பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு  : அமெரிக்காவின் நாட்டாமை!

மெரிக்க ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட தேர்தல் முறைகேடு புகார், கலவரங்கள், இராணுவ நெருக்கடி  ஆகியவற்றால் நிர்பந்திக்கப்பட்ட பொலிவிய இடதுசாரித் தலைவர் ஈவா மொரேலஸ், கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று அதிபர் பதவியிலிருந்து விலகி,  நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஈவா மொரேலஸ்.

பொலிவியாவின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினாரான பூர்வீகப் பழங்குடிகள் மத்தியில் இருந்து அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட முதல்நபர் மொரேலஸ். சோசலிசத்துக்கான இயக்கம் என்ற இடதுசாரிக்கட்சியைச் சேர்ந்த மொரேல்ஸ் 2006-ம் ஆண்டில் முதல்முறை அதிபரானவுடனேயே, சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி எண்ணெய்  எரிவாயு உற்பத்தியை நாட்டுடைமை ஆக்கி, அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இத்துறையிலிருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான வரி மற்றும் உரிமத் தொகையைக் கடுமையாக உயர்த்தியதன் மூலம் 82% அளவுக்கு அரசு வருமானம் அதிகரித்தது. இதன் மூலம் கிடைத்த பெருமளவு நிதி மக்கள்நலத் திட்டங்களுக்கு செலவிடப்பட்டது. தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு, சமூக நலத்திட்டங்களுக்கான அரசு பங்களிப்பு அதிகரிப்பு ஆகியவை காரணமாக மக்களின் உண்மை ஊதியம் 60% அதிகரித்தது. அதே சமயத்தில் தீவிர வறுமை 60% குறைக்கப்பட்டது. அரசே முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், பெண்கள் குழந்தைகள் பராமரிப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கும் கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிக்கும் முன்னுரிமை கொடுத்தார் மொரேலஸ். கல்வி, சுகாதாரம் சார்ந்த சமூகநலத் திட்டங்களுக்கு கியூபாவும் வெனிசுலாவும் மிகவும் உறுதுணையாக இருந்தன.

நெடுங்காலமாக எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படாத பெரும்பான்மை பழங்குடி மக்களை சமமாக அங்கீகரிக்கும் விதமாக பொலிவியாவை பல்தேசிய இன நாடாகவும், பழங்குடிகளின் விபாலா கொடியை பொலிவிய தேசியக் கொடிகளுல் ஒன்றாகவும் அறிவித்தார். இனரீதியான ஒடுக்குமுறையை மேற்கொள்வது சட்டவிரோதம் எனவும் அறிவித்து நடைமுறைப்படுத்தினார். அரசு மற்றும் தனியார் கட்டுபாட்டில் இருந்த சுமார் 134 மில்லியன் ஏக்கர் நிலத்தை நிலமற்ற ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். இவை, அதுவரை அரசியல் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்திவந்த நகர்ப்புறங்களைச் சேர்ந்த சிறுபான்மை ஸ்பானிய மேட்டுக்குடிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் வெறுப்பை உருவாக்கியது.

2010-ம் ஆண்டுக்கு முன்பே காஸ்ட்ரோ, சாவேஸ், மொரேலஸ் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இடதுசாரித் தலைவர்கள், தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொண்டு புதிய தாரளாவாதக் கொள்கைகளை நிராகரித்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மொரேலஸின் முதல் பதவிக்காலத்தில், முந்தைய ஆட்சியாளர்களது ஒப்பந்தங்களை நிராகரித்து, உலகவங்கி மற்றும் ஐ.எம்.எப்.பின் ஆதிக்கத்தில் இருந்து முதல்நாடாக பொலிவியா விடுவித்துக் கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுதந்திர வர்த்தக வளையத்துக்குள்ளும் பொலிவியா வர மறுத்துவிட்டது. 2008-ல் தனது ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்ட அமெரிக்கத் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியதோடு, அமெரிக்காவுடனான  தூதரக உறவுகளையும் மொரேலஸ் முறித்துக் கொண்டார்.

சமீப ஆண்டுகளில், மின்சாரக் கார்கள் மற்றும் செல்போன் பேட்டரிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முதன்மையான தனிமமான லித்தியம், உலகின் மொத்த அளவில் 50 சதவீத அளவுக்கு (90 இலட்சம் டன்கள்) பொலிவியாவில் இருப்பது கண்டறியப்பட்டது. மொரேலஸ், தனது நாடு வெறும் மூலப்பொருட்களின் ஏற்றுமதியாளராக மட்டும் இருப்பதை விரும்பவில்லை. மாறாக, லித்தியம் சம்பந்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட செயல்களின் முழு சங்கிலியும் நடைபெறும் மையமாக மாற்ற விரும்பினார். உதாரணமாக, பொலிவியாவில் பேட்டரி ஆலைகள் மற்றும் கார் தொழிற்சாலைகளை உருவாக்குவது இதில் அடங்கும், இது பொலிவியர்களுக்கு வேலைவாய்ப்பையும் செல்வத்தையும் உருவாக்கும் என்று நம்பினார். ஏற்கெனவே, கடந்த 2018 டிசம்பரில் ACISA என்னும் ஜெர்மானிய தயாரிப்பு நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முயற்சியில் இவ்வாண்டு நவம்பர் 4-ம் தேதி இறங்கினார். இதற்கு மாறாக சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுவதில் ஆர்வம் காட்டினார்.

இதையடுத்த ஒருவார காலத்தில்தான் மொரேலஸ் தன் மீதான தேர்தல் முறைகேடு புகார் காரணமாக பதவி விலக நேர்ந்தது. இலத்தீன் அமெரிக்க நாடுகள் மீதான தனது பிடியை இறுக்கவும், கம்யூனிசம் பரவாமல் தடுக்கவும் 1948-ல் அமெரிக்கா உருவாக்கிய “அமெரிக்க அரசுகளின் அமைப்பு”, மொரேல்ஸ் தரப்பு தேர்தலில் முறைகேடுகள் செய்ததற்கான ‘வலுவான’ ஆதாரங்கள்  இருப்பதாகக் குற்றம் சாட்டியது. தேர்தல் ‘முறைகேடு புகார் கிளம்பியவுடன், தமது அரசியல் மேலாதிக்கத்தை மீட்கும் தருணத்திற்காகக் காத்திருந்த வலதுசாரி எதிர்க்கட்சிகள் மறுதேர்தல் நடத்தக் கோரி கலவரங்களைத் தூண்டிவிட்டன. காவல்துறையோ வலதுசாரி கும்பல்கள் நடத்தும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த மறுத்துவிட்டது. பொதுமக்களின் மீதான தாக்குதலை விரும்பாத மொரேல்ஸ், மறுதேர்தல் நடத்துவதற்கு ஒப்புக் கொண்ட நிலையில், எதிர்க்கட்சிகள் அவரை இராஜினாமா செய்யக்கோரி கலவரத்தைத் தொடர்ந்தனர். இறுதியாக இராணுவத் தளபதி வில்லியம்ஸ் கலிமான், பதவி விலகச் சொல்லி வலியுறுத்திய நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழலில், கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று அதிபர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, மெக்சிகோவில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளார் ஈவா மொரேல்ஸ்.

இடைக்கால அதிபராக ‘அறிவித்துக்கொண்ட ஜீனைன் ஆனெஸ்.

இதையடுத்து உடனடியாக, பழங்குடி மக்களுக்கு எதிரான வெறுப்பை வெளிப்படையாகக் கக்கியவரும் எதிர்க்கட்சி செனட் உறுப்பினருமான ஜீனைன் ஆனெஸ் என்ற பெண்மணி, தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார். இதை அமெரிக்கா உடனடியாக வரவேற்றுள்ளது. உள்நாட்டுப்போரை பொலிவிய மக்கள் மீது திணித்து, அமெரிக்க ஏகாதிபத்தியமும் உள்நாட்டு மேட்டுக்குடி இனவெறிக் கும்பலும் தமது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள முயன்று வருகின்றன.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள், ஏழை நாடுகளின் மீது திணித்துவரும் தனியார்மயம் என்ற பொருளாதாரக் கட்டுமானம் எந்தளவிற்கு மக்களுக்கு எதிரானது என்பதை உணர்ந்த மக்கள் உலகெங்கும் போராட்டங்களைக் கட்டியமைத்து வருகின்றனர். அப்பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக, மக்கள் நலன் சார்ந்த –  அது சோசலிசப் பொருளாதாரம்கூட அல்ல  – பொருளாதாரத் திட்டத்தை அமல்படுத்த முயன்றார், மொரேலஸ். தனது நலனுக்கு எதிரான இதை அமெரிக்கா விரும்பவில்லை.

அமெரிக்கா விரும்புகிற விதத்தில்தான் எந்தவொரு நாடும் தனது பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்த வேண்டுமென்றால், அந்நாட்டின் சுதந்திரம் அர்த்தமற்றுப் போகிறது. மொரேலஸ் தலைமையிலான பொலிவியா தனது சுதந்திரத்தையும், இறையாண்மையையும் காத்துக்கொள்ள விரும்பியது. இவற்றை அனுமதிக்க மறுத்து சதிவேலைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், பொலிவியாவில் தனது அடாவடித்தனத்தை மறைத்துக் கொள்ள கையாண்ட வழிமுறைகள்தான் தேர்தல் முறைகேடு, ஊழல் புகார்கள், இறுதியாக ஆட்சிக் கவிழ்ப்பு.

படிக்க:
அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்

பொலிவியாவில் மட்டுமல்ல, வெனிசுலாவிலும் இதே போன்றதோர் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த முயன்று வருகிறது, அமெரிக்கா. மக்கள் நலனை முன்னிறுத்தும் ஆட்சியாளர்களை ஒழித்துக்கட்டுவதன் மூலம் தென்னமெரிக்க நாடுகளை மீண்டும் ‘வாழைப்பழக் குடியரசு’ நாடுகளாக மாற்றிவிட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் இறுதி நோக்கம்.

வசந்தன்

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க