குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகாரின் அவுரங்காபாத்தில் நடைபெற்ற போராட்டங்களின்போது, போலீசு மிருகத்தனமான தாக்குதல்களை நடத்தியதோடு, முசுலீம்களை தொடர்பே இல்லாமல் வேண்டுமென்றே கைதும் செய்துள்ளது.

டிசம்பர் 21 அன்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் ‘பீகார் முழுஅடைப்புக்கு’ அழைப்பு விடுத்திருந்தது. போராட்டக்காரர்கள் அணிவகுத்து சென்றபோது, அதைத் தடுக்க போலீசு கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலாக தெருக்களில் நுழைந்து, ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகரத்தின் நியூ காசி மொல்லா, ஷா-கஞ்ச், பதான் டோலி, ஆசாத் நகர், இஸ்மாயில் டோலி மற்றும் ஃபாரூக்கி மொல்லா பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

வழக்கம்போல, போராட்டக்காரர்கள் மீதே அத்தனை பழியையும் போடப்பட்டது போலீசு. ஆனால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள் பீகார் போலீசு, கார்களையும் பைக்குகளையும் அடித்து நொறுக்குவதைக் காட்டின.

இந்நிலையில் டிசம்பர் 21 முதல் பல்வேறு வழக்குகளில் 45 பேர் கல் வீச்சில் ஈடுபட்டதாக போலீசு தரப்பில் சொல்லப்பட்டது. இதில் பெரும்பாலானோர் அப்பாவிகள் எனத் தெரியவந்துள்ளது.

அவுரங்காபாத் நகரின் காலனியில் இருந்து டிசம்பர் 21 மதியம் ஷாபாஸ் நவாப் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது மூத்த சகோதரர் சாஜிப், கல் வீசியவர்களில் ஷாபாஸ் இல்லை என்று கூறினார்.

ஷாபாஸ் கொடூரமாக தாக்கப்பட்ட காட்சி.

டிசம்பர் 21 அன்று தனது தாயிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், தனது சகோதரர் கைது செய்யப்பட்டதாக சாஜிப் கூறுகிறார். அவர்களது வீட்டின் அருகே அவர்களது காரை நிறுத்தும்போது ஷாபாஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். “என் அம்மா தொலைபேசியில் அழுது, ஷாபாஸ் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறினார். எனது தந்தை ஃபெரோஸ் ஆதில், அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை அவரை விட்டுவிடும்படி அவர்களிடம் கெஞ்சினார்” என்று சாஜீப் கூறுகிறார்.

காட்சி ஆதாரங்களுடன் அவரது குடும்பத்தினர் போலீசை கேட்டபோதும், ஷாபாஸின் பெயர் எஃப்.ஐ.ஆர்.-ல் 25-வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அவரைப் போன்ற பலர் இந்தப் பட்டியலில் இருக்கக்கூடும் என்று அவரது குடும்பம் அஞ்சுகிறது. கல் எறிந்தவர்களாக கைதானவர்களின் புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியாகின.

படிக்க :
பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !
“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !

பதினாறு வயது மசூத் பைசலின் கதை ஷாபாஸின் கதையோடு ஒத்திருக்கிறது. வன்முறை நாளில் குரேஷி நகரில் டியூசனை முடித்து விட்டு வந்த மெஹபூப் ஆலமின் மகன் பைசல் காணாமல் போனார்.

கணினி ஆசிரியராக இருக்கும் பைசலின் மாமா மஹ்மூத் ஆலம், பதான் டோலியில் உள்ள பைசலின் வீட்டிற்கு செல்லும் வழியில் போலீசு தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாக சொல்கிறார். “அவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசியிருந்தார். அவரது அழைப்பு பதிவுகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் இதைச் சரிபார்க்கலாம். ஈ-டிவி பீகார் செய்தி சேனலில், பைசலை காவல்துறையினர் கொடூரமாக தாக்கும் காட்சிகளைக் கண்டோம்” என்கிறார் மஹ்மூத்.

போலீசாரால் தாக்கப்பட்ட ஃபைசல்.

போலீசார் அடித்ததில் அவரது இடது மணிக்கட்டு எலும்பு முறிந்துள்ளது. அவரது உடலில் சித்திரவதை அடையாளங்களையும் காணலாம் என்கிறார் மஹ்மூத். “அவர் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைதானது உறுதிசெய்யப்பட்ட உடனேயே நான் காவல் நிலையத்திற்கு விரைந்தேன், அவர் காயங்களுடன் மயக்கத்தில் கிடப்பதைக் கண்டேன்” என்கிறார் அவர்.

பைசலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், அவர் இன்னும் போலீஸ் காவலில்தான் உள்ளார் என்கிறார் மஹ்மூத்.

அவுரங்காபாத் நகரத்தின் இஸ்லாம் டோலி பகுதியில் சைபர் கபே ஒன்றை நடத்தி வரும் முகமது இனாம் உல்-ரப் இதேபோன்ற அனுபவத்தை விவரிக்கிறார். த வயர் உடனான உரையாடலில் முகமது இனாம், “மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தின் போது பிற்பகல் நேரத்தில், ஒரு சில போலீசார் எங்கள் வீட்டிற்கு அருகில் எங்களை அடிக்கத் தொடங்கினர். எதிர்த்தபோது, அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாகி, வன்முறை சம்பவத்தை காரணம் காட்டி எங்களை வீடுகளுக்குள் தள்ளினர். இரண்டு மணி நேரம் கழித்து, மாலை 5 மணியளவில், 50-60 காவல்துறையினர் எனது இல்லத்திற்குள் நுழைந்து எங்கள் தண்ணீர் குழாயை உடைத்து எங்கள் வீட்டின் வாசல் கதவை உடைக்கத் தொடங்கினர். அவர்கள் என் சகோதரி, தாய் மற்றும் அத்தை ஆகியோரைத் தள்ளி, வன்முறை மற்றும் கல் வீச்சில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார் எனக் கேட்டார்கள்”.

படிக்க :
இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

ஒரு பெண் கான்ஸ்டபிள்கூட இல்லாமல், இனாமின் வீட்டை போலீசார் சோதனை எனும் பெயரில் சூறையாடியுள்ளனர். மேலும் அவரது 12 வயது சகோதரர் சதாமை கைது செய்த பின்னரே இதை அவர்கள் நிறுத்தியுள்ளனர். ஆனால் , “எஃப்.ஐ.ஆரில் அவரது வயதை ’19’ என்று எழுதினர்” என்கிறார் இனாம்.

சதாம் உசேனின் பள்ளி சான்றிதழ்.

பள்ளி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை விவரங்களின்படி சதாம் உசேனின் வயது 12 என்பதை த வயர் உறுதி செய்துள்ளது. இனாமின் வீட்டில் இருந்து அவரது மாமா, மைத்துனர் மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, அவுரங்காபாத் வகுப்புவாத கலவரங்களுக்காக தலைப்பு செய்திகளில் வந்தது. டிசம்பர் 21-க்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், குடியுரிமை சட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. முசுலீம் இளைஞர்களை குறிவைத்தே பீகார் காவல்துறையினர் இந்த வன்முறை சம்பவங்களையும், கைதுகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

CAA-NRC க்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக முசாபர்பூர், கோபால்கஞ்ச், பகல்பூர், பாட்னா, புல்வாரி ஷரிஃப், மற்றும் சிவான் உள்ளிட்ட பீகாரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1,550 பேர் கைது செய்யப்பட்டதாக மாநில போலீஸ் பதிவுகள் கூறுகின்றன.

போராடும் முசுலீம்கள் மீது பாஜக ஆளும் மாநிலங்களில் கொலைவெறி தாக்குதல் நடத்தி, சுட்டுக்கொல்லப்படுவதை அம்மாநில அரசுகள் திட்டமிட்டே செய்கின்றன. மத்திய பாஜக அரசின் பினாமிகளாக ஆட்சி நடத்தும் பீகார், தமிழகம் போன்ற மாநிலங்களில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதும் – கோலம் போட்டதற்கெல்லாம் கைதுகள் நடத்தப்படுவதும் – கைதானவர்களுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு என போலீசே வதந்தி கிளப்புவதும் நடக்கிறது. பாஜக ஒழிந்தது என தேர்தல் அரசியலை மட்டும் வைத்து மேப் வரைந்து மகிழ்ச்சி கொள்ள ஏதுவுமில்லை.


செய்தி கட்டுரை: சவுரவ் குமார்

அனிதா
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க