காஷ்மீரில் தொடங்கி அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மையம் கொண்ட இராணுவ – போலீசு அடக்குமுறை இப்போது டெல்லியில் உச்சம் கண்டுள்ளது. மக்கள் விரோத சட்டங்களை அமலாக்கிக் கொண்டிருக்கும் காவி அரசு, தார்மீக கோபத்தை வெளிப்படுத்தும் மக்களை அடக்கி ஒடுக்க இராணுவம் – போலீசை பயன்படுத்திவருகிறது.

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பும் வகையில், டெல்லி போலீசின் உதவியுடன் களமிறங்கிய குண்டர்படை மூன்று பேருந்துகள், இரண்டு இருசக்கர வாகனங்களை கொளுத்தி வன்முறையைத் தூண்டியுள்ளது.

இதைக் காரணமாக வைத்து அனுமதியில்லாமல் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த டெல்லி போலீசு மாணவர்களை அடித்து உதைத்ததோடு, நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளது. பல்கலைக்கழகத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியுள்ளது.

பல்கலைக்கழகம் உள்ள பகுதியில் குடியிருப்புவாசிகள் சிலர் போலீசுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் பேருந்துகளை எரித்ததாகவும் சொல்லப்பட்ட நிலையில் மெரினா போராட்டத்தின் போது குடிசைகளை போலீசே எரித்ததுபோல,பேருந்துகளை டெல்லி போலீசு எரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

இந்த ‘அரங்கேற்ற வன்முறை’ சம்பவத்துக்குப் பின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த போலீசு, ஊழியர்களையும் மாணவர்களையும் அடித்து நொறுக்கியுள்ளது. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரி வாசிம் அகமது கான், போலீசு அத்துமீறி உள்ளே நுழைந்து ஊழியர்களை மாணவர்களையும் அடித்து வலுக்கட்டாயமாக வளாகத்துக்குள்ளிருந்து துரத்தியதாகக் கூறியுள்ளார்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் : முற்றுகை | மனுஷ்ய புத்திரன் கவிதை
♦ கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்

போலீசு அத்துமீறி அமைதியான போராட்டத்தை களைக்கும் வீடியோ…

கல்லூரிக்குள் நுழையும் போலீசு தாக்குதலிலிருந்து மாணவிகளை காப்பாற்றும் பொருட்டு, அரணாக நின்ற மாணவர் ஒருவரை மிகக் கடுமையாக நான்கைந்து போலீசு தாக்குவதும், மாணவிகள் அதை எதிர்த்து நிற்கும் வீடியோவும் போலீசின் ஒடுக்குமுறையை சொல்லும் ஆவணமாகியிருக்கிறது; சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.

போலீசு தாக்குதலிலிருந்து தப்பிக்க நூலகத்துக்குள் மறைந்திருந்த மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் போலீசு வீசியுள்ளது. பின் நூலகத்துக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கியதோடு, ஜன்னல்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியுள்ளது. வளாகத்தில் இருந்த மசூதிக்குள் மறைந்திருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது போலீசு. கும்பலாக மாணவர்களை அழைத்துச்சென்ற காவலர்கள் அவர்களை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றும் மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர்.

“மாலை 6.10 மணியளவில் கையெறி குண்டை வீசியது காவல்துறை. புகை மண்டலம் சூழ்ந்த நிலையில், மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் துடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வளாகத்துக்குள் வீசினர். உள்ளே புகுந்து, அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடித்து நொறுக்கினர். கண்ணாடி கதவுகளை உடைத்தனர்” என்கிறார் சட்டம் பயிலும் மாணவர் சயிஃபுல் இஸ்லாம்.

கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ‘பாடம் புகட்டும்’ வகையில் இந்தத் தாக்குதலை போலீசு நடத்தியிருக்கிறது. குறிப்பாக, காஷ்மீரிகள் போன்ற தோற்றத்தில் இருந்த மாணவர்களை தனி அறையில் அடைத்து அடித்ததாகவும் டெலிகிராப் நாளிதழ் தெரிவிக்கிறது. ஞாயிறு மாலை 6 மணிக்கு கல்லூரிக்குள் நுழைந்த போலீசு இரவு 11 மணிவரை அங்கேயிருந்துள்ளது.

படிக்க:
குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! ஆர்ப்பாட்டம் ! நேரலை !
♦ ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் அது என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என மாணவர்கள் கூறிய நிலையில், அருகில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனை இயக்குனர் ஜார்ஜ், குண்டடிபட்ட நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுபோல, டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, போலீசு அதிகாரிகள் பேருந்துக்குள் தீ வைக்கும் காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘போலீசை கொளுத்தவைத்து, பாஜக தனது கேவலமான அரசியலை முடித்துள்ளது’ என அந்த டிவிட்டில் தெரிவித்துள்ளார் அவர்.

கல்லூரியின் எட்டாவது நுழைவாயில் அருகே, பிபிசி செய்தியாளர் புஸ்ரா ஷேக்கின் மொபைல் போனை பிடுங்கிய டெல்லி போலீசு அவரை லத்தியால் அடித்துள்ளது.

“என்னுடைய போனை வாங்கிய போலீசு அதை உடைத்துவிட்டது. என்னை கேவலமாகப் பேசியதோடு லத்தியாலும் தாக்கியது. நான் இங்கே செய்தி சேகரிக்கத்தான் வந்தேன், விளையாட வரவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டத்தை மாணவிகள் சிலரும் பார்த்துள்ளனர்.

நள்ளிரவில் கைது செய்யப்பட்ட மாணவர்களை அடைத்து வைத்திருந்த கல்காஜி காவல் நிலையத்தின் முன் மாணவர்கள், ஆசிரியர், வழக்கறிஞர்கள் குழுமினர். ஆனால், அவர்களிடம் மாணவர்களின் கைது குறித்து முறையான பதிலை அளிக்க மறுத்துள்ளது போலீசு.

மத்திய டெல்லி காவல் அலுவலக வளாக நுழைவாயிலில் மாணவர்களின் பெற்றோர் தர்ணாவில் இறங்கினர். மாணவர்களை விடுவிக்கக் கோரியும் பல்கலைக் கழகத்திலிருந்து போலீசை வெளியேற்றக் கோரியும் அவர்கள் முழக்கமிட்டனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், பீம் ஆர்மி உள்ளிட்ட அரசியல் அமைப்பினரும் கலந்துகொண்டனர். பெருந்திரளான பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.

“உள்துறை அமைச்சரின் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழகத்துக்குள் ஒருவரால் நுழைய முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார் பிருந்தா காரத். நள்ளிரவில் மெட்ரோ சேவையும் நிறுத்தப்பட்டது.

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அலிகர் முசுலீம் பல்கலைக்கழகம், பாட்னா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இடதுசாரி மாணவர் அமைப்புகள், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் மாணவர் அமைப்புகள் திங்கள்கிழமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

தமிழகத்திலும் அனைத்துப் பகுதி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னையில் நியூ கல்லூரி மாணவர்கள், ஐ.ஐ.டி மாணவர்கள், லயோலா கல்லூரி மாணவர்கள் போரட்டம் நடத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல இடங்களில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி – ஷா-வின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை, தானே புனைந்து உருவாக்கிய திட்டத்தின்படி, வெறியாட்டத்தை நடத்தி முடித்துள்ளது. இனி இந்தியாவை ஆட்சி செய்யப்போவது இராணுவமும் போலீசுமே என பாசிஸ்டுகள் நேரடியாக நடத்திக்காட்டிக் கொண்டுள்ளனர்.


கலைமதி
நன்றி : டெலிகிராப் இந்தியா, நியூஸ் லாண்ட்ரி, த க்விண்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க