமிடலை உருவாக்கிட வேண்டும். இதைத் தாண்டி வெங்காயம் பற்றாக்குறை ஏற்படும் போது வெளிநாடுகளில் இறக்குமதி செய்வதற்கான திட்டமும், அதிகம் உற்பத்தியாகும் போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் இருக்க வேண்டும். ஏற்றுமதியே செய்ய முடியவில்லை என்றால் உபரி வெங்காய இருப்பிலிருந்து கூழ், ஊறுகாய் வகைகள், வேதியல் மற்றும் மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் திட்டமும் இருக்க வேண்டும். இப்படி சுழற்சி முறையில் அனைத்தையும் ஒருங்கிணைத்து திட்டமிடும் போது நிச்சயம் வெங்காயத்தின் விலையையும், அளிப்பையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இன்றை அரசாங்கங்களோ விவசாயத்தை தலை முழுகி, விவசாயிகளை கண்டு கொள்ளாமல் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான பொருளாதார திட்டமிடலை மட்டும் செய்கிறது. மெட்ரோ ரயில்கள், புல்லட் ரயில்கள், எட்டு வழிச்சாலைகள், பிறகு தனியார் மயம், தாராளமயம் என்று விவசாயத்தை நலிவடையச் செய்யும் பாதையில் பயணிக்கும் அரசாங்கம் எப்படி வெங்காயத்தை மக்களுக்கு அளிக்க முடியும்? அதனால்தான் “நான் வெங்காயம் சாப்பிடாத குடும்பத்தைச் சேர்ந்தவள்” என்று மறைமுகமாக வெங்காய விலை உயர்வு தனக்கு ஒரு பிரச்சினை இல்லை என்று ஒரு நிதியமைச்சரால் பேச முடிகிறது!

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : //தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை..எப்படித்தான் தடுப்பது?//

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

நமது நாட்டில் சமூகரீதியான அளவான குடிப்பழக்கம் இல்லை. குடிவெறியும், அதற்கு அடிமையாகும் வண்ணமும் மதுக்கடைகள் அரசால் நடத்தப்பட்டு மக்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். அன்றாட வருமானத்தில் பாதியை டாஸ்மாக்கில் கொட்டுகிறார்கள். பாலியல் வன்முறை மட்டுமல்ல பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் டாஸ்மாக் கடைகள் காரணமாக இருக்கின்றன. எனவே இவை தயவு தாட்சண்யமின்றி மூடப்பட வேண்டும்.

ஆபாச இணைய தளங்கள் ஆண்ட்ராய்டு காலத்தில் அனைவரும் பார்க்க கூடிய விதத்தில் இருக்கின்றது. இவற்றை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதே நேரம் இது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாமலும் இருக்கிறது. அதன் பொருட்டு ஆபாசப் படங்கள் குறித்தும் அது ஏற்படுத்தும் உளவியல் பாதிப்பும், யதார்த்தமான காமத்தை அதீதமான காமவெறியாக மாற்றும் அதன் பரிணாமங்களை மக்களுக்கு விளக்கும் வண்ணம் சுகாதாரத் துறை வெகு மக்களுக்கான கவுன்சிலிங், பிரச்சாரம் செய்ய வேண்டும். நமது தளத்தில் ஒரு ஆபாசப்பட நடிகையின் பார்வையில் அப்படங்கள் எப்படி கொடூரமாக எடுக்கப்படுகின்றன, அது பார்ப்போரிடையே என்ன வகையான மாயையை, நோயை உருவாக்குகின்றன என்ற ஒரு தொடர் இருக்கிறது. அத்தகைய கட்டுரைகள், வீடியோக்கள் சமூக ஆர்வலர்களால் அதிகம் படைக்கப்பட வேண்டும்.

பார்ப்பனிய சமூக வழக்கத்தில் இருக்கும் இந்தியாவில் ஒரு பெண்ணை உடமையாக பார்க்கும் நடத்தை பொதுவில் ஆண்களின் ஆளுமையின் ஒரு அங்கமாக இருக்கிறது. இதுவே காதலிகளை கொலை செய்வது, ஆசீட் வீசுவது, எரிப்பது போன்ற கொடூரங்களை நடப்பதற்கான அடிப்படையாக இருக்கிறது. இதற்கு தோதாக காதல் என்பதே ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும் க(கொ)லையென சினிமாக்கள் போதிக்கின்றன.

எனவே காதல், பாலியல், பெண் உடல், ஆண் – பெண் சமத்துவம் போன்ற தலைப்புகளில் பள்ளி இறுதி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டாய பாடமாகவோ, கவுன்சிலிங்காகவோ நடத்தப்பட வேண்டும். பெண்ணை இழிவு படுத்தும் இலக்கியங்கள், சினிமாக்கள், ஊடக செய்திகள், ஊடக நெறிமுறைகள் அனைத்தும் சமூக ஆர்வலர்களால் அவ்வப்போது அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி கல்லூரி மாணவர்களிடையேயும், இளைஞர்களிடையேயும் விதவிதமான போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தப் போதைப் பொருட்களை தடை செய்வதோடு அதை விற்போரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது குறித்தும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வகுப்புகள் கட்டாயமக்கப்பட வேண்டும். போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் வன்முறை செய்வதில் எந்த எல்லைக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது.

படிக்க:
உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016
♦ போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம்

பெண் மாணவர்கள், இளைய பெண்கள் அனைவருக்கும் தற்காப்புப் பயிற்சிகளை பள்ளி கல்லூரி காலத்தில் கட்டாயமான உடற்பயிற்சியாக மாற்ற வேண்டும். ஒரு பெண் தன்னை சிந்தனை ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காத்துக் கொள்ளும் வண்ணம் களப்பயிற்சிகளும், கருத்து ரீதியான கவுன்சிலிங்குகளும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.

பாலியல் வழக்குகளை பத்தோடு பதினொன்றாய் எடுக்கும், உண்மையில் எடுக்காமல் அலைக்கழிக்கும் போலீசுக்கு கவுன்சிலிங் வகுப்புகள் நடத்தப்படுவதோடு, அவர்கள் கடமையில் தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கைகள், தண்டனைகள் அளிக்கப்படும் வண்ணம் காவல் துறை மாற்றப்பட வேண்டும். காவல் துறையிலேயே பெண் காவலர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் எண்ணிலடங்காது. இதற்கும் கடுமையான சட்டமும், துறை ரீதியான கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் ஒரு வார்டு அளவில் அந்த பகுதியின் காவல் துறை குறித்த புகார்கள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்கள் அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் வண்ணம் மாதக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில் காத்திரமான விசயங்களுக்கு காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுவில் மக்களுக்கு காவல் துறை மீது ஒரு பயம் இருந்தால்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள். இல்லை, மக்கள் மீது காவல்துறைக்கு பயம் இருந்தால்தான் சட்டம் ஒழுங்கு சரியாக பயணிக்கும்.

பாலியல் வழக்குகள் குறித்த சட்டங்கள், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள் அடங்கிய நீதித்துறையின் செயல்பாட்டை துரிதமாகவம், மக்கள் நம்பும் விதமாகவும் செயல்படும் வண்ணம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

பெண்கள் பணி செய்யும் இடத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் வண்ணம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஏற்கனவே ஏட்டில் இருக்கும் விசாகா கமிட்டியின் கட்டமைப்பையையும், அதிகாரத்தையும் அதிகமாக்கி அதை உருப்படியான கமிட்டியாக மாற்ற வேண்டும்.

இறுதியாக நாளொன்றுக்கு பதினைந்து மணிநேரம் வேலை பார்த்தே ஆகவேண்டும் என்ற மறுகாலனியாக்க வாழ்க்கையை மாற்ற வேண்டும். எட்டு மணி நேரம் வேலை, எட்டுமணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் சமூகப் பொழுது போக்கு என்பது அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் இத்தகைய கடுமுழைப்பு தொழிலாளிகள்தான் தமது வேலை நிமித்தம் இயல்பாக போதை, மது போன்றவற்றை நாட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

இவை அனைத்தையும் செய்ய முடிந்தால் பாலியல் வன்முறைகளை தடுக்கும் வழிகளை சமூகம் கண்டறியும்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

1 மறுமொழி

  1. வெங்காயம் குறித்து அருமையான பதிலுக்கு நன்றி.. கல்வி மருத்துவம் போக்குவரத்து விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் உண்மையான மக்கள் ஆட்சியில் எப்படி இருக்கும் இருக்க வேண்டும் என்பதை இந்த பதிலின் வாயிலாகவே புரிந்து கொள்ள முடிகிறது.. மக்கள் அதிகாரம் மலர்ந்து பதிலில் கண்ட காரணிகளெல்லாம் நடைமுறைக்கு வந்து விடாதா என்ற ஏக்கமும் வாட்டுகிறது..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க