அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 49

ஸ்காட்லாந்து 

அ.அனிக்கின்

டம் ஸ்மித் ஸ்காட்லாந்துக்காரர்; அதற்கும் மேலாக அவர் அழுத்தமான தேசிய குணாம்சத்தைப் பெற்றிருந்த எடுத்துக்காட்டான ஸ்காட்லாந்துக்காரர் என்பவற்றைப் புரிந்து கொண்டால்தான் அவருடைய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்பது அடிக்கடி சொல்லப்படுகிற கருத்தாகும்.

பிரெஞ்சு எழுத்தாளரான ஆந்திரே மொருவா பெனிசிலின் மருந்தைக் கண்டு பிடித்தவரும் மற்றொரு மாபெரும் ஸ்காட்லாந்துக்காரருமான அலெக்சாந்தர் பிளெமிங்கைப் பற்றித் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலைப் பின்வரும் சொற்களோடு ஆரம்பிக்கிறார்: ”ஸ்காட்லாந்துக்காரர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல, அவ்வாறு நினைப்பது தவறாகும்.” கடுமையான உழைப்பு, சிக்கனம், கருமித்தனம் ஸ்காட்லாந்தினரின் தேசிய குணங்களின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஸ்காட்லாந்துக்காரர்கள் நிதானமானவர்கள், அதிகமாகப் பேசமாட்டார்கள், காரியத்தில் குறியாக இருப்பவர்கள், சூக்குமமான விஷயங்களை விவாதிக்கக் கூடியவர்கள், ‘தத்துவச் சிந்தனையில்” லயித்திருப்பவர்கள் என்றும் கருதப்படுகிறது.

ஸ்காட்லாந்துக்காரர்களின் தேசிய குணாம்சங்களைப் பற்றி இப்படிப்பட்ட அலுத்துப்போன வர்ணனை எந்த அளவுக்கு உண்மையானது என்பது முக்கியமல்ல. ஆனால் ஸ்மித்தையும் அவருடைய கருத்துக்களின் தனிவகையான தன்மையையும் புரிந்து கொள்வதற்கு அவருடைய வாழ்நாளின் போது ஸ்காட்லாந்து மற்றும் அந்த நாட்டு மக்களின் நிலையை விளக்குவது முக்கியமாகும்.

1707 -ம் வருடத்தில் இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் இணைக்கின்ற மசோதா சட்டமாயிற்று. அந்தச் சட்டம் இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலுமிருந்த முதலாளிகள், வணிகர்கள், பணக்கார விவசாயிகளுக்கு நன்மை செய்தது; அவர்களுடைய செல்வாக்கும் இந்த சமயத்தில் கணிசமாக உயர்ந்தது. இரு நாடுகளுக்கும் இடையே இருந்த சுங்கத் தடைகள் அகற்றப்பட்டன, இங்கிலாந்தில் ஸ்காட்லாந்துக் கால்நடைகளின் விற்பனை அதிகரித்தது, அமெரிக்காவிலிருந்த ஆங்கிலக் குடியேற்றங்களோடு வர்த்தகம் செய்கின்ற வாய்ப்பு கிளாஸ்கோ நகரத்தைச் சேர்ந்த வணிகர்களுக்குக் கிடைத்தது. இந்தக் காரணங்களுக்காக ஸ்காட்டிஷ் முதலாளிகள் தங்களுடைய தேசபக்தியை ஓரளவுக்குக் குறைத்துக் கொள்வதற்குத் தயாராக இருந்தார்கள்; ஏனென்றால் ‘யுனைட்டெட் கிங்டம்’ என்ற புதிய கூட்டில் ஸ்காட்லாந்துக்கு இரண்டாம் நிலைப் பாத்திரமே இருக்க வேண்டும்.

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து இணைவை குறிக்கும் கொடி.

ஆனால் இதற்கு மாறாக, ஸ்காட்டிஷ் நிலப்பிரபு மேன் மக்களில் பெரும் பகுதியினர் இந்தக் கூட்டை எதிர்த்தார்கள். ஸ்காட்லாந்தின் மலைப் பகுதிகளில் இன்னும் பழைய இனக் குழு அமைப்பின் எச்சங்களோடு நிலப்பிரபுத்துவ அமைப்பில் வாழ்ந்து கொண்டிருந்த விசுவாசமும் வீர உணர்ச்சியும் கொண்ட மக்களின் உதவியோடு அவர்கள் சில தடவைகள் கலகம் செய்தார்கள். ஸ்காட்லாந்தில் பொருளாதார ரீதியில் அதிகமான வளர்ச்சியடைந்த கீழ்ப் பிரதேச மக்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. எனவே அவர்கள் ஆரம்பித்த கலகம் ஒவ்வொரு தடவையும் தோல்வியில் முடிந்தது.

இணைப்புக்குப் பிறகு ஸ்காட்லாந்தின் பொருளாதார வளர்ச்சி வேகமாக முன்னேறியது; எனினும் சில துறைகள் இங்கிலாந்தின் போட்டியினால் பாதிக்கப்பட்டன, நிலப்பிரபுத்துவ மரபின் எச்சங்களால் வேறு சில துறைகள் பாதிக்கப்பட் டன. கிளாஸ்கோ நகரமும் துறைமுகமும் குறிப்பிடத்தக்க வகையில் வேகமாக வளர்ச்சியடைந்தன; துறைமுகத்தைச் சுற்றி வளர்ச்சியடைந்த தொழில் துறை பிரதேசம் ஏற்பட்டது. கிராமங்களிலும் மேல் நிலப்பகுதிகளிலுமிருந்து கிடைத்த மலிவான உழைப்பும் ஸ்காட்லாந்திலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட விரிவடைந்த சந்தைகளும் தொழில் துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தன. பெரும் நிலவுடைமையாளர்களும் பணக்காரக் குத்தகைக்காரர்களும் விவசாய முறைகளில் அபிவிருத்திகளைச் செய்யத் தொடங்கினர். இணைப்பு ஏற்பட்ட 1707ம் வருடத்துக்கும் நாடுகளின் செல்வம் வெளியிடப்பட்ட 1776ம் வருடத்துக்கும் இடையிலுள்ள எழுபது வருடங்களில் ஸ்காட்லாந்து கணிசமான அளவுக்கு மாறிவிட்டது.

படிக்க:
இந்திய ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மன் மாணவரின் கல்வி முடக்கம் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டம் !

பொருளாதார முன்னேற்றம் அநேகமாக ஸ்காட்டிஷ் கீழ்நிலப் பகுதிகளில் மட்டுமே ஏற்பட்டிருந்தது என்பது உண்மையே. இங்கே, கெர்க்கால்டி, கிளா ஸ்கோ, எடின்பரோ என்ற முக்கோணப் பகுதிக்கு இடையில் தான் அநேகமாக ஸ்மித்தின் வாழ்க்கை முழுவதுமே கழிந்தது .

ஸ்மித் தன்னுடைய சிந்தனையின் முதிர்ச்சியை அடைந்த சமயத்தில் ஸ்காட்லாந்தின் தலைவிதியை இங்கிலாந்தோடு பிரிக்க முடியாத வகையில் பொருளாதாரம் பிணைத்துவிட்டது. ஒன்றுபட்ட முதலாளித்துவ தேசியம் உருவாகிவிட்டது. எல்லாவற்றையுமே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, “நாட்டின் செல்வம்” ஆகிய இனங்களின் வழியாகப் பார்த்த ஸ்மித்துக்கு இது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அவரைப் பொறுத்தவரையிலும், ஸ்காட்டிஷ் தேசபக்தி என்பது அறிவிற் சிறந்த மற்ற ஸ்காட்லாந்துக்காரர்களைப் போலவே – உணர்ச்சி ரீதியான, ”கலாச்சார” வடிவத்தை அடைந்தது, அரசியல் வடிவம் பெறவில்லை.

சமூக வாழ்க்கையிலும் அறிவுத் துறையின் மீதும் திருச்சபை மற்றும் மதத்தின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. பல்கலைக்கழகங்களின் மீது கொண்டிருந்த ஆதிக்கத்தைத் திருச்சபை இழந்து விட்டது. ஸ்காட்லாந்திலிருந்த பல்கலைக்கழகங்கள் அவற்றின் சுதந்திரமான சிந்தனை உணர்ச்சியிலும் மதத்துறை சாராத விஞ்ஞானங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்திலும் செய்முறையை வலியுறுத்தியதிலும் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல் கலைக்கழகங்களிலிருந்து வேறுபட்டிருந்தன. இவைகளைப் பொறுத்த வரையிலும் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் -ஸ்மித் படித்ததும் பிறகு ஆசிரியராகப் பணியாற்றியதும் இங்கு தான்- தனிச் சிறப்போடு விளங்கியது. நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்தவரான ஜேம்ஸ் வாட்டும் நவீன இரசாயனத்தை நிறுவியோரில் ஒருவரான ஜோசப் பிளாக்கும் அங்கே அவரோடு பணி புரிந்துவந்ததோடு அவருக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்.

கிளாஸ்கோ பல்கலைக்கழகம்

18-ம் நூற்றாண்டின் ஐம்பதுக்களில் ஸ்காட்லாந்தில் கலாச்சாரப் பேரெழுச்சிக் கட்டம் தொடங்கியது; விஞ்ஞானம், கலை ஆகியவற்றின் பல்வேறு துறைகளில் அதைக்காண முடியும். சின்னஞ் சிறிய ஸ்காட்லாந்து ஐம்பது வருட காலத்தில் உற்பத்தி செய்த மாபெரும் அறிஞர்களின் பட்டியல் மிகச் சிறப்பானதாகும். நாம் முன்னர் குறிப்பிட்ட அறிஞர்களைத் தவிர, அந்தப் பட்டியலில் பொருளியலாளர் ஜேம்ஸ் ஸ்டுவர்ட், தத்துவஞானி டேவிட் ஹியூம், வரலாற்றாசிரியர் வில்லியம் இராபர்ட்சன், சமூகவியல் அறிஞரும் பொருளியலாளருமான ஆடம் பெர்குசன் ஆகியோர் அதில் அடங்குவர். புவிஇயல் வல்லுநரான ஜேம்ஸ் ஹட்டன், புகழ்மிக்க மருத்துவ நிபுணரான வில்லியம் ஹன்டர், கட்டிடக்கலை நிபுணரான இராபர்ட் ஆடம் ஆகியோருடன் ஸ்மித் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். இவர்களுடைய செல்வாக்கும் இவர்கள் எழுதிய நூல்களின் தாக்கமும் ஸ்காட்லாந்து மற்றும் பிரிட்டிஷ் தீவுகளின் எல்லைகளுக்கு அப்பால் வெகுதூரம் பரவின.

இத்தகைய சூழ்நிலையில் ஆடம் ஸ்மித்தினுடைய மேதை வளர்ச்சி அடைந்தது. அவர் ஸ்காட்லாந்தின் கலாச்சாரத்தை மட்டும் ஈர்த்துக் கொள்ளவில்லை என்பது இயற்கையே. அவர் கலப்பற்ற ஸ்காட்லாந்தியத் தாக்கங்களுக்கு உட்பட்டதைப் போலவே ஆங்கில விஞ்ஞானம், கலாச்சாரம் – குறிப்பாக ஆங்கிலத் தத்துவஞான மற்றும் பொருளாதாரச் சிந்தனை – ஆகியவற்றின் தாக்கங்களாலும் உருவாக்கப்பட்டார்.

செய்முறை நோக்கத்தைக் கொண்டு பார்க்கும் பொழுது, அவருடைய புத்தகம் முழுவதுமே “யுனைட்டெட் கிங்டமின்”, லண்டன் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் மீது ஒரு குறிப்பிட்ட (வாணிப ஊக்கக் கொள்கைக்கு எதிரான) தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. கடைசியாக அவர் மீது ஏற்பட்டிருந்த மற்றொரு வகையான தாக்கத்தையும் குறிப்பிட வேண்டும். அது பிரெஞ்சுத் தாக்கமாகும். மேரி ஸ்டுவர்ட்டின் காலத்திலிருந்து பிரான்சோடு மரபுவழிப்பட்ட இணைப்புக்களைத் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கும் ஸ்காட்லாந்தில் பிரெஞ்சுக் கலாச்சாரத்தின் தாக்கம் இங்கிலாந்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. மொன்டெஸ்க்யூ, வால்டேரின் புத்தகங்களை ஸ்மித் நன்கு படித்திருந்தார்; ருஸ்ஸோவின் ஆரம்ப காலப் புத்தகங்களையும் கலைக்களஞ்சியவாதிகளின் ஆரம்பகால வெளியீடுகளையும் அவர் அதிகமான உற்சாகத்தோடு வரவேற்றார்.

(தொடரும்…)

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க