போராட்டத் தீ பரவட்டும் ! மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

 • டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மீது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. நடத்திய ஆயுதத் தாக்குதல் – மனித சமூக அறிவின் மீதான தாக்குதல்!
 • தாக்கிய குண்டர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்!
 • குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நாட்டையே வன்முறைக் களமாக்கிய மோடி-அமித் சா அமைச்சரவையே பதவி விலகு!

மேற்கண்ட முழக்கங்களை வலியுறுத்தி 06.01.2020 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், பார் கவுன்சில் உறுப்பினர் பா.அசோக் , வழக்கறிஞர் முத்து அமுதநாதன், வழக்கறிஞர் வின்சென்ட் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

தங்களது உரையில் ஜே.என்.யூ மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததுடன், வழக்கறிஞர்கள் மாணவர்களின் போராட்ட உரிமைக்காக, அரசியல் சட்டத்தை காப்பதற்காக களத்தில் நிற்போம் என்றனர்.

மேலும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் – மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. நடத்திய ஆயுதத் தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலை நிர்வாகமும், உள்துறை அமைச்சர் அமித்சாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறையும், ஏ.பி.வி.பி. -யின் தாக்குதலுக்குத் துணை நின்றுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த மோடி அரசுக்கு எதிராக நாடே ஒன்றுதிரண்டு போராடுகிறது. இப்போராட்டங்களில் முன்னணியில் இருப்போர் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக் கழக மாணவர்கள்தான். மோடி அரசின் பாசிச திட்டங்களை அறிவுப்பூர்வமாக அம்பலப்படுத்திப் போராடுவோர் பல்கலைக் கழக மாணவர்களும்-பேராசிரியர்களும்தான்.

இதனால்தான் டெல்லி ஜாமியா, அலிகார், ஜவகர்லால் நேரு, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. -க்கள் மோடி அரசால் குறிவைக்கப்பட்டு தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன.

ஜெர்மனி – இத்தாலியில் நடந்த பாசிச ஆட்சியில் முதலில் அரசுத் துறைகள், நீதிமன்றங்களை கைப்பற்றிய பாசிஸ்ட்டுகள், அடுத்து குறிவைத்தது உயர்கல்வி நிலையங்களைத்தான். மோடி ஆட்சியிலும் அதுதான் நடக்கிறது. கல்வி நிலையங்களின் மீதான தாக்குதல் என்பது மனித நாகரீகம் மீதான தாக்குதலே!

நாட்டின் சொத்தே அறிவுசார் பிரிவினரும், உழைக்கும் மக்களும்தான். இந்த இரண்டு பிரிவுகளும் நாட்டில் பாதுகாப்பாக இல்லை. பல்கலைக்கழகம், கல்லூரி விடுதிகளில்கூட நமது பிள்ளைகள் பாதுகாப்பாக இல்லையெனில், வேறு எங்கு பாதுகாப்பாக இருக்க முடியும்? யாருக்கு பாதுகாப்பு இருக்க முடியும்?

படிக்க:
பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !
♦ ICU-வில் இந்திய ஜனநாயகம் ! குடந்தை ம.உ.பா.மையம் கருத்தரங்கம் !

மத, இன அடிப்படையிலான குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு என்று நாட்டைப் பிளக்கும் அரசியல் சட்ட விரோதக் கொள்கைகளை அமல்படுத்திய மோடி அரசைப் புரிந்து கொண்ட மக்கள், மாணவர்கள் – இளைஞர்கள் தீவிரமாகப் போராடுகிறார்கள். வரலாறு காணாத போராட்டத்தால் பயந்துபோன மோடி அரசு, துப்பாக்கிச் சூடு, கொலை, ஆயுதத் தாக்குதல் என்ற உத்திகளை கையில் எடுக்கிறது.

மோடி அரசு அனைத்துத் துறைகளிலும் தோற்றுப் போன, பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிரான அரசு. இந்த அரசு தொடர்ந்தால் இட ஒதுக்கீடு போகும்; குலத் தொழில் வரும்; பொருளாதாரம் நாசமாகும்; அரசியல் சட்டம் அழிக்கப்படும்.

மோடி அரசு எத்தனை வன்முறையை ஏவினாலும், அரசியல் சட்டத்தை, நாட்டைக் காக்கப் போராடும் இந்திய மக்கள் அஞ்ச மாட்டோம். ஒரு அடி கூடப் பின்வாங்க மாட்டோம்; தொடர்ந்து முன்னேறுவோம். நாட்டு மக்களின் அனைத்து உரிமைப் போராட்டங்களுக்கும் வழக்கறிஞர்கள் துணைநிற்போம். மாணவர்களின் போராடும் உரிமை அடிப்படை உரிமை. போராடும் உரிமை பறிக்கப்பட்டால், அனைத்து உரிமைகளும் பறிபோகும்.

எனவே, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மீதான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பு ஏ.பி.வி.பி. நடத்திய ஆயுதத் தாக்குதலை மதுரை வழக்கறிஞர்கள் வன்மையாக கண்டிக்கிறோம்!

போராடும் மாணவர்களுக்கு, மக்களுக்கு துணைநிற்கிறோம்! மோடி அமித்சா பதவி விலகும்வரை போராட்டத்தைத் தொடர்வோம்! என்று மதுரை வழக்கறிஞர்கள் உறுதி எடுத்தனர்.

மூத்த வழக்கறிஞர் ஜகாங்கீர் பாஷா, AILU, SDPI, VCK, CPCL உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வழக்கறிஞர்கள் திரு கனகவேல், திரு ராஜேந்திரன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான  உரிய ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மதுரை வழக்கறிஞர்கள்.

2 மறுமொழிகள்

 1. நேர்மையின்மை அனைத்து மட்டத்திலும் ஊடுருவி உள்ளது என்பதை தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் காட்டுகிறது…

  இந்த வக்கீல்கள் கேட்க வேண்டிய மிக முக்கிய கேள்வி கம்யூனிஸ்ட் அமைப்புகள் ஏன் மாணவர்கள் அடுத்த செமெஸ்டருக்கு பதிவு செய்து கொள்வதை வன்முறை மூலம் தடுத்தார்கள்… ஏன் கம்யூனிஸ்ட் அமைப்புகள் மாணவர்களை படிக்கவிடாமல் பொய்களை பரப்பி போராட்டங்களில் இழுத்து விடுகிறார்கள், மாணவர்களின் அடிப்படை கடமை படிப்பா அல்லது போராட்டங்களா ?

  போராட்டங்கள் என்றால் அவர்களுக்கு கல்லூரிகளில் என்ன வேலை, நக்சல் மாவோ போன்ற நாசகார அமைப்புகளில் சேர்ந்து தேசவிரோத செயல்களில் ஈடுபடலாமே எதற்கு கல்லூரிகளுக்கு வந்து படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையை கெடுக்க வேண்டும்…

  இந்த வழக்கறிஞர்கள் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா ?

 2. இப்படி பதில் தாக்குதல் கொடுத்தால்தான் தேசிய விரோத சக்திகள் மற்றும் ஹிந்து மதத்திற்கு எதிராக அருவருப்பாக பேசுபவர்கள் பயப்படுவார்கள். அமைதியாக இருப்பார்கள் …இல்லையென்றால் தேச விரோதிகளின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும். எனவே இது வரவேற்க வேண்டிய விசயமே. !! ஜெய் பராத் மாதாகி …

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க