நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 03

முதல் பாகம்

2. ஆத்திகர்களின் புரட்டுவாதம்

த்திகர்களின் அறிவு எல்லாம், நாத்திகர்களின் கொள்கைளை புரட்டுவதிலேயே குவிக்கப்பட்டது. நாத்திகர்கள் சொல்லுகிற வாதங்கள், தங்கள் கொள்கைகளுக்கேற்ப மாற்றுவதில் சொல் மயக்கங்களை அவர்கள் கையாண்டார்கள். இதற்குத் தற்கால உதாரணம் ஒன்று தருவோம். இது நாத்திகர்களைப் பற்றியது அல்ல எனினும் புரட்டுவாதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகக் காணப்படுகிறது.

“கம்யூனிஸம் ஒரு புதிய மதம்” என்று ராதாகிருஷ்ணன் அடித்துச் சொல்லுகிறார். அவர் இக்கூற்றை நிரூபிக்கும் முயற்சியில் புரட்டுவாதத்தைத் திறமையாக் கையாளுகிறார்.

“மாஸ்கோ நகரின் சுவர்களில் சில சுவரொட்டிகள் காணப்படுகின்றன. ‘உலகம் எப்போது படைக்கப்பட்டது’ என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு புதிய உலகம் அக்டோபர் 1917-ல் படைக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். விண்ணிலிருந்து கடவுள்களை விரட்டுங்கள். உலகில் இருந்து முதலாளித்துவத்தை விரட்டுங்கள். கம்யூனிஸத்திற்கு வழி விடுங்கள்.

இத்தகைய ‘வலுவான’ சான்றுகளில் இருந்து நமது இந்தியத் தத்துவவாதி தம்முடைய முடிவுகளைக் கூறுகிறார்:

ஆன்மீக எண்ணங்கள் கொண்ட ரஷ்ய நிலத்தில் கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸக் கொள்கை என்ற நாற்று பிடுங்கி நடப்பட்டபோது அது ஒரு மதமாயிற்று. மதத்தின் பிரச்சார முறைகளைக் கம்யூனிஸம் மேற்கொண்டது. இதற்காக கம்யூனிஸ்டுக் கட்சி, செஞ்சேனை, பள்ளிகள், பிரச்சார மேடைகள், பத்திரிகைகள் ஆகியவை பரப்புக் கருவிகளாக (பிரச்சாரக் கருவிகளாக) ஆக்கப்பட்டன. போல்ஷ்விஸத்தின் இயக்கு சக்தி, கம்யூனிஸத்தின் மீது நம்பிக்கைதான், ஆழ்ந்த பக்திதான் (mysticism), உயிர்ப்பலி கொடுக்கவும் தயாராகவுள்ள தியாக உணர்ச்சிதான். அது பண்டைக்கால யூதர்களின் புதிய சுவர்க்கத்தையும் புதிய உலகையும் பற்றி கனவுகளைப் போல ரஷ்ய மக்களைக் கவர்ந்து கொண்டுள்ளது. சோஷலிஸ்டுகள் கூறுகிறார்கள்: “நாங்கள் மதத்திற்கு எதிரிகள் அல்ல. மதத்தை நாங்கள் ஒதுக்கி விடுகிறோம். ‘மனித சகோதரத் துவம்’ என்னும் எங்களது சோஷலிஸ்டுக் குறிக்கோள், கடவுளை விடவும், இயேசுநாதரை விடவும் முக்கியமானது.” இவ்வாறு கூறிவிட்டு ராதாகிருஷ்ணன் தமது முடிவுக்கு வருகிறார்: “கடவுளையும், கிருஸ்துவையும் வழிபடுவோரைவிட உண்மையான, உணர்ச்சியுள்ள மதவாதிகளாக இவர்கள் இருக்கிறார்கள்.”

மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோரிலும் கம்யூனிஸத்திலும் மதத்தையும், மத உணர்ச்சியையும், மத நம்பிக்கையையும் ராதாகிருஷ்ணன் காண்கிறார். இப்புரட்டு வாதத்திற்கு பண்டைய இந்தியத் தருக்க முறையில் ‘சாமான்ய சாலம்’ என்று பெயர். நமது முன்னோர்களுக்கு புரட்டுமுறை வாதங்கள் பற்றி மிக நன்றாகவே தெரிந்திருந்தது.

சாமான்ய சாலம் என்றால் என்ன?

தன்னுடைய கொள்கைக்கு எதிரான கொள்கையுடையவர், சொல்லுகிற சொற்களையும், வாக்கியங்களையும், தன்னுடைய கொள்கைக்குப் பொருத்தமான பொருளில் மாற்றிக் கூறுவதும், இதனால் எதிரான கொள்கையுடையவருடைய வாதங்களையே திரித்து விடுவதும் ஆகும். இதனை ‘அறிவியல் அயோக்யத்தனம்’ என்று பச்சையான தமிழில் கூறலாம். இம்முறையைத்தான் ஆத்திகர்கள் பண்டைக் காலத்திலும், நடுக்காலத்திலும் நாத்திகத்தை ஆத்திகமாக்கப் பயன்படுத்தியுள்ளார்கள். இதற்கு ஓர் உதாரணம் காண்போம். உதயணர் என்பவர் நடுக்கால தத்துவவாதி. இவர் கடவுள் உண்டென்று நிரூபிக்க முயலும் ‘நியாயம்’ என்ற தத்துவப் பிரிவின் சார்பாளர். இவருடைய “நியாய குஸிமாஞ்சலி” என்ற நூலைத்தான் ஆத்திகர்கள் ‘கடவுளை நிரூபிக்கத்’ துணையாகக் கொள்ளுகிறார்கள், அவருடைய வாதம் முழுவதையும் இங்கே தருவோம்.

“உலகில் யாருமே நாத்திகரில்லை. ஒவ்வொருவரும் தங்கள், தங்கள் வழியில் கடவுளை நம்புகிறார்கள்” என்று கூறி தம்முடைய வாதத்தை உதயணர் துவக்குகிறார். மேலும் அவர் எழுதுகிறார் :

“எல்லோராலும் வணங்கப்படும் பரம்பொருள், (வணங்கும் மனிதர்களின் வாழ்க்கைக் குறிக்கோள்கள் வேறுபட்ட போதிலும்) உபநிஷதங்கள் ஒன்றென அழைப்பதும், ‘முதல் அறிவன்’ என்று கபிலர் குறிப்பிடுவதும், கிலேசங்களால் பாதிக்கப்படாத ஒன்று என்று பதஞ்சலி வருணிப்பதும், சிவன் எனச் சைவர்கள் சொல்லுவதும், புருஷோத்தமன் என வைஷ்ணவர்கள் வணங்குவதும், சர்வ சக்தியுள்ளது எனப் பௌத்தர்கள் பணிவதும், நிர்வாணி என்று ஜைனரால் கருதப்படுவதும், சாருவாகர்கள் ‘லோக விவகார சித்தம்’ (உலக நிகழ்ச்சிகளின் மனம்), என்று கூறுவதும், ஜாதி, கோத்திரம், பரிவாரம் போன்ற உலக உண்மைகளைப் போல உண்மையானது. எனவே இப்பரம்பொருள் பற்றி ஆராய்ச்சி தேவையில்லை.”

ஆத்திகர்களால் பேரறிவாளர் என்று போற்றப்படும் உதயணரது புரட்டல், ஏமாற்று வித்தையை வாசகர்கள் அறிந்து கொள்வார்கள். இந்திய தத்துவவாதிகள் அனைவரும் கடவுளை ஏதாவது ஒரு வழியில் நம்புகிறார்கள். என்று காட்ட உதயணரது மாயாஜாலம் பயன்படுகிறது. கபிலர் என்பவர் சாங்கியத்தின் முதல்வர். இவரது சாங்கியம் பொருளே பிரதானம் என்று கூறுகிறது. பௌத்தர்கள், ஜைனர்கள், மீமாம்சகர், சாருவாகர்கள் அனைவரும் கடவுளை மறுக்கப் பல வாதங்களை உருவாக்கியவர்கள். புகழ்பெற்ற நாத்திகர்களை ஆத்திகர்களாக மாற்ற உதயணர் செய்திருக்கும் மோசடி வித்தையை நம்பின மூடர்களும் நடுக்காலத்தில் இருந்தார்கள். இக்கால ஆத்திகவாதிகள், ராதாகிருஷ்ணன் உள்பட இந்த சாமான்ய சாலத்தை நம்புகிறார்கள். ஆனால் தத்துவவாதிகளில் பலர் சாமான்ய சாலத்தின் தருக்கப் பிழையை விளக்கி கடவுளை மறுத்துள்ளார்கள்.

உதயணரின் நியாய குஸிமாஞ்சலி நூல்.

மிக முக்கியமான இந்திய தத்துவங்கள், மீமாம்சம், சாங்கியம், வேதாந்தம் (பிற்கால மீமாம்சம்), பௌத்தம் (எல்லாப் பிரிவுகளும்), ஜைனம் (எல்லாப் பிரிவுகளும்) சாருவாகம் (லோகாயதம்) ஆகியவை. பிற்காலப் பிரிவுகளான அத்வைதம், விசிஷ்டாத்துவைதம், மாத்வம், சைவ சித்தாந்தம், நியாய வைசேஷிக தத்துவப் போக்கையும், பிரம்மஸுத்ரத்திற்கு விளக்கவுரையாகவும், ஆகமங்களின் தொடர்ச்சியாகவும் எழுந்தது. பண்டைய இந்தியத் தத்துவங்கள் வேதச் சார்புடையவை, வேத எதிர்ப்புடையவை எனப் பிரிக்கப்படும். வேத சார்புடையவைக் கூட ஒப்புக்குத்தான் வேதங்களை ஒப்புக் கொள்கின்றன. முக்கியமான கடைப்பிடிகளில் அவை வேதத்தினின்றும் வேறுபடுகின்றன.

படிக்க :
ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் !
கேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது ?

ஆயினும் கடவுள் என்ற பிரச்சினை – இவற்றுள் வேதாந்தமும், நியாய-வைசேஷிகமும் தான் தெளிவாகக் கடவுளை ஒப்புக் கொள்ளுகின்றன. பிற முக்கியமான இந்தியத் தத்துவங்கள் எல்லாம் கடவுளை மறுக்கின்றன. ஆறு சமயம் என்று உபசார வழக்காகக் கூறப்படும் ஆறு தத்துவங்களில் நான்கு, நாத்திகப் போக்குடையவை. இரண்டே இரண்டு தான் ஆத்திக நம்பிக்கையுடையவை. இவ்வாறு இருக்கும் பொழுது இந்திய தத்துவங்கள் எல்லாம் கடவுள் தத்துவத்தை அடிப்படையாக உடையவை என்று கூறுவது அறிந்தே பொய் சொல்லி ஏமாற்றுவதாகும்; சாமானிய சாலம் ஆகும்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க